கிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் “மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: முதல் காண்டத்தின் மூன்றாம் அத்தியாயம்

இரண்டாம் அத்தியாயத்திற்கும் மூன்றாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

நைமிஷாரண்ய முனிவர்களின் முதல் நான்கு கேள்விகளுக்கு சூத கோஸ்வாமி இரண்டாம் அத்தியாயத்தில் பதிலளித்தார். மூன்றாம் அத்தியாயத்தில் மற்ற இரண்டு கேள்விகளுக்கான பதில்களைத் தருகிறார். இரண்டாம் அத்தியாயத்தில் சுருக்கமாக தரப்பட்ட புருஷ அவதாரங்களைப் பற்றிய விளக்கமும் மூன்றாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்படுகிறது.

 

புருஷ அவதாரங்களின் விரிவான விளக்கம்

காரணோதகஷாயி விஷ்ணுவே முதல் புருஷர் ஆவார். அவரது மயிர் துவாரங்களிலிருந்து எண்ணற்ற பிரபஞ்சங்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் புருஷராக கர்போதகஷாயி விஷ்ணு நுழைகிறார். அவர் தனது உடலிலிருந்து வெளிப்பட்ட நீரால் பிரபஞ்சத்தின் பாதியை நிரப்பி விட்டு, அதற்குள் பள்ளி கொண்டிருக்கிறார். கர்போதகஷாயி விஷ்ணுவின் நாபியிலிருந்து தாமரைப் பூவின் தண்டு வளர்கிறது. அத்தாமரை மலரே பிரம்மாவின் பிறப்பிடமாகும். அவர் எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையாவார். பிரபஞ்சத்தை இயக்குவதில் ஈடுபட்டுள்ள அனைத்து தேவர்களுக்கும் அவரே தலைவராவார்.

அந்த தாமரைத் தண்டினுள் 14 கிரக அமைப்புகள் உள்ளன. அதன் மத்தியில் பூலோகமும், உயர்லோகங்கள் அதற்கு மேலும் உள்ளன. இவற்றில் மிகவும் உயர்ந்தது பிரம்மலோகம் அல்லது ஸத்யலோகம் என்று அழைக்கப்படுகிறது. பூலோகத்திற்கு கீழே ஏழு தாழ்ந்த கிரக அமைப்புகள் உள்ளன. அவற்றில் அசுரர்களும் அவர்களுக்கு ஒப்பான மற்ற உயிர்வாழிகளும் வாழ்கின்றனர்.

கர்போதகஷாயி விஷ்ணுவிலிருந்து அவரது விரிவங்கமாக க்ஷீரோதகஷாயி விஷ்ணு வருகிறார். அவர் அனைத்து உயிர்வாழிகளுக்கும் பரமாத்மாவாகவும் பாற்கடலில் பள்ளி கொண்டவராகவும் உள்ளார். பிரபஞ்சத்தினுள் தோன்றும் எல்லா அவதாரங்களும் அவரிடமிருந்தே தோன்றுகின்றனர்.

ஆகவே, முடிவு என்னவெனில், பகவான் மூன்று புருஷ அவதாரங்களாகத் தோன்றியுள்ளார்: (1) பௌதிக மூலப்பொருட்கள் அனைத்தையும் படைப்பவரான காரணோதகஷாயி விஷ்ணு, (2) ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் நுழைபவரான கர்போதகஷாயி விஷ்ணு, மற்றும் (3) உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றிலும் பரமாத்மாவாக இருக்கும் க்ஷீரோதகஷாயி விஷ்ணு. முழுமுதற் கடவுளின் இந்த முழுமையான அம்சங்களை அறிபவன் இறைவனை சரியாக அறிந்தவன் ஆவான்.

 

பகவானின் இதர அம்சங்களைப் பற்றிய சுருக்கம்

பகவான் எண்ணற்ற அவதாரங்களை மேற்கொள்கிறார். அவற்றுள் நான்கு குமாரர்கள் முதல் கல்கி வரையிலான இருபத்தி இரண்டு அவதாரங்களை சூத கோஸ்வாமி இங்கு குறிப்பிடுகிறார். அவரது எண்ணற்ற அவதாரங்கள் அனைவரும் வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போல, அவரது அம்சங்களாக அல்லது அம்சத்தின் அம்சங்களாக உள்ளனர்.

கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுள்

எண்ணற்ற அவதாரங்கள் அனைவரும் அம்சங்களாகவோ அம்சத்தின் அம்சங்களாகவோ உள்ளபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும் ஸ்வயம் பகவான், அதாவது மூல முழுமுதற் கடவுள் எனக் குறிப்பிடப்படுகிறார். கிருஷ்ணர் புருஷரின் ஓர் அவதாரமல்ல. அவரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம் என்பதால், அவர் அவதாரி எனப்படுகிறார். கிருஷ்ணரிடமிருந்து முதலாவதாக வெளிவந்த பூரண விரிவே பலராமர். பலராமரிடமிருந்தே இதர ரூபங்கள் தோன்றுகின்றனர்.

விராட ரூபம்

பகவானின் பல்வேறு தோற்றங்களைப் பற்றி காலையிலும் மாலையிலும் சிரத்தையுடனும் பக்தியுடனும் படிப்பவர்கள், யாராக இருந்தாலும், வாழ்வின் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுவர்.

இருப்பினும், பௌதிகத்திற்கு அப்பால் எதையும் எண்ணிப் பார்க்க இயலாத ஆரம்பநிலை சாதகர்களும் குறைமதி கொண்டவர்களும் பகவானைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருப்பதற்காக அவரது விராட ரூபத்தைப் பற்றிய வர்ணனையும் வழங்கப்படுகிறது. உலகின் ஒவ்வொரு பகுதியையும் பகவானது உடலின் ஒவ்வோர் அம்சங்களாக அமையும் இந்த விராட ரூபத்தைப் பற்றிய கருத்து கற்பனையானது என்பதால், இது அவதாரங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

பகவானின் கருணையால், ஜீவராசியிடமுள்ள மாயா சக்தி எடுக்கப்பட்டு, அவனுடைய அறிவு முழுமையாக வளர்க்கப்படுகிறது. இதனால் ஜீவன் உடனடியாக தன்னுணர்வுடன் கூடிய மெய்யறிவைப் பெறுகிறான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் எவ்வித தயக்கமுமின்றி அனுகூலமான முறையில் இடைவிடாமல் தொண்டு செய்பவர்களால் மட்டுமே அவரது புகழ், சக்தி, மற்றும் உன்னதத் தன்மையினை முழுமையாக அறிய முடியும்.

பகவானைப் பற்றிய இத்தகைய விசாரணைகள் தெய்வீகமானவை, பூரண விடுதலைக்கு உத்தரவாதம் அளிப்பவை.

 

காரணோதகஷாயி விஷ்ணு, கர்போதகஷாயி விஷ்ணு, க்ஷீரோதகஷாயி விஷ்ணு ஆகிய மூன்று வடிவில் பகவான் புருஷ அவதாரமாக உள்ளார்.

பகவான் பல்வேறு அவதாரங்களாக தோன்றும்போதிலும் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்து அவதாரங்களுக்கும் மூலமாவார்.

பாகவதம் என்னும் சூரியன்

ஸ்ரீமத் பாகவதம் பகவானின் இலக்கிய அவதாரமாகும். இஃது உலக மக்களின் இறுதி நன்மைக்காக பகவானின் அவதாரமாகிய ஸ்ரீல வியாஸதேவரால் தொகுக்கப்பட்டதாகும். மேலும், இது பூரண வெற்றியையும் பேரின்பத்தையும் கொடுக்கும் பரிபூரணமான இலக்கியமாகும்.

ஸ்ரீல வியாஸதேவர் ஸ்ரீமத் பாகவதத்தை தம் புதல்வரான சுகதேவருக்கு உபதேசித்தார். சுகதேவ கோஸ்வாமி இதனைப் பேரரசரான பரீக்ஷித் மஹாராஜருக்கு முறைப்படி உபதேசித்தார்.

இந்த பாகவத புராணம் சூரியனைப் போல் பிரகாசமானதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தர்மம், ஞானம் போன்றவற்றுடன் தனது திருநாட்டிற்குத் திரும்பிச் சென்ற உடனேயே இஃது உதயமாகி இருக்கிறது. கலி யுகத்தில் அறியாமை என்னும் இருளினால் பார்வையை இழந்தவர்கள் இப்புராணத்திலிருந்து ஒளியைப் பெறலாம். (அடுத்த இதழில், அத்தியாயம் நான்கு மற்றும் ஐந்தினைக் காணலாம்)

 

 

கலி யுகத்தில் அறியாமை என்னும் இருளினால் பார்வையை இழந்தவர்கள் ஸ்ரீமத் பாகவதம் என்னும் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறலாம்.

மூன்றாம் அத்தியாயத்தின் ஐந்து பகுதிகள்

(1) புருஷ அவதாரங்களின் விரிவான விளக்கம் (1-5)

படைப்பின் மூலங்கள்

பிரம்மாவின் பிறப்பிடம்

கிரக அமைப்பு

(2) லீலா அவதாரங்கள் (6-27)

சனகாதி குமாரர் முதல் கல்கி அவதாரம் வரை

(3) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (28)

எல்லா அவதாரங்களுக்கும் மூலம் (அவதாரி)

(4) விராட ரூபம் (30-39)

கற்பனையானது

ஆரம்பநிலை சாதகர்களுக்கானது

(5) பாகவத சூரியன் உதித்தது (40-44)

இலக்கிய அவதாரம்

எல்லாருக்கும் நன்மை, மகிழ்ச்சி, வெற்றி மற்றும் பக்குவம் அளிப்பது.

பாகவதத்திடம் தர்மம் அடைக்கலம் புகுந்துள்ளது

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives