சீதை இராவணனின் மகளா?

Must read

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

சீதை இராவணனின் மகள் என்றும் அதனால்தான் அவன் சீதையைக் கொண்டு சென்றான் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆம், சரியாகத்தான் படித்துள்ளீர். இந்தக் கருத்தும் சமூகத்தில் ஆங்காங்கே உலாவுகிறது. பரவலான ஐயமாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் இக்கேள்வி எழுப்பப்படுகிறது. இதைச் சற்று விளக்குவோம்.

இதிகாசம் என்றால் என்ன?

இதி–ஹ–ஆஸம் = இதிஹாசம், இதி–ஆஸம் என்பதற்கு “இவ்வாறு நடந்தது” என்று பொருள், என்பதற்கு “உறுதியாக” என்பது பொருள். வரலாற்று சம்பவத்தில் எந்தவொரு பொய்யும் கலக்காமல் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டதே இதிகாசமாகும். பாரதத்தின் இருவேறு இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணம் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டு உலகெங்கும் பரப்பப்பட்டது.

சமண இராமாயணத்தின் பிழைகள்

பன்னெடுங் காலமாக இருந்து வந்த வால்மீகி இராமாயணம், வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்களால் பலவகை இடைச்செருகலுடன் கலி யுகத்தில் பல்வேறு மொழிகளில் இயற்றப்பட்டது. அவற்றில் சமணர்களால் எழுதப்பட்ட இராமாயணங்கள் பற்பல தவறான மாற்றுக் கருத்துகளுடனும் கதைகளுடன் வெளிவந்தன. சில உதாரணங்கள்: இராவணனைக் கொன்றவர் இலக்ஷ்மணர், இராமருக்கு அயோத்தியில் 8,000 மனைவியர்கள், இலக்ஷ்மணருக்கு 16,000 மனைவியர்கள், இராவணனைக் கொன்ற இலக்ஷ்மணர் நரகத்திற்குச் சென்றார், இத்யாதி.

இராமரின் மீது பக்தியுடன் வாழ்ந்த மக்களிடம் வால்மீகி இராமாயணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட தவறான தகவல்களைக் கொடுத்து, ஸநாதன சமயத்திலிருந்து திசைதிருப்பி சமண சமயத்திற்கு அழைத்துச் செல்லும்பொருட்டு, அவர்கள் இராமாயணத்தைப் பயன்படுத்தி கட்டுக்கதைகளை எழுதினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெளிவானதாகும். சமண சமயத்தில் பல்வேறு இராமாயணங்கள் உள்ளன என்பதும் அவை ஒன்றுக்கொன்று பெரிதும் வேறுபடுகின்றன என்பதும் கூடுதலான தகவல்கள்.

அத்தகு சமண இராமாயணங்களில் ஒன்றான ஸங்கதாஸரின் பதிப்பில், சீதை இராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த குழந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நம்புவது எந்த விதத்தில் நியாயம்?

ஸநாதன சமயத்தவரிடம் உட்புகுந்த சமண கருத்துகள்

ஸங்கதாஸரின் சமண இராமாயணக் கருத்தைப் பிரதிபலித்து, 1970களில் “இலங்கேஸ்வரன்” என்ற மேடை நாடகம் இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் தமிழகத்திலும், பல மேடைகளைக் கண்ட புகழ்பெற்ற நாடகமாக வலம் வந்தது. இன்றும் சில இடங்களில் இந்நாடகம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி 1987இல் “இலங்கேஸ்வரன்” என்ற தமிழ் திரைப்படமும் வெளிவந்தது. இவ்வாறாக, எப்படியோ சமணர்களின் விருப்பப்படி ஸநாதன சமயத்தவரிடம் இராமாயண குழப்பங்கள் உட்புகுந்து விட்டன

வால்மீகி இராமாயணம் கூறுவது என்ன?

இராமரின் மனைவி சீதையை இராவணன் கடத்திச் செல்வதற்கு முன்பாக, [அதாவது, இராமாயண முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பாக] சீதைக்கும் இராவணனுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி வால்மீகி இராமாயணம் (உத்தர காண்டம், சர்கம் 17-18) பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளது.

இராவணன் இமயமலையில் உலாவியபோது, அதன் அருகே அழகிய இளம்பெண் ஒருத்தி ஜடாமுடியும் மான்தோலும் தரித்து தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான். காம இச்சையுடன் சிரித்தவாறே இராவணன் அவளிடம் வினவினான், “உனது இளமையும் அழகும் காட்டில் தவங்களைப் பயிற்சி செய்வதற்கு மாறாக உள்ளது. அன்பிற்குரியவளே, நீ யார்? இக்காட்டில் தவங்கள் புரிந்து வாழ ஏன் தீர்மானித்துள்ளாய்?”

அதற்கு அவள் பதிலளித்தாள்: “நான் பிருஹஸ்பதியின் மகனான பிரம்மரிஷி குஷத்வஜரின் மகள். நான் வேதங்களின் அவதாரமாகக் கருதப்படுவதால், என் பெயர் வேதவதி. பல தேவர்களும் தகுதி வாய்ந்த நபர்களும் என்னை மணந்துகொள்ள விரும்பி, எமது தந்தையை அணுகினார்கள். ஆனால் எமது தந்தை அவர்கள் அனைவரையும் நிராகரித்தார்; ஏனெனில், தனது மருமகனாக இருப்பதற்கு பகவான் விஷ்ணுவே ஏற்றவர் என்று அவர் கருதினார். இதைக் கேட்ட தைத்தியர்களின் அரசனான சம்பு என் தந்தை உறங்கும்போது அவரைக் கொன்றான். என் தாய் எமது தந்தையுடன் உடன்கட்டை ஏறினாள். அச்சமயத்திலிருந்து நான் பகவான் நாராயணரை இதயத்தில் அமர்த்தி, அவரையே கணவராக அடைய தவங்களை மேற்கொள்கிறேன். இராவணனே! எனது தவ வலிமையால் உன்னைப் பற்றிய அனைத்து விஷயத்தையும் நான் அறிவேன். ஆகையால், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் இங்கிருந்து போய்விடு.”

விமானத்திலிருந்து இறங்கிய இராவணன் கூறினான், “அழகிய பெண்ணே, நீ எமது மனைவியாக வேண்டும். என்னோடு ஒப்பிடுகையில் அந்த பகவான் விஷ்ணு எம்மாத்திரம்?”

“உன்னைத் தவிர வேறு எவர் பகவான் நாராயணரை அவமரியாதையுடன் பேசத் துணிவர்?” என்று கோபத்துடன் வேதவதி பதிலளித்தாள். உடனே, இராவணன் அவளது கேசத்தைப் பற்றி இழுக்க, அவளோ கோபத்துடன் தனது கையை உடைவாளாக்கி கேசத்தைத் துண்டித்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.

இராவணனை நோக்கிய வேதவதி, “நான் இனி உயிர் வாழ விரும்பவில்லை. எனது தவத்தின் பலன் குறையக் கூடாது என்பதற்காக, உன்னை நான் சபிக்கப் போவதில்லை; ஆயினும், உன்னுடைய அழிவிற்காக நான் இன்னொரு தெய்வீகப் பிறவி எடுப்பேன்,” என்று கூறியபடி தீயினுள் பிரவேசித்தாள்.

அப்போது ஸ்வர்க லோகத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர். உடலைக் கைவிட்ட பின்னர், அவள் ஒரு தாமரை மலரில் மீண்டும் தோன்றினாள். இராவணன் அவளை உடனடியாக கைப்பற்றி, தனது புஷ்பக விமானத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி, அவளை இலங்கைக்கு அழைத்துச் சென்றான்.

அதன் பிறகு, செந்தாமரையில் உதித்த வேதவதியை தனது மந்திரிகளிடம் காண்பித்தான். அப்பெண் அவனது அழிவிற்குக் கருவியாக இருப்பாள் என்று எச்சரிக்கப்பட்டதால், இராவணன் வேதவதியை கடலில் வீசினான். பின்னர், அவள் தனது யோக சக்தியால் மறுகரையை அடைந்து ஜனக மன்னரின் யாகக் கூடத்தை அடைந்து, அவருடைய உழவுக்காலிலிருந்து குழந்தையாகத் தோன்றினாள்.

இதுவே வால்மீகி இராமாயணம் கூறும் உண்மையாக நிகழ்ந்த தகவல்.

தனது யோக சக்தியால் மறுகரையை அடைந்து ஜனக மன்னரின் யாகக் கூடத்தை அடைந்து, அவருடைய உழவுக்காலிலிருந்து குழந்தையாகத் தோன்றினாள்.

குழப்பம் வேண்டாம்

பர்மா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், மங்கோலியா, வியட்நாம், சீனா என உலகெங்கும் இராமாயணம் பரவியுள்ளது. லவனும் குசனும் இராமாயணத்தை உலகமெல்லாம் பரப்பியதற்கு இதனைச் சான்றாகக் காணலாம். கெமர் மொழியின் ரீம்கெர், தாய் மொழியின் ராமகியென், லாவோ மொழியின் ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும், இராமாயணத்தின் உண்மைகளை உள்ளது உள்ளபடி கூறாத எதையும் நாம் இதிகாசம் என ஏற்க முடியாது. அது மட்டுமின்றி, வால்மீகி இராமாயணத்தை உள்ளபடி ஏற்பதால் மட்டுமே, “இராவணனின் மகள் சீதை” போன்ற சம்பந்தமற்ற கருத்துகளினால் குழப்பமடையாமல் இருக்க முடியும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives