இறை நம்பிக்கை உள்ளவர்கள் பலரும் ஸ்வர்கம் செல்ல பேரார்வம் காட்டுகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாது இதர மதத்தினரும் ஸ்வர்கத்திற்குச் செல்வதை விரும்புகின்றனர். இறை நம்பிக்கை இல்லாதவர்களும்கூட சில சமயங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மரணிக்கும்போது, அவர்கள் ஸ்வர்கத்தை அடைந்து விட்டனர் என குறிப்பிடுகின்றனர். பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட வாசல் அல்லது பரமபத வாசலை ஸ்வர்க வாசல்” என்று அழைத்து, ஸ்வர்கத்திற்கு செல்லும் தங்களது ஆர்வத்தை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். ஸ்வர்கத்தை அடைவதே தங்களது வாழ்வின் இலட்சியமாகக் கருதும் இவர்கள் பௌதிக, ஆன்மீக உலகின் தன்மைகளை சற்றேனும் அறிந்துகொள்வது அவசியம்.
வைகுண்ட ஏகாதசி அல்லது மோக்ஷத ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசி, எல்லா ஏகாதசிகளிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் அது மற்றெல்லா ஏகாதசி விரதத்திற்கும் சமமானது என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளபோதிலும், எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருத்தல் என்பது வைஷ்ணவ மரபில் அவசியமான ஒன்றாகும்.