ஏகாதசி, ஹரி-வாஸர என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்நாள், நமது எல்லா புலன்களையும் பகவான் ஹரியின் திருப்திக்காக மட்டுமே ஈடுபடுத்தும் நாள்; ஹரிக்காக மட்டுமே வாழும் நாள்; நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள அரிய வரப்பிரசாதம். இந்நாளில் ஒவ்வொருவரும் பகவானுக்கும் அவரின் பக்தர்களுக்கும் சேவை செய்வதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி அல்லது மோக்ஷத ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசி, எல்லா ஏகாதசிகளிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் அது மற்றெல்லா ஏகாதசி விரதத்திற்கும் சமமானது என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளபோதிலும், எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருத்தல் என்பது வைஷ்ணவ மரபில் அவசியமான ஒன்றாகும்.