ஓர் ஆழ்ந்த ஆய்வு
தான் பிறந்த இடத்தை தனக்கே சொந்தமாகக் கருதி, மற்றவர்களுக்கு அங்கு இடம் வழங்க மறுப்பதால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் அனைவரும் அறிந்த ஒன்று. இதனை சற்று அலசிப் பார்ப்போம்.
வழங்கியவர்: திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ்
அடிப்படை காரணம்
அரசியல் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமெனில், ஓர் இடத்தில் பிறந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்த பல்வேறு நபர்கள், அந்த நகரத்தில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வசதிகளையும் பறித்துக் கொள்ள, அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வசதிகளும் குறைந்துவிட்டன என்பதே இப்பிரச்சனையின் அடிப்படைக் காரணமாகத் தோன்றுகின்றது. பல்வேறு மக்கள் இடம் பெயர்ந்ததற்கு என்ன காரணம்?
நகரமயமாக்கம், தொழில்மயமாக்கம்
விவசாயத்தையும் பசு பராமரிப்பையும் அடிப்படையாகக் கொண்ட பாரதம் செல்வச் செழிப்புடன் திகழ்ந்து வந்தது. பாரதத்தை நோக்கி படையெடுத்த பல்வேறு பிரிவினரே இதற்கு சாட்சி. ஆனால் பாரதம் பெயரளவிலான சுதந்திர நாடாக மலர்ந்த பின்னர், ஏதோ சில காரணங்களால், விவசாயம் செய்வது கௌரவமான தொழில் அல்ல என்றும், நகரத்திற்குச் சென்று வேலை பார்ப்பதே கௌரவமானது என்றும் மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். அந்த எண்ணம் இன்றுவரை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. நகரத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும், சொகுசான வாழ்க்கை கிடைப்பதாகவும் விளம்பரப்படுத்தப்பட, கிராமத்தவர் அனைவரும் நகரத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். இந்தியாவெங்கும் உள்ள கிராமங்கள், குடிமக்களின்றி வெற்றிடமாகி வருகின்றன; விவசாய நிலங்கள் வறட்டு நிலங்களாக மாறி வருகின்றன. நகரப் பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்கள், பிளாட் போடப்பட்டு பலமாடிக் கட்டிடங்களாக ஆகி வருகின்றன. இவ்வாறு அனைவரும் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்தால், மும்பை பிரச்சனையைப் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்குமா என்ன? நிச்சயம் வரும். அனைவரையும் நகரத்தை நோக்கி அனுப்பிய பின்னர், அதனால் எழும் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பது என்பது, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போன்றது.
நகர வாழ்க்கையும் கிராம வாழ்க்கையும்
நகரத்தில் சொகுசான வாழ்க்கை வாழலாம் என்று நினைப்பவர்கள், நகரத்தில் வாழ்பவர்களையும் கிராமத்தில் வாழ்பவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். விடியற்காலையில் எழுந்து பல்கூட துலக்காமல், இரயிலையோ பேருந்தையோ பிடித்து, அங்கேயே பல் துலக்கி, இரண்டு மணி நேரம் பயணம் செய்து, பின்னர் அலுவலகத்தில் குறைந்தது 10 மணி நேரம் வேலை செய்து, நள்ளிரவில் வீடு திரும்பும் நகரத்தவர்கள் எண்ணற்றோர். குறைந்த பட்சம், நகரத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரும், மன அழுத்தம், எந்த நேரமும் பறிபோகக்கூடிய வேலை, உயர் அதிகாரிகளின் வஞ்சகத் தன்மை போன்றவற்றால் விழி பிதுங்கி கதியற்று நிற்கின்றனர். கம்ப்யூட்டர் துறையில் பெரும் வளர்ச்சி பெற்று விளங்கும் பெங்களூரில், மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர், கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும். மும்பை, புதுடில்லி, கல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்கள் மட்டுமின்றி, இதர நகரங்களும் மக்களின் படையெடுப்பிற்கு உட்பட்டு இதே போன்ற நிலைமையை சந்தித்து வருகின்றன. அதிக வருமானம் பெற்றால் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற எண்ணத்துடன் நகரத்திற்கு வருவோர், வேலையின்றி திண்டாடுகின்றனர்; வேலை கிடைத்து கைநிறைய சம்பளம் கிடைத்தாலும், அந்த பணத்தைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தனரோ அவற்றை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். பகட்டான வாழ்க்கையை எதிர்பார்த்தவர்களுக்கு, ஆரோக்கியமான உணவு கிடைப்பதில் லை, சுத்தமான காற்று கிடைப்பதில்லை, குடிக்கத் தூய்மையான தண்ணீர்கூட கிடைப்பதில்லை, சாப்பிட நேரமில்லை, குடும்பத்தினருடன் செலவழிக்க நேரமில்லை, குழந்தைகளுடன் விளையாட நேரமில்லை, உறங்க நேரமில்லை, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லை. அதே சமயத்தில், மேலோட்டமாகக் குறைந்த வருமானம் பெறும் கிராமத்தவர்கள், அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு, எளிமையான முறையில் அமைதியாக, ஆரோக்கியமாக, இன்பமாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானமும் நிறைந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதை கிராமத்தவரும் நகரத்தவரும் உணர வேண்டியது அவசியம். சொகுசான வசதிகள் இல்லாததால் கிராமத்தவர்கள் அடையும் துயரங்கள், பல்வேறு வசதிகள் இருப்பதால் நகரத்தவர்கள் அடையும் துயரங்களைக்காட்டிலும் குறைவானதே.
நிறுத்துங்கள், நகரமயமாக்கத்தை!
நகரமயமாக்கம் நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மும்பை பிரச்சனையை போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வே கிடைக்காது. விவசாயம் செய்வோர் ஊக்குவிக்கப்பட வேண்டும், இல்லையேல் அவர்கள் நகரத்திற்கு இடம்பெயர்வது தவிர்க்கப்பட முடியாதது. நீர், இயற்கை உரம், மானியம், போன்ற விவசாயத்திற்குத் தேவையான வசதிகளைச் செய்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதில்லை, கொள்ளையடிப்பதற்கான வசதிகள் நகரங்களில் அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்பதை அனைவரும் அறிவர். கிராமங்கள் அழிவுற்று நகரங்கள் மட்டும் எஞ்சியிருந்தால், நகரத்தின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் போல்டு, நட்டுகளை நம்மால் சாப்பிட முடியுமா என்ன! அல்லது கம்ப்யூட்டரை கடித்து சாப்பிடத்தான் முடியுமோ!
உடல் சார்ந்த அடையாளம்
ஒவ்வொருவரும் தன்னை தனது உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்தியாவில் பிறந்ததால் இந்தியன் என்றும், அமெரிக்காவில் பிறந்ததால் அமெரிக்கன் என்றும், இங்கிலாந்தில் பிறந்ததால் ஆங்கிலேயன் என்றும், ஆஸ்திரேலியாவில் பிறந்ததால் ஆஸ்திரேலியன் என்றும் ஒவ்வொருவரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்த அடையாளங்கள் அனைத்தும் பொய்யானவை; நாம் அனைவரும் ஆன்மீக ஆத்மா, முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தொண்டு செய்ய வேண்டியவர்கள். அதனை மறந்த காரணத்தினால் உடல் சார்ந்த அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டினர், இனத்தவர் என்று தொண்டு செய்து கொண்டுள்ளோம். நாம் இந்த உடலல்ல, ஆன்மீக ஆத்மா என்பதே பகவத் கீதையின் அடிப்படைப் பாடம், இந்தப் பாடம் உலகத்தவர் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டால், பிறந்த மண்னையும் பெற்றுள்ள உடலையும் அடிப்படையாகக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைவரும் திருப்தியை அடைய முடியும். பகவத் கீதையின் இந்த அறிவு மக்களுக்கு வழங்கப்பட்டால் எந்தவித சமுதாயப் பிரச்சனைகளுக்கும் இடமில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இனவெறித் தாக்குதல், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மதக் கலவரங்கள், ஜாதிக் கலவரங்கள் என அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வு இது மட்டுமே.
யாருக்குச் சொந்தம்?
ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் என்று ஈஷேபாநிஷத் (மந்திரம் 1) கூறுவதன்படி, குறிப்பிட்ட நகரம் மட்டுமல்ல, மாநிலம் மட்டுமல்ல, மொத்த இந்தியா மட்டுமல்ல, மொத்த உலகமும், அதிலுள்ள உலகத்தார் அனைவரும், மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் முழுமுதற் கடவுளுக்குச் சொந்தமானவை. அவரவர் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பங்கை பயன்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் பிரச்சனைகளுக்கு இடமில்லை. இதே கருத்து பகவத் கீதையிலும் (5.29) உறுதி செய்யப்பட்டுள்ளது: ஸர்வ லோக மஹேஸ்வரம், “அனைத்து உலகமும் முழுமுதற் கடவுளுக்கே சொந்தமானது.”
முழுமுதற் கடவுளே மொத்த உலகத்திற்கும் சொந்தமானவர் என்பதை உணராதபட்சத்தில், நாடு, மொழி, மதம், மாநிலம், இனம் என பல்வேறு விதத்தில் ஒருவன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதற்காகப் போராடுகின்றான். அத்தகு மக்களின் மனப்பான்மையை ஸ்ரீல பிரபுபாதர் பின்வருமாறு சாடுகிறார்: “தன்னை பாதுகாவலனாகக் கருதும் நாய் ஒன்று, யாராவது அதன் பகுதியில் சென்றால், ’லொள், லொள்” என்று குரைக் கின்றது. அதுபோல, நாயின் மனப் பான்மையுடன் செயல்படுவோர், ’நீங்கள் ஏன் எனது நாட்டிற்கு வந்தீர்கள்? ஏன் எனது எல்லைக்குள் வந்தீர்கள்?’ என்று குரைக்கின்றனர்.” (பில் ஃபைல் என்ற பத்திரிக்கை நிருபருடன் அக்டோபர் 8, 1975ல், டர்பனில் நடந்த சந்திப்பு) தேசிய ஒருமைப்பாடு மட்டுமின்றி சர்வதேச ஒருமைப்பாட்டிற்கும் இந்த அறிவு மிகவும் உதவியாக அமையும்.