அன்னை சீதையைக் கடத்திச் சென்ற இராவணன், சீதைக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் என்பதும், தன்னை ஏற்காவிடில் கண்டம் துண்டமாக வெட்டி காலை சிற்றுண்டி தயாரித்து விடுவேன் என்று மிரட்டினான் என்பதும் உலகம் அறிந்த உண்மை. இராவணன் சீதையை பலவந்தமாக அனுபவிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இதனால் சில முட்டாள்கள் இராவணனை உத்தமன் என்றுகூட போற்றுகின்றனர். இராவணனுக்கு ஏதோ சாபம் இருந்தது என்பதை சிலர் கேட்டிருக்கலாம். அஃது என்ன சாபம், எவ்வாறு யாரிடமிருந்து வந்தது என்பதே இங்குள்ள தெரியாத துணுக்கு.

 

ஒருமுறை இராவணன் கைலாய மலையில் தங்கி தேவ லோகத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமாக இருந்த சமயத்தில், அப்சர பெண்களில் ஒருத்தியான ரம்பை அவனுடைய கண்களில் பட்டாள். இராவணன் ரம்பையினால் கவரப்பட்டு அவளை அனுபவிப்பதற்காக பேச்சு கொடுத்தான். இராவணனை தனது மாமனார் என்று அழைத்த ரம்பை, அவனுடைய ஆசைக்கு இணங்க மறுத்தாள். (குபேரனும் இராவணனும் சகோதரர்கள், குபேரனின் மகனான நளகூவரனும் ரம்பையும் உறவில் இருந்ததால், இராவணன் ரம்பைக்கு மாமனார் முறையாகும்.) ஆயினும், அப்சரப் பெண்களுக்கு அதுபோன்ற விதிகள் ஏதுமில்லை என்று கூறி, ரம்பையை பலாத்காரம் செய்தான் இராவணன்.

அதன் பின்னர், அச்சமும் நடுக்கமும் கொண்ட ரம்பை, நளகூவரனிடம் சென்று அவனது பாதங்களில் விழுந்து மன்னிப்பை வேண்டினாள். தனது தியானத்தினால் இராவணனின் பலாத்காரச் செயலை அறிந்து கொண்ட நளகூவரன், உடனடியாக இராவணனுக்கு பின்வருமாறு சாபமிட்டான். “இராவணன் இனிமேல் விருப்பமில்லாத பெண்ணை பலாத்காரம் செய்வானேயானால், அவனுடைய தலை ஏழு துண்டுகளாக போகக் கடவது.” நளகூவரனின் சாபத்தைக் கேட்டு எல்லா தேவர்களும் குடும்பப் பெண்களும் மகிழ்ச்சியுற்றனர். இராவணனோ உரோமச் சிலிர்ப்பை உண்டாக்கும் பயங்கரமான சாபத்தைக் கேட்ட பின்னர், தன்னை விரும்பாத பெண்களிடம் பலவந்தமாக உறவுகொள்வதை அறவே தவிர்த்தான்.

ஆதாரம்: வால்மீகி இராமாயணம், உத்தர காண்டம், ஸர்க்கம் 26

பின்குறிப்பு: அதே நளகூவரனுடன் நிகழ்ந்த கிருஷ்ண லீலையை பக்தர்கள் தினம்தினம் நினைத்துப் பார்க்கும் இந்த தாமோதர மாதத்தில் (13 நவம்பரில் முடிகிறது), நளகூவரன் இராவணனுக்கு வழங்கிய சாபமும் ஒரு நினைவாக இருக்கட்டுமே!