வங்காள பூமியானது கௌட மண்டல பூமி எனப்படுகிறது. இது மேற்கு வங்காளம் (இந்தியாவின் ஒரு மாநிலம்), கிழக்கு வங்காளம் (வங்காளதேச நாடு) என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஒடிசாவின் சில பகுதிகளும் கௌட மண்டல பூமியில் அடங்கும். இப்பகுதிகள் பசுமை வளத்திற்கும் நீர் வளத்திற்கும் பெயர்பெற்றவை.
சைதன்ய மஹாபிரபுவும் அவரது நித்திய சகாக்களும் தோன்றி திவ்யமான லீலைகளைப் புரிந்த பூமியையே “கௌட மண்டல பூமி” என கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் கூறுகின்றனர்.
ஆச்சாரியர் என்பவர் ஜடவுலக வாழ்வின் அன்றாடத் துயரங்களைப் போக்குபவர் அல்லர், அவர் ஜடவுலக வாழ்க்கை என்னும் ஒட்டு மொத்த துயரத்தையும் போக்குபவர். நவீன காலத்தில் ஆன்மீகப் பணிகள் என்ற பெயரில், பலரும் பௌதிக சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். மருத்துவமனை திறத்தல், பள்ளிகளைத் திறத்தல், அன்னதானம் வழங்குதல் முதலிய பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவோரை மக்கள் ஆன்மீகவாதிகள் என்று அங்கீகரித்து அவர்களைப் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் அத்தகு பௌதிகமான சமூக சேவைகள் எதுவும் ஆச்சாரியர்களின் பணியல்ல. ஆச்சாரியர்கள் மக்களுக்கு உண்மையான சேவையை வழங்க வல்லவர்கள். அதாவது, மக்களை முற்றிலுமாக பௌதிகப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றக்கூடியவர்கள். உடல் சார்ந்த சேவைகள் அனைத்தும் தற்காலிகமானவை, ஆத்மாவைக் காப்பாற்றும் பணியே உண்மையான சேவை, அதைச் செய்வோரே உண்மையான ஆச்சாரியர்கள்.