நமக்காக பகவான் மேற்கொள்ளும் எண்ணற்ற அவதாரங்கள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அவதாரா ஹ்யஸங்க்யேயா

 ஹரே: ஸத்த்வநிதேர் த்விஜா:

யதாவிதாஸின: குல்யா:

 ஸரஸ: ஸ்யு: ஸஹஸ்ரஷ:

“பிராமணர்களே, வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போன்று பகவானின் அவதாரங்கள் எண்ணற்றவை.” (ஸ்ரீமத் பாகவதம் 1.3.26)

களங்கமற்ற ஸத்வ குணம்

கடல் அலைகளுக்கு எவ்வாறு எல்லை இல்லையோ, அதைப் போலவே பகவானின் அவதாரங்களுக்கும் எல்லை இல்லை. ஸத்த்வநிதே. நிதி என்பதன் பொருள் “கடல்,” ஸத்த்வ என்பதன் பொருள் “இருப்பு.” ஸத்த்வ என்பதன் மற்றொரு பொருள் ஸத்வ குணம். இந்த ஜடவுலகில் மூன்று குணங்கள் உள்ளன: ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), மற்றும் தமோ குணம் (அறியாமை குணம்).

ஆயினும், உண்மையான ஸத்வம் ஆன்மீக லோகத்தில்தான் உள்ளது. ஜடவுலகிலுள்ள ஸத்வ குணம் இங்கே மிகவுயர்ந்த குணமாகக் கருதப்பட்டாலும், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப்படக்கூடியதாகும். ரஜோ குணமும் தமோ குணமும் எவ்வாறு கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகின்றனவோ, அவ்வாறே ஜட ரீதியிலான ஸத்வ குணமும் கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகிறது.

எனவே, ஜட ரீதியிலான ஸத்வ குணத்தையும் நாம் கடந்தாக வேண்டும். தூய ஸத்வ குணத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், அதுவே ஆன்மீக வாழ்க்கை. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே தூய ஸத்வ குணத்தில் நிலைத்திருக்க முடியும். இல்லாவிடில், ஸத்வ குணமும் களங்கப்பட்டு விடும்.

தூய பக்தித் தொண்டு

தூய பக்தித் தொண்டு என்றால் என்ன? அன்யாபிலாஷிதா ஷூன்யம். தூய பக்தித் தொண்டு என்பது பெளதிகமான ஆசைகள் இல்லாத நிலையாகும். பெளதிக ஆசைகள் ஸத்வ குணத்தைக் களங்கப்படுத்துகின்றன. உதாரணமாக, நீங்கள் ஸத்வ குண பிரம்மசாரியாக இருந்தாலும், மனதில் எப்பொழுதும் பெண்களையும் பாலுறவையும் நினைத்துக் கொண்டிருந்தால், அஃது உங்களது ஸத்வ குணத்திலுள்ள களங்கமாகும். அதுபோன்று, வெளியே கட்டுப்பாட்டுடன் இருந்து கொண்டு மனதில் புலனின்பத்தை நினைப்பவன், “ஏமாற்றுக்காரன்” என்று பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது..

ஆகவே, நாம் எப்போதும் கிருஷ்ணரையே நினைவிற்கொள்ள வேண்டும். இல்லாவிடில், ஏதாவது சிறு வழி கிடைத்தாலும், மாயை அதனுள் நுழைந்து நமது ஸத்வ குணத்தைக் களங்கப்படுத்தி விடுவாள்.

மஹாவிஷ்ணு மூச்சை வெளிவிடும்போதும் உள்ளிழுக்கும் போதும் பற்பல பிரபஞ்சங்கள் தோன்றி மறைதல்

ஆன்மீகத் தீப்பொறிகள்

நாம் ஒவ்வொருவரும் ஆன்மீக ஆத்மாக்கள், பகவானின் அம்சங்கள்; ஆயினும், நாம் பௌதிக குணங்களால் மூடப்பட்டுள்ளோம், பகவானிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம். பொறாமையினால் நாம் பகவானை நகல் செய்ய விரும்புவதே இதற்கான காரணமாகும்.

நாம் நினைக்கிறோம்: “பகவான் மட்டும்தான் அனுபவிப்பாளரா? நானும் ஏன் அவரைப் போல அனுபவிக்க முடியாது?” பகவான் கூறுகிறார்: “ஆம், நீங்களும் அனுபவிப்பாளராக மாறலாம்.” அப்போது நாம் உடனடியாக இந்த ஜடவுலகினுள் விழுந்து விடுகிறோம்.

பகவானை நெருப்புடனும் ஆன்மீக ஆத்மாவை அந்த நெருப்பின் ஒரு பொறியுடனும் ஒப்பிடலாம். நெருப்பிலிருந்து ஒரு பொறி விடுபட்டு அது வைக்கோலின் மீது விழுந்தால், வைக்கோல் தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது. அதே பொறி பசுமையான தாவரங்களின் மீது விழுந்தால், அங்கு சிறிது வெப்பம் இருக்கும், தீப்பொறி உடனடியாக அணையாது. ஆனால், அந்தத் தீப்பொறி நீரில் விழுந்தால், அஃது உடனடியாக அணைந்து விடுகிறது.

வீழ்ச்சியடைந்த ஆன்மீக ஆத்மா ஸத்வ குணத்துடன் தொடர்பு கொண்டால், அந்த நிலை வைக்கோலில் விழுந்த பொறியைப் போன்றதாகும். ஸத்வ குணத்தில் இருப்பவன் கிட்டதட்ட ஆன்மீகத் தளத்தில் உள்ளவனே

எளிதான விடுதலை

இருப்பினும், ஜடவுலகின் எல்லா குணங்களிலிருந்தும் ஒருவன் விடுபட வேண்டும். யார் வேண்டுமானாலும் இதிலிருந்து விடுபடலாம். பிராமண குணங்களைப் பெற்று ஸத்வ குணத்தில் உள்ளவன் மட்டுமே பக்தி சேவையில் ஈடுபட முடியும் என்று கிருஷ்ணர் கூறவில்லை. மாறாக, பக்தி சேவையில் ஈடுபட்டால், நீங்கள் உடனடியாக முக்குணங்களிலிருந்தும் விடுபட்டு, பிராமணர்களை
விட உயர்ந்த வைஷ்ணவர்களாக மாறி விடுவீர்கள். வைஷ்ணவன் என்பவன் பிராமண நிலையைக் கடந்தவன்.

பொதுவாக, வைஷ்ணவன் என்பது எளிதான ஒன்றல்ல. ஆயினும், அதற்கான ஒழுக்க நெறிகளை ஒருவன் உறுதியுடன் பின்பற்றினால், பகவான் சைதன்யர் அந்த வழிமுறையை எளிதாக்கி விடுகிறார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைத் தவறாமல் ஜபம் செய்யுங்கள். இஃது இந்த யுகத்தின் மக்களுக்குக் கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும். நாமத்தை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் திவ்யமான நிலையில் நிலைத்திருக்க முடியும். சேதோ தர்பண மார்ஜனம் பவ மஹா தாவாக்னி நிர்வாபணம். அபராதமின்றி உச்சரிக்கும் தளத்தில் நிலைபெற்று விட்டால், நீங்கள் ஜட குணங்களைக் கடந்து தெய்வீக நிலையை அடைவீர்கள்.

ஜகாயும் மாதாயும் சைதன்ய மஹாபிரபுவின் திருவடிகளில் விழுந்து வேண்டுதல்

குருவின் கருணை

இது மிகவும் சுலபம். கிருஷ்ணரின் கருணையாலும் குருவின் கருணையாலும் நீங்கள் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றமடைய முடியும் என்று சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளது. குருவை ஒதுக்கி விட்டு கிருஷ்ணரின் கருணையைப் பெற முயலக் கூடாது. அது பலன் தராது. நீங்கள் ஒரு முக்கிய பிரமுகரைக் காண விரும்பினால், அவரது சேவகரின் மூலமாகத்தான் செல்ல வேண்டும். சேவகன் அந்த முக்கியஸ்தரிடம் கூறுவான்: “ஐயா, உங்களைக் காண இன்னார் விரும்புகிறார், அவர் நல்லவராகத் தோன்றுகிறார்.” அந்த பிரமுகரும், “சரி, அவரைக் கூட்டி வாருங்கள்,” என்று கூறுவார். அந்த சேவகனின் சிபாரிசு தேவைப்படுகிறது.

எனவே, நாம் தினமும் பாடுகிறோம்: யஸ்ய ப்ரஸாதாத் பகவத் ப்ரஸாத, குருவின் கருணையினால் பகவானின் கருணையைப் பெறுகிறோம். யஸ்யாப்ரஸாதான் ந கதி: குதோ’பி. குருவின் கருணையின்றி சீடனால் முன்னேற முடியாது.

இன்றைய ஸ்லோகத்தில் பல அவதாரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குருவும் பகவானின் ஓர் அவதாரமே, அவர் பகவானின் கருணை வாய்ந்த அவதாரம். பகவான் சைத்ய குருவாக உங்களது இதயத்தினுள் வீற்றிருக்கிறார். அந்த பரமாத்மா உங்களின் மீது மிகவும் கருணை கொள்ளும்போது, உங்களின் முன்பாக வந்து வெளியிலிருந்தபடி உபதேசம் செய்கிறார். அவரே குரு ஆவார். எனவே, ஸாக்ஷாத் தரித்வேன ஸமஸ்த ஷாஸ்த்ரை, பகவானின் கருணை வாய்ந்த அவதாரமே குரு. ஹரித்வேன என்றால், “குரு ஹரிக்கு சமமானவர்” என்று பொருள். ஸமஸ்த ஷாஸ்த்ரை என்றால், “எல்லா சாஸ்திரங்களும் உரைக்கின்றன,” என்று பொருள். குருவானவர் பகவானின் அவதாரம் என்று சாஸ்திரத்தின் ஏதோ ஓரிடத்தில் மட்டும் சொல்லப்படவில்லை. இஃது எல்லா வேத சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளன.

எனவே, சீடன் குருவை பகவானைப் போன்று மதித்து நடக்க வேண்டும். ஆயினும், குருவானவர், “இப்போது நான் பகவானாக மாறி விட்டேன்,” என்று சொல்லக் கூடாது. அவர் அவ்வாறு சொன்னால், உடனே வீழ்ச்சியடைவார். “நான் பகவானின் அவதாரம் என்பதால், நீங்கள் என்னை வழிபட வேண்டும்,” என்று அவர் சொல்ல முடியாது.

மாயாவாதிகள் எனப்படும் அருவவாத குருமார்கள், “பகவானுக்கும் தனக்கும் வித்தியாசமில்லை,” என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையான குருவோ, “நான் பகவானுடைய சேவகனுக்கு, சேவகனுக்கு, சேவகனுக்கு சேவகன்,” என்றே கூறுகிறார். கோபி பர்த பத கமலயோர் தாஸ தாஸானுதாஸ. பகவானுக்குரிய கெளரவம் குருவிற்கு தரப்படும்போதிலும், உண்மையான குருவானவர் தன்னை ஒருபோதும் பகவானாக பிரகடனப் படுத்துவதில்லை. அவர் தம்மை பகவானின் மிகவும் தாழ்ந்த சேவகனாகவே கூறிக்கொள்கிறார்.

எண்ணற்ற அவதாரங்கள்

கடலலைகள் ஓயாமல் உள்ளதைப் போல, பகவானின் அவதாரங்களும் எண்ணற்றவை
ஆக உள்ளன. இதனை எவ்வாறு புரிந்துகொள்வது? பௌதிக உலகில் ஒரு பிரபஞ்சம் மட்டும் இருக்கவில்லை, எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும். காரணக் கடலில் வீற்றுள்ள மஹாவிஷ்ணு மூச்சை வெளிவிடும்போதும் உள்ளிழுக்கும்போதும் பற்பல பிரபஞ்சங்கள் தோன்றி மறைகின்றன. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் பற்பல கிரகங்கள் உள்ளன. இங்குள்ள மனிதர்களுக்கு விளக்கிக் கூற எத்தனை அவதாரங்கள் தேவைப்படுகின்றன என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்.

நாம் அனைவரும் பகவானின் பிள்ளைகள். ஆனால் அவரை மறந்து வாழ்ந்து கொண்டுள்ளோம். ஆயினும், பகவானால் நம்மை மறக்க இயலாது, அவர் நம்மை மீட்பதற்கு தொடர்ந்து முயன்று கொண்டுள்ளார். “இங்கே ஏன் துன்பப்பட்டுக் கொண்டுள்ளீர்கள்? நீங்கள் ஏன் என்னிடம் வரக் கூடாது? சரணடைந்து மகிழ்ச்சியுடன் இருங்கள்,” என்று நம்மை சமாதானப்படுத்துவதற்காக கிருஷ்ணர் தாமே கீழிறங்கி வருகிறார்.

ஜகாய், மாதாய்க்கு கருணை காட்டுதல்

நாம் நமது பாவச் செயல்களைக் கைவிட்டு தம்மிடம் சரணடைய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புகிறார். ஜகாய், மாதாய் ஆகியோரை பகவான் சைதன்யர் விடுவித்த கதையில் இது வெளிப்படுத்தப்பட்டது. இந்த இரு சகோதரர்களும் பெரும் பாவங்களைச் செய்தவர்கள். அவர்கள் நல்ல பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், கெட்ட சகவாசத்தால் குடிகாரர்களாகவும் சூதாட்டக்காரர்
களாகவும் மாமிசம் உண்பவர்களாகவும் விலை மாதர்களை வேட்டையாடுபவர்களாகவும் மாறி
இருந்தனர்.

அவர்கள் மக்களுக்குப் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்தார்கள். ஒட்டுமொத்த உலகமும் இப்போது தொல்லைகளுக்கு உட்பட்டுள்ளது. ஏன்? ஏனென்றால், இதுபோன்ற பாவிகள்தான் இவ்வுலகில் நிறைந்துள்ளனர். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்கள், மாமிசம் உண்பவர்கள், மற்றும் பெண்களை வேட்டையாடுபவர்களே உலகில் நிறைந்துள்ளனர்; இந்தச் சூழ்நிலையில், மனிதர்கள் அமைதியை எதிர்பார்க்கின்றனரே. அபத்தம்! மனிதர்களுக்கு முதலில் பாவமற்றவர்களாக மாற கற்றுத் தர வேண்டும். பின்னர், அமைதியைப் பற்றிப் பேசலாம்.

ஒருமுறை இந்த இரு சகோதரர்களும் தெருக்களில் தொல்லை கொடுத்து வந்தபோது, அங்கே கூட்டம் கூடியது. சைதன்ய மஹாபிரபுவின் நெருங்கிய சகாக்களான நித்யானந்த பிரபுவும் ஹரிதாஸ தாகூரும் பிரச்சாரம் செய்வதற்காக அப்பகுதிக்கு வந்திருந்தனர். அப்போது, ஹரிதாஸ தாகூரிடம் நித்யானந்த பிரபு, “நாம் ஏன் இந்த இரு சகோதரர்களையும் காப்பாற்றக் கூடாது? அது சைதன்ய மஹாபிரபுவிற்கு மிகவும் பெருமை தருவதாக அமையும்,” என்று கூறினார்.

இதுவே பிரச்சாரகரின் மனநிலை. அவர் தமது பிரச்சாரத்தின் பெருமை தலைவருக்கு மட்டுமே போய் சேர வேண்டும் என்று விரும்புகிறார். அந்தப் பிரச்சாரம் தமது உயிருக்கு அபாயத்தைக் கொடுத்தாலும், அவர் தனக்குப் பெருமை தேடிக்கொள்ள விரும்புவதில்லை.

ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கக் கோரி ஜகாய், மாதாயை நித்யானந்த பிரபு அணுகியபோது, அவர்களில் ஒருவன் நித்யானந்தரை கல்லால் அடித்தான், நித்யானந்தருக்கு ரத்தம் வழிந்தது. அப்போது, நித்யானந்தர் கூறினார்: “என்னை காயப்படுத்தியுள்ளீர், ரத்தம் வழிகிறது. இஃது ஒரு பொருட்டல்ல. நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தால் போதும்.”

நாம் எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை நித்யானந்த பிரபு நமக்குக் காட்டுகிறார். ஏதோ ஓரிடத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதல்ல. நாம் வெளியுலகிற்குச் சென்று ஜகாய்களையும் மாதாய்களையும் சந்திக்க வேண்டும். இதுவே சைதன்ய மஹாபிரபுவின் நோக்கம். ஏனென்றால், உலகம் முழுவதும் ஜகாய்களும் மாதாய்களுமே நிறைந்துள்ளனர்.

நித்யானந்த பிரபுவை ஒருவர் காயப்படுத்தி விட்டார் என்பதைக் கேள்விப்பட்டு, சைதன்ய மஹாபிரபு நெருப்பைப் போல கோபப்பட்டார். விஷ்ணுவோ வைஷ்ணவரோ அவமதிக்கப்படுவதை ஒரு பக்தன் காண நேரிட்டால், அவன் நெருப்பைப் போல மாற வேண்டும். த்ருணாத் அபி ஸூனிசேன, தெருவில் உள்ள புல்லை விட பக்தன் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பது சைதன்ய மஹாபிரபுவின் பொதுவான உபதேசம். ஆயினும், பகவானோ பகவானுடைய பக்தரோ அவமதிக்கப்படுவதை ஒரு பக்தன் காண நேரிட்டால், அந்த பக்தன் புல்லைப் போல இருக்கக் கூடாது, நெருப்பைப் போல இருக்க வேண்டும் என்பதற்கு சைதன்ய மஹாபிரபுவே உதாரணம் அமைத்துக் காட்டினார். அவர், “அந்த இரு சகோதரர்களையும் உடனடியாகக் கொல்வேன்,” என்று மிகுந்த கோபமுற்று கூறினார்.

ஆயினும், நித்யானந்த பிரபு வேண்டினார், “எம்பெருமானே, இந்த அவதாரத்தில் எந்த ஆயுதத்தையும் ஏந்துவதில்லை என்று தாங்கள் வாக்களித்துள்ளீர். இராமசந்திரராக அவதரித்தபோது ஆயுதம் ஏந்தினீர், கிருஷ்ணராகவும் ஆயுதம் ஏந்தினீர். ஆனால் இந்த முறை பாவகரமான ஆத்மாக்களை விடுவிக்க விரும்புகிறீர். எனவே, இவர்களைக் கொல்ல வேண்டாம், மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.”

நித்யானந்தர் ஓர் உண்மையான குரு. குருவின் பணி மிகவும் கருணையுடன் இருப்பது என்பதை அவர் காண்பித்தார்.

அச்சமயத்தில், ஜகாயும் மாதாயும் சைதன்ய மஹாபிரபுவின் திருவடிகளில் விழுந்து வேண்டினர்: “நாங்கள் பெரும் பாவிகள், தவறிழைத்து விட்டோம். அன்புகூர்ந்து எங்களை மன்னியுங்கள்.”

சைதன்ய மஹாபிரபு அவர்களுக்கு நிபந்தனை விதித்தார்: “உங்களது வாழ்க்கை பாவங்கள் நிறைந்தது. எனவே, இனிமேல் பாவங்களைச் செய்ய மாட்டோம் என்று நீங்கள் உறுதியளித்தால், நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.” அப்போது, ஜகாயும் மாதாயும் இனி பாவங்களைச் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர்.

அந்த உறுதிமொழி தேவைப்படுகிறது. நீங்கள் தீக்ஷை பெறும்போது, “தகாத பாலுறவில் ஈடுபட மாட்டேன், மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், சூதாட மாட்டேன்,” என்று உறுதியளிக்கின்றீர். இந்த விஷயங்களைச் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்த பின்னர், மீண்டும் அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் செய்யாவிடில், உங்களை யாரும் தொந்தரவு செய்ய முடியாது. உங்களை நீங்களே மாசுபடுத்திக் கொண்டால், உங்களது ஸத்வ குணம் வெளியேறிவிடும்.

இதுவே எச்சரிக்கை. அறிவீனமான செயல்களைச் செய்ய மாட்டேன் என்று உறுதி கூறி தீக்ஷை பெற்று விட்டால், ஸத்வ குணத்தில் பக்குவமடைவீர். மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி. உங்களை மாயையினால் எதுவும் செய்ய முடியாது. நீங்களே உங்களை ஏமாற்றிக் கொண்டால், ஆன்மீக குருவை ஏமாற்றினால், பகவானை ஏமாற்றினால், அப்போது மாயையால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives