பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும் பன்றிகளுக்கும் நாய்களுக்கும்கூட கிடைக்கக்கூடியதே. மனித உடலைப் பெற்ற ஒருவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவம் செய்ய வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்த தவத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, நித்தியமான ஆன்மீக ஆனந்தத்தை அடையலாம்.
பக்திவினோத தாகூர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது.