கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்தார் என்பதும், தேவகிக்கு முதலில் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்த கதை. அக்குழந்தைகள் யார் அவர்கள் ஏன் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பது தெரியாத துணுக்கு.
கம்சன் முந்தைய பிறவியில் காலநேமி என்ற பெயரில் அசுரனாக வாழ்ந்து வந்தான், ஹிரண்யகசிபுவின் மகனாக இருந்த காலநேமிக்கு ஆறு மகன்கள்: ஹம்ஸன், ஸுவிக்ரமன், கிராதன், தமனன், ரிபுர்மர்தனன், கிரோதஹன்தா. ஆறு கர்பர்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் போர்க் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த ஆறு அசுரர்களும் ஹிரண்யகசிபுவின் சகவாசத்தைக் கைவிட்டு, பிரம்மதேவரை திருப்தி செய்வதற்கான கடும் தவத்தில் ஈடுபட்டனர்.
தவத்தில் திருப்தியுற்ற பிரம்மதேவர் அவர்களுக்கு வரமளிக்க முன்வந்தபோது, தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், மனிதர்கள், முனிவர்கள் ஆகியோரால் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தை அவர்கள் வேண்டினர். பிரம்மதேவரும் அந்த வரத்தினை அவர்களுக்கு நல்கினார். ஆனால் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஹிரண்யகசிபு மிகவும் கோபம் கொண்டான். கடுங்கோபத்தில் அவன் அவர்களுக்கு சாபமிட்டான், “என்னுடைய சகவாசத்தைக் கைவிட்டு தேவர்களிடம் சென்று வரம் கேட்கிறீர்களா? உங்களின் மீது எனக்கிருந்த பாசம் முழுவதுமாக அகன்று விட்டது. ஆயினும், என்னைக் கைவிட்டு தேவர்களை அணுகிய குற்றத்திற்காக, நான் உங்களுக்கு சாபமிடுகிறேன். நீங்கள் வருங்காலத்தில் உங்களுடைய தந்தையின் கையினாலேயே மரணமடைவீர்கள்.”
ஹிரண்யகசிபுவின் அந்த சாபத்தின் விளைவாக, அந்த ஆறு அசுரர்களும் தேவகியின் வயிற்றில் பிறந்தனர். அவர்களது தந்தையான காலநேமி கம்சனாகப் பிறந்து அந்த ஆறு அசுரர்களையும் கொலை செய்தான். இவ்வாறாக, அந்த ஆறு அசுரர்களும் தங்களது தந்தையினாலேயே கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த ஆறு அசுரர்களும் ஹிரண்யகசிபுவின் பேரன்களாகப் பிறப்பதற்கு முன்பாக, மரீசியின் மகன்களாக இருந்தனர் என்பதும், பிரம்மதேவரால் சபிக்கப்பட்டு அவர்கள் அசுரர்களாக பிறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: ஹரி வம்ஸ புராணம், விஷ்ணு-பர்வம், இரண்டாவது அத்தியாயம்; ஸ்ரீமத் பாகவதம் 10.85.48-49, ஸ்ரீதர ஸ்வாமியின் உரை, ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தியின் உரை.