கார்த்திக் மாதமும் தாமோதர பூஜையும்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

தமிழில் சித்திரை, வைகாசி என்று மாதங்கள் இருப்பதைப் போன்று, சமஸ்கிருதத்திலும் மாதங்கள் உண்டு. அவற்றில் மிகவும் விசேஷமானதாக கருதப்படுவது கார்த்திக் மாதம் (தமிழில் வரும் கார்த்திகை மாதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது). சிறப்பு மிக்க கார்த்திக் மாதம்,  2010ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியிலிருந்து நவம்பர் 20ஆம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.

கார்த்திக் மாத மகிமைகளில் சில

கார்த்திக் மாதத்தில் மேற்கொள்ளப்படும் விரதங்கள் அதிக பலனைக் கொடுக்கக்கூடியவை; தூய்மைப்படுத்தும் விரதங்களில் அவை தலைசிறந்ததாகக் கருதப்படுகின்றன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு கார்த்திக் மாதம் மிகவும் பிரியமானதாகும். மாதங்களில், பகவான் கிருஷ்ணர் மார்கஷீர்ஷ மாதமாகத் திகழ்வதைப் போல, ஸ்ரீமதி ராதாராணி அதற்கு முந்தைய மாதமான கார்த்திக் மாதமாகத் திகழ்கிறார். இது ராதாராணியின் மாதம் என்பதால், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும்.

கார்த்திக் விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் எல்லாப் பாவங்களும் இதயத்திலிருந்து ஓடிவிடும். மற்ற விரதங்களை நூறுமுறை அனுஷ்டிப்பதால் வரும் பலன், கார்த்திக் விரதத்தை ஒருமுறை அனுஷ்டிப்பதால் அடையப்படும். கார்த்திக் விரதத்தை முறையாகப் பின்பற்றினால், மந்திரங்களை உச்சரிப்பது, தீர்த்த யாத்திரை செல்வது போன்றவற்றைக் காட்டிலும் இலட்சக்கணக்கான மடங்கு அதிகப் பலனை அடையலாம். இம்மாதத்தில் விருந்தாவனத்தில் தாமோதரரை வழிபடுவோர் எளிதில் கிருஷ்ண பக்தியை அடைய முடியும். கார்த்திக் மாதத்தில் கிருஷ்ணரை விருந்தாவனத்தில் வழிபட்ட துருவ மஹாராஜர் அவரது தரிசனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. (ஸ்ரீல சநாதன கோஸ்வாமி அவர்கள் அருளிய ஹரி பக்தி விலாஸ் புத்தகத்திலிருந்து)

விருந்தாவனத்தில் கார்த்திக் மாதம்

கார்த்திக் மாதம் முழுவதையும் (குறைந்தபட்சம் சில நாட்களாவது) விருந்தாவனத்தில் கழிப்பது மிகவும் சிறந்ததாகும். உலகிலுள்ள பக்தர்கள் அனைவரும் கார்த்திக் மாதத்தின்போது விருந்தாவனத்திற்கு வந்து பலன் பெற வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். அதற்கேற்ப, ஒவ்வொரு வருடமும் கார்த்திக் மாதத்தின்போது இஸ்கான் சார்பில் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு சத்சங்க வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

விருந்தாவனத்திலுள்ள யமுனையின் எழில்மிகு தோற்றம்

தாமோதர பூஜை

கார்த்திக் மாத பூஜையில் மிகவும் முக்கியமானது என்னவெனில், பகவான் கிருஷ்ணரை தாமோதரரின் வடிவில், அதாவது அவரது வயிற்றை கயிற்றின் மூலம் உரலுடன் கட்டப்பட்ட வடிவில் வழிபடுவதாகும். இந்த வழிபாட்டினை விருந்தாவனத்தில் செய்வது சாலச் சிறந்தது என்றாலும், ஒவ்வொருவரும் அவரவரது வீட்டில் மாலைப் பொழுதில் இவ்வழிபாட்டினை எளிமையாக சிறப்புடன் செய்யலாம். உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணரின் படம் இஸ்கான் கோவில்களில் கிடைக்கும் (கோவிலுக்குச் செல்ல இயலாதோர் இப்பத்திரிகையின் அட்டைப்படத்தைக்கூட உபயோகிக்கலாம்). அப்படத்தை தாமோதர மாதம் முழுவதும் உங்களது பூஜையறையில் வைத்து பூஜிக்கவும். தினசரி மாலை வேளையில், இக்கட்டுரையுடன் வழங்கப்பட்டுள்ள தாமோதராஷ்டகம் என்னும் பாடலைப் பாடியபடி, மண் விளக்கில் நெய் கொண்டு தாமோதரருக்கு ஆரத்தி செய்ய வேண்டும். அனுஷ்டிக்க வேண்டிய இதர வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

நாகர்கோவிலுள்ள இஸ்கான் கோவிலில் தாமோதர பூஜைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணரும் யசோதையும்

அனுஷ்டிக்கும் வழிமுறை

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் (சூரிய உதயத்திற்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்பு) எழுந்து குளித்த பிறகு, மங்கள ஆரத்தி செய்து அதன் பின்னர் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்க முயற்சி செய்தல் நன்று. கார்த்திக் மாதத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதன் மூலம் 18 புராணங்களையும் படித்த பலனை அடைய முடியும்.

ஜபம் செய்யும் போதும் கீர்த்தனத்தின் போதும் கிருஷ்ணரின் திருநாமத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகமாக ஜபம் செய்வதும், குடும்பத்தினருடன் இணைந்து கீர்த்தனம் செய்வதும் சிறந்தது.

மாதம் முழுவதும் பிரம்மசரிய விரதம் கடைபிடித்தல் அவசியம்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வகையினை ஒரு மாதத்திற்கு கைவிடுதல் நன்று. நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால், தினசரி ஒருவேளை மட்டும் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

துளசி தேவிக்கு தினமும் ஆரத்தி செய்து கீர்த்தனம் பாடி, ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுவதற்கு பிரார்த்தனை செய்யவும்.

தூய பக்தர்களுக்கு தானம் வழங்குதல் நன்று.

தினமும் சுவையான பதார்த்தங்களைப் படைத்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யுங்கள்.

சாதுர்மாதத்தின் நான்காவது மாதம் என்பதால் தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திக் மாதத்தின்போது உளுத்தம் பருப்பினைத் தவிர்த்தல் அவசியம்.

மேலே குறிப்பிட்டுள்ள அனுஷ்டானங்கள் மட்டுமின்றி, பல்வேறு விளக்கமான அணுகுமுறைகள் ஹரி பக்தி விலாஸ் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆழமான அவ்விரதங்களை அனுஷ்டித்தல் அனைவருக்கும் சாத்தியமல்ல என்பதால் அவை இங்கு கொடுக்கப்படவில்லை.

 

கார்த்திக் மாதத்தின் திருவிழாக்கள்

கார்த்திக் மாதம் முழுவதுமே திருவிழா மாதம் என்றபோதிலும், சில குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்புப் பெறுகின்றன. அந்நாள்களில் விருந்தாவனம் கோலா கலமாகக் காட்சியளிக்கும். அவை பின்வருமாறு,

  • ராதா குண்டம் தோன்றிய பஹுலாஷ்டமி திருநாள்
  • தீபாவளி
  • கிருஷ்ணர் கோவர்த்தன மலையை உயர்த்திப் பிடித்ததை நினைவு கொள்ளும் கோவர்த்தன திருவிழா
  • ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுநாள்

(கார்த்திக் மாதத்தில் பெரும்பாலான இஸ்கான் கோவில்களில் விருந்தாவன யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களை விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். மேலும் விபரங்களுக்கு தங்களுக்கு அருகிலுள்ள இஸ்கான் கோவிலைத் தொடர்பு கொள்ளவும்.)

 

ஸ்ரீ ஸ்ரீ தாமோதராஷ்டகம்

(ஸ்ரீ கிருஷ்ண துவைபாயண வியாசரால் எழுதப்பட்ட பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. நாரதர் மற்றும் சௌனக ரிஷியின் மத்தியில் சத்தியவிரத முனிவரால் பாடப்பட்டதாகும்.)

“பகவான் தாமோதரரைக் கவரக்கூடியதும் சத்தியவிரத முனிவரால் பாடப்பட்டதுமான தாமோதராஷ்டகம் எனப்படும் பிரார்த்தனையை தினமும் பாடி, கார்த்திக் மாதத்தில் ஒவ்வொருவரும் தாமோதரரை வழிபட வேண்டும்.” (ஸ்ரீ ஹரி பக்தி விலாஸ், 2.16.198)

நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம்

லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம்

யஷோதா-பியோலூகலாத் தாவமானம்

பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய கோப்யா

ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜந்தம்

கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம்

முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட-

ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம்

இதீத்ருக் ஸ்வ-லீலாபிர் ஆனந்த-குண்டே

ஸ்வ-கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம்

ததீயேஷித-க்ஞேஷு பக்தைர் ஜிதத்வம்

புன: ப்ரேமதஸ் தம் ஷதாவ்ருத்தி வந்தே

வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா

ந சான்யம் வ்ருணே (அ)ஹம் வரேஷாத் அபீஹ

இதம் தே வபுர் நாத கோபால-பாலம்

ஸதா மே மனஸ்-யாவிராஸ்தாம் கிம் அன்யை:

இதம் தே முகாம்போஜம் அத்யந்த நீலைர்

வ்ருதம் குன்தலை: ஸ்னிக்த-ரக்தைஷ் ச கோப்யா

முஹுஷ் சும்பிதம் பிம்ப-ரக்தாதரம் மே

மனஸ்-யாவிராஸ்தாம் அலம் லக்ஷ-லாபை: 

நமோ தேவ தாமோதரானந்த விஷ்ணோ

ப்ரஸீத ப்ரபோ து:க-ஜாலாப்தி-மக்னம்

க்ருபா-த்ருஷ்டி-வ்ருஷ்ட்யாதி-தீனம் பதானு-

க்ருஹாணேஷ மாம் அக்ஞம் ஏத்-யக்ஷி-த்ருஷ்ய:

குவேராத்மஜௌ பத்த-மூர்த்யைவ யத்வத்

த்வயா மோசிதௌ பக்தி-பாஜௌ க்ருதௌ ச

ததா ப்ரேம-பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச

ந மோக்ஷே க்ரஹோ மே (அ)ஸ்தி தாமோதரேஹ

நமஸ் தே (அ)ஸ்து தாம்னே ஸ்புரத்-தீப்தி தாம்னே

த்வதீயோதராயாத விஷ்வஸ்ய தாம்னே

நமோ ராதிகாயை த்வதீய-ப்ரியாயை

நமோ (அ)னந்த-லீலாய தேவாய துப்யம்

(1) பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுரா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்ட பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார்.  ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்துவிட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.

(2) (அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்ட) அவர் அழுதபடி தாமரைக் கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும் மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில் அவர் அணிந்திருக்கும் முத்து மணி மாலை, விம்மி அழுவதனால் அங்குமிங்கும் அசைகின்றது. கயிற்றினால் அல்ல, தனது அன்னையின் அன்பினால் வயிற்றில் கட்டப்பட்ட முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.

(3) அத்தகு பால்ய லீலைகளினால் கோகுலவாசிகளை அவர் ஆனந்தக் கடலில் மூழ்கடிக்கின்றார். மதிப்பு மரியாதையைக் கடந்த நெருக்கமான தூய பக்தர்களால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்பதை, ஐஸ்வர்ய ஞானத்தில் மூழ்கியுள்ள தனது பக்தர்களுக்கு அவர் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார். மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை மிகவுயர்ந்த அன்புடன் பகவான் தாமோதரருக்கு நூற்றுக்கணக்கான முறைகள் சமர்ப்பிக்கின்றேன்.

(4) வரம் நல்குவோரில் சிறந்தவரான எம்பெருமானே, அரூபமான முக்தி, உயர்ந்த முக்தியான வைகுண்ட பிராப்தி, அல்லது வேறு எந்த வரத்தையும் நான் தங்களிடம் வேண்டுவதில்லை. பிரபுவே, விருந்தாவனத்தில் உள்ள உமது பால கோபால ரூபம் என் மனதில் எப்போதும் பதிந்திருக்க வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். இதை விட்டுவிட்டு வேறு வரத்தைப் பெறுவதால் என்ன பலன்?

(5) எம்பெருமானே, செம்மை கலந்த மிருதுவான கருமை நிற சுருள் கூந்தலால் சூழப்பட்டுள்ள தங்களின் தாமரைத் திருமுகம் மீண்டும் மீண்டும் அன்னை யசோதையினால் முத்தமிடப்படுகிறது; உதடுகள் கோவைப் பழம்போல சிவந்துள்ளன. இத்தாமரைத் திருமுகம் எப்போதும் என் மனதில் தோன்றுவதாக. இலட்சக்கணக்கான இதர லாபங்களால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

(6) முழுமுதற் கடவுளே, தங்களுக்கு நான் எனது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன். ஓ தாமோதரா! ஓ அனந்தா! ஓ விஷ்ணு! ஓ பிரபுவே, என்மீது திருப்தியடைவீராக. கருணை மிகுந்த தங்களது பார்வையை என்மேல் பொழிந்து, பௌதிகத் துன்பக் கடலில் மூழ்கி முட்டாளாக இருக்கும் என்னை விடுவியுங்கள்; எனது கண்களுக்குக் காட்சியளியுங்கள்.

(7) ஓ தாமோதரா, மர உரலில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள தங்களால் குபேரனின் இரு மகன்களும் (மணிக்ரீவன், நளகூவரன்) நாரதரின் சாபத்திலிருந்து விடுபட்டு மாபெரும் பக்தர்களாயினர். அதுபோன்ற பிரேம பக்தியை எனக்கும் கொடுங்கள். நான் அதற்காகவே ஏங்குகிறேன், எந்தவித முக்தியிலும் எனக்கு ஆசையில்லை.

(8) ஓ தாமோதரா, நான் எனது முதல் வணக்கங்களை உமது வயிற்றைக் கட்டியுள்ள அந்த ஒளிவிடும் கயிற்றுக்கு சமர்ப்பிக்கின்றேன். பின்னர், முழுப் பிரபஞ்சத்தின் இருப்பிடமான உம்முடைய வயிற்றிற்கும், உமக்கு மிகவும் பிரியமான ஸ்ரீமதி ராதாராணிக்கும், அதன் பின்னர், அளவில்லா லீலைகள் புரியும் முழுமுதற் கடவுளாகிய உமக்கும் எமது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives