—ஹரிவிலாஸ தாஸரின் பேட்டியிலிருந்து

ஸ்ரீல பிரபுபாதர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பாக பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சுமார் 30பேர் அமர்ந்திருந்த இடத்தில், அங்கிருந்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தவன் “நானே” என்ற அகந்தையுடன் கடைசியாக வந்து சேர்ந்தேன். அனைவரையும் ஓரமாக ஒதுக்கி விட்டு, முன்வரிசைக்குச் சென்று பிரபுபாதருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். என்னுடன் வந்த கனசியாமர் அமைதியாகவும் பணிவாகவும் வாயிலில் அமர்ந்து விட்டார்.

லோசனானந்தர் அனைவரையும் பிரபுபாதருக்கு அறிமுகம் செய்வித்தார். “இவர்தான் ஹரிவிலாஸர், இந்தக் கோயிலின் தலைவர்,” என்று அவர் கூறியபோது, பிரபுபாதர் என்னைப் பார்க்கவே இல்லை. “ஏன் பிரபுபாதர் என்னைப் பார்க்கவில்லை, தலையைக்கூட அசைக்கவில்லையே,” என்று நினைத்தேன், ஏதோ தவறு செய்துள்ளோம் என்பது புரிந்தது, முன்னே அமருவதற்காக அனைவரையும் தள்ளி விட்டு வந்தது தவறு என்பதை உணர்ந்தேன்.

லோசனானந்தர், “பின்னால் அமர்ந்துள்ள அவர் கனசியாமர், உங்களது புத்தகங்களை மொழிபெயர்க்கின்றார்,” என்று கூறியதும், பிரபுபாதர், “எங்கே அவர்? நிற்கச் சொல்லுங்கள்,” என்றார். கனசியாமர் எழுந்து நின்றவுடன் பிரபுபாதர் அவரது சேவையைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். கனசியமாரைப் பாராட்டியவர் என்னைப் பாராட்டாமல் இருந்ததற்கு எனது கர்வமே காரணம் என்பதை உணர்ந்தேன்.

சிறிது நேரத்தில், புதிய கோயில் வாங்கப்பட்டுள்ளதைப் பற்றி அறிவிக்கப்பட்டது. அதனை ஒரு முக்கிய வெற்றியாக நான் கருதியிருந்தபோது, பிரபுபாதர், “அந்த இடம் எங்கே உள்ளது?” என்று வினவினார். லோசனானந்தர் புறநகரத்தில் இருப்பதாகக் கூறியபோது, பிரபுபாதர் முதல்முறையாக என்னைப் பார்த்தார், அந்தப் பார்வையைத் தாங்குவது எனக்கு சிரமமாக இருந்தது.

“பாரீஸ் நகரிலிருந்து எவ்வளவு தூரம்?” என்று பிரபுபாதர் வினவ, நான் சற்று சுதாரித்தேன்.

“பிரபுபாதரே, அதிக தூரம் கிடையாது,” என்றேன்.

பிரபுபாதர் விடவில்லை. “காரில் சென்றால் எவ்வளவு நேரமாகும்?”

“முக்கால் மணி நேரமாகும்.”

“இரயிலில் சென்றால்?”

பிரபுபாதர் ஏன் இதையெல்லாம் கேட்கிறார் என்ற குழப்பத்துடனே, “ஒரு மணி நேரமாகும்,” என்று பதிலளித்தேன்.

“அப்படியெனில், அதன் தூரம் அதிகம்.”

“ஆமாம் பிரபுபாதரே, தூரம் அதிகம்,” என்று பிரபுபாதரிடம் ஒப்புக் கொண்டேன். என்னுடைய பக்குவமற்ற புத்தியையும் மாயையையும் எனது குரு அகற்றுகிறார் என்பதை உணர முடிந்தது. பிரபுபாதர் என்னைப் பணிய வைத்து விட்டார், அவமானப்பட்டாலும் மகிழ்ச்சியை உணர்ந்தேன்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!