பிறப்பற்றவரின் பிறப்பு

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

எல்லாத் தோற்றங்களுக்கும் மூலமாக விளங்கும் இறைவன், மனிதர்களுக்கு மத்தியில் தோன்றும்போது அது குழப்பக்கூடியதாக இருப்பதால், அவரது பிறப்பு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் பிறந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளை நாம் கொண்டாடி வரும் இத்தருணத்தில், அந்த பிறப்பற்ற இறைவனின் பிறப்பு குறித்த விவரங்கள், இதோ இங்கே…

இறைவன் பிறப்பற்றவர்

பிரமிக்கத் தூண்டும் மலைகள், வற்றாத நதிகள், பரந்து விரிந்திருக்கும் கடல்கள், உயிர் வாழ வைக்கும் காற்று, வெளிச்சம் தரும் சூரியன், குளுமையை வழங்கும் சந்திரன், செடிகொடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகள், மற்றும் மனிதர்கள் உட்பட நாம் காண்பவற்றையும் காணாதவற்றையும் படைத்தவர் இறைவன். அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றின–இதனை எந்த மதப் பிரிவினரும் மறுப்பதற்கில்லை. வேதாந்த சூத்திரமும் (1.1.2) இதனை, ஜன்மாத்யஸ்ய யத:, அதாவது, யாரிடமிருந்து எல்லாம் தோன்றியதோ அவரே முழுமுதற் கடவுள் என்று உறுதி செய்கின்றது.

அனைத்தும் அமைவதற்கு ஆதாரமாக விளங்கும் அந்த முழுமுதற் கடவுள், மனிதர்களுக்கு மத்தியில் பிறக்க முடியுமா? எனும் கேள்வி பல்வேறு மக்களின் மனதில் எளிதாக எழக்கூடிய ஒன்று. ஆனால் அந்த வினாவிற்கான விளக்கங்களும் விடைகளும் பற்பல.

பிறப்பற்றவரால் பிறக்க முடியாதா?

கடவுள் எல்லாவற்றையும் படைத்தவர்; அவரைப் படைத்தவர் என்று எவரும் இல்லை, இருக்கவும் முடியாது. அவ்வாறு அவரைப் படைத்தவர் என்று எவரேனும் இருந்தால், அந்த நபரே கடவுளாக இருக்க வேண்டும். மேலும், பிறத்தல் என்றால் அங்கு தாய்தந்தையர் அவசியம்; இறைவன் பிறப்பதாக எடுத்துக் கொண்டால், அவரது தாய் தந்தையர் இறைவனைப் படைத்தவராக ஆகிவிடுவர். இதனை காரணமாகக் கொண்டு, இறைவன் பிறக்க முடியாதவர் என்று முடிவு செய்யும் சில பிரிவினர், அவரது பிறப்பினை முற்றிலுமாக ஒதுக்கி விடுகின்றனர்.

இறைவன் பிறப்பற்றவர் என்பது உண்மைதான். ஆனால் ‘இறைவன் பிறக்க முடியாதவர்’ என்னும் கருத்தில் இருக்கும் பிரச்சனை என்னவெனில், ‘எல்லாவற்றையும் செய்யவல்ல’ இறைவனின் திறனை அது குறைத்து விடுகிறது. இறைவனால் ஆகாத காரியம் ஏதுமில்லை, அவ்வாறு ஏதுமிருத்தல் சாத்தியமும் அல்ல. அவரால் ஒரு செயலைச் செய்ய முடியாது என்று நாம் கூறினால், அவர் இறைவன் என்பதே அர்த்தமற்றதாகிவிடும்.

எனவே, பிறக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துவிட்டால், அவரால் பிறக்க முடியாதா என்ன? அப்படி அவரால் பிறக்க முடியாவிட்டால், இறைவனாக இருப்பதற்கான சக்தி அவரிடம் இல்லை என்றாகிவிடும். எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தி படைத்த இறைவன் தனது பிறப்பையும் கட்டுப்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். இவ்வாறாக, இறைவன் பிறக்க முடியாதவர் என்னும் கருத்து உண்மையல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பிறப்பற்ற இறைவன் பிறப்பதை பகவத் கீதையும் உறுதி செய்வதால், அதனை மறுப்பதற்கு இடமில்லை.

மலைகள், நதிகள் உட்பட நாம் காண்பவற்றையும் காணாதவற்றையும் படைத்தவர் இறைவனே. அவரின் பிறப்பு எப்படி சாத்தியம்?

பிறப்பற்றவரது பிறப்பின் தன்மைகள்

இறைவன் பிறக்கின்றார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், அவருக்கென்று தாய்தந்தையரும், அவருக்கென்று பிறந்தநாளும், அவருக் கென்று ஒரு பெயரும், அவருக்கென்று ஓர் உடலும், அவருக்கென்று சில குணங்களும், அவருக்கென்று சில செயல்களும் இருக்கின்றன. அவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

அஜோ (அ)பி ஸன்ன் அவ்யயாத்மா   பூதானாம் ஈஷ்வரோ (அ)பி ஸன்

ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய   ஸம்பவாம்-யாத்ம-மாயயா

“நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனை வருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்.” (பகவத் கீதை 4.6)

இறைவனின் பிறப்பைப் புரிந்துகொள்வதில் இருக்கும் எல்லாவித ஐயங் களும் மேற்கூறப்பட்டுள்ள பகவத் கீதை ஸ்லோகத்தின் மூலம் தெளிவுபெறுவது உறுதி. திவ்யமான உடலைப் பெற்றுள்ள இறைவன், அந்த சுய உருவத்தில் தனது சொந்த சக்தியின் மூலம் பிறக்கின்றார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நமது எல்லா சந்தேகங்களும் நீங்கித் தெளிவடைகின்றோம்.

இறைவனுக்கென்று ஓர் உடல்

இறைவன் இவ்வுலகில் தோன்றி லீலைகள் புரியும்போது, அவர் பௌதிக உடலையும் பௌதிக குணங்களையும் ஏற்று வருவதாக அறிவற்றவர்கள் சிலர் எண்ணுகின்றனர். பௌதிக இயற்கைக்கு எஜமானராக விளங்கும் இறைவன், அந்த பௌதிக இயற்கைக்கு உட்பட்டவரல்ல என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. அவரது உடல் பௌதிகமானதும் அல்ல, அவர் ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு உட்பட்டவருமல்ல.

இறைவனுடைய உடல் திவ்யமானது; திவ்யமானது என்றால் இந்த ஜடவுலகத்தின் விதிகளுக்கும் குணங்களுக்கும் அப்பாற்பட்டது. அவ்வுடல் ஸத்-ஸித்-ஆனந்தம், அதாவது, பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய உடல் என்று கூறப்படுகிறது. பூரண ஆன்மீகமயமான அந்த உடலில் ஆன்மீக உலகில் நித்தியமாக வீற்றிருக்கும் அந்த இறைவன், இப்பூவுலகிற்கு அதே உடலுடன் வருகின்றார். அவ்வாறு அவர், இங்கு தோன்றும்போது, அவருக்கு அவதாரம் (இறங்கி வருபவர்) என்று பெயர்.

இறைவனுக்கென்று சில பெயர்கள்

இறைவன் ஜடவுலகத்தினுள் அவதரிக்கும்போது, இங்குள்ள அனைத்து ஜீவன்களும் அவரால் கவரப்படுகின்றன. அனைத்து உயிர்களையும் கவரக் கூடியவராக இருப்பதால், அவருக்கு கிருஷ்ணர் (எல்லாரையும் கவரக் கூடியவர்) என்று பெயர். மேலும், அவருடைய ஏனைய குணங்களையும், ரூபத்தையும், செயல்களையும் வைத்து அவருக்குப் பற்பல பெயர்கள் உண்டு. உதாரணமாக, அவரது திருமேனி கார்மேக வண்ணத்தில் இருப்பதால் அவருக்கு சியாமசுந்தரர் என்று பெயர்; அவர் தனது பக்தர்களைக் காப்பவராக இருப்பதால் அவருக்கு பக்தவத்ஸலர் என்று பெயர்; மேலும், அவர் அன்னை யசோதையின் கயிற்றால் கட்டப்பட்டதால் அவருக்கு தாமோதரர் என்று பெயர்–இதுபோன்று அவருக்குக் கோடிக் கணக்கான திருநாமங்கள் உண்டு.

இறைவனுக்கென்று ஒரு தாய் தந்தையர்

அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றும் போது, தனது சுய விருப்பத்தின்படி தாய்தந்தையரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மூலமாகத் தோன்றுகிறார். சில சமயங்களில், அவர் தாய் தந்தையரின் உதவியின்றியும் தோன்றுகிறார். உதாரணமாக, அவர் நரசிம்மராக அவதரித்தபோது அவருக்குத் தாய்தந்தையர் கிடையாது; தாய் தந்தையருடன் வாழும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பிய கிருஷ்ணர், தேவகி வசுதேவரைத் தனது பெற்றோராகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அருள்பாலித்தார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவெனில், தேவகி வசுதேவரைப் பெற்றோராகக் கொண்டு பிறந்தபோதிலும், தேவகியும் வசுதேவரும் கிருஷ்ணரைப் படைத்தவர்கள் என்பது பொருளல்ல–திவ்யமான முறையில் பிறந்த அவர், எப்போதும் பிறப்பற்றவராகவே திகழ்கிறார். தேவகி வசுதேவரின் பிரார்த்தனையை நிறை வேற்ற அவர்களது இடைவிடாத வேண்டு கோளின்படி, அவர் அவர்களுக்கு மகனாகத் தோன்றினார்.

இறைவனுக்கென்று ஒரு பிறந்தநாள் (ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி)

முழுமுதற் கடவுள் இப்பூவுலகில் தோன்றவுள்ளார் என்பதை முன்கூட்டியே அறிந்த இதர தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரின் தலைமையில் அவருக்கு பிரார்த்தனைகளைச் செலுத்தினர். பின்னர், கிருஷ்ணர் தோன்றுவதற்கான நேரம் வந்தவுடன், அவருக்குத் தொண்டு புரியும் நோக்கத்துடன் எல்லா கிரக அமைப்புகளும் மிகவும் சுபமாகத் திகழ்ந்தன. கமானிக்யா எனும் ஜோதிட நூலில் அந்த கிரக அமைப்புகள் மிகவும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தோன்றியபோது இருந்த நேர்த்தியான நேரம், ‘ஜெயந்தி’ என்று அறியப்படுவதால், கிருஷ்ணரின் பிறந்த நாளை நாம் ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று அழைக்கின்றோம். ‘ஜெயந்தி’ என்னும் சொல், கிருஷ்ணரின் பிறந்தநாளுக்கு மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணர் சாதாரணக் குழந்தையைப் போன்று பிறக்கவில்லை. நான்கு கைகளுடன் அதி அற்புதமான ரூபத்தில் தோன்றியதன் மூலம், தான் முழுமுதற் கடவுள் என்பதை அவர் நிரூபித்தார். (கிருஷ்ணர் தோன்றிய சூழ்நிலையின் விளக்கம் மறுபக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) சாதாரணக் குழந்தைகளைப் போன்று ரத்தத்தில் தோய்ந்தோ, அழுதுகொண்டோ அவர் பிறக்கவில்லை. மாறாக, மலர்ந்த புன்னகையுடன் அற்புதமான நாராயண ரூபத்தில் அவர் தோன்றினார். பின்னர், பெற்றோரின் வேண்டுகோளின்படி இரு கைகளைக் கொண்ட மூல ரூபமான கிருஷ்ணர் அங்குத் தோன்றினார்.

பிறப்பிற்கான முக்கிய காரணங்கள்

திவ்யமான முறையில் தனது சுய உருவத்துடன் முழுமுதற் கடவுள் இவ்வுலகில் தோன்றுவதற்கான காரணம் என்ன என்று சிலர் கேட்கலாம். இதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையின் பிரபலமான இரண்டு ஸ்லோகங்களில் (4.7-8) பதிலளிக்கின்றார்:

“எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன். பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.” (மேலும் விவரங்களுக்கு, “கடவுள் அவதரிப்பது ஏன்?” என்னும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையினைப் படிக்கவும்)

தான் பிறப்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை இறைவன் இங்கு முன்வைக்கின்றார்: 1) பக்தர்களைக் காத்தல், 2) துஷ்டர்களை அழித்தல், 3) தர்மத்தை நிலைநாட்டுதல். இருப்பினும், தனது விருந்தாவன லீலைகளைக் காண்பதற்குப் பேராவல் கொண்டிருந்த தூய பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பது என்னும் நோக்கம் இம்மூன்றில் மிகவும் முக்கியமானதா

ஏனைய காரணங்கள்

யுதிஷ்டிர மாமன்னரைப் போன்ற மிகச்சிறந்த புண்ணிய அரசர்களை மகிழ்வித்தல், தனது மிகச்சிறந்த பக்தரான யதுவின் வம்சத்தில் தோன்றி அந்த யது வம்சத்திற்குப் புகழ் சேர்த்தல், தேவர்களிடம் பொறாமை கொண்டோர்களை அழித்தல், தேவகி வசுதேவரைத் திருப்தி செய்தல், பிரம்மாவின் வேண்டுகோளின்படி பூமியின் பாரத்தைக் குறைத்தல், பக்தித் தொண்டின் வழிமுறைகளைப் புதுப்பித்து கட்டுண்ட ஆத்மாக்கள் முக்தி பெற வழி செய்தல், போன்றவை ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பதற்கான இதர காரணங்களாகக் கூறப்படுகின்றன.

எவ்வளவு காரணங்கள் கூறப்பட்டாலும், காரணங்களுக்கு அப்பாற்பட்ட அந்தப் பரம்பொருள் இவ்வுலகில் தோன்றுவதற்கு அவரது சொந்த விருப்பமே காரணமாகும். முற்றிலும் சுதந்திரமான அவரை எந்தவொரு காரணமும் கட்டுப்படுத்த முடியாது.

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை அறிவதன் பலன்

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிற்குப் பின் இருக்கும் தத்துவங்களை அறிந்துகொள்வதால் என்ன இலாபம் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே வழங்குகிறார்:

ஜன்ம கர்ம ச மே திவ்யம்  ஏவம் யோ வேத்தி தத்த்வத:

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம   நைதி மாம் ஏதி ஸோ (அ)ர்ஜுன

“எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலை விட்டபின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.” (பகவத் கீதை 4.9) 

முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் ஆன்மீக உலகத்திலிருந்து இறங்கிவருவது குறித்த இவ்வுண்மை யினை அறிந்தவன், பௌதிக பந்தத் திலிருந்து விடுதலை பெற்றவன். அவன் தனது தற்போதைய பௌதிக உடலை நீத்தவுடன், இறைவனின் திருநாட்டிற்கு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்புகிறான். பௌதிக பந்தத்திலிருந்து ஆத்மா விடுதலை பெறுவது எளிதானதல்ல. அருவவாதிகளும் யோகிகளும் பற்பல துன்பத்திற்கும் பிறவிகளுக்கும் பிறகே முக்தியடைகின்றனர். இறைவனின் பிரம்மஜோதியில் கலக்கும் அவர்களது முக்தியும் முழுமையானதல்ல, இப்பௌதிக உலகிற்கு மீண்டும் திரும்பும் அபாயம் அவர்களுக்கு உண்டு. ஆனால் இறைவனின் பிறப்பு, உடல் மற்றும் லீலைகளின் திவ்யமான தன்மையினை அறிந்துள்ள பக்தன், இவ்வுடலை நீத்த பின், வைகுண்ட லோகத்தை அடைவதுடன், இப்பௌதிக உலகிற்குத் திரும்பி வரும் அபாயத்திலிருந்து விடுபடுகின்றான்.

முடிவு

இதனால் நாம் முடிவு செய்வது என்னவெனில், இறைவன் பிறப்பற்றவர் என்றபோதிலும், அவர் தனது சுய சக்தியின் மூலம் தனது திவ்யமான உருவில் இவ்வுலகில் தோன்றுகிறார்; அவர் சாதாரண மனிதனைப் போலத் தோன்றினாலும், அவரது பிறப்பும் செயல்களும் அவரை சாதாரண மனிதரிலிருந்து நிச்சயமாக வேறுபடுத்திக் காட்டுகின்றன–அவை திவ்யமானவை என்னும் இவ்வுண்மையை நாம் புரிந்துகொண்டால், நமக்கு மீண்டும் ஒரு பிறவி கிடையாது.

கிருஷ்ணரின் பிறப்பு குறித்து மக்களுக்கு எழும் இதர கேள்விகளுக்கான பதில்கள்

* மனிதரைப் போலத் தோன்றியதால், அவரை மனிதராக நினைப்பவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்?

கடவுள் மனிதனைப் போலத் தோன்றுகிறார் என்பதால், அவரை மனிதனாகவே நினைத்து ஏளனம் செய்பவர்கள், முட்டாள்கள் என்று பகவத் கீதையில் (9.11) கூறப்படுகின்றனர்:

அவஜானந்தி மாம் மூடா    மானுஷீம் தனும் ஆஷ்ரிதம்

பரம் பாவம் அஜானந்தோ   மம பூத-மஹேஷ்வரம்

“மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.”

பகவான் திவ்யமானவர் என்பது பகவத் கீதையில் தெளிவாக உரைக்கப் பட்டுள்ளபோதிலும், கிருஷ்ணரை சாதாரண மனிதனாக நினைப்பவர்கள் நிச்சயம் முட்டாள்களே. அவர்கள் எவ்வளவுதான் அறிவுடையவர்களாகத் தோன்றினாலும், அவர்கள் அறிவுடை யோர் அல்ல. அவ்வாறு குழம்பியவர்கள், ராட்சசத்தனமான கருத்துகளாலும் நாத்திகக் கருத்துகளாலும் கவரப்படு கின்றனர். அத்தகு மயங்கிய நிலையில் அவர்களது எல்லா முயற்சிகளும் தோல்வியடைவதாகக் கூறப்படுகின்றது.

* இறைவன் பிறக்கின்றார், பிறந்தவன் இறைவனாக முடியுமா?

இறைவன் மனிதரைப் போன்று தோன்றுகிறார் என்னும் காரணத்தினால், மனிதனாகப் பிறந்த சாதாரண மனிதன் இறைவனாக ஆகலாம் என்பதோ, அப்படிப்பட்ட யாராவது ஒருவரை இறைவன் என்று ஏற்றுக்கொள்வதோ முட்டாள்தனம். இறைவன் மனிதரைப் போலத் தோன்றியபோதிலும், அவர் மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களை பிரம்மாண்டமான முறையில் செய்ததன் மூலம் தன்னை வெளிப்படுத்தினார். பிறக்கும்போதே நாராயண ரூபத்தைக் காட்டியது, மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது பூதனையைக் கொன்றது, கம்சன் உட்பட பல்வேறு சக்தி வாய்ந்த அசுரர்களைக் கொன்றது, காளியனின் மீது நடனமாடியது, கோவர்த்தன மலையை குடையாக தனது இடது கை சுண்டு விரலில் உயர்த்திப் பிடித்தது, காட்டுத் தீயை விழுங்கியது, பிரம்மதேவரையே தனது அற்புத லீலையின் மூலம் மயக்கியது, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் சூரியனையே மறைக்கச் செய்தது, அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் வழங்கியது உட்பட பற்பல அதியற்புத செயல்களை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த லீலைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர், ஸ்ரீல பிரபுபாதர் அருளிய கிருஷ்ணா, புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்” என்னும் புத்தகத்தைப் படிக்கவும்)

இன்றைய சமுதாயத்தில், குறிப்பாக இந்தியாவில், தன்னையே கிருஷ்ணர் (அல்லது இறைவன்) என்று கூறிக்கொள்ளும் முட்டாள் தனமான நபர்கள் பலர் இருப்பது வருந்தத்தக்கதாகும். உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருப்போர் அத்தகையோரிடமிருந்து முற்றிலும் விலகியிருத்தல் அவசியம். கடவுளுக்கான தகுதிகள் (யோக்கியதை) இல்லாமல், தங்களையே கடவுளாகக் கூறிக் கொள்பவர்கள், அயோக்கியர்களாவர் என்று இஸ்கான் அமைப்பின் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதர் கூறுவதுண்டு. கடவுள் எப்போதும் கடவுளே, ஒரு முப்பது வருடங்கள் சாதாரண மனிதனாக இருந்துவிட்டு அதன்பின் திடீரென்று கடவுளாக மாறுவது என்பதெல்லாம் ஏமாற்றுவேலைகள். அத்தகு போலி கடவுள் தனது கடைசி காலகட்டத்தில் கண் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல் துன்பப்படுவதை நம்மால் காண முடியும். ஆனால் கிருஷ்ணர் ஒருபோதும் தனது இளமைப் பருவத்தைத் தாண்டிச் செல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

* கிருஷ்ணருடைய உடலும் சாதாரண மனிதனின் உடலைப் போன்று வளர்ச்சிபெற்றது ஏன்?

“பகவான் கிருஷ்ணரின் உடல் பௌதிக உடலைப் போன்று அழிவுறுவ தில்லை என்றபோதிலும், அவர் குழந்தைப் பருவத்திலிருந்து பால்ய பருவத்திற்கும், பால்ய பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கும்  வளர்ந்ததைப் போலத் தோன்றுகின்றது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில், அவர் இளமையைக் கடந்து செல்வதில்லை. குருக்ஷேத்திரப் போரின்போது, வீட்டில் அவருக்குப் பல பேரக் குழந்தைகள் இருந்தனர்; வேறு விதமாகச் சொன்னால், உலகக் கணக்கின்படி அவர் மிக முதியவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இருபது, இருபத்தைந்து வயது இளைஞனாகவே அவர் அப்போதும் தோன்றினார். கிருஷ்ணரை வயதான நபராக நாம் எந்தச் சித்திரத்திலும் ஒருபோதும் கண்டதில்லை; ஏனெனில், அவர், படைப்பின் கடந்த, நிகழ், எதிர் காலங்களின் பழம்பெரும் நபராக இருந்தாலும், நம்மைப் போன்று ஒருபோதும் முதுமையடைவதில்லை. அவரது உடலோ, அறிவோ ஒருபோதும் தளர்ச்சியுறுவதோ, மாற்றமடைவதோ இல்லை. எனவே, பௌதிக உலகில் இருந்தாலும், அவர் பிறப்பற்றவர்… உண்மையில் அவரது தோற்றமும் மறைவும், சூரியன் உதித்து நம் முன் சில மணிநேரம் காட்சியளித்து, பிறகு நம் பார்வையிலிருந்து மறைகின்றதே, அதுபோன்றதே. சூரியன் நமது பார்வையில் இல்லாதபோது அஸ்தமித்துவிட்டதாகவும், பார்வைக்கு வரும்போது உதிப்பதாகவும் நாம் எண்ணுகின்றோம். ஆனால் சூரியன் எப்போதும் தனது நிலையில் ஸ்திரமாக உள்ளது; நமது குறைபாடுள்ள திறனற்ற புலன்களாலேயே வானில் சூரியனின் தோற்றத்தையும் மறைவையும் நாம் கணக்கிடுகிறோம்.” (பகவத் கீதை உண்மையுருவில், 4.6, பொருளுரை)

* கடவுள் உண்மையில் உருவமற்றவர் என்றும் அவர் இவ்வுலகில் தோன்றும்போது உருவத்தை எடுப்பதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனரே?

யாம் இக்கட்டுரையில் ஏற்கனவே விளக்கியுள்ளபடி, இறைவன் தனது நித்திய உருவில் ஆன்மீக உலகில் லீலைகள் புரிந்து வருகிறார். அவர் இவ்வுலகில் தோன்றும்போது அந்த மூல ரூபத்துடனே தோன்றுகிறார். கடவுளுக்கு உருவமில்லை (அவ்யக்தம்) என்றும், அவர் இங்கு தோன்றும்போது உருவத்தை ஏற்பதாகவும் (வியக்தி) கூறும் பிரிவினரை பகவத் கீதையில் (7.24) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு சாடுகின்றார்:

அவ்யக்தம் வ்யக்திம் ஆபன்னம்  மன்யந்தே மாம் அபுத்தய:

பரம் பாவம் அஜானந்தோ   மமாவ்யயம் அனுத்தமம்

“என்னைப் பக்குவமாக அறியாத அறிவற்ற மனிதர்கள், கிருஷ்ணர் எனப்படும் பரம புருஷ பகவானாகிய நான், முன்னர் அருவமாக இருந்ததாகவும் தற்போது உருவத்தை ஏற்றிருப்பதாகவும் எண்ணுகின்றனர். அவர்களது சிற்றறிவினால், அழிவற்றதும் மிகவுயர்ந்ததுமான எனது பரம இயற்கையைப் பற்றி அவர்கள் அறியார்.”

உருவமற்ற இறைவன் உருவத்தை ஏற்றுக்கொள்கிறார் என்னும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதை நாம் இதிலிருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives