வேதங்களின் காலக் கணிதம்

Must read

நவீன கால விஞ்ஞானிகள் இந்த உலகம் எப்போது தோன்றியது, எப்போது மறைகிறது முதலியவை குறித்து பல்வேறு கற்பனையான கருத்துகளை முன்வைக்கின்றனர். உலகத்தின் தோற்றத்தையும் மறைவையும் பற்றி அறிந்துகொள்ள விழைவது மனிதனின் இயற்கையே. ஆயினும், நமது எல்லைக்குட்பட்ட அறிவை வைத்து அதனைத் தெரிந்துகொள்ள இயலாது. இவ்விஷயங்கள் அனைத்தும் வேத சாஸ்திரங்களில் (குறிப்பாக சூரிய சித்தாந்தத்தில்) தெள்ளத் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றைப் பற்றிய ஒரு சிறு தகவலை பகவத் தரிசன வாசகர்களுக்குப் படைக்கின்றோம்.

காரணக் கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவான் மஹாவிஷ்ணுவே இப்பிரபஞ்சப் படைப்பிற்கு ஆதாரமாக உள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வியாபகமான மஹாவிஷ்ணுவின் ஒரு சுவாசத்தின் (உட்சுவாசம் மற்றும் வெளிசுவாசம்) காலமே இப்பிரபஞ்சத்தின் கால அளவாகும். மஹாவிஷ்ணுவின் வெளி சுவாசத்தின்போது கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் அவரது பிரம்மாண்டமான தெய்வீக திருமேனியின் சரீரத்தின் மயிர்துவாரங்களின் வழியாக வெளிப்படுகின்றன. அவரது உட்சுவாசத்தின்போது அனைத்து பிரபஞ்சங்களும் அவரது திவ்ய சரீரத்தில் திரும்பிச் சென்று மறைகின்றன. பிரபஞ்சத்தின் இந்தத் தோற்றமும் அழிவும் மாறிமாறி நிகழ்வதாகும். ஒரு பிரபஞ்சத்தின் ஆயுள் என்பது, அந்த சுவாசத்திற்கு இடைப்பட்ட குறுகிய காலமே ஆகும். ஆயினும், நமது கணக்கின்படி, அது 311.04 இலட்சம் கோடி வருடங்களாகும்.

311.04 இலட்சம் கோடி வருடங்களைக் கொண்ட பிரபஞ்சத்தின் ஆக்க மற்றும் அழிவுச் சுழற்சிகள் ஒவ்வொரு முறையும் நிகழ்கின்றன. நமது பிரபஞ்சம் தற்போது 155.52 இலட்சம் கோடி வருடங்களை ஏற்கனவே கடந்துவிட்டது. பிரபஞ்சத்தின் அழிவிற்கு இன்னும் 155.52 இலட்சம் கோடி வருடங்கள் உள்ளன. பிரபஞ்சத்தின் ஆயுளும் பகவானால் முதலில் படைக்கப்பட்ட பிரம்மதேவரின் ஆயுளும் சமம். அதாவது, பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் பிறந்த பிரம்மா அதன் இறுதியில் மடிந்துவிடுவார். அதற்கிடையில் பிரம்மதேவர் அவருடைய கணக்கின்படி நூறு வயது வாழ்கிறார். நம்முடைய கணக்கின்படி 432 கோடி வருடங்களைக் கொண்டது பிரம்மதேவரின் ஒரு பகலாகும், அதே போன்று நீண்டது அவரது இரவாகும். இதுபோன்று பிரம்மதேவர் நூறு வருடங்கள் வாழ்கிறார். அதாவது, இவ்வுலகக் கணக்கின்படி பிரம்மதேவரின் நூறு வருடங்கள் என்பது 311.04 இலட்சம் கோடி வருடங்களாகும் (432 கோடி x 2 x 30 x 12 x 100 = 311.04 இலட்சம் கோடி).

தற்போது பிரம்மதேவர் தமது ஐம்பத்தொன்றாம் வயதின் முதல் நாளில் உள்ளார். பிரம்மதேவரின் ஒரு பகல் (12 மணி நேரம்) மன்வந்திரம் எனப்படும் 14 பிரிவுகளாகப் பகுக்கப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்திரத்தின் தொடக்கத்தில் ஒரு பகுதி சிருஷ்டியும் அதன் முடிவில் அப்பகுதியின் பிரளயமும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மன்வந்திரத்தின் இடையில் சேர்க்கைக் காலம் (சந்தியா காலம்) 17.28 இலட்ச வருடங்களாகும். ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ’மனு என்று அழைக்கப்படும் பொறுப்பாளிகள் தோன்றுகின்றனர். ஒரு மனுவின் ஆயுளில் 71 சதுர்யுகங்கள் இடம் பெறுகின்றன. ஒரு சதுர்யுகம் என்பது ஸத்ய யுகம் (17.28 இலட்ச வருடங்கள்), திரேதா யுகம் (12.96 இலட்ச வருடங்கள்), துவாபர யுகம் (8.64 இலட்ச வருடங்கள்) மற்றும் கலி யுகம் (4.32 இலட்ச வருடங்கள்) என 43.2 இலட்ச வருடங்களைக் கொண்டதாகும். இதன்படி, ஒரு மனுவின் ஆயுள் 30.672 கோடி வருடங்களாகும் (71 சதுர்யுகம் * 43.2 இலட்ச வருடங்கள்). நாம் தற்போது இந்த மன்வந்திரத்தில் 12.05 கோடி வருடங்களைக் கடந்துள்ளோம்.

நாம் தற்போது, பிரம்மதேவருடைய ஐம்பத்தி ஒன்றாம் வயதின் முதல் நாளில் ஏழாவது மன்வந்திரத்தில் இருபத்தெட்டாம் சதுர்யுகத்தின் கலி யுகத்தில் சுமார் 5,000 வருடங்களைக் கடந்துள்ளோம்.

இப்பிரபஞ்சத்தின் இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலைகளைப் பற்றிய விரிவான மற்றும் விளக்கமான காலக் கணிதத் தொகுப்பினை இறைவனைத் தவிர வேறு யாராலும் கொடுக்க இயலாது.

காலக் கணிதம் சார்ந்த சில சாஸ்திர குறிப்புகள்

குந்தியின் மகனே, கல்பத்தின் முடிவில் ஜடத் தோற்றம் முழுவதும் எனது இயற்கையில் நுழைகின்றன. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில், எனது சக்தியின் மூலம் நானே அவற்றை மீண்டும் படைக்கின்றேன்.” (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதை 9.7)

மனிதக் கணக்கின்படி, ஆயிரம் யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகலாகும், அதுபோன்று நீண்டது அவரது இரவாகும்.” (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதை 8.17)

பிரம்மதேவரின் நூறு வருடங்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன, முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி. முதல் பகுதி ஏற்கனவே முடிந்துவிட்டது, இரண்டாம் பகுதியே தற்போது நடைபெறுகின்றது.” (ஸ்ரீமத் பாகவதம் 3.11.34)

தற்போது ஏழாவது மனுவாக விளங்குபவர், சூரியதேவன் விவஸ்வானின் மகனான வைவஸ்வத மனு ஆவார். அவர் 27 திவ்ய யுகங்களை (27 * 43.2 இலட்சம் வருடங்கள்) கடந்த நிலையில் உள்ளார். (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 3.9)

தற்போது பிரம்மா தம்முடைய 50 ஆண்டுகளைக் கடந்து 51ஆவது ஆண்டின் துவக்கத்தில் உள்ளார். தற்போதைய காலம் பிரம்மாவின் 51ஆவது ஆண்டின் முதல் நாள் அல்லது கல்பத்தைக் குறிக்கின்றது. இந்த கல்பம் தொடங்கியதிலிருந்து ஆறு மன்வந்தரங்கள் கடந்துள்ளன. தற்போது நடப்பது ஏழாவது அல்லது வைவஸ்வத மன்வந்திரம் ஆகும். இதில் 27 சதுர் யுகங்கள் கடந்து விட்டன. நாம் தற்போது 28ஆவது சதுர் யுகத்தில் வரும் கலி யுகத்தில் இருக்கின்றோம்.” (சூரிய சித்தாந்தம், மத்யம அதிகாரம் 15-24)

மஹாவிஷ்ணுவின் மூச்சுக் காற்றிலிருந்தும் மயிர்த் துளைகளிலிருந்தும் எண்ணற்ற பிரபஞ்சங்கள் தோன்றுதல்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives