எது தீர்த்த ஸ்தலம்? வைகுண்டத்தில் நித்தியமாக வசிக்கும் பகவான் நாராயணரோ அவரது தூய பக்தர்களோ இம்மண்ணுலகில் தோன்றி லீலைகள் புரிந்த இடங்கள் புனிதமான தீர்த்த ஸ்தலங்களாக அறியப்படுகின்றன. இந்த தீர்த்த ஸ்தலங்கள் வைகுண்ட லோகங்களிலிருந்து வேறுபாடற்றவையாக உள்ளதால் அளவிட இயலாத தெய்வீக சக்திகளால் நிறைந்துள்ளன. பகவான் கிருஷ்ணர் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், தீர்த்த ஸ்தலங்களில் அவரை அணுகுதல் மிகவும் எளிது. தீர்த்த ஸ்தலங்களில் ஒருவர் செய்யும் பக்தி சேவை பல மடங்கு பலனைத் தரும் என்பது சாஸ்திரங்களின் கூற்று. எனவே, ஆன்மீக வாழ்வில் துரிதமாக முன்னேற விரும்புவோரின் அடைக்கலமாக தீர்த்த ஸ்தலங்கள் திகழ்கின்றன.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவில், வஸுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றினார். சிறையிலிருந்த வஸுதேவரின் சங்கிலிகள் அறுந்தன, சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன, சிறை காவலர்கள் ஆழ்ந்து உறங்கினர். வஸுதேவர் குழந்தை கிருஷ்ணரை எடுத்துக் கொண்டு நந்த மஹாராஜர் வாழ்ந்த கோகுலத்தை நோக்கி முன்னேறினார், ஆர்ப்பரித்து சீறிய யமுனையும் வஸுதேவருக்கு வழி விட்டது.
தென் தமிழக சேதுபந்த கடற்கரையில் அமைந்திருப்பதே புகழ்பெற்ற இராமேஸ்வரம் என்னும் திருத்தலமாகும். பாம்பன் தீவில் உள்ள சேதுக் கரையில் இராமசந்திர பகவான் பல அற்புத லீலைகளைப் புரிந்து அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளதால், இராமேஸ்வரம் சரணாகதிக்கும் பெயர் பெற்ற தலமாகப் போற்றப்படுகிறது. பல புனித தீர்த்தங்களை உள்ளடக்கிய இராமேஸ்வரத்திற்கு பலராமர், சைதன்ய மஹாபிரபு என பலரும் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அழகான ஃபல்கு நதிக்கரையில் அமைந்திருப்பதே கயா என்னும் புனித க்ஷேத்திரமாகும். இதிகாசங்களான இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இந்த கயா க்ஷேத்திரம் நீத்தார் கடன் தீர்க்க நேர்த்தியான தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு, அத்வைத ஆச்சாரியர், இராமசந்திர பகவான் முதலிய பலரும் உலக மக்களின் தர்ம நெறி வாழ்விற்கு முன்னுதாரணமாக, கயாவிற்கு வருகை புரிந்து தமது மூதாதையர்களுக்கு பிண்டம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிண்ட தானத்திற்கு மிகச்சிறந்த இடமான இந்த கயாவின் மஹாத்மியத்தைச் சற்று காண்போம்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்திற்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தில், பகவான் விஷ்ணு கூர்மரின் வடிவில் அருள்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் அழகான குன்றினைப் போல் காட்சியளித்ததால், இவ்விடம் ஸ்வேதாசலம் என்றும் போற்றப்படுகிறது. ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வாசாரியர் முதலிய ஆச்சாரியர்களும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளதால் கூர்ம க்ஷேத்திரம் வைஷ்ணவர்களின் மத்தியில் மிகச்சிறந்த தீர்த்த ஸ்தலமாக விளங்குகிறது.