வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

மிகவும் சிக்கலான தர்மத்தின் நெறிமுறைகளை மக்கள் புரிந்துகொள்ள உதவும் இதிகாசமே மஹாபாரதம். ஆயினும், தர்மத்தின் கொள்கைகளை அதர்மத்தில் ஊறித் திளைத்து நிற்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தினால், மஹாபாரதத்தின் சில பகுதிகள் பொதுமக்களுக்கு புரிவதில்லை. தர்மத்தினை எடுத்துரைக்கும் நூலில் அதர்மம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் சுட்டிக் காட்டும் உதாரணங்களில் ஒன்று: பீமன் துரியோதனனை தொடையில் அடித்து வதம் செய்த நிகழ்ச்சியாகும். பீமனின் அந்த செயலை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை சற்று விரிவாகக் காண்போம்.

துரியோதனன் கொல்லப்பட்ட சூழ்நிலை

கௌரவர்களின் தரப்பில் இருந்தவரில் ஏறக்குறைய அனைவரும் கொல்லப்பட்ட பின்னர், துரியோதனன் நீரின் அடியில் ஒளிந்து கொண்டிருந்தான். அதனை அறிந்த பாண்டவர்கள், பகவான் கிருஷ்ணருடன் அங்கு வந்து சேர்ந்தனர். யுதிஷ்டிரர் விரும்பியிருந்தால், துரியோதனனைக் கைது செய்து ஆட்சியமைத்திருக்கலாம். ஆனால் அவரோ தனது தாராள மனப்பான்மையினால், விரும்பிய ஆயுதத்தைக் கொண்டு பாண்டவர்களில் யாருடன் வேண்டுமானாலும் சண்டையிடும்படியும், அதில் வெற்றி பெற்றால் உலகை ஆளலாம் என்றும் துரியோதனனுக்கு வாக்குறுதியளித்தார். அதன்படி, துரியோதனனுக்கும் பீமனுக்கும் கதாயுத்தம் நிகழ்ந்தது.

தனது எஞ்சிய ஒரே மகனைக் காப்பாற்றும் நோக்கத்தில், புத்திர பாசத்தினால் மயங்கியிருந்த காந்தாரி, தனது தவ வலிமையினால், துரியோதனனின் உடல் முழுவதையும் (தொடைப் பகுதி தவிர) இரும்பினைப் போல மாற்றியிருந்தாள். அதன் காரணத்தினால், துரியோதனனை பீமனால் தோற்கடிக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரையின்படி, பீமன் துரியோதனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான். கதாயுத்த நெறியின்படி, தொடையில் அடித்தல் தவறானது என்பதால், பீமனின் இந்த செயல் சிலரால் கண்டிக்கப்படுகிறது.

சூழ்நிலைகளை மறக்கக் கூடாது

ஆயினும், வேத சாஸ்திரங்களை நுணுக்கமாகக் கற்று, தர்ம அதர்ம நெறிகளில் புலமை வாய்ந்தவர்களாக உள்ள எந்தவொரு ஆச்சாரியரும், பீமனின் செயலை வரலாற்றில் இதுவரை குற்றம் கூறியதாக தெரியவில்லை. அச்செயலில் எந்த குற்றமும் இல்லை என்பதை இதிலிருந்து எளிதில் உணரலாம்.

துரியோதனனுடன் நிகழ்ந்த பீமனின் யுத்தமானது ஆரம்பத்திலிருந்தே நீதிக்கு அப்பாற்பட்டதாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காந்தாரியின் விசேஷ பார்வையினால் துரியோதனனின் உடல் முழுவதும் இரும்பினைப் போன்று மாறியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், அவனை வீழ்த்துவதற்கு தொடையில் அடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தொடையில் அடிபட்டால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த துரியோதனன், பீமனுடன் கதாயுதத்தில் ஈடுபட விரும்பினான் (இதற்கு இதர காரணங்களும் உள்ளன). கதாயுத்தம் தனக்கு பாதுகாப்பானது என்பதால், துரியோதனன் பீமனைச் சந்தித்தான்; அவன் அர்ஜுனனுடன் வில் வித்தையில் ஈடுபட விரும்பவில்லை.

வீழ்த்தவே முடியாத ஒருவனுடன் நிகழ்ந்த யுத்தத்தினை பின்வரும் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்: உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளரும் தலைசிறந்த பேட்ஸ்மேனும் களத்தில் இருக்கும்போது, எந்தவொரு சூழ்நிலையிலும் (போல்ட், எல்.பி.டபுள்யு., கேட்ச் என எந்த வழிமுறையிலும்) பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கப்படாது என்று ஒரு விசேஷ வரம் வழங்கப்பட்டால், பந்து வீச்சாளரால் என்ன செய்ய முடியும்? தனது முழு திறமையை உபயோகித்து, துல்லியமான பந்துவீச்சின் மூலமாக பேட்ஸ்மேனை பலமுறை அவுட் ஆக்கிய பின்னரும், பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கப்படவில்லை என்றால், அவர் என்ன செய்வார்? பந்து வீச்சின் நெறிமுறைகளை மீறி, பேட்ஸ்மேனின் உடம்பில் பந்தை வீசி, அவரை களத்திலிருந்து அகற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்காது. அதே போன்ற சூழ்நிலைதான் பீமனின் வாழ்வில் நிகழ்ந்தது.

பீமன், துரியோதனன் ஆகிய இருவரும் உலகின் தலைசிறந்த கதாயுத வீரர்கள்; பீமன் துரியோதனனைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான உடல் வலிமையைக் கொண்டிருந்தான், துரியோதனன் பீமனைக் காட்டிலும் கதாயுத்தக் கலையில் சற்று அதிகமான திறமையைக் கொண்டிருந்தான். உண்மையான முறையில் யுத்தம் நிகழ்ந்தால், நிச்சயம் பீமன் அதில் வெற்றி பெறுவான் என்பதை உணர்ந்து அந்த அச்சத்தின் காரணத்தினால்தான், காந்தாரி தனது மகனுக்கு விசேஷ பாதுகாப்பினை வழங்கினாள். பீமன் தனது முழு திறமையை உபயோகித்து, இருமுறை முழு பலத்துடன் துரியோதனனை வீழ்த்தினான்; பீமன் அடித்த அந்த இரண்டு அடியும் மாபெரும் மலைகளைக்கூட தூள்களாக நொறுக்கக்கூடியதாகும். இருப்பினும், அவற்றினால் எந்த பயனும் ஏற்படவில்லை.

நீங்கள் மேற்கூறிய கிரிக்கெட் போட்டியின் பார்வையாளராக இருக்க நேர்ந்தால், அத்தகைய போட்டிக்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்பீர்கள் அல்லவா? அவ்வாறு இருக்கையில், விசேஷ வரத்துடன் களத்திற்கு வந்த துரியோதனனை எதிர்க்க மாட்டீர்களா?

 

பீமனின் சபதம்

துரியோதனனின் பல்வேறு நீச்சமான செயல்களில் ஒன்று, திரௌபதியை மாபெரும் சபையில் நிர்வாணமாக்குவதற்கு முயற்சி செய்ததாகும். அனைவரும் அறிந்த அந்த நிகழ்ச்சியின்போது, துரியோதனன் தனது தொடைப்பகுதியின் துணியை விலக்கி, அதில் அமரும்படி அகந்தையுடன் திரௌபதியிடம் கூறினான். அவனது வெட்கங்கெட்ட கர்வத்தினால் கொதித்து எழுந்த பீமன், “வருங்காலத்தில் நிகழும் போரில், எனது கதாயுதத்தைக் கொண்டு உனது தொடையினை நிச்சயம் உடைப்பேன்,” என்று சபதம் பூண்டான். சத்திரியர்களைப் பொறுத்தவரையில், சபதங்களை நிறை வேற்றுவது என்பது மிகவும் முக்கியமான கடமையாகும். கதாயுத யுத்தத்தில் இடுப்பிற்குக் கீழே அடிப்பது தவறு என்ற சட்டத்தை பீமன் பின்பற்ற வேண்டுமெனில், அவனால் ஒருபோதும் தனது சபதத்தை நிறைவேற்றியிருக்க முடியாது.

இருப்பினும், பீமன் தன்னால் முடிந்தவரை நியாயமான முறையில் போரிட்டு பார்த்தான். துரியோதனனின் மீது எப்போதும் கடுங்கோபத்தில் இருந்த பீமன், “கதாயுதத்தைக் கொண்டு தொடையை உடைப்பேன்” என்னும் தனது சபதத்தை ஆரம்பத்திலேயே நிறைவேற்ற முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அது யுத்த நெறிக்கு முரண்பட்டது என்பதால், அவன் அதற்கு முயற்சி செய்யவில்லை. ஆனால், யுத்த நெறிக்கு முரண்பட்ட நிலையில் துரியோதனன் விசேஷ பாதுகாப்புடன் இருந்த காரணத்தினால், பீமனும் யுத்த நெறியை மீறி, தனது சபதத்தை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

ஏரியிலிருந்து துரியோதனன் வெளியே வருதல்

மைத்ரேயரின் சாபம்

“பீமனின் கதாயுதத்தினால் தொடை பிளக்கப்பட்டு நீ மரணமடைவாய்,” என்று துரியோதனனுக்கு மைத்ரேய முனிவர் ஏற்கனவே சாபமிட்டிருந்தார். (ஆரண்யக பர்வம், பகுதி 10) அந்த சாபத்தின் விளைவே துரியோதனனின் மரணம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, துரியோதனனின் மரணத்திற்கு மைத்ரேய முனிவரே காரணமாகிறார், பீமன் வெறும் வெளிப்புற காரணம் மட்டுமே.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

தவறான முறையினால் தான் வீழ்த்தப்பட்டேன் என்று குற்றம் சாட்டிய துரியோதனனிடம் கிருஷ்ணர் கூறிய பதில்: “உன்னால் வகுக்கப்பட்ட பாவகரமான பாதையினால், எத்தனை எத்தனையோ சகோதரர்கள், மகன்கள், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் நலன் விரும்பிகள் கொல்லப்பட்டனர். உன்னுடைய பாவச் செயல்களினால்தான், மாவீரர்களான பீஷ்மரும் துரோணரும் கொல்லப்பட்டனர்; உன்னுடன் இணைந்து மோசமான நடத்தைகளைப் பின்பற்றியதால்தான் கர்ணனும் கொல்லப்பட்டான். மூடனே! என்னால் கேட்கப்பட்டபோதிலும், சகுனியினால் தூண்டப்பட்டு, பாண்டவர்களுக்கு உரிய பங்கினை கொடுக்க மறுத்தாய்! நீதானே பீமசேனனுக்கு விஷம் கொடுத்தாய்! நீதானே பாண்டவர்களை அவர்களின் தாயுடன் இணைத்து அரக்கு மாளிகையில் எரிக்க முனைந்தாய்! சூதாட்டக் களத்தில் திரௌபதியை அவளது மாதவிலக்கின் காலத்தில் சபைக்கு இழுத்துவந்து அவமானப்படுத்தியது நீதானே! சூதாட்டத்தில் திறமை இல்லாத யுதிஷ்டிரரை அதில் மிகச்சிறந்த திறமைசாலியாக விளங்கும் சகுனியைக் கொண்டு ஏமாற்றியது நீதானே! சிறுவனான அபிமன்யுவை ஆயுதம் இல்லாத தருணத்தில், பல்வேறு வீரர்களைக் கொண்டு கொன்றவன் நீதானே! பெரியோர்களின் ஆலோசனைகளை எப்போதும் கேட்க மறுத்தாய்! மூத்தவர்களை மதிக்கத் தவறினாய்! நன்மை தரும் வார்த்தைகளை நீ ஒருபோதும் கேட்கவில்லை! மாறாக, கபடத்தனத்தினாலும் பதவிப் பேராசையினாலும் உந்தப்பட்டு, பல்வேறு அதர்மச் செயல்களில் ஈடுபட்டாய்! பாவியே, உன்னுடைய அவ்வெல்லா செயல்களுக்குமான பலனை மட்டுமே தற்போது நீ அனுபவிக்கின்றாய்!”

பலராமரின் கோபம்

பீமனின் மீது பலராமர் கோபம் கொண்டதும் துரியோதனின் மீது பாசம் காட்டியதும் ஏன்? கிருஷ்ணர், பலராமர் ஆகிய இருவருமே முழுமுதற் கடவுள்; இவர்களின் செயல்களை சாதாரணமாக நம்மால் புரிந்துகொள்ள இயலாது. மேலோட்டமாக பார்த்தால், தன்னுடைய தலைசிறந்த சீடன் என்ற முறையில் துரியோதனனின் மீது பலராமர் சற்று பரிவு காட்டியதுபோல தோன்றலாம். ஆனால் பீமனின் மீதான பலராமரின் கோபம், கிருஷ்ண லீலைகளின் ஓர் அங்கமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பலராமர் கோபம் கொண்ட தருணத்தில், பீமனின் செயலில் உள்ள நியாயத்தின் தன்மையினை பலராமருக்கு கிருஷ்ணர் எடுத்துரைத்தார். உண்மையில், பலராமரின் மூல மாக மற்றவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். ஒருவரது ஒரு குறிப்பிட்ட செயலைப் பார்த்து, அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கூடாது என்றும், அந்த செயலுக்குப் பின்னால் உள்ள மற்ற செயல்களையும் பார்க்க வேண்டும் என்றும் கிருஷ்ணர் அறிவுறுத்தினார். அதாவது, துரியோதனன் தனது வாழ்நாள் முழுவதும் நீதிக்குப் புறம்பான பல்வேறு செயல்களின் மூலமாக பீமனைக் கொல்ல நினைத்தான்; அத்தகைய கொடூரனை இவ்வாறு கொல்லுதல் குற்றமன்று என்று கிருஷ்ணர் பலராமரைக் காரணமாகக் கொண்டு நமக்கு எடுத்துரைத்தார்.

மேலும், கிருஷ்ணரைப் பற்றிய அறிவை மற்றவர்களுக்கு வழங்குவதே பலராமரின் உண்மையான கருணையாகும். வேறு விதமாகக் கூறினால், பலராமரின் கருணையைப் பெற்றவர்களால் மட்டுமே கிருஷ்ணரை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் பலராமர் “ஆதிகுரு” என்று அழைக்கப்படுகிறார். துரியோதனன் தனது வாழ்நாளின் இறுதிவரை நிச்சயமாக கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளவில்லை; இதிலிருந்து பலராமரின் உண்மையான கருணை துரியோதனனுக்குக் கிடைக்கவில்லை என்பதை நாம் அறியலாம்.

 

தொடையைக் காட்டி ஏளனம் செய்த துரியோதனனின் தொடையைப் பிளப்பேன் என்று பீமன் உறுதி பூண்டான்.

தர்மத்தின் வெவ்வேறு நிலைகள்

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தர்மமாக இருப்பது, மற்றொரு சூழ்நிலையில் அதர்மமாக மாறலாம்; அல்லது இரண்டு தர்மங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளும் வரலாம். எனவே, தர்மம் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து மாறக்கூடியதாகும்; மேலும், தர்மங்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்படும்போது, உயர்ந்த தர்மத்தைப் பின்பற்றுவதற்காக தாழ்ந்த தர்மத்தைக் கைவிடுவதும் வழக்கமாகும். இதனை எடுத்துரைக்கும் பின்வரும் நிகழ்ச்சியினை பகவான் கிருஷ்ணர் மஹாபாரதத்தில் கூறுகிறார்:

தனது வாழ்நாள் முழுவதும் பொய் பேசக் கூடாது என்று உறுதி பூண்டிருந்த பிராமணர் ஒருவர் ஊரின் ஒதுக்குப்புறமாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் வியாபாரி ஒருவர், தன்னை கொள்ளைக்காரர்கள் விரட்டுவதாகக் கூறி, ஒளிந்துகொள்வதற்கு அவரிடம் இடம் கேட்டார். அவரிடம் ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும்படி பிராமணர் கூறினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த கொள்ளையர்கள், பிராமணரிடம் வியாபாரியைப் பற்றி வினவினர். வாழ்வில் பொய் சொல்லக் கூடாது என்று எண்ணிய அந்த பிராமணர், வியாபாரி ஒளிந்திருந்த இடத்தினைக் காட்ட, கொள்ளையர்கள் அந்த வியாபாரியைக் கொன்று பணத்தை எடுத்துச் சென்றனர். வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லாமலே வாழ்ந்த அந்த பிராமணர், இறுதியில் நரகத்திற்குச் சென்றார். அதாவது, மேற்கூறிய தருணத்தில், ஓர் உயிரைக் காத்தல் என்னும் உயர்ந்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காக, பொய் சொல்லக் கூடாது என்னும் தாழ்ந்த தர்மத்தை அந்த பிராமணர் மீறியிருக்க வேண்டும். தாழ்ந்த நிலை தர்மத்தை மீறாமல் இருந்தது பாவமாகிவிட்டது.

அதுபோலவே, துரியோதனனைக் கொல்லுதல் என்பது உயர்ந்த தர்மத்தை நாட்டில் நிலைநாட்டுவதற்கு மிகவும் அவசியமான செயலாகும். மேலும், பாண்டவர்களில் யாரேனும் ஒருவரை துரியோதனன் தோற்கடித்து விட்டால் போதும், அவன் அரசாளலாம் என்று யுதிஷ்டிரர் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், தர்மத்தை நிலைநாட்டுவதற்கு பீமனிடம் வேறு வழியேதும் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அந்த உயர்ந்த தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு, தாழ்ந்த தர்மத்தை மீறிய பீமனின் செயலில் எந்த தவறும் இல்லை. உண்மையில், அவ்வாறு மீறுவதற்கு தவறுவதே அதர்மமாகும்.

கிருஷ்ணரின் கட்டளை

தர்மம் எது என்பதை யார் வேண்டுமானாலும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாதம் செய்யலாம். ஆனால் அதனை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. தர்மதேவன் என்று அழைக்கப்படும் யமராஜர், தர்மம் என்றால் என்ன என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்: “முழுமுதற் கடவுளான கிருஷ்ணரால் வகுக்கப்படுபவையே தர்மம்; இதனைப் புரிந்துகொள்வது எளிதல்ல. மிகச்சிறந்த ரிஷிகள், தேவர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்களாலும் புரிந்துகொள்ள இயலாத இந்த விஷயத்தை மனிதர்களாலும் அசுரர்களாலும் புரிந்துகொள்ள முடியுமா? மஹாஜனங்களின் வழியில் வரும் பரம்பரையின் மூலமாகவே இந்த உயர்ந்த தர்மத்தைப் புரிந்துகொள்ள முடியும்.” (ஸ்ரீமத் பாகவதம் 6.3.19-21)

எனவே, கிருஷ்ணரின் கட்டளையே உயர்ந்த தர்மம், இதில் வேறு எந்த வாதத்திற்கும் அவசியமில்லை. இதை உணர்ந்தோர், கிருஷ்ணரின் செயல்களையும் கிருஷ்ணரின் கட்டளைப்படி செய்யப்படும் எந்தவொரு செயலையும் நிந்திக்க மாட்டார்கள்.

பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையிலான கதாயுத்தம் சம பலத்தில் சென்று கொண்டிருந்தது; அதில் எந்தவொரு முடிவும் வருவதாகத் தோன்றவில்லை. அத்தகைய சூழ்நிலையில், அர்ஜுனன் எழுப்பிய கேள்விக்கு, துரியோதனனின் தொடையில் பீமன் அடிக்க வேண்டும் என்று கிருஷ்ணர் அறிவுறுத்தினார். அது பகவான் கிருஷ்ணரின் கட்டளை. அந்த கட்டளையினை நிறைவேற்றுவது மிகவுயர்ந்த தர்மமாகும். அதன்படி, அர்ஜுனன், துரியோதனனின் இடது தொடையில் அடிக்கும்படி பீமனுக்கு சைகை காட்டினான். கிருஷ்ணரின் கட்டளையை உணர்ந்து கொண்ட பீமனும் அதனை முறையாக நிறைவேற்றினான். கதாயுதத்தில் அவஸ்தான எனப்படும் ஒரு தந்திரத்தினை அரங்கேற்றுவதற்காக, துரியோதனன் எழும்பி குதிக்க, அவனது தந்திரத்தினை உணர்ந்து அதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பீமன், ஒரே அடியில் துரியோதனனின் இரு தொடைகளையும் உடைத்தான்.

கிருஷ்ணரின் கட்டளையின்படி செய்யப்பட்ட எந்தவொரு செயலும் நீதிக்குப் புறம்பானதாக இருக்க முடியாது என்பதால், பீமனின் செயலில் எந்த தவறும் இல்லை என்பதே இறுதி முடிவாகும்.

துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையிலான யுத்தத்தினை இதர பாண்டவர்களுடன் இணைந்து கிருஷ்ணரும் பலராமரும் கவனித்தல்