ஸ்ரீல வியாஸதேவர் பக்தி யோக முறையை விளக்கும் ஸ்ரீமத் பாகவதம் எனும் பெரும் இலக்கியத்தைத் தொகுத்தார். இந்த அற்புதமான வேத இலக்கியத்தைக் கேட்ட மாத்திரத்தில் பகவான் கிருஷ்ணரின் மீதான அன்பான பக்தித் தொண்டின் உணர்வுகள் இதயத்தில் முளை விடுகிறது; வருத்தம். மாயை, மற்றும் பயத்தின் தீயை அஃது அணைத்து விடுகிறது.
வேத புராணங்களைத் தொகுத்த வியாஸதேவர் தனது மனதில் இனம்புரியாத திருப்தியின்மையை உணர்ந்து தன்னிலையை ஆராய முற்பட்டபோது, நாரத முனிவர் அங்கு தோன்றி, பகவானின் பக்தித் தொண்டை நேரடியாக வலியுறுத்தாததே வியாஸரின் அதிருப்திக்கு காரணம் என விளக்கினார். பக்தர்களின் சங்கத்தினால் பெறப்படும் உயர்வை வலியுறுத்த விரும்பிய நாரதர், தனது முந்தைய வாழ்வைப் பற்றி வியாஸருக்கு எடுத்துரைப்பதையும், அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலின் தொடர்ச்சியையும் இவ்விதழில் காண்போம்.
நாம் துன்பங்களை விரும்பாதபோதிலும் காலப்போக்கில் அவற்றை அடைவதைப் போலவே, இன்பங்களையும் காலப்போக்கில் தானாக அடைவோம். எனவே, புத்திசாலி மனிதன் பெறற்கரிய விஷயமான கிருஷ்ண பக்திக்காக தனது வாழ்வைச் செலவிட வேண்டும்.
பகவான் எண்ணற்ற அவதாரங்களை மேற்கொள்கிறார். அவற்றுள் நான்கு குமாரர்கள் முதல் கல்கி வரையிலான இருபத்தி இரண்டு அவதாரங்களை சூத கோஸ்வாமி இங்கு குறிப்பிடுகிறார். அவரது எண்ணற்ற அவதாரங்கள் அனைவரும் வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போல, அவரது அம்சங்களாக அல்லது அம்சத்தின் அம்சங்களாக உள்ளனர்.
பக்தி யோகமே பக்குவமான, முழுமையான ஆன்மீகச் செயலாகும். இதனால் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர் காரணமற்ற ஞானத்தைப் பெறுவது மட்டுமின்றி, ஜடவுலகப் பற்றுதல்களிலிருந்து எளிதில் விடுதலை பெறுகிறார். இத்தகு பக்தியோகம் எந்தவொரு மற்ற வழிமுறையின் உதவியையும் நாடியிருப்பதில்லை.