இரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், ஸார்வபௌம பட்டாசாரியர் முதலியோரை ஸ்ரீ சைதன்யர் முதலில் சந்தித்தார், இராமானந்த ராயரின் பெருமைகளை ஸார்வபௌமரிடம் தெரிவித்தார். மன்னரின் குருவான காசி மிஸ்ரரின் வீட்டில் பகவான் சைதன்யருக்காக ஓர் அறையை ஸார்வபௌமர் அமைத்துக் கொடுத்தார். அந்த அறை, வசதியான முறையில் ஜகந்நாதர் கோயிலுக்கு அருகிலும், அதே சமயத்தில் தனிமையாகவும் அமைதியுடனும் திகழ்ந்தது.