முழுமுதற் கடவுள் கிருஷ்ணர்

பகவத் கீதை என்றால், “முழுமுதற் கடவுளால் பாடப்பட்ட பாடல்” என்று பொருள். ஸ்ரீ பகவான் உவாச, “புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்” என்னும் சொற்றொடரை பகவத் கீதை முழுவதும் நீங்கள் காணலாம்.

 

பகவத் கீதை கடவுளை அறியும் விஞ்ஞானமாகும். அறிவியலைக் கொண்டு அனைத்தும் முழுமையாக அறியப்படுவதுபோல, கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், அதற்கான வழி முறையைப் பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறையை பகவத் கீதையில் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரே கூறுகிறார், பக்த்யா மாம் அபிஜானாதி, “யாரேனும் என்னை அறிந்துகொள்ள விரும்பினால், பக்தித் தொண்டை ஏற்பதன் மூலம் என்னை அறிந்து கொள்ளலாம்”. மனக் கற்பனையாலோ யோக சித்தியாலோ பலன்நோக்கு செயல்களாலோ அல்ல.

 

இக்கருத்து பகவத் கீதையில் மட்டுமின்றி அனைத்து வேத சாஸ்திரங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக (ஸ்ரீமத் பாகவதம் 10.14.29),

 

அதாபி தே தேவ பதாம்புஜ-த்வய-

ப்ரஸாத-லேஷானுக்ருஹீத ஏவ ஹி

ஜானாதி தத்த்வம் பகவன்-மஹிம்னோ

சான்ய ஏகோ (அ)பி சிரம் விசின்வன்

 

முழுமுதற் கடவுளை அவரது கருணையினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அந்த பிரசாதத்தின் (கருணையின்) துளியைப் பெறுவதன் மூலம் ஒருவன் அவரை அறிந்து கொள்ளலாம்

.

கடவுளை பூரணமாக எவராலும் அறிய முடியாது. ஏனெனில், அவர் எல்லையற்றவர். நமது புலன்கள் குறைபாடுள்ளவை, மாயையின் வசப்படுபவை, ஏமாற்றும் இயல்புடையவை. நம்மிடம் பற்பல குறைபாடுகள் உள்ளதால், நமது புலன்களை மட்டும் உபயோகித்து கடவுளை அறிய முடியாது.

 

“கடவுள் மிகவும் நல்லவர், கடவுள் பெரியவர்” என்பதை அறிந்துகொள்வது ஒரு நிலை. கடவுள் பெரியவர் என்பதோடு மட்டுமின்றி, அவரது குணங்கள் யாவை, அவரது ரூபம் என்ன, என பலவற்றையும் பகவத் கீதையை படிப்பதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். சாஸ்திரங்களிலிருந்து நாம் கேட்டுள்ளோம்:

 

ஈஷ்வர: பரம: கிருஷ்ண: சத்-சித்-ஆனந்த-விக்ரஹ:

அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ-காரண-காரணம்

 

கோவிந்தன் எனப்படும் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள். அவரது உடல் நித்தியமானதும் ஆனந்தமயமானதும் ஆகும். அனைத்திற்கும் ஆரம்பம் அவரே, அவரோ ஆரம்பமில்லாதவர். அவரே எல்லா காரணங்களுக்கும் மூலக் காரணமாவார். (பிரம்ம சம்ஹிதை 5.1)

 

5000 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணர் இருந்தபோது, அவர் அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்தியமான தனது சுய ரூபத்தில் தோன்றியிருந்தார். மனிதரைப் போன்று தோன்றியதால், பக்தரல்லாதவர்களால் அவரை முழுமுதற் கடவுளாக புரிந்துகொள்ள முடியவில்லை. அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரிதம். (பகவத் கீதை 9.11) மூடா என்றால் முட்டாள் என்று பொருள். அவர்கள் மிகவும் படித்தவர்களாக இருக்கலாம், ஆனால் கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதில் அவர்கள் முட்டாள்களாக உள்ளனர். ஏன்? மாயயா அபஹ்ருத ஜ்ஞான ஆஸுரம் பாவம் ஆஷ்ரித: (பகவத் கீதை 7.15). ஏனெனில், அவர்கள் கடவுளை எதிர்க்கின்றனர். ஆஸுரம் பாவ என்பது, “கடவுள் இல்லை, கடவுள் இறந்து விட்டார், நான் கடவுள், நீ கடவுள், நிறைய கடவுள்கள் வீதிகளில் சுற்றித் திரிகின்றனர், நீ ஏன் கடவுளை தேடுகிறாய்” போன்ற கூற்றுகளின் மூலம் கடவுளை எதிர்ப்பவர்களைக் குறிக்கும்.

 

இதுபோன்ற பற்பல கருத்துகள் கடவுளை அற்ப விஷயமாக்கி விட்டன. முக்கியமாக, இந்தியாவில், கடவுளின் “அவதாரங்கள்” பலர் உள்ளனர், இந்தியா கடவுளை உற்பத்தி செய்யும் விளை நிலமாகும். கடவுள் என்றால் என்னவென்று மக்களுக்குத் தெரியவில்லை என்பதே இதன் பொருள். கடவுளை அற்பமான விஷயமாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் பகவத் கீதையிலிருந்து கடவுள் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். “நீங்கள் எவ்வாறு முழுப் பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்துகிறீர்கள்?” என்ற அர்ஜுனனின் கேள்விக்கு விளக்கமளித்த கிருஷ்ணர், அவ்விளக்கத்தின் இறுதியில்,

 

அதவா பஹுநைதேன கிம் ஜ்ஞாதேன தவார்ஜுன

விஷ்டப்யாஹம் இதம் க்ருத்ஸ்னம் ஏகாம்ஷேன ஸ்திதோ ஜகத்

 

“முழுப் பிரபஞ்சமும் எனது சக்தியின் ஒரு சிறு அம்சத்தினால் செயல்படுத்தப்படுகிறது” (பகவத் கீதை 10.42) என்று கூறினார். கடவுளின் சக்தியில் கால் பங்கு மட்டுமே இந்த பௌதிக உலகம், முக்கால் பங்கு ஆன்மீக உலகமாகும். பரஸ் தஸ்மாத் து பாவோ (அ)ன்யோ (அ)வ்யக்தோ (அ)வ்யக்தாத் ஸநாதன. (பகவத் கீதை 8.20) பௌதிக உலகிற்கு அப்பால் மற்றோர் உலகம் உள்ளது. அஃது ஆன்மீக உலகம், ஆன்மீக இயற்கை எனப்படும். அந்த இயற்கை, பரா, உயர்ந்தது என விளக்கப்பட்டுள்ளது. பௌதிக இயற்கை, ஆன்மீக இயற்கை என இரண்டு சக்திகள் வேலை செய்கின்றன. பௌதிக இயற்கையை பகவத் கீதை (7.4) பின்வருமாறு விளக்குகின்றது:

 

பூமிர் ஆபோ (அ)னலோ வாயு: கம் மனோ புத்திர் ஏவ

அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா

 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய எட்டு விதமான சக்திகள் பௌதிக இயற்கையை உருவாக்குகின்றன. அச்சக்திகள், பிரிந்த சக்திகள் (பின்ன ப்ரக்ருதி) என்றும், தாழ்ந்த (அபரா) சக்திகள் என்றும் அறியப்படுகின்றன. அபரேயம் இதஸ் த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம். (பகவத் கீதை 7.5) தாழ்ந்த சக்திக்கும் அப்பால் மற்றோர் உயர்ந்த சக்தி உள்ளது, அதுவே உயிர்வாழி.

 

உயர்ந்த சக்தி

சூரிய கோளத்தின் சக்தியே சூரியக் கதிர்கள் என்பதைப் போல, கடவுளின் சக்தியே உயிர்வாழிகள். சூரியக் கதிர்கள் பார்ப்பதற்கு ஒரே சீராக தோன்றினாலும், அது பற்பல சின்னஞ்சிறு துகள்களால் ஆனது, அதுவே விஞ்ஞானபூர்வமான அறிவு. அதுபோலவே உயிர்வாழிகளான நாமும் கடவுளின் மிகச்சிறிய துகள்களே. நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதும் சாஸ்திரத்தில் (ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 5.9) விளக்கப்பட்டுள்ளது.

 

பாலாக்ர-ஷத-பாகஸ்ய ஷததா கல்பிதஸ்ய

பாகோ ஜீவ: விஜ்ஞேய: சானந்த்யயா கல்பதே

 

ஓர் உயிர்வாழியின் அளவு, தலைமுடி நுனியில் பத்தாயிரத்தில் ஒரு பகுதியாகும். நாம் நமது கண்களால் பெருமைபட்டுக் கொள்கிறோம். ஆனால் சாஸ்திரம் இங்கு குறிப்பிடும் ஆத்மாவின் நீள அகலத்தை உங்கள் கண்களாலோ சக்தி வாய்ந்த நுண்நோக்கியாலோ தங்களால் காண முடியாது. ஆத்மாவைக் காண இயலாததால், தத்துவவாதிகளில் ஒரு பிரிவினர், அஃது “உருவமற்றது” என்கின்றனர்.

 

முதலில், நாம் அனைவரும் ஜீவாத்மாக்கள், உயிர்வாழிகள் என்பதை புரிந்துகொள்ள முயற்சிப்பதே ஆன்மீக ஞானமாகும். கடவுளின் சிறிய அம்சமே ஜீவாத்மா என்பதால், ஜீவனை புரிந்துகொள்வதன் மூலம் கடவுளின் தன்மையை புரிந்துகொள்ள முடியும். சிறிதளவு தங்கத்திலிருந்து தங்கத்தின் தன்மையை புரிந்துகொள்ள முடியும், ஒரு துளி கடல் நீரிலிருந்து மொத்த கடல் நீரின் தன்மையையும் புரிந்துகொள்ள முடியும். அதுபோல, ஆத்மாவின் குணங்களை ஆராயும்போது, நாம் கடவுளின் குணங்களைப் புரிந்துகொள்ளலாம்.

 

வல்லுநர்கள் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்கின்றனர்

 

ஒருவர் தன்னைப் பற்றி அறிந்துகொள்வதே ஆன்மீக கல்வியின் ஆரம்பமாகும். தன்னுணர்வை அடைவதற்கு நாம் மற்றவர்களிடமிருந்து அறிவைப் பெற வேண்டும், ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் அவசியம். பெரும் சாதுக்களான வியாஸர், நாரதர், தேவலர், அஸிதர், மற்றும் இதர மாமுனிவர்களும், தற்கால ஆச்சாரியர்களான இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், விஷ்ணு ஸ்வாமி, நிம்பார்கர், மற்றும் சங்கராசாரியர் உட்பட அனைவரும் கிருஷ்ணரை தலைசிறந்த ஆசிரியராக ஏற்றுக் கொண்டுள்ளனர். அனைத்து ஆச்சாரியர்களும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றனர். 500 வருடங்களுக்கு முன் தோன்றிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டார்.

 

க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம், “கிருஷ்ணரே முழுமுதற் கடவுள்” என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. பற்பல ஆதாரங்களின் அடிப்படையில் நாம் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம். அதில் சந்தேகமில்லை. ஆனால் மக்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? பெரிய மேதைகளும் பெரிய விஞ்ஞானிகளும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்க மறுப்பது ஏன்? அதற்கான காரணம் பகவத் கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:

மாயயாபஹ்ருத-ஜ்ஞானா ஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:

 

“சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களுமான துஷ்டர்கள் என்னிடம் சரணடைவதில்லை.” (பகவத் கீதை 7.15) க்ருதி என்றால் திறன்வாய்ந்தவர் என்றும், துஷ்க்ருதி என்றால் திறன்களை தீய செயல்களில் பயன்படுத்துவோர் (துஷ்டர்கள்) என்றும் பொருள். எல்லோரிடமும் சில திறன்கள் உள்ளன, சிலர் அவற்றை தவறான காரியத்திற்கு பயன்படுத்துவர். உதாரணமாக திருடனொருவன் தனது நல்ல மூளையை திருடுவதற்குப் பயன்படுத்துகிறான். அத்தகு நபர்கள் துஷ்க்ருதினர் எனப்படுவர்.

 

மற்றொரு வகுப்பினர் மூடர் எனப்படுவர். மூடர் என்றால் “குறைபுத்தியுள்ளவர்” அல்லது “புத்தியற்றவர்” என்று பொருள். அடுத்த வகுப்பினர் நராதமர், கடைநிலை மனிதர்கள். இறுதியாக, மாயயாபஹ்ருத-ஜ்ஞான, “மாயையால் அறிவு கவரப்பட்டவர்கள்.” இத்தகு வகுப்பினர் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை.

 

இவ்வார்த்தைகள் எங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல, பகவத் கீதையில் உள்ளவை. பகவத் கீதையை படிப்பதாக நாம் கூறிக் கொள்வோமாயின், அதன் கருத்துகளை ஏற்பது அவசியம்.

 

எங்களது கிருஷ்ண பக்தி இயக்கம், க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம், கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை உலகத்தாருக்கு பிரச்சாரம் செய்வதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கடவுளை தேடுகிறீர்கள், உங்கள் மூளையை கசக்கிக் கொண்டுள்ளீர். இருந்தும் சில சமயங்களில், “கடவுள் இல்லை,” “கடவுள் இறந்து விட்டார்,” அல்லது “எல்லோரும் கடவுளே” என்றெல்லாம் கூறுகிறீர்கள். நாங்கள் அறிவிப்பது என்னவெனில், “ஏன் மூளையைக் கசக்கிக் கொண்டுள்ளீர், இதோ இருக்கிறார் கடவுள், கிருஷ்ணர்.”

 

அதிகாரிகளிடமிருந்தும் சாஸ்திரங்களிலிருந்தும் கிருஷ்ண லீலைகளைக் கேட்பதால் கிருஷ்ணரே கடவுள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். கிருஷ்ணரின் வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது, அவர் ஆரம்பத்திலிருந்தே கடவுள் என்பதை நாம் அறிய முடியும். கடவுள் யோக சித்திகளால் உருவாக்கப்படுபவர் அல்ல. கடவுள் எப்போதும் கடவுளே, நாய் எப்போதும் நாய்தான். நாய் கடவுளாக முடியாது, கடவுள் நாயாக முடியாது.

 

வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ணர் கடவுளாகத்தான் இருந்தார். கிருஷ்ணர் தோன்றியபோது நான்கு கைகளுடன் பகவான் விஷ்ணுவாகத் தோன்றினார். சாதாரண குழுந்தையாக மாறும்படி அவரது தாய் வேண்டிய காரணத்தால், இரு கைகளுடன் சாதாரண குழந்தையாக மாறினார். அவர்தான் கடவுள். ஆரம்பத்திலிருந்தே அவர் கடவுளாக இருக்க வேண்டும், யோக சித்திகளைப் பெற்ற பின் கடவுளாக மாறுவது என்பது அல்ல.

 

நாம் கடவுளின் அம்சங்கள் என்பதால், நம்மிடமும் சக்திகள் உள்ளன. ஆனால் நாம் நூறு சதவீதம் கடவுளாக முடியாது. அஃது இயலாது. எல்லா தேவர்களையும் மற்ற உயிர்வாழிகளையும் ஆராய்ந்த பிறகு, மாபெரும் வேத வல்லுநர்கள், கிருஷ்ணரே நூறு சதவீதம் முழுமையான கடவுள் எனக் கண்டுள்ளனர். ஏதே சாம்ஷ-கலா: பும்ஸ கிருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம். மற்றவர்கள் அனைவரும் அவருக்குக் கீழ்படிந்தவர்களே. கடவுள்கள் பலர், ஆனால் அவர்கள் முழுமுதற் கடவுள் அல்ல. ஈஷ்வர: பரம: க்ருஷ்ண.

 

நாம் இங்கு பரமேஷ்வரனை அல்லது பரம ஈஷ்வரனைப் பற்றிப் பேசுகிறோம். இரு வார்த்தைகள் உள்ளன: ஈஷ்வர, பரமேஷ்வர; ஆத்மா, பரமாத்மா. பரம என்னும் சொல், உன்னதமானவரும் உயர்ந்தவருமான கடவுளைக் குறிக்கும். நாம் பிரம்மன், அவரோ பரபிரம்மன். பரபிரம்மன், பரமாத்மா, பரமேஷ்வர–இச்சொற்கள் அனைத்தும் கிருஷ்ணருக்குப் பொருந்தும்.

 

பகவத் கீதையை கேட்டபின் அர்ஜுனன் ஒப்புக் கொண்டான் (10.12).

 

பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான்

புருஷம் ஷாஷ்வதம் திவ்யம் ஆதி-தேவம் அஜம் விபும்

 

“நீரே முழுமுதற் கடவுள், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பூரண உண்மை. நீரே நித்தியமான தெய்வீக புருஷர், ஆதி தேவர், பிறப்பற்றவர், பெரியவர்.” இதுவே கிருஷ்ணரின் நிலை.

 

பகவத் கீதையில் கிருஷ்ணரே கூறுகிறார், அஹம் ஆதிர் ஹி தேவானாம், “அனைத்து தேவர்களுக்கும் நானே மூல காரணம்.” இந்திரன், சந்திரன், வருணன் என பற்பல தேவர்கள் உள்ளனர். ஆனால் கிருஷ்ணரே அவர்களின் மூலம் என்று அவரே கூறுகிறார். அதுமட்டுமின்றி, அஹம் ஸர்வஸ்ய பிரபவோ மத்த: ஸர்வம் பிரவர்ததே, “நானே அனைத்திற்கும் மூல காரணம், அனைத்தும் என்னிலிருந்தே தோன்றுகின்றன” (பகவத் கீதை 10.8) என்றும் அவர் கூறுகின்றார். யாரிடமிருந்து அனைத்தம் தோன்றுகின்றதோ அவரே பரம உண்மை, என்று வேதாந்த சூத்திரத்தில் (ஜன்மாத்யஸ்ய யத:) விளக்கப் பட்டுள்ளது.

 

கிருஷ்ணர் தனது சக்திகளை வைத்து பகவான் என அறியப்படுகிறார். பகவான் என்றால் ஆறு ஐஸ்வர்யங்களையும் பூரணமாகப் பெற்றவர் என்று பொருள். முழுமுதற் கடவுள் என்பவர், செல்வம், பலம், புகழ், அழகு, துறவு, மற்றும் அறிவினை முழுமையாகப் பெற்றிருத்தல் வேண்டும். இதுவே கடவுள் என்பதற்கான அர்த்தம். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை பிரம்மதேவரும் ஏற்றுக் கொள்கிறார். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:. எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் உயர்ந்த நபர் கிருஷ்ணரே. கிருஷ்ணரிடம் சக்திகள் இல்லை என்றால், அவரால் எவ்வாறு எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும்? நாம் அனைவரும் சிறிய அளவில் கட்டுப்படுத்துகிறோம். சிலர் அலுவலகத்தினை கட்டுப்படுத்துவர், சிலர் வீட்டைக் கட்டுப்படுத்துவர், சிலர் தொழிற்சாலையை கட்டுப்படுத்துவர். ஆனால் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறேன் என்று யாருமே கூற முடியாது. அஃது இயலாது. அத்தகு பரம ஆளுநர் கிருஷ்ணரே.

 

இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில், பரம ஆளுநருடன் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம். எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராக ஆக நாங்கள் முயற்சி செய்யவில்லை. மாறாக அவ்வாறு கட்டுப்படுத்துபவரிடம் கட்டுப்பட விரும்புகிறோம், மற்றவர்களிடம் அல்ல. இதுவே எங்களின் கூற்று. உதாரணமாக, வேலை செய்ய விரும்புபவர்கள் அரசாங்க வேலையை விரும்புவது இயற்கையே. எப்படியும் வேலை செய்ய வேண்டும், ஏன் சிறிய வியாபாரியிடம் வேலை செய்ய வேண்டும், அரசாங்கத்தில் வேலை செய்யலாமே என்ற முடிவுக்கு அவர்கள் வருவர்.

 

வேலை செய்யாமல் நம்மில் யாராலும் இருக்க முடியாது. அதுவே நமது உண்மையான நிலை. நாங்கள் கேட்பது என்னவெனில், “எப்படியும் வேலை செய்கிறீர்கள், ஏன் கடவுளுக்காக வேலை செய்யக் கூடாது?”

 

பௌதிக வாழ்வில் நாம் நமது புலன்களுக்கு சேவை செய்து கொண்டுள்ளோம். காம இச்சையின் தூண்டுதலால் எந்தவொரு வெறுக்கத் தக்க செயலையும் செய்ய நாம் தயாராக உள்ளோம். இதிலிருந்து நாம் சேவகர்கள் என்பதை அறியலாம். ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய க்ருஷ்ண தாஸ, நமது ஸ்வரூப (உண்மையான) நிலை என்னவெனில், நாம் அனைவரும் கடவுளான கிருஷ்ணரின் சேவகர்கள் என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். ஆனால் பௌதிக வாழ்வில் கட்டுண்டிருப்பவர்கள் அனைவரும் எஜமானராக முயற்சிக்கின்றனர். இதுவே வாழ்க்கைப் போராட்டம். அனைவரும் முயற்சிக்கின்றனர். “நான் எஜமானராவேன், நான் உயர்ந்தவனாவேன்.” ஆனால் நமது உண்மை நிலை சேவகனாக இருப்பதுவே. எனவே, தலைவனாகுவதற்கு முயற்சி செய்யும் நமது எண்ணங்கள் மாயை எனப்படுகிறது.

 

நான் தலைவன் என்ற தவறான எண்ணத்தை கை விட்டுவிட்டு அந்த பரமனின் சேவகர் ஆவதற்கு முயன்றால் அதுவே முக்தி. முக்தி என்றால் பிரம்மாண்ட உருவத்தை அடைவதோ நிறைய கரங்களையோ கால்களையோ அடைவது அல்ல. தவறான உணர்விலிருந்து விடுதலை அடைவதே முக்தி எனப்படும். நான் தலைவன் என்று நினைப்பது தவறான உணர்வு, இந்த உணர்வை மாற்ற வேண்டும். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிக்கோள்.

 

“நான் தலைவன் அல்ல, சேவகன்” என்பதை ஒருவர் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். உயிர்வாழி முற்றிலும் பரமனின் விருப்பத்தைச் சார்ந்துள்ளான். நாம் பரமனின் விருப்பத்திற்கு கட்டுப்படவில்லை என்றால், மாயை யின் வசப்பட வேண்டும். பகவானின் சேவையை நிராகரித்தால் நாம் புலன்களின் சேவகர்களாகிவிடுவோம். உண்மையில் அதுவே நடந்து கொண்டிருக்கிறது. முழு உலகமும் பலதரப்பட்ட ஆசைகளுக்குத் தொண்டு புரிந்து வருகிறது.

 

இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை நாங்கள் உருவாக்கவில்லை. இது ஸ்ரீமத் பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டது. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. “அபத்தமான ஆசைகளை கை விட்டுவிட்டு என்னிடம் சரணடையுங்கள்” என்று கிருஷ்ணர் கூறுகிறார். இதுவே பகவத் கீதையின் முழு நோக்கம். நமது ஆசைகளை மாயை தூண்டிவிட, அந்த ஆசைகள் நம்மை தூண்டி விடுகின்றன. அந்தத் தூண்டுதல், நாமும் தலைவனாகலாம் என்ற பொய்யான விருப்பத்தைக் கொடுக்கிறது. அது மாயை. நாம் தலைவர் அல்ல, நாம் எவ்வாறு தலைவனாக இருக்க முடியும்? விஞ்ஞானத்தில் நாம் முன்னேறலாம், அற்புதமான இயந்திரங்களையும், ஆயுதங்களையும் உருவாக்கலாம். இருப்பினும், பிறப்பு, இறப்பு, நோய், முதுமை என்னும் மாயையின் விதிகளுக்கு நாம் உட்பட்டவர்கள். மாயையின் இந்த அடிப்படை கொள்கைகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.

 

எனவே, அறிவுள்ள மனிதன், அதாவது, உண்மையான கல்வியைக் கற்ற மனிதன், பகவான் கிருஷ்ணரிடம் சரணடைகிறான். பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யதே. யாரெல்லாம் புத்திசாலிகளோ அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைகின்றனர். இல்லையெனில், “கிருஷ்ணர் யார்? நானும் கிருஷ்ணரைப் போன்றவன், நானே கடவுள்” என்று நினைக்கிறார்கள். அது மாயை, அஃது உண்மையான அறிவு அல்ல.

 

“நாங்கள் முக்தியடைந்து விட்டோம், நாராயணராக, கடவுளாகி விட்டோம்” என்று நினைப்பவர்கள் உள்ளனர். ஆனால் உண்மையோ அஃது அல்ல என்றும், அவர்கள் ஜட இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவர்களே என்றும், அதன் பிடியிலிருந்து அவர்களால் வெளிவர முடியாது என்றும் ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. யாரால் அதன் பிடியிலிருந்து வெளிவர இயலும்?

 

தைவீ ஹ்யேஷா குண-மயீ மம மாயா துரத்யயா

மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே

 

“ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரண டைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.” (பகவத் கீதை 7.14)

இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிக உயர்ந்த உன்னதமான நன்மை பயக்கும் செயல்களை ஊக்குவிப்பதால் இஃது ஒரு மிகச்சிறந்த பக்தி இயக்கமாகும். இந்த இயக்கத்திற்காக உலகம் முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக அறிவிப்பதே எங்களின் ஒரே குறிக்கோள். நாங்கள் கிருஷ்ணராக விரும்பவில்லை, அவரது சிறந்த சேவகராக விரும்புகிறோம். இதுவே எங்களின் கூற்று.

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம். மக்களும் வருகின்றனர், இந்த இயக்கத்தில் இணைகின்றனர். கிருஷ்ணர் இந்தியாவில் தோன்றியதால், கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கான அனுகூலமான சூழ்நிலை இந்தியாவில் உள்ளது. ஆனால் இந்துக்கள் கிருஷ்ணரை அலட்சியம் செய்கின்றனர். இது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். ஆனால் நாங்களோ, இந்த இயக்கத்தில் சேர்ந்து, சாஸ்திரங்களை படித்து, சந்தோஷமாக இருக்குமாறு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம். இதுவே எங்களது பிரச்சாரம். மிக்க நன்றி.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment