பகவான் ரிஷபதேவர் தமது யோக சக்திகளை ஏன் பயன்படுத்தாமல் இருந்தார் என்று மாமன்னர் பரீக்ஷித் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார்: “வேடன் ஒருவன் தான் பிடித்த விலங்குகள் தப்பிச் சென்று விடும் என்பதால், அவற்றிடம் நம்பிக்கை கொள்வதில்லை. அதுபோலவே, ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மனதின் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்வதில்லை; ஏனெனில், மனமானது இயற்கையிலேயே மிகவும் அமைதியற்றதாகும். அஃது எந்த நேரத்திலும் ஒருவரை ஏமாற்றி போகத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியது. இதன் காரணமாக, ஆன்மீகத்தில் முன்னேறியவர்களும்கூட சில சமயங்களில் வீழ்ச்சியுறுகின்றனர்.
“பல்வேறு உடல்களைப் பெறுவதற்கு மனமே காரணமாக அமைகிறது. அந்த உடல்கள் வெவ்வேறு உயிரினங்களின் உடல்களாக அமையலாம். ஒருவன் தனது மனதை ஆன்மீக அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தினால், அவன் உயர்ந்த உடலைப் பெறுகிறான். ஆனால் ஜட இன்பத்தைப் பெறுவதில் தனது மனதைப் பயன்படுத்துபவன் இழிந்த உடலைப் பெறுகிறான்,” என்று ஜட பரதர் கூறினார்.