பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது அவரது நித்திய சகாக்களும் அவருடன் இணைந்து தோன்றினர். அவர்களுள் இராமானந்த ராயர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய பக்தராகத் திகழ்ந்தார். அவர் ஒடிஸாவில் பவானந்த ராயருடைய ஐந்து மகன்களில் ஒருவராகத் தோன்றினார். இராகவேந்திர புரியின் சீடராகக் கருதப்படும் இவர் இயற்கையாகவே ஒரு தூய பக்தராக இருந்தார். முன்பு வித்யா நகரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ராஜமுந்திரி மாகாணத்தின் ஆளுநராக பிருதாபருத்ர மன்னரின் கீழ் அவர் பணியாற்றி வந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற பிறகே இராமானந்த ராயர் மஹாபிரபுவின் லீலைகளினுள் வருகிறார்.