கடல் அலைகளுக்கு எவ்வாறு எல்லை இல்லையோ, அதைப் போலவே பகவானின் அவதாரங்களுக்கும் எல்லை இல்லை. ஸத்த்வ–நிதே. நிதி என்பதன் பொருள் “கடல்,” ஸத்த்வ என்பதன் பொருள் “இருப்பு.” ஸத்த்வ என்பதன் மற்றொரு பொருள் ஸத்வ குணம். இந்த ஜடவுலகில் மூன்று குணங்கள் உள்ளன: ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), மற்றும் தமோ குணம் (அறியாமை குணம்).
ஆயினும், உண்மையான ஸத்வம் ஆன்மீக லோகத்தில்தான் உள்ளது. ஜடவுலகிலுள்ள ஸத்வ குணம் இங்கே மிகவுயர்ந்த குணமாகக் கருதப்பட்டாலும், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப்படக்கூடியதாகும். ரஜோ குணமும் தமோ குணமும் எவ்வாறு கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகின்றனவோ, அவ்வாறே ஜட ரீதியிலான ஸத்வ குணமும் கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகிறது.
எனவே, ஜட ரீதியிலான ஸத்வ குணத்தையும் நாம் கடந்தாக வேண்டும். தூய ஸத்வ குணத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், அதுவே ஆன்மீக வாழ்க்கை. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே தூய ஸத்வ குணத்தில் நிலைத்திருக்க முடியும். இல்லாவிடில், ஸத்வ குணமும் களங்கப்பட்டு விடும்.