கார்த்திக் மாத பூஜையில் மிகவும் முக்கியமானது என்னவெனில், பகவான் கிருஷ்ணரை தாமோதரரின் வடிவில், அதாவது அவரது வயிற்றை கயிற்றின் மூலம் உரலுடன் கட்டப்பட்ட வடிவில் வழிபடுவதாகும். இந்த வழிபாட்டினை விருந்தாவனத்தில் செய்வது சாலச் சிறந்தது என்றாலும், ஒவ்வொருவரும் அவரவரது வீட்டில் மாலைப் பொழுதில் இவ்வழிபாட்டினை எளிமையாக சிறப்புடன் செய்யலாம். உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணரின் படம் இஸ்கான் கோவில்களில் கிடைக்கும் (கோவிலுக்குச் செல்ல இயலாதோர் இப்பத்திரிகையின் அட்டைப்படத்தைக்கூட உபயோகிக்கலாம்). அப்படத்தை தாமோதர மாதம் முழுவதும் உங்களது பூஜையறையில் வைத்து பூஜிக்கவும். தினசரி மாலை வேளையில், இக்கட்டுரையுடன் வழங்கப்பட்டுள்ள தாமோதராஷ்டகம் என்னும் பாடலைப் பாடியபடி, மண் விளக்கில் நெய் கொண்டு தாமோதரருக்கு ஆரத்தி செய்ய வேண்டும். அனுஷ்டிக்க வேண்டிய இதர வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.