பல்வேறு கோணத்தில் பல்வேறு கிருஷ்ணர்

Must read

கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு கண்டனர் என்பதே தெரியாத தணுக்கு.

அரங்கின் வாயிலில் இருந்த குவலயாபீட என்ற யானையைக் கொன்று தமது சக்தியை அனைவருக்கும் வெளிப்படுத்திய கிருஷ்ணர் தமது அண்ணன் பலராமருடன் அரங்கினுள் நுழைந்தார். அத்தருணத்தில் அந்த அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் கிருஷ்ணருடனான தத்தமது உறவிற்கு ஏற்ப அவரைக் கண்டனர். அதாவது, ஒரே தருணத்தில் கிருஷ்ணர் அனைவருடனும் பத்து விதமான காப்பியச் சுவையை (ரஸத்தை) வெளிப்படுத்தினார்.

அங்கிருந்த மல்லர்கள் தங்களால் கிருஷ்ணருக்கு மரணம் நிகழப் போகிறது என்று செருக்குடன் இருந்த சமயத்தில், கிருஷ்ணரின் வஜ்ராயுதம் போன்ற திருமேனியைக் கண்டு கடும் சினம் கொண்டனர். அதனால் அவர்கள் அவரை இடியாகக் கண்டனர். (ரௌத்ர ரஸம்-சினஞ்சுவை)

அங்கிருந்த மக்களும் அரசர்களும் கிருஷ்ணரின் திருமேனியில் அற்புதமான அவயங்களைக் கண்டு வியப்புற்றதால், அவரை மனிதகுல மாணிக்கமாகக் கண்டனர். (அத்புத ரஸம்-வியப்புச்சுவை)

அங்கிருந்த இளம் கன்னியர்கள் கிருஷ்ணரின் பேரழகைக் கண்டு வசப்பட்டதால், அவர்கள் அவரை மன்மதனின் ஸ்வரூபமாகக் கண்டனர். (சிருங்கார ரஸம்)

அங்கிருந்த கிருஷ்ணரின் நண்பர்கள் அவரது கரத்தில் ரத்தம் தோய்ந்த யானை தந்தத்தைக் கண்டு சிரிப்பு உண்டானதால், அவர்கள் அவரை தங்களது அன்பிற்கு பாத்திரமான கோபாலனாகக் கண்டனர். (ஹாஸ்ய ரஸம்-நகைச்சுவை)

அங்கிருந்த தீய அரசர்கள் தங்களை அடக்கியாளும் ஒரு சக்தியாக கிருஷ்ணரைக் கண்டனர், அதனால் கிருஷ்ணரின் வீரத்தை உணர்ந்தனர். (வீர்ய ரஸம்-வீரச்சுவை)

பெற்றோர்களின் ஸ்தானத்தில் இருந்த பெரியோர்களின் பார்வையில் கிருஷ்ணர் ஒரு குழந்தையாகத் தோன்றினார். அதனால் அவர்கள் மல்லர்களால் கிருஷ்ணருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சினர். அந்த இரக்கத்தினால் கருண ரஸம் (கருணைச்சுவை) தோன்றியது.

கம்சனோ கிருஷ்ணரைத் தன்னைக் கொல்ல வந்துள்ள எமனாகக் கண்டான். அந்த பயத்தினால் அவனில் அச்சச்சுவை (பயானக ரஸம்) தோன்றியது.

அறிவற்றவர்கள் கிருஷ்ணரின் உண்மை ஸ்வரூபத்தை அறியாமல், சிறுவனைப் போலத் தோன்றும் கிருஷ்ணரில் பேராற்றல் உள்ளதே என்ற எண்ணத்தில் ஒரு அருவருப்பை வெளிப்படுத்தினர். (பிபத்ஸ ரஸம்ஶிஇழிவுச்சுவை)

யோகிகள் அவரை பரம்பொருளாகப் பார்த்தனர். (ஸாந்த ரஸம்)

விருஷ்ணி குலத்தவர்கள் கிருஷ்ணரைத் தங்களது இஷ்ட தெய்வமாக பிரேமையுடன் (அன்புடன்) கண்டனர். (பக்தி ரஸம்)

கிருஷ்ணர் அந்த மல்யுத்த அரங்கினுள் நுழைந்த சம்பவம் இத்தகு விசேஷ தன்மையுடன் விளக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம் 10.43.17. அதற்கான ஸ்ரீல ஸ்ரீதர ஸ்வாமியின் உரை.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives