ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இராமானந்த ராயரிடம் வாழ்வின் இறுதி இலக்கையும் அதனை அடைவதற்கான வழிமுறையையும் கூறுமாறு வினவினார். அதற்கு இராமானந்த ராயர் வர்ணாஷ்ரம முறைப்படி கடமைகளை ஆற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும் என்று முதலில் பதிலுரைத்தார். மஹாபிரபு அந்த கூற்றினை மேலோட்டமானதாகக் கூறி மறுத்தார். அதைவிட ஆழமாகச் செல்லும்படி வேண்டினார். அதனை ஒப்புக் கொண்ட இராமானந்த ராயர் உழைப்பின் பலனை பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தல் (கர்மார்ப்பணம்), கர்மம் கலந்த பக்தி (கர்ம மிஸ்ர பக்தி), ஞானம் கலந்த பக்தி (ஞான மிஸ்ர பக்தி), அனைத்தையும் துறந்து கிருஷ்ணரிடம் சரணடைதல் போன்ற கூற்றுக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்மொழிந்தார். மஹாபிரபுவோ இவையனைத்தையும் மேலோட்டமானதாகக் கூறி நிராகரித்தார்.