வங்காளதேசம், கௌட மண்டல பூமி

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

வங்காள பூமியானது கௌட மண்டல பூமி எனப்படுகிறது. இது மேற்கு வங்காளம் (இந்தியாவின் ஒரு மாநிலம்), கிழக்கு வங்காளம் (வங்காளதேச நாடு) என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஒடிசாவின் சில பகுதிகளும் கௌட மண்டல பூமியில் அடங்கும். இப்பகுதிகள் பசுமை வளத்திற்கும் நீர் வளத்திற்கும் பெயர்பெற்றவை.

சைதன்ய மஹாபிரபுவும் அவரது நித்திய சகாக்களும் தோன்றி திவ்யமான லீலைகளைப் புரிந்த பூமியையே “கௌட மண்டல பூமி” என கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் கூறுகின்றனர். அவர்களில் ஒருவரான ஸ்ரீல நரோத்தம தாஸ தாகூர் குறிப்பிடுகிறார்: “சைதன்ய மஹாபிரபுவின் கௌட மண்டல பூமியை திவ்யமானது என புரிந்துகொள்பவர்கள் விருந்தாவனத்தில் வசிப்பதற்கான தகுதியை பெறுவர்.” கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் அச்சாணியாகக் கருதப்படும் ஸ்ரீல பக்திவினோத தாகூரும் இதனை வலியுறுத்துகிறார்: “கௌட மண்டல பூமியை வலம் வருபவர்கள் கௌர பிரேமையை மிக விரைவில் அடைவர்.”

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, இன்றைய வங்காளதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் சைதன்ய மஹாபிரபு மேற்கு வங்காளத்தில் தோன்றியபோது, அவரது நெருங்கிய சகாக்கள் கிழக்கு வங்காளத்தில் பலர் தோன்றினர். எனவே, வங்காளதேசத்திற்குச் சென்று கௌர லீலைகளுடன் தொடர்புடைய இடங்களை தரிசித்தோம், அந்த பத்து நாள் பயணத்தை பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

வங்கதேச பயணம்

வங்கதேசத்திற்குச் செல்ல பாஸ்போர்ட், விசா தேவை என்பதால், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்த பின்னர், எங்களது பயணம் சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுரிலிருந்து தொடங்கியது. பயணம் இனிமையாக அமைவதற்கு தவத்திரு ஜெயபதாக சுவாமி மஹாராஜர் ஆசிர்வதித்தார். எங்களது குழுவை தவத்திரு பக்தி நித்யானந்த சுவாமி மஹாராஜர் வழிநடத்தினார். வங்கதேசத்திற்குள் நுழைய மாயாபுருக்கு அருகில் ஹரிதாஸ்புர், கெடே என இரு வழித்தடங்கள் இருக்கின்றன. நாங்கள் கெடே எல்லை வழியாக வங்காளதேசத்திற்குள் நுழைந்தபோது, சாருசந்திர தாஸ் என்ற பக்தரின் தலைமையில் வங்கதேச பக்தர்கள் எங்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

வங்கதேச இஸ்லாமியர்கள் உருது மொழி பேசுவதில்லை. அவர்கள் அனைவரும் தங்களது தாய்மொழியான வங்காள மொழியைப் பேசுவதிலேயே பெருமை கொள்கின்றனர். இங்குள்ள இஸ்கான் கோயில்களில் நூற்றுக்கணக்கான பிரம்மசாரிகளைக் காண முடிந்தது. நாங்கள் பயணம் செய்த அனைத்து மாவட்டங்களுக்கும் வங்காளதேச அரசு துப்பாக்கி ஏந்திய போலீசார் பலரை எங்களின் பாதுகாப்பிற்காக அனுப்பியிருந்தனர். வங்காளதேசத்தில் இஸ்கான் இயக்கத்திற்கு எழுபத்துஇரண்டு கோயில்களும் சுமார் ஐயாயிரம் நாமஹட்டா மையங்களும் உள்ளன. இவற்றில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்கின்றனர்.

கேதூரி

நாங்கள் முதலில் தரிசித்த இடம் கேதூரி கிராமம். இந்த கிராமத்தில்தான் மாபெரும் வைஷ்ணவ ஆச்சாரியரான நரோத்தம தாஸ தாகூர் மன்னர் ஸ்ரீ கிருஷ்ணானந்த தத்தருக்கும் ஸ்ரீமதி நாராயணி தேவிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். கௌடீய வரலாற்றில் இந்த கிராமத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. சைதன்ய மஹாபிரபுவின் திவ்யமான மறைவிற்குப் பிறகு, நித்யானந்த பிரபுவின் மனைவி ஜானவி தேவியின் துணையுடன் திரளான கௌடீய வைஷ்ணவ பக்தர்கள் முதல் முறையாக கெளர பூர்ணிமா (சைதன்ய மஹாபிரபுவின் அவதாரத் திருநாள்) பண்டிகையை கேதூரியில் கோலாகலமாகக் கொண்டாடினர்.

நரோத்தம தாஸ தாகூரின் பாடல்கள் கல்போன்ற இதயத்தையும் உருக்கக்கூடியவை. நரோத்தம தாஸ தாகூரின் பரவசமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தின்போது திடீரென பஞ்ச-தத்துவங்களான ஸ்ரீ சைதன்யர், நித்யானந்தர், அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸர் ஆகியோர் கேதூரியில் தோன்றி, அனைத்து பக்தர்களையும் கிருஷ்ண பிரேமை எனும் அருவியில் நனைய வைத்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு மறைந்தனர். கேதூரியில் நாம ஸங்கீர்த்தனம் அந்த அளவிற்கு ஆன்மீக அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நரோத்தம தாஸ தாகூரின் பிறப்பிடத்தை “கௌராங்க பாரி” என்று குறிப்பிடுகின்றனர். நரோத்தமரின் பஜனையினால் ராதா-குண்டமும் சியாம-குண்டமும் இவ்விடத்தில் வெளிப்பட்டன. இங்கே நரோத்தமருடைய மூர்த்தியையும் அவர் வழிபட்ட சில சாலக்ராம சிலாக்களையும் இப்போதும் காணலாம்.

கேதூரியிலுள்ள நரோத்தமரின் பிறப்பிடம், இதனை கௌராங்க பாரி என்று குறிப்பிடுகின்றனர்.

பத்மா நதி

நரோத்தமரின் பிறப்பிற்கு முன்பாக, சைதன்ய மஹாபிரபு கானாய் நாடசாலா எனும் இடத்திற்கு வருகை புரிந்தபோது, “நரோத்தம! நரோத்தம!” என தொடர்ச்சியாக உரக்க அழைத்து மூர்ச்சையடைந்தார். அப்போது, ஹரிதாஸரும் நித்யானந்தரும் “நரோத்தமர்” என்னும் மாபெரும் பக்தர் இவ்விடத்தில் தோன்றவுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு, அவரைப் பற்றி மேலும் அறிய முற்பட்டனர். அச்சமயத்தில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறினார்: “நான் நவத்வீபத்தையும் ஜகந்நாத புரியையும் கிருஷ்ண பிரேமையில் மூழ்கடித்து விட்டேன். நரோத்தமரின் மூலமாக பத்மாவதி நதிக் கரையிலுள்ள இடங்களை கிருஷ்ண பிரேமையில் மூழ்கடிக்க உள்ளேன்.”

இவ்வாறு கூறி விட்டு, சைதன்ய மஹாபிரபு பத்மாவதி நதியில் நீராடியபோது, ஆனந்த பரவசத்தில் பத்மாவதியின் நீர்மட்டம் பல அடி உயரம் எழும்பி ஆர்ப்பரித்ததைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர். கிருஷ்ண பிரேமை எனும் பொக்கிஷத்தை தமது பக்தரான நரோத்தமரிடம் ஒப்படைக்கும்படி பத்மாவதி நதியின் தேவதையிடம் ஸ்ரீ சைதன்யர் ஆணையிட்டார். நரோத்தமரை எவ்வாறு அடையாளம் காண்பது என்று பத்மாவதி வினவியபோது, நரோத்தமரின் திருமேனி பத்மாவதி நீரைத் தொடும்போது அதன் நீர்மட்டம் பன்மடங்கு உயரும் என ஸ்ரீ சைதன்யர் பதிலளித்தார். பிற்காலத்தில், நரோத்தம தாகூர் இந்நதியில் கிருஷ்ண பிரேமை எனும் பொக்கிஷத்தைப் பெற்றபோது, அவரது கருமை நிற திருமேனி பொன்னிறமாக மாறியது. இவ்விடம் “பிரேம ஸ்தலி” என்று அறியப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த தமால மரத்தை இன்றும் பக்தர்கள் தரிசிக்கின்றனர். நரோத்தமரின் பஜனை ஸ்தலமும் இங்கு அமைந்துள்ளது. பிரார்த்தனா, பிரேம பக்தி சந்திரிகா ஆகிய நூல்களை நரோத்தமர் இம்மரத்தடியில் இயற்றினார். இவ்விடத்தை குப்த விருந்தாவனம் என்றும் கூறுகின்றனர். இவ்விடத்திற்கு வெகு அருகிலேயே இஸ்கான் இயக்கத்தின் சார்பில், நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது.

சில்லட்

சைதன்ய சரிதாம்ருதத்தில் “ஸ்ரீ ஹட்டா” என குறிப்பிடப்படும் பகுதி, தற்போது “சில்லட்” என்று அறியப்படுகிறது. இஃது இந்தியாவினுடைய அசாம் மாநிலத்தின் சிரபுஞ்சி பகுதிக்கு அருகில் இருப்பதால், இங்கு எப்போதும் சாரலுடன் கூடிய குளுமையான மலைக் காற்று வீசுகிறது. இங்கிருந்து இரண்டரை மணி நேர பயணத்தில் நவகிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில்தான், ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் அவர்கள் குபேர பண்டிதருக்கும் ஸ்ரீமதி நாப தேவிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார்.

ஜாடு எனப்படும் காட்டாற்றின் ஓரத்தில் ஸ்ரீ அத்வைத ஆச்சாரியரின் அவதார ஸ்தலம் அமைந்துள்ளது. அத்வைத ஆச்சாரியரின் அன்னை வெகு தூரத்திலுள்ள கங்கையில் நீராட எண்ணியபோது, அத்வைத ஆச்சாரியர் உடனடியாக அனைத்து புனித நதிகளையும் இவ்விடத்திற்கு வரவழைத்தார். இந்த இடத்திற்கு “பான தீர்த்தம்” என்று பெயர். ஒவ்வோர் ஆண்டும் கௌர பூர்ணிமாவிற்கு பிறகு வரும் குறிப்பிட்ட திதியில், இலட்சக்கணக்கான மக்கள் இந்த பான தீர்த்தத்தில் நீராடுகின்றனர். இந்த கிராமத்தில் சிறிது காலம் வசித்த பின்னர், அத்வைத ஆச்சாரியர் மேற்கு வங்காளத்திலுள்ள சாந்திபுருக்கு இடம்பெயர்ந்தார்.

பத்மாவதி நதியின் தோற்றம்; இங்கு நரோத்தமர் பிரேமையைப் பெற்றதால், இவ்விடம் பிரேம ஸ்தலி என்று அறியப்படுகிறது.

தாகா தக்ஷிண்

சில்லட் நகரின் வட திசையில் ஒருமணி நேர பயணத்தில் தாகா தக்ஷிண் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊரானது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தந்தையான ஜகந்நாத மிஸ்ரரின் பிறப்பிடமாகும். இங்குதான் உபேந்திர மிஸ்ரருக்கும் ஷோபா தேவிக்கும் அவர் நன்மகனாகத் தோன்றினார். குழந்தை பருவத்திற்குப் பிறகு, ஜகந்நாத மிஸ்ரர் உயர் கல்விக்காக நவத்வீபத்திற்கு குடிபெயர்ந்தார்.

ஸ்ரீ சைதன்யர் தமது கிழக்கு வங்காள பயணத்தின்போது தந்தையின் பூர்வீக இல்லத்திற்கு விஜயம் செய்தார். மலை உச்சியில் அமைந்துள்ள ஜகந்நாத மிஸ்ரரின் அந்த இல்லத்தை தற்போது சிதிலமடைந்த நிலையில் காண முடிகிறது. சில்லட் நகரின் சுனம்கஞ்ச் என்னுமிடத்தில் பக்தி மரத்தின் வேராகக் கருதப்படும் மாதவேந்திர புரியின் பிறப்பிடத்தைக் காணலாம். இவ்விடத்தை தற்போது பிராமண கோன் என்று கூறுகின்றனர்.

ஸச்சி அங்கன்

சில்லட் நகரிலிருந்து சிலமணி நேர பயணத்தில் ஹபி கஞ்ச் என்னும் பகுதியில் சைதன்ய மஹாபிரபுவின் அன்னையான ஸச்சி தேவியின் பிறப்பிடம் அமைந்துள்ளது. நீலாம்பர சக்கரவர்த்திக்கும் பாதாள தேவிக்கும் தெய்வீக மகளாக ஸச்சிதேவி தோன்றினாள். ஸச்சிதேவியின் தங்கையான ஸ்ரீதேவி சந்திரசேகர ஆச்சாரியரை மணந்தாள். மாபெரும் பண்டிதராகவும் ஜோதிடராவும் திகழ்ந்த நீலாம்பர சக்கரவர்த்தி பிற்காலத்தில் நவத்வீபத்திலுள்ள பேல்புகூருக்கு குடிபெயர்ந்தார்.

அத்வைத ஆச்சாரியரின் அவதார ஸ்தலம்

பியானி பஜார்

சில்லட் நகரிலிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் பியானி பஜார் அருகே ஸ்ரீவாஸ தாகூரின் பிறப்பிடமான பஞ்ச காண்டம் அமைந்துள்ளது. இத்தலத்தில் அழகிய பஞ்ச-தத்துவ மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீவாஸ பண்டிதரின் இல்லத்தில் இருந்த புழு, பூச்சிகள், பறவைகள் என அனைத்தும் வைகுண்டத்தை அடைந்ததாக சைதன்ய பாகவதத்தில் விருந்தாவன தாஸ தாகூர் குறிப்பிடுகிறார். சைதன்ய மஹாபிரபு அவதரித்த பிறகு ஸ்ரீவாஸ தாகூர் இவ்விடத்திலிருந்து மாயாபுருக்கு குடிபெயர்ந்தார்.

சிட்டகாங்

சைதன்ய சரிதாம்ருதத்தில் சட்ட கிராமம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம் தற்போது சிட்டகாங் என அறியப்படுகிறது. சிட்டகாங் அருகே மேகலா கிராமத்தில் புண்டரீக வித்யாநிதியின் பிறப்பிடமும் வசிப்பிடமும் அமைந்துள்ளது. ராதையின் தந்தையான விருஷபானுவே சைதன்யரின் லீலையில் வித்யாநிதியாக அவதரித்துள்ளார். ராதையின் மனோபாவத்தைக் கொண்டுள்ள சைதன்யர் புண்டரீகரை காணும்போதெல்லாம் “தந்தையே” என்று பாசத்தோடு அழைப்பார்.

சைதன்யர் புண்டரீகரை குணாநிதி, வித்யாநிதி, பிரேமாநிதி, ஆச்சாரிய நிதி என நான்கு பெயர்களில் அழைப்பார். புண்டரீக வித்யாநிதியின் பிறப்பிடத்தில் அழகிய இஸ்கான் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இங்குள்ள விருஷபானவி-முராரி, கௌரசுந்தரரின் விக்ரஹங்கள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்கின்றனர். தனஞ்ஜய பண்டிதரும் ஜகத்சந்திர கோஸ்வாமியும் இவ்விடத்தில் பிரார்த்தனை செய்து சியாம குண்டத்தை வரவழைத்தனர். ஸ்வரூப தாமோதரரும் புண்டரீகரும் பிரார்த்தனை செய்து ராதா குண்டத்தை வரவழைத்தனர். கோவர்த்தன கிரியும் இவ்விடத்தில் அமைந்துள்ளது.

சிதிலமடைந்து காணப்படும் ஜகந்நாத மிஸ்ரரின் இல்லத்திற்கு முன்பாகக் கூடிய பக்தர்கள்

சைதன்ய மஹாபிரபுவின் அன்னையான ஸச்சி தேவியின் பிறப்பிடம்

புண்டரீகரின் பிறப்பிடமான மேகலா கிராமத்தில் வீற்றுள்ள ஸ்ரீ ஸ்ரீ விருஷபானவி-முராரி, கௌரசுந்தரரின் விக்ரஹங்கள்

மாதவி தலா எனும் கொடி மரம்; இங்கு ஹரிதாஸர் தினமும் 3 இலட்சம் ஹரி நாமத்தை ஜபிப்பது வழக்கம்.

சன்ஹரா

புண்டரீக வித்யாநிதியின் வசிப்பிடத்திற்கு அருகில் முகுந்த தத்தர் மற்றும் வாஸுதேவ தத்தரின் பஜனை குடில் அமைந்துள்ளது. இங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் இவர்களின் பிறப்பிடமான சன்ஹரா அமைந்துள்ளது. முகுந்த தத்தர் தனது இனிமையான குரலால் ஹரி நாமத்தை பாடி ஸ்ரீ சைதன்யரை பல மணி நேரம் நடனமாட வைப்பார். முகுந்த தத்தரின் சகோதரரான வாஸுதேவ தத்தரின் கருணைக்கு எல்லையே இல்லை. இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் பாவத்தையும் தாம் ஏற்று நரகம் செல்ல விரும்புவதாகவும், அதற்கு பதிலாக அவர்கள் அனைவரும் வைகுண்டம் செல்ல வேண்டும் என்றும் இவர் ஸ்ரீ சைதன்யரிடம் தெரிவித்தார். அதற்கு ஸ்ரீ சைதன்யர் உமது இந்த விருப்பமே அனைத்து ஜீவராசிகளையும் பௌதிக பந்தத்திலிருந்து விடுவிக்கும் எனக் கூறினார்.

பிரேம்பாக்

இங்கு ரூப, ஸநாதன கோஸ்வாமிகளின் பஜனை குடில் அமைந்துள்ளது. இவ்விடத்திற்கு சற்று அருகில் பக்ல சந்திர த்வீபத்தில் ரூப ஸநாதனரின் பிறப்பிடம் உள்ளது. இவ்விடத்தில் இவர்களின் பழமையான சிதிலமடைந்த இல்லத்தை இன்றும் காணலாம். வங்காளதேசத்தின் மிகப்பெரிய இஸ்கான் கோயில் இவ்விடத்தில் அமைந்துள்ளது.

பேனபோலா

நாமாசாரியரான ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் புதானா என்னுமிடத்தில் தோன்றினார். இந்தியா-வங்காளதேச எல்லையின் அருகே இவரது பஜனை குடில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மாதவி தலா எனும் கொடி மரத்தின் கீழ் 3 இலட்சம் ஹரி நாமத்தை ஹரிதாஸர் ஜபிப்பார். இந்த மரத்தின்கீழ் விலைமாதுவான லக்ஷ ஹீராவை பௌதிக பந்தத்தில் இருந்து விடுவித்த பிறகு, ஹரிதாஸர் புலியாவிற்கு இடம்பெயர்ந்தார். மாதவி தலா மரத்தை தரிசிப்பதால் அலைபாயும் மனதை படிப்படியாக ஹரி நாமத்தில் நிலைநிறுத்த முடியும்.

ஆச்சாரியர்களின் பிறப்பிடம்

நரோத்தம தாஸ தாகூரின் குருவான லோகநாத கோஸ்வாமி தாலகாரி என்னுமிடத்தில் பிறந்தார். நரோத்தமரின் பணிவைக் கண்டு அவரைத் தமது ஒரே சீடராக ஏற்றுக் கொண்டார். நித்யானந்தரின் தோழரான தனஞ்ஜய பண்டிதர் ஜார் கிராமத்திலும், சைதன்யரின் தென்னிந்திய பயண சேவகரான கால கிருஷ்ண தாஸ் சோன தலாவிலும், ரகுநாத பட்ட கோஸ்வாமியின் தந்தையான தபன மிஸ்ரர் ராம்புராவிலும், வம்ஸிதாஸ பாபாஜி மஜித்புரிலும், ஹனுமானின் அவதாரமான முராரி குப்தர் கோலா பஜாரிலும், சைதன்ய மஹாபிரபுவின் நெருங்கிய தோழரான சுந்தரானந்த தாகூர் மகேஷபுரிலும், கௌரகிஷோர தாஸ பாபாஜி தெப்பகோலாவிலும் தோன்றினர்.

பக்தர்களின் மகிமை

வங்காளதேசத்தில் பல கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களின் லீலா ஸ்தலங்கள் அமைந்துள்ளதால், கிருஷ்ண உணர்வின் அலைகள் இவ்விடத்தில் அதிகமாக உணரப்படுகிறது. சேவை மனப்பான்மை, குரு பக்தி, விருந்தினர்களை உபசரித்தல், இயல்பான எளிமை, தீவிர கிருஷ்ண பக்தி முதலியவற்றில் வங்கதேச பக்தர்கள் உலக மக்களுக்கே சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். ஆன்மீக வாழ்க்கையில் பூரணத்துவம் அடைவதற்கு குருவின் பாதங்களில் பற்றுதல்கொள்வதே ஒரே வழி என நரோத்தமர் குறிப்பிடுகிறார். இதனை மெய்ப்பிக்கும் வண்ணமாக வங்கதேச பக்தர்களிடம் அபரிமிதமான குரு பக்தியைக் காண முடிகிறது. இஸ்லாமிய நாட்டினுள் இந்த வைகுண்ட சூழ்நிலையை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives