குருவிடமிருந்து ஆசி மட்டும் போதுமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

 

ஆன்மீக விஷயங்களை ஒவ்வொருவரும் தானாக உணர வேண்டும் என்னும் போலியான கருத்தை முறியடிக்கும்வண்ணம் சாஸ்திரங்கள் மற்றும் குருவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கடந்த இரு இதழ்களில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆன்மீக உணர்விற்கு யாரும் தேவையில்லை என்று கூறும் தரப்பினர் (அவர்களுக்கு விடையளிக்கப்பட்டு விட்டது) ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு முற்றிலும் மாற்றுப் பாதையில் இருக்கும் இதர மக்கள் சிலர் ஆன்மீக முன்னேற்றத்திற்கு குருவின் கருணை மட்டுமே போதும், தாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை என்று நினைக்கின்றனர். அவர்களுடைய எண்ணங்களில் உள்ள பிழைகளையும் ஆன்மீக குருவின் உபதேசங்களைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் இந்த இதழில் காணலாம்.

குரு என்பவர் எதற்காக?

 

ஆன்மீக குரு என்பவர் அறியாமையில் மூழ்கியுள்ள சீடனுக்கு ஆன்மீக அறிவை வழங்கி இறையுணர்வுப் பாதையில் அவனை முன்னோக்கி அழைத்துச் செல்பவராவார். ஜடவுலகில் உள்ள ஒவ்வொருவரும் அறியாமை என்னும் கொடிய மிருகத்தினால் விழுங்கப்பட்டு வருகின்றனர், அந்த அறியாமையே ஜீவனின் பந்தப்பட்ட வாழ்விற்கான அடிப்படை காரணமாகும். அறியாமையை விலக்குவதே குருவின் முக்கியத் திருப்பணியாகும். அறியாமை என்னும் இருளானது ஞானம் என்னும் ஒளியைக் கொண்டு ஆன்மீக குருவினால் அகற்றப்படுகிறது.

 

ஒருவன் ஜட வாழ்விலிருந்து முக்தி பெறுவதற்கு தவம், விரதம், தானம், கடமை, ஜபம், தியானம், பூஜை, புண்ணியத் தீர்த்தங்கள், மன உறுதி, புலன் கட்டுப்பாடு, தூய்மை போன்ற பல காரியங்கள் உதவியாக இருக்கலாம். ஆயினும், இந்தக் காரியங்களின் விளைவுகள் இவை எத்தகைய எண்ணத்துடன் செய்யப்படுகின்றன என்பதைப் பொருத்தே அமைகிறது. முறையான அறிவின்றி செய்யப்படும் காரியங்கள் முறையான நன்மையை வழங்கவியலாது. உதாரணமாக, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தல் என்னும் செயலானது ஒருவருக்கு மிகவுயர்ந்த முக்தியை வழங்க இயலும் என்றபோதிலும், ஹரி நாமத்தை முறையாகச் சொல்ல வேண்டுமெனில் ஒருவர் கிருஷ்ணர் யார் என்பதை தெளிவாக அறிந்து அவரை இதர தேவர்களுடன் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த நிலையை அடைவதற்கு ஒருவருக்கு அறிவு அவசியம். எனவே, ஆன்மீக குருவிடமிருந்து அறிவைப் பெறாமல், ஆன்மீகச் செயல்கள் செய்யப்பட்டால்கூட, அவை விரும்பிய பலனை வழங்கவியலா. வேறுவிதமாகக் கூறினால், நமது எல்லா ஆன்மீகச் செயல்களுக்கும் ஆதாரமாக திகழக்கூடிய ஞானத்தை வழங்குவதே ஆன்மீக குருவின் மிக முக்கிய செயலாகும்.

 

இதனால்தான் ஆன்மீக குருவானவர் பின்வரும் பிரார்த்தனையில் வழிபடப்படுகிறார்,

ஓம் அஜ்ஞான திமிராந்தஸ்யஜ்ஞானாஞ்ஜன ஷலாகயா

சக்ஷுர் உன்மீலிதம் யேனதஸ்மை ஸ்ரீ-குரவே நம:

“”அறியாமை என்னும் இருளில் மூழ்கியிருந்த எனக்கு ஞானக் கண்களை வழங்கிய என்னுடைய ஆன்மீக குருவிற்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.”

குருவின் கருணை

ஆன்மீக ஞானம் என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நம்முடைய எல்லா ஆன்மீகச் செயல்களின் வெற்றியும் குருவின் கருணையைச் சார்ந்தே உள்ளது என்று சாஸ்திரங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம். குருவின் கருணையினாலேயே ஒருவர் கிருஷ்ணரின் கருணையை அடைகிறார், குருவின் கருணை இல்லாவிடில் ஒருவருக்கு வேறு கதி ஏதுமில்லை. கிருஷ்ணரின் கருணையானது அளக்கவியலாத கடலைப் போன்றது, அந்தக் கடலிலுள்ள நீரை மக்களுக்கு உதவும் வண்ணம் மழையாகப் பொழியக்கூடிய மேகத்திற்கு ஆன்மீக குரு ஒப்பிடப்படுகிறார். வேறு விதமாகக் கூறினால், கிருஷ்ணரின் கருணையை மக்களுக்கு கொண்டு செல்லும் கருணையின் ஊடகமாகத் திகழ்பவர் ஆன்மீக குருவே. சீடனுக்கென்று தனிப்பட்ட தகுதி ஏதுமில்லை என்றும், குருவின் கருணையே அவனது வாழ்வின் சாரம் என்றும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

 

இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது குருவின் கருணையை யாராலும் நிச்சயமாக குறைத்து மதிப்பிட முடியாது. குருவின் கருணை இல்லாவிடில் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வாய்ப்பேயில்லை என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இருப்பினும், குருவின் கருணை என்றால் என்ன என்பதை பெரும்பாலான மக்கள் அறியாமல் உள்ளனர். குருவின் கருணை என்பது காரணமற்ற கருணை என்றபோதிலும், பெரும்பாலும் அந்த காரணமற்ற கருணையானது குருவின் உபதேசங்களைப் பின்பற்றுவதால் அடையப்படுவதாகும். குருவினால் வழங்கப்படும் உபதேசங்களே அவரது கருணையின் மாபெரும் வடிவமாகும். ஒரு சீடனிடம் இருக்கும் ஆன்மீகப் பொறியின் அளவைப் பொருத்து குருவானவர் உபதேசங்களை வழங்குகிறார். அந்த உபதேசங்களைப் பின்பற்றுவதில் சீடனிடம் உள்ள ஆர்வத்தைக் கண்டு குருவானவர் தனது கருணையை வழங்குகிறார். அந்த கருணையைப் பெறும் சீடனால் ஆன்மீக குருவின் உபதேசங்களை மேலும் தீவிரமாகப் பின்பற்ற முடிகிறது. அவ்வாறு சீடன் தீவிரமாகப் பின்பற்றும்போது ஆன்மீக குருவின் கருணையும் அதிகரிக்கின்றது. இவ்வாறாக, ஆன்மீக குருவின் கருணையும் அவரது உபதேசங்களைப் பின்பற்றுவதும் இணைந்து செல்ல வேண்டியவை.

ஆன்மீக குருவானவர் கடலிலிருந்து நீரை எடுத்து நிலத்தில் வழங்கும் மழை மேகம் போன்று, கிருஷ்ணரின் கருணையை மக்களுக்கு வழங்குகிறார்.

தீக்ஷை பெற்றுவிட்டால் போதாது

ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்கு குரு அவசியம் என்பதால் தனக்கும் ஒரு குரு வேண்டும் என்ற எண்ணத்தில் வெறுமனே தீக்ஷை வாங்கிக் கொண்டு வாழ்வோர் பலர் உள்ளனர். வருடத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை குருவைச் சென்று பார்த்து அவரிடம் ஆசி வாங்கிவிட்டு, சிறிதளவு நன்கொடை வழங்கிவிட்டு வந்தால் போதும் என்ற நினைப்பில் வாழ்பவர்கள் ஏராளம். ஆயினும், உண்மையான குருவானவர் சீடனுக்கு தீக்ஷை வழங்குவதற்கு முன்பாகவே அவனுக்கு போதிய உபதேசங்களை வழங்குகிறார், தீக்ஷையின்போதும் உபதேசங்களை வழங்குகிறார், தீக்ஷைக்குப் பிறகும் உபதேசங்களை வழங்குகிறார். வேறுவிதமாகக் கூறினால், சீடனுக்கும் குருவிற்கும் இடையிலான பிணைப்பானது உபதேசத்தின் மூல மாகவே தவிர வெறும் தீக்ஷையினால் மட்டுமல்ல. தீக்ஷை என்பது அந்த உறவை உறுதிப்படுத்துவதற்கான ஒருவகையான சடங்காகும். உண்மையான உறவானது உபதேசங்களின் மூலமாகவே ஏற்படுகிறது.

 

எனவேதான், இஸ்கான் இயக்கத்தில் குருவாகச் செயல்படுபவர் எவரும் யாருக்கும் திடீரென்று தீக்ஷை கொடுப்பது இல்லை. தீக்ஷை பெற விரும்புவோர் உபதேசங்களைப் பின்பற்றுவதில் தீவிரமாக உள்ளாரா என்பதை முறையாகவும் முழுமையாகவும் சோதித்துப் பார்த்த பின்னரே தீக்ஷை வழங்கப்படுகிறது. சில குருமார்கள் தாங்களே நேரடியாக சோதிக்கலாம், சிலர் தங்களுடைய மூத்த சீடர்களின் மூலமாக சோதிக்கலாம். ஆனால், நிச்சயமாக தீக்ஷைக்கு முன்பாக குரு, சீடன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளுதல் அவசியமாகும். அப்போதுதான் தீக்ஷைக்கு பிறகும் சீடனானவன் குருவின் உபதேசங்களை தொடர்ந்து பின்பற்ற முடியும். இஸ்கானில் தீக்ஷை பெறும் பக்தர்கள் சில குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதாக குருவிடம் உறுதிமொழி அளிக்கின்றனர். அந்த உறுதிமொழியின்படியே தீக்ஷை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தீக்ஷை என்பது ஆன்மீக வாழ்வின் தொடக்கத்தைக் குறிப்பிடுகிறதே தவிர இலக்கை அல்ல.

குரு என்பவர் ஆசி வழங்கும் இயந்திரம் அல்ல

குருவினுடைய ஆசிகள் கிருஷ்ணருடைய கருணையை சீடருக்கு பெற்றுத் தருபவை என்பதால், சீடனுக்கு ஆசி வழங்குதல் குருவின் கடமைகளில் ஒன்றாகும். அதே நேரத்தில் உண்மையான குருவானவர் வெறுமனே ஆசி மட்டும் வழங்கக்கூடியவர் அல்ல. குருவிடம் சென்று ஆசிகளைக் கேட்கும் பெரும்பாலான நபர்கள், குருவிடமிருந்து எதற்காக ஆசி கேட்க வேண்டும் என்பதை அறியாதவர்களாக உள்ளனர். குருவிடமிருந்து சீடனால் பெறப்படும் ஆசியானது, அவன் கிருஷ்ணரின் மீதான தனது பற்றுதலை வளர்த்துக்கொள்வதற்காகவும் ஜட வாழ்வின் மீதான தனது பற்றுதல்களை விடுவித்துக் கொள்வதற்காகவும் இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் குருவிடம் சென்று தங்களுடைய பௌதிக வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஆசிகளைக் கேட்பது அவர்களது அறியாமையைக் காட்டுகிறது. அத்தகு அறியாமையினால் தன்னை அணுகும் அப்பாவி அன்பர்களுக்கு தன்னுணர் விற்கான அறிவை தருபவரே ஆன்மீக குரு.

 

சாதுக்களுடைய கருணை மிகவும் அவசியம் என்பதை இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். இதனால் சாதுக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் கால்களைத் தொடுவதும் அவர்களிடம் ஆசியை வேண்டுவதும் இந்திய மக்களின் சராசரி செயல். ஆயினும், குருவானவர் வெறும் ஆசிகளை அருள்பவராக இருந்துவிடக் கூடாது, சீடனும் குருவை அவ்வாறு எதிர்பார்க்கக் கூடாது. குருவிடம் ஆசிகளைக் கேட்கச் செல்வதற்கு முன்பாக, எதற்காக ஆசி கேட்க வேண்டும் என்பதில் சீடன் தெளிவாக இருக்க வேண்டும். குருவானவர் சீடர்களுக்கு வழங்கக்கூடிய பொதுவான உபதேசங்களில் பொதுவான ஆசி நிரம்பியிருக்கிறது. ஓர் ஆன்மீக குரு ஓர் உபதேசத்தினை வழங்கும்போது, அந்த உபதேசத்தினைப் பின்பற்றுவதற்கான ஆசியும் அதனுடன் இணைந்து வழங்கப்படுகிறது. எனவே, தனிப்பட்ட முறையில் ஆசியைக் கேட்பதற்கான அவசியம் இல்லை. வேறுவிதமாகக் கூறினால், குருவினால் நமக்கு வழங்கப்படக்கூடிய உபதேசங்களே அவருடைய ஆசியாகும். சில நேரங்களில், சில குறிப்பிட்ட தருணங்களில், சில குறிப்பிட்ட செயல்களுக்காக குருவிடம் சென்று நேரடியாக ஆசியைப் பெறுவதும் அவசியமே. மேலும், தன்னுடைய அன்றாட ஆன்மீகச் செயல்களின்போதும், அச்செயல்கள் யாவும் ஆன்மீக குருவின் ஆசியினாலேயே நிகழ்கின்றன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியதும் அவசியமாகும்.

 

குருவின் ஆசிகள் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும், ஒருபோதும் பௌதிக வளர்ச்சிக்காக இருக்கக் கூடாது. உண்மையான ஆன்மீக குருவானவர் அத்தகைய ஆசிகளை மட்டுமே அருள்வார். தன்னிடம் வருபவர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பியபடி ஆசிகளை வழங்குவது குருவின் வேலையல்ல. வருபவர்கள் அனைவருக்கும் வெறுமனே ஆசிகளை வழங்கிக் கொண்டு இருப்பதற்கு, குரு என்பவர் ஆசிகளை வழங்கும் ஓர் இயந்திரம் அல்ல. பல்வேறு ஆன்மீக அன்பர்கள் ஆசி வழங்கும் குருவின் படத்தை வீட்டில் வைத்துவிட்டு, எல்லாவித பௌதிகக் காரியங்களிலும் முற்றிலும் மூழ்கிக் கிடக்கின்றனர்.

சாதுக்கள் எங்குச் சென்றாலும் அவர்களின் கால்களைத் தொடுவதும் அவர்களிடம் ஆசியை வேண்டுவதும் இந்திய மக்களின் சராசரி செயல்.

குருவின் விசேஷ ஆசிகள்

சில நேரங்களில், சில நபர்கள், இஸ்கானிற்குச் சென்று தீக்ஷை வாங்கினால், பல்வேறு உபதேசங்களைப் பின்பற்ற வேண்டிவரும் என்று நினைத்து, உபதேசங்களே வழங்காத குருவை நாடிச் செல்கின்றனர். அவர்கள் நம்புவது குருவின் “விசேஷ ஆசிகள்.” சில நேரங்களில், அத்தகு நபர்கள், “எங்களுடைய குரு விசேஷ கருணை கொடுப்பவர், உங்களுடைய குரு கருணையே அற்றவர்,” என்று கூறுகின்றனர். அவர்களைப் பொருத்தவரையில் “விசேஷ ஆசி” பெறுதல் என்றால், எந்த உபதேசத்தையும் பின்பற்றாமல் மோக்ஷம் பெறுவதாகும். ஆனால், அதுபோன்ற விசேஷ ஆசிகளுக்கு சாஸ்திரங்களிலோ பூர்வீக ஆச்சாரியர்கள் வழங்கிய வழிமுறைகளிலோ எந்த இடமும் இல்லை. குருவின் விசேஷ ஆசி என்பது சீடனை அவனுடைய ஆன்மீகச் செயல்களில் முறையாக வழிநடத்துவதும் சீடன் அதிலிருந்து விலக நேர்ந்தால் அவனைக் கண்டித்து திருத்துவதுமாகும். தனது சீடனின் குற்றங்களைக் கண்டித்து திருத்தக்கூடிய குருவே விசேஷ ஆசிகளை வழங்குவதாக புரிந்துகொள்ளப்பட வேண்டுமே தவிர, சீடனின் குற்றங்களைக் கண்டிக்காமல் (அல்லது கவனிக்காமல்) இருப்பது விசேஷ ஆசியாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.

என்னை இறைவனிடம் சேர்ப்பது குருவின் வேலை

சில சீடர்கள், “குருவிடம் தீக்ஷை வாங்கிவிட்டால் போதும், என்னை கிருஷ்ணரிடம் கொண்டு செல்வது அவருடைய வேலை” என்று நினைத்துவிடுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறானதாகும். தீக்ஷை வழங்கும்போது குருவானவர் தனது சீடனை கிருஷ்ணரிடம் அழைத்துச் செல்வதற்கு உறுதியெடுக்கிறார் என்பது உண்மையே. அதே நேரத்தில் சீடனும் குருவின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு உறுதியெடுக்கிறான். எனவே, இஃது இருதரப்பிலும் மேற்கொள்ளக்கூடிய உறுதிமொழியாகும். சீடன் குருவின் உபதேசங்களைப் பின்பற்றத் தவறும்பட்சத்தில், குரு தன்னுடைய ஆசியினை சீடனுக்கு வழங்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. “என்னைக் கரைசேர்க்க வேண்டியது குருவின் பணி” என்று நினைப்பதில் தவறில்லை, ஆனால் “என்னைக் கரைசேர்க்க வேண்டியது குருவின் பணி மட்டுமே” என்று நினைப்பதே தவறாகும்.

 

வானில் கூட்டம்கூட்டமாக பறவைகள் பறப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம், அப்பறவைகளுக்கென்று ஒரு தலைவர் இருக்கும். அந்தத் தலைவரின் வழிகாட்டுதலின்படி எல்லா பறவைகளும் அதனைப் பின்தொடர்ந்து பறக்கின்றன. அதுபோலவே, ஆன்மீக வாழ்விலுள்ள சீடர்களும் தங்களது குருவைப் பின்பற்றி பறக்கின்றனர் (முன்னேறுகின்றனர்). தலைமைப் பறவையைப் போன்று குருவானவர் அனைத்து சீடர்களுக்கும் வழிகாட்டுகிறார் என்றபோதிலும், ஒவ்வொரு சீடனும் தனித்தனி பறவையைப் போன்று தனித்தனியாக பறக்க வேண்டியது அவசியம். நாம் பறப்பதற்கு குரு உதவி செய்யலாம், ஆனால் பறக்க வேண்டியது நம்முடைய கடமையேயாகும்.

 

மற்றோர் உதாரணம் கொடுக்க வேண்டுமெனில், பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துள்ள நபரைத் தூக்குவதற்காக பயன்படுத்தப்படும் கயிற்றினைக் கூறலாம். கிணற்றிற்கு வெளியில் இருப்பவர் கயிறை வழங்கலாம், அந்தக் கயிற்றைப் பிடித்து மேலே ஏறுவது என்பது உள்ளே இருப்பவரின் பணியாகும். அதுபோல, குரு நமக்கு ஆசிகளை வழங்கலாம், ஆனால் அந்த ஆசிகளை முறையாக உபயோகித்து பௌதிக வாழ்வு எனும் பாழ்ங்கிணற்றிலிருந்து வெளியேறுவது சீடனின் கடமையாகும்.

 

சில நேரங்களில் சிலர் ஒரு குறிப்பிட்ட மடத்துடன் தங்களுடைய முன்னோர்களுக்கு இருக்கும் தொடர்பின் காரணத்தினால், அந்த மடத்தின் மடாதிபதியிடம் சென்று தீக்ஷை வாங்குகின்றனர். அத்தகைய நபர்கள் தங்களுக்கும் குருவிற்கும் இடையில் உறவு இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். உபதேசங்களைப் பெறுவது என்ற கேள்விக்கு அங்கு இடமில்லாமல் உள்ளது. அதுபோன்ற குரு-சிஷ்ய உறவினால் எத்தகைய நன்மையை எதிர்பார்க்க முடியும்?

குருவானவர் அனைத்து சீடர்களுக்கும் வழிகாட்டுகிறார் என்றபோதிலும், ஒவ்வொரு சீடனும் தனித்தனி பறவையைப் போன்று தனித்தனியாக பறக்க வேண்டும்.

உபதேசங்களைப் பின்பற்றி குருவின் தொடர்பில் வாழ்வோம்

ஆன்மீக வாழ்வின் முன்னேற்றமும் குருவின் உபதேசங்களைப் பின்பற்றுவதும் பிரிக்க முடியாதவை. எனவே, சீடனானவன் தன்னுடைய குருவின் திருவாய் மலர்ந்து வரக்கூடிய சொற்களை தனது இதயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், அதைத் தவிர வேறு ஆசைகள் இருக்கக்கூடாது (குரு-முக-பத்ம-வாக்ய சித்தேதே கோரியா ஐக்ய, ஆர நா கோரிஹோ மனே ஆஷா). குருவிற்கு நாம் செய்யும் சேவை, நாம் அவருடைய உபதேசங்களைப் பின்பற்றுவதே, அந்த உபதேசங்களைப் பின்பற்றுவது நாம் அவரிடமிருந்து பெறும் ஆசியாகும். குருவின் உபதேசங்கள் யாவை என்பதை அறிந்துகொள்வதில் சீடனானவன் முனைப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நவீன கால வாழ்க்கை முறையினால் சீடனால் எப்போதும் குருவிடமிருந்து நேரடியாக உபதேசங்களைப் பெறுவது இயலாததாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் அதே நவீன கால வாழ்க்கை முறையின் வசதியினால், நம்முடைய குரு நம்முடன் இல்லாதபோதிலும், குருவின் உபதேசங்களை அறிந்துகொள்வதற்கு பல்வேறு வழிகள் (பல்வேறு வழிகளில் பதிவு செய்யப்பட்ட உபன்யாசங்கள்) உள்ளன.

 

குருவின் உபதேசங்களை உண்மையுடன் பின்பற்றும் சீடன் ஒருபோதும் தனது குருவை இழப்பதில்லை. குருவானவர் சீடனை விட்டு பல மைல் தொலைவில் இருந்தாலும் அல்லது இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டால்கூட, உபதேசங்களின் மூலமாக சீடன் குருவுடன் தொடர்புகொள்கிறான். அப்போது குருவின் ஆசி சீடனுக்கு முழுமையாகக் கிட்டுகிறது. சீடனும் தன்னுடைய வாழ்வின் இறுதியில் பௌதிகப் பெருங்கடலைக் கடந்து ஆன்மீக உலகை அடைகிறான்.

2016-10-28T00:43:11+00:00December, 2015|ஞான வாள்|0 Comments

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment