ஒரு சாதாரண முட்டாள் மனிதனிடம்கூட பல்வேறு திறன்கள் பொதிந்துள்ளன. அந்த மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் ரோபோவை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில், அவ்வாறு சிந்தித்து செயல்படுவதற்கான திறனும் உணர்ச்சிகளும் ஆத்மாவிடமிருந்து வருகின்றன, ஜடப் பொருட்களின் கலவையான ரோபோவினால் அவை இயலாதவை. உணர்ச்சி என்பது உயிரிலிருந்து மட்டுமே வரக்கூடும். உணர்வுகளை இயந்திரத்தின் மூலமாகப் பெறுவதற்கு எந்த முயற்சியை மேற்கொண்டாலும், நாம் பதிவு செய்யும் உணர்ச்சிகளை வேண்டுமானால் அந்த இயந்திரங்கள் வெளிப்படுத்தலாம். ஆனால் மனிதனைப் போன்ற யதார்த்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் சாத்தியமல்ல.