மானின் உடலைத் துறந்த பரத மஹாராஜர் அங்கிரா முனிவரின் குலத்தைச் சேர்ந்த தூய பிராமணரின் குடும்பத்தில் பிறந்தார். பகவானின் கருணையால் அவருக்கு தனது முற்பிறவிகளில் நடந்தவை அனைத்தும் நினைவில் இருந்தன. பக்தரல்லாத தமது உற்றார் உறவினர்களைக் கண்டு எங்கே தான் மீண்டும் வீழ்ந்துவிடுவோமோ என்று அஞ்சினார். அவர்களின் தொடர்பைத் தவிர்ப்பதற்காகவே தன்னை ஓர் உன்மத்தம் பிடித்தவனைப் போன்றும் குருடனைப் போன்றும் செவிடனைப் போன்றும் காட்டிக் கொண்டார். அவர் ஜட பரதர் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை அவருக்கு வேத சாஸ்திரங்களிலும் சடங்குகளிலும் போதிய பயிற்சி அளிக்க விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அவை அனைத்திலும் அவர் தோல்வியடைந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், ஜட பரதரின் தந்தை மரணமடைந்தார். அவரது தாயாரும் மகனை கணவனது முதல் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு உடன்கட்டை ஏறி தன் கணவன் சென்ற உலகை அடைந்தாள்.