ரோபோக்களுக்கு உணர்ச்சி சாத்தியமா?

Must read

வழங்கியவர்: சக்ரபாணி தாஸ்

தொழிற்துறை புரட்சியும் மின்னணு கண்டுபிடிப்புகளும் நுட்பமான இயந்திரங்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளன. கணினியும் மின்னணுவியலும் மனித வாழ்வின் அடிப்படைச் செயல்களுக்குப் புத்துயிர் அளித்து, விஞ்ஞானிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்கி வருகின்றன.

இயந்திர மனிதன்

அவற்றில் ஒன்றுதான் ரோபோ (இயந்திர மனிதன்). ரோபோ என்பது மிகவும் சிக்கலான செயல்களை தன்னிச்சையாகவே இயக்கும் திறன் கொண்ட, கணினி மூலமாகச் செயல்படும் ஓர் இயந்திரமாகும். பல்வேறு காரணங்களால் மனிதன் நேரடியாகச் செய்ய முடியாத செயல்களை இந்த ரோபோக்களின் மூலமாக நிறைவேற்ற முடிகிறது.

இந்தத் துறையில் நிகழ்ந்த நீண்ட ஆராய்ச்சியின் பலனாக, ரோபோக்கள் மிகவும் நுட்பமான முறையில் தற்போது வெளிவருகின்றன; சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுமாறுகூட அவை வடிவமைக்கப்படுகின்றன. இதனை “செயற்கை அறிவு” (Artificial Intelligence) என்று அழைக்கின்றனர்.

திரைப்பட ரோபோக்கள்

சில திரைப்பட வல்லுநர்கள் இந்த ரோபோக்களையும் ரோபோ சார்ந்த விஞ்ஞானத்தையும் வைத்து சில திரைக்கதைகளை புனைந்து படம் தயாரிக்கின்றனர். அப்படங்களில் அவ்வப்போது ரோபோக்களை உணர்ச்சியுடைய ஒன்றாகக் காண்பிக்க முயல்கின்றனர்.

ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். இப்படத்தில், நடிகர் தன்னைப் போன்ற உருவில் ஒரு ரோபோவை உருவாக்க முயல்கிறார். முதலில் அந்த ரோபோவிற்கு உணர்ச்சிகளோ கிளர்ச்சிகளோ இல்லை. அது தானாக சிந்திப்பதில்லை என்பதை அவர் உணர்ந்து, அதனை மனிதனைப் போன்றே செயல்பட வைப்பதற்கு முயல்கிறார். அந்த ரோபோவும் அன்பு, பாசம், கோபம் முதலிய மனித உணர்ச்சிகளை உணரத் தொடங்குகிறது. இத்தகைய கருத்து திரைப்பட வியாபாரத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். இருப்பினும், தன்னிச்சையான ரோபோ அல்லது உணர்ச்சிபூர்வமான ரோபோக்களை உருவாக்குதல் விஞ்ஞானிகளுக்கு சாத்தியமா? ஒருபோதும் சாத்தியமல்ல.

பதிவு செய்யும் உணர்ச்சிகளை வேண்டுமானால் இயந்திரங்கள் வெளிப்படுத்தலாம், ஆனால் மனிதனைப் போன்ற யதார்த்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் சாத்தியமல்ல.

மனித சக்தியின் திறன்

ஒரு சாதாரண முட்டாள் மனிதனிடம்கூட பல்வேறு திறன்கள் பொதிந்துள்ளன. அந்த மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் ரோபோவை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில், அவ்வாறு சிந்தித்து செயல்படுவதற்கான திறனும் உணர்ச்சிகளும் ஆத்மாவிடமிருந்து வருகின்றன, ஜடப் பொருட்களின் கலவையான ரோபோவினால் அவை இயலாதவை.

உணர்ச்சி என்பது உயிரிலிருந்து மட்டுமே வரக்கூடும். உணர்வுகளை இயந்திரத்தின் மூலமாகப் பெறுவதற்கு எந்த முயற்சியை மேற்கொண்டாலும், நாம் பதிவு செய்யும் உணர்ச்சிகளை வேண்டுமானால் அந்த இயந்திரங்கள் வெளிப்படுத்தலாம். ஆனால் மனிதனைப் போன்ற யதார்த்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் சாத்தியமல்ல.

உலகின் எந்தவொரு வசதியான ரோபோவும் ஒரு சாதாரண முட்டாள் மனிதனிடம் இருக்கும் உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்த முடியாது என்பது உறுதி.

உணர்வு என்றால் என்ன?

உணர்வே உயிர் இருப்பதை உணர்த்தும் அறிகுறியாகும். விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும்கூட உணர்வு உள்ளது, ஆனால் அவை மனிதனைக் காட்டிலும் மந்தமான உணர்வினைக் கொண்டுள்ளன. கல், பிணம் முதலியவற்றிற்கு உணர்வு இல்லை. எனவே, உணர்வின் ஆதிமூலம் என்ன என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக, ஒரு காரை எடுத்துக்கொள்வோம். கார் என்பது மற்ற உயிர்களைப் போன்று பிறப்பதில்லை, மற்றொரு கார் சேதமடையும்போது வருந்துவதில்லை. அந்த இயந்திரத்திற்கு உயிரையும் உணர்ச்சிகளையும் வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது. விஞ்ஞானிகள் இந்த உடல் இரசாயனக் கலவைகளின் உருமாற்றமே என்பதை நிரூபிப்பதற்கு எவ்வளவு முயன்றாலும், அவர்களால் உயிரை உருவாக்கவே முடியாது. நவீன விஞ்ஞானிகள் தங்களது மூளையை எவ்வளவு கசக்கினாலும், உயிரின் அதிசயங்களை அவர்களால் விளக்க முடியுமா?

இரண்டு இயந்திரங்கள் ஒன்றுசேர்ந்து மற்றோர் இயந்திரத்தை உருவாக்க முடியுமா?

விஞ்ஞானிகளின் தோல்வி

மனிதனில் நிகழும் அதிசய உணர்ச்சிகள் அனைத்தும் வெறும் இரசாயன மூளையின் செயல்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே, மனிதனைவிட சிறப்பாக சிந்திக்கும் இயந்திரத்தை எதிர்காலத்தில் உருவாக்குவோம் என்று கூறுகின்றனர். கணினி ஆராய்ச்சி தலைவரான, மார்வின் மின்ஸ்கி நம்பிக்கையுடன் கூறுவது என்னவெனில், “மனிதனைப் போன்றே அறிவுடைய இயந்திரத்தை நாங்கள் விரைவில் உருவாக்குவோம்… இந்த இயந்திரத்தால் கல்வி கற்க முடியும்… சில மாதங்களுக்குள் இது மேதையாகிவிடும்… சில மாதங்களுக்கு பிறகு இதன் சக்தி எல்லையற்றதாகி விடும்.” மின்ஸ்கி மேலும் கூறுகின்றார், “நாம் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால், அது நம்மை தனது செல்லப் பிராணிகளாக வைத்துக்கொள்ளும்.”

செயற்கை அறிவைக் கொண்ட ஓர் இயந்திரத்தை மனிதனுக்கு மாற்றாக வடிவமைக்கலாம் என்பது அவர்களுடைய நம்பிக்கை. “2000 ஆம் வருடத்தில் மக்கள் ரோபோக்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும்,” என்பதை மின்சோட்டா பல்கலைக்கழக நிர்வாகியாக இருந்த பேராசிரியர் அர்துர் ஹர்கின்ஸ் தனது வாழ்நாளின் இலக்காக வைத்திருந்தார். ஆனால் இது வரை அந்த மாதிரி எதுவும் நடக்கவே இல்லை. 50 வருடத்திற்கு முன்பாக இருந்த பாடப் புத்தகங்களில், “விரைவில் ரோபோ இதைச் செய்யப் போகிறது, அதைச் செய்யப் போகிறது,” என பல கட்டுக்கதைகள் இருந்தன. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

விஞ்ஞானிகளுடைய இத்தகு குழப்பங்கள் அனைத்திற்கும் காரணம், உடல், உணர்ச்சி, உயிர் முதலியவை குறித்து அவர்களிடம் உள்ள தவறான கருத்தே. உடலில் தோன்றும் எல்லா உணர்ச்சிகளும் இரசாயனக் கலவையே என்று அவர்கள் நினைப்பதால், அந்த உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தங்களது ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கின்றனர். அந்த நினைப்பினாலேயே அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மீண்டும்மீண்டும் தோல்வியடைகின்றனர்.

ஜடத்திற்கு அப்பாற்பட்ட உணர்வு

மனிதனில் எழும் சிந்தனைகள், உணர்ச்சி முதலியவை இரசாயனத்தினால் தோன்றுபவை அல்ல. உடலினுள் இருக்கும் ஆத்மாவிடமிருந்து வருபவை. இந்த அடிப்படை உண்மையை மனித சமுதாயம் உணர வேண்டும், விஞ்ஞானிகளும் உணர வேண்டும். ஓர் உயிர் என்பது மற்றோர் உயிரிடமிருந்து மட்டுமே உருவாக முடியும், ஜடப் பொருளிலிருந்து உருவாக முடியாது.

உடலினுள் உயிர் இருப்பதால்தான், அங்கே உணர்ச்சிகள் உள்ளன, சிந்தனைகள் எழுகின்றன, இன்பதுன்பங்கள் உணரப்படுகின்றன, வளர்ச்சி ஏற்படுகிறது. உயிர் இல்லாத உடலில் இவை எதுவும் ஏற்படுவதில்லை. இயந்திரங்கள் ஒருபோதும் வளர்வதில்லை, இரண்டு இயந்திரங்கள் ஒன்றுசேர்ந்து மற்றோர் இயந்திரத்தை உருவாக்க முடியுமா? நிச்சயம் இயலாது.

ரோபோக்களை மனிதனைப் போல செயல்படுவதற்கு வடிவமைத்தாலும்கூட, உயிருள்ள மனிதர்களின் உணர்வுகள், கிளர்ச்சிகள், எண்ணங்கள் முதலியவை  அங்கு இருக்க முடியாது.

உடல் என்னும் இயந்திரம்

மனிதனின் உடல் ஓர் இயந்திரத்தைப் போன்று செயல்படுவது உண்மையே. ஆனால் அந்த இயந்திரத்தை இயக்குபவர் அந்த உடலினுள் இல்லாவிடில், இயந்திரம் இயங்காது. உடல் என்னும் வாகனத்தில் ஆத்மா ஒரு பயணியாக வீற்றுள்ளான். மேலும், அதே உடலினுள் முழுமுதற் கடவுள் அவனை வழிநடத்துவதற்காக உடன் அமர்ந்துள்ளார்.

பகவத் கீதை (18.61) இதனைப் பின்வருமாறு விளக்குகிறது:

ஈஷ்வர: ஸர்வ பூதானாம்

ஹ்ருத்தேஷே ’ர்ஜுன திஷ்டதி

ப்ராமயன் ஸர்வ பூதானி

யந்த்ராரூடானி மாயயா

“அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும், அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற் கடவுளே வழிநடத்துகின்றார்.”

இந்த உடல் ஒரு மிகச்சிறந்த இயந்திரம். ஆயினும், ஆத்மா இல்லாமல் இதனால் தன்னிச்சையாக இயங்க முடியாது. ஆத்மா என்கின்ற ஓட்டுநரே காரைப் போன்ற இந்த இயந்திரத்தை இயக்குகின்றார். இவ்விதமாக ஆன்மீக சக்தியே இந்த உலகை இயக்குகின்றது, இல்லையேல் ஜடமானது செயலற்றதாகி விடும். ஜடத்தினால் தன்னிச்சையாக செயல்பட முடியாது, ஆன்மீகப் பொறியான ஆத்மா ஓட்டுநரின் இருப்பிடத்தில் அமர்ந்துள்ளது. ஆத்மாவுடன் பரமாத்மாவும் அமர்ந்துள்ளார், அவரே அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஓட்டுநருக்கு, செய்ய வேண்டிய செயல்கள், செய்யக்கூடாத செயல்கள் முதலியவற்றை வழிநடத்துகிறார். மறதி, அறிவு, நினைவு என பலவற்றை வழிநடத்துபவராக அவரே இருக்கின்றார். (பகவத் கீதை 15.15)

இயந்திரத்தின் உணர்ச்சிகள்

ரோபோக்களை மனிதனைப் போல செயல்படுவதற்கு வடிவமைத்தாலும்கூட, உயிருள்ள மனிதர்களின் உணர்வுகள், கிளர்ச்சிகள், எண்ணங்கள் முதலியவை அங்கு இருக்க முடியாது. உயிருள்ளவை சுய உணர்வுகளைக் கொண்டவை. ஒரு பூனைக்குட்டி சாலையில் எதிர்பாராத விதமாக அடிபட்டு இறந்துவிட்டால், தனது குழந்தையின் இழப்பை தாங்காமல் தாய் பூனை வேதனையால் அழுது துடிக்கின்றது. இஃது இயந்திரத்திற்கு சாத்தியமா?

திருகாணி தயாரிக்கும் இயந்திரம் நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான திருகாணிகளை தயாரிக்கின்றது. ஒரு திருகாணியை எடுத்து அதனை நாம் நசுக்கினால், அதனைத் தயாரித்த இயந்திரம் வருத்தப்படுமா? அந்த இயந்திரத்தை ஒரு ரோபோவைப் போன்று அக்கம்பக்கம் நிகழ்வதைக் கண்டு உணர்ச்சிவயப்பட வேண்டும் என்று நாம் வடிவமைத்தால்கூட, நிச்சயமாக பூனை வருந்தியதுபோல இயந்திரம் துளியளவும் வருத்தப்படாது. புரோகிராமிங் மூலம் அதனை அழச் செய்யலாம், ஆனால் அங்கே ஒருபோதும் உண்மையான உணர்ச்சி இருக்க முடியாது.

இயந்திரங்களை உணர்ச்சியுடையதாக இருப்பதைப் போன்று காண்பிப்பது திரைப்படத்திற்கு ஒத்துவரலாம், குழந்தைகள் அல்லது குழந்தைத்தனம் கொண்ட அறிவிலிகள் அவற்றால் கவரப்படலாம். உண்மையான அறிவுடையோர் இயந்திரத்திற்கு ஒருபோதும் உணர்ச்சிகள் சாத்தியமல்ல என்பதை அறிந்திருப்பர்.

உடலின் அமைப்பைப் பற்றி அறிந்திருப்பது இன்றைய விஞ்ஞானிகளின் திறனாகும். இயந்திரத்தின் அதிகப்படியான செயல்பாடுகளைப் பற்றியும் அவர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். இருப்பினும் ரோபோக்கள், செயற்கையான இரசாயன வாழ்க்கை என இரண்டிலுமே ஏதோ ஒன்று இல்லாதிருப்பதை அவர்களால் உணர முடிகிறது. ஆனால் அஃது என்ன என்பதை உணர முடிவதில்லை. அதுவே ஜீவன், அல்லது ஆத்மா எனப்படும் உயிர்சக்தியாகும். இதுவே உடலை வாழ வைக்கும் அற்புத சக்தி.

ஆனந்தமயமான வாழ்வு

அந்த ஆத்மாவைப் பற்றி அறிந்துகொள்வதே வாழ்வின் நோக்கமாகும். ஊக்கம், உற்சாகம், வருத்தம், கவலை முதலிய உணர்ச்சிகளை இயந்திரத்தினால் வெளிப்படுத்த முடியாது என்பதால், ஆத்மாவிடமிருந்தே இவை வெளிப்படுகின்றன என்று ஏற்பது புத்திசாலித்தனமாகும். நாம் அனைவரும் ஆத்மாக்கள், ஆன்மீகமானவர்கள்; இருப்பினும், இயந்திரம்போன்ற இந்த உடலுக்குள் அடைபட்டுள்ளோம்.

ஒவ்வோர் உடலும் ஓர் இயந்திரத்தைப் போன்றதே. மொத்தம் 84 இலட்சம் வகையான இயந்திரங்கள் இருப்பதாக சாஸ்திரங்களிலிருந்து அறிகிறோம். இதில் மனித இயந்திரம் இதர இயந்திரங்களிலிருந்து வேறுபட்டது. இந்த இயந்திரத்தில் மற்ற இயந்திரங்களைக் காட்டிலும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் முழுமையாக வெளிப்படுத்த முடிகிறது. எனவே, மனித வாழ்க்கையை நமது உண்மையான அடையாளத்தை (நாம் ஆத்மா என்பதை) உணருவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

உடல் தொடர்ந்து மாறிக் கொண்டே உள்ளது, உடலினுள் உள்ள ஆத்மா ஒருபோதும் மாறுவதில்லை. மரணத்தின்போதும் அது மாறுவதில்லை, வேறு உடலுக்குச் செல்கிறது. இதுபோல 84 இலட்சம் வகையான இயந்திரங்களில் நாம் அனைவரும் பல கோடி முறை பிறந்து இறந்து வந்துள்ளோம். தற்போது இந்தப் பிறவி சக்கரத்திலிருந்து விடுபட முயல வேண்டும். ஆத்மா இந்த இயந்திரத்திற்குள் சிறைபட்டு வாழ வேண்டியவன் அல்லன். இவன் பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணருடனான நித்தியமான உறவில் ஆனந்தமாக இருக்க வேண்டியவன். அந்த உறவை பக்தித் தொண்டின் மூலமாகப் புதுப்பித்தால், இடையறாது வரும் துயரங்களிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் ஆனந்தமயமான அமிர்தத்தைச் சுவைக்க முடியும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives