கிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ்

சில மாதங்களுக்கு முன்பு, ஓர் இரயில் வண்டியில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் பகவத் கீதை உண்மையுருவில் நூலிலுள்ள சித்திரங்களை மிகுந்த ஆர்வத்துடன் கூர்மையாக கவனித்து, அது சம்பந்தமாக பல்வேறு கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்; நானும் அவை அனைத்திற்கும் பதிலளித்துக் கொண்டிருந்தேன். இறுதியில், அப்புத்தகத்தை வாங்கிப் படிக்கும்படி நான் அவரிடம் வேண்டுகையில், “நான் ஒரு முஸ்லிம்” என்று அவர் பதிலளித்தார். உடனே, நான் அவரிடம், “கிருஷ்ணர் இந்து கடவுள் அல்ல,” என்று கூறி, முழு வாக்கியத்தை முடிப்பதற்குள், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் மிகவும் ஆவேசமடைந்தார். அவர் என்னிடம், “நீ இப்புத்தகத்தை விற்பதற்காக என்ன வேண்டுமானாலும் கூறுவாயா? கிருஷ்ணர் இந்து கடவுளல்ல என்று பகவத் கீதையில் எங்கே சொல்லப்பட்டுள்ளது? காட்டு பார்க்கலாம்,” என்று உறத்த குரலில் சவால் விட்டார். அமர்ந்திருந்த வேறு சிலரும் அதே கேள்வியைக் கேட்க, அக்கம் பக்கம் கூடியிருந்த அனைவரின் கண்களும் காதுகளும் என்னைக் குறி பார்த்தன. நான் அவர்களுக்கு அளித்த பதில் என்ன? தொடர்ந்து படியுங்கள்.

மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை

பாரத நாட்டில் வாழ்ந்துவரும் மக்கள் தொன்றுதொட்டு பின்பற்றிவரும் பண்பாடு வேதப் பண்பாடாகும். வேதப் பண்பாட்டில் வாழ்ந்த மக்கள், தங்களது தினசரி பௌதிக, ஆன்மீக செயல்களை வேதங்கள், உபநிஷத்துகள், வேதங்களைச் சார்ந்த இலக்கியங்கள் இராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றில் உள்ள கட்டளைகளை அடிப்படையாக வைத்து பின்பற்றினர். வேதங்கள் எவ்வாறு பழமையானதோ, அதுபோல இந்த பண்பாடும் மிகவும் பழமையானதாகும்; இதன் தோற்றம் காலத்திற்கு அப்பாற்பட்டதாகும். இந்து எனும் சொல், வேத அகராதியிலோ வேதப் பண்பாட்டிலோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது முகமதியர் இந்தியாவை ஆண்ட காலத்தில், அதாவது சமீப காலத்தில் நுழைக்கப்பட்ட சொல்லாகும். சிந்து நதியின் மறுபுறத்தில் வாழும் மக்களை இந்து என்று அவர்கள் பேதம் செய்தனர்.

உண்மையில், வேதப் பண்பாடு உலகம் முழுவதும் விரிவாகப் பரவியிருந்தது, அது மட்டுமே பண்பாடாக இருந்து வந்தது. வர்ணாஷ்ரம அமைப்பின்படி, பலதரப்பட்ட மக்களும் தத்தமது ஆன்மீக முன்னேற்றத்தை மையமாக கொண்டு, தங்களது குணத்திற்கும் கர்மத்திற்க்கும் ஏற்றாற்போல, வாழ்வின் விதிமுறைகளைப் பின்பற்றி வந்தனர். இந்தியாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் அனைவரும் வேதப் பண்பாட்டினைப் பின்பற்றினார்களே தவிர, இன்று அழைக்கப்படும் இந்து, முஸ்லிம், கிருஸ்துவம் போன்ற மதங்களைச் சார்ந்தவர்களல்ல. இவ்வாறாக, நம் அனைவரின் முன்னோர்கள், எந்த நாட்டில் பிறந்தவர்களாக இருந்தாலும், எந்தவொரு மதப் பாகுபாடும் இல்லாமல் வாழ்ந்தனர் என்னும்பட்சத்தில், நாம் மட்டும் ஏன் மதத்தின் அடிப்படையில் நம்மை பேதப்படுத்த வேண்டும்?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நேரடியாக வந்தபோதும் சரி, அவர் தனது பிரதிநிதிகளை மகன்களாக, ஆச்சாரியர்களாக, அல்லது இறைதூதர்களாக அனுப்பியபோதும் சரி, மதம் என்று எதுவும் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மதங்களில் உள்ள கொள்கைகள் இறைவனால் வழங்கப்பட்டவை, ஆனால் மதங்கள் இறைவனால் வழங்கப்பட்டவை அல்ல. மதப் பாகுபாடுகள் மனிதனால் உருவாக்கிக்கொள்ளப்பட்டவை.

 

கடவுளை மதத்தினுள் கொண்டு வரலாமா?

மதங்களே மனிதனால் உருவாக்கப்பட்டவை என்னும்பட்சத்தில், கடவுளையே மதத்தினுள் கொண்டு வருவது நியாயமா? இந்து கடவுள், முஸ்லிம் கடவுள், கிருஸ்துவ கடவுள் என்று கடவுளுக்கு எவ்வாறு பேதங்கள் இருக்க முடியும்? கடவுள் என்பவர் கடவுளாகவே இருக்க வேண்டும்; ஒவ்வொருவரின் நம்பிக்கையின் அடிப்படையில், கடவுள் வேறுபடுகிறார் என்று கூறினால், அப்போது, கடவுள் என்பது வெறும் கற்பனைக் கருத்தாகவே அமைகிறது. கடவுளுக்கென்று குறிப்பிட்ட பெயர்கள் ஏதுமில்லை, ஆனால் அவரது செயல்களுக்கும் தன்மைகளுக்கும் ஏற்ப, அவருக்கு பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், கிருஷ்ணர் என்னும் பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமானதாகும். இந்த இதழில் வெளியாகியிருக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடலைப் படித்துப் பாருங்கள்.

ஆத்திகன் என்ற போர்வையில், மதச் சாயலுடன் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் உண்மையில் நாத்திகர்களாக உள்ளனர். அதாவது, அவர்களைப் பொறுத்தவரையில், கடவுள் இருக்கின்றார் என்பதை ஒரு நம்பிக்கையாகவே உள்ளது, வாஸ்தவமான உண்மையாக இருப்பதில்லை. வேறு விதமாகக் கூறினால், கடவுளை ஓர் உண்மையாக ஏற்பவன், கடவுளுக்கு மதத்தினை வழங்க மாட்டான். இந்து என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர், கிருஷ்ணரை இந்துக் கடவுள் என்று கூறி, முஸ்லிம்களுக்கு கிருஷ்ணர் கடவுள் அல்ல என்று கூறினால், அது முற்றிலும் அபத்தமானதாகும். அவ்வாறு யாரேனும் கூறினால், அவரது உள்மனதில், முஸ்லிம்களுக்கு வேறு கடவுள் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருப்பது புலப்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது நம்பிக்கைக்கு ஏற்றபடி, கடவுளை நினைத்துக்கொள்ள முடியாது. மதம் என்பது ஒருவகையான நம்பிக்கை; இன்று இந்து மதத்தில் இருப்பவன் நாளை கிருஸ்துவ மதத்தில் இருக்கலாம், இன்று கிருஸ்துவ மதத்தில் இருப்பவன் நாளை இந்து மதத்தில் இருக்கலாம்; ஆனால் அவனுடைய நம்பிக்கையின் அடிப்படையில், கடவுளின் ஸ்தானம் மாறிக் கொண்டே இருக்குமா என்ன! கடவுள் என்பவர், என்றும் எப்போதும் எல்லாருக்கும் எல்லா சூழ்நிலையிலும் கடவுளாகவே இருப்பார். அவரே கிருஷ்ணர்.

நமது அடையாளம் என்ன?

நமது அடையாளம் என்ன என்ற கேள்விக்கு, வேதங்கள், அஹம் ப்ரஹ்மாஸ்மி, “நான் ஆன்மீக ஆத்மா” என்று பதிலளிக்கின்றன. இதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்வதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த பகவத் கீதையை முறையாக ஆராய்ந்து பார்ப்போம்.

அர்ஜுனனை தனது சீடனாக ஏற்று, குரு என்ற ஸ்தானத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழங்கிய முதல் பாடம்: உடல் வேறு, ஆத்மா வேறு. உடலின் அடிப்படையில் காரணங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்த அர்ஜுனனை முட்டாள் என்று கூறிய பின்னர், கிருஷ்ணர் ஆத்மாவைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

த்வேவாஹம் ஜாது நாஸம்ந த்வம் நேமே ஜனாதிபா:

சைவ பவிஷ்யாம:ஸர்வே வயம் அத: பரம்

“நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.” (பகவத் கீதை 2.12)

ஜாயதே ம்ரியதே வா கதாசின்

நாயம் பூத்வா பவிதா வா பூய:

அஜோ நித்ய: ஷாஷ்வதோயம் புராணோ

ஹன்யதே ஹன்யமானே ஷரீரே

“ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன். உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.”

 

இந்த ஸ்லோகங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரின் உண்மையான நிலையையும் மிகத் தெளிவாக விளக்குகிறார். அதாவது, மனிதர்களாக இருந்தாலும் சரி, வேறெந்த உடலில் வாழ்ந்தாலும் சரி, உண்மையில் நாம் எவரும் ஒருபோதும் அழிவதில்லை. எல்லா காலத்திலும் நிரந்தரமாக வெவ்வேறு உடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவே நமது உண்மையான நிலை. இதனை ஸ்ரீ கிருஷ்ணர் ஓர் அருமையான உதாரணத்தைக் கொண்டு பகவத் கீதையில் (2.22) நன்கு விளக்குகிறார்:

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய

நவானி க்ருஹ்ணாதி நரோபராணி

ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்

யன்யானி ஸ்ம்யாதி நவானி தேஹி

“பழைய ஆடைகளை புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.”

எந்தவொரு ஜீவனுக்கும் அழிவே இல்லை என்னும் பட்சத்தில், மரணம் உண்டாகும்பொழுது அழிவது என்ன? மரணத்தின்போது, ஜடவுடல் மட்டும் அழிவிற்கு உட்படுவதாக கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கு மாற்றமடைவதையும் அவர் விளக்குகின்றார்.

இவ்வாறாக, ஓர் உடலை விட்டு வேறு உடலை ஆத்மா ஏற்கும்போது, அவன் தன்னுடைய தாய் தந்தையரையோ மதத்தையோ தேர்ந்தெடுப்பதில்லை. தனது பாவ புண்ணியத்திற்கு ஏற்றாற் போல, தாய்தந்தை, பிறப்பிடம், உடல் அழகு, செல்வம், அறிவு போன்றவை தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகின்றன, கர்மணா தைவ நேத்ரேண. எனவே, நாம் தனித்தன்மை வாய்ந்த ஆத்மாக்களே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தவரல்ல. இன்று ஒரு மதத்தில் இருப்பவர்கள் மறுபிறவியில் வேறு மதத்தில் பிறக்க நேரிடலாம். இதனால் உடலை அடிப்படையாகக் கொண்டு, மதத்தின் அடிப்படையில் நாம் எதையும் நிர்ணயிக்க முடியாது. ஆத்மா என்னும் உண்மையான நிலையில், நாம் அனைவரும் ஒரே மதச்தைச் சார்ந்தவர்கள், அதுவே ஸநாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றது.

ஆத்மாவிற்கு பிறப்போ இறப்போ இல்லை; உடல் மட்டுமே தொடர்ந்து மாறுகின்றது.

கிருஷ்ணரின் அடையாளம் என்ன?

பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில், ஜட இயற்கை, ஜீவாத்மாக்கள் ஆகிய இரண்டையும் தன்னுடைய இரண்டு வெவ்வேறு சக்திகள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்; மேலும், இவ்விரண்டு சக்திகளுக்கும் மூலம் தானே என்பதையும் அவர் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.

எனவே, கிருஷ்ணரின் அடையாளம், இவ்விரண்டு சக்திகளுக்கும் உயர்ந்தவரும் அப்பாற்பட்டவரும் இவ்விரண்டிற்கும் அதிபதியும் ஆவர். நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்து ஜீவாத்மாக்களும் அவரேயே சார்ந்துள்ளன, அவரைவிட உயர்ந்த உண்மை வேரேதுமில்லை என்று கிருஷ்ணரே கீதையில் (7.7) தெள்ளத்தெளிவாக தன்னுடைய நிலையை நமக்கு விளக்கியுள்ளார்.

அதே சமயத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா உடல்களிலும் பரமாத்மாவின் வடிவில் ஜீவாத்மாவுடன் வீற்றுள்ளார். ஜீவாத்மாவினால் தான் வசிக்கும் குறிப்பிட்ட உடலைப் பற்றி மட்டுமே உணர முடியும். ஆனால் பரமாத்மாவோ ஒரே சமயத்தில் அனைத்து ஜீவன்களின் உடல்களையும் அறிவார்; ஏனெனில், அவரது கரங்கள், கால்கள், கண்கள், முகங்கள், காதுகள் ஆகியவை எல்லா இடங்களிலும் உள்ளன.

ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா ஜீவன்களுக்கும் உற்ற நண்பர் (பகவத் கீதை 5.29) என்று கூறப்படுகிறது. எல்லா ஜீவன்களுக்கும் என்று கீதையில் கிருஷ்ணர் கூறும்போது, இந்துக்களுக்கு மட்டும் என்று நாம் ஏன் கூற வேண்டும்? கிருஷ்ணரின் கூற்றினை நாம் மறுத்து பேசலாமா?

மேலும், பகவத் கீதையில் (14.4) கிருஷ்ணர் தானே எல்லா ஜீவன்களுக்கும் விதையளிக்கும் தந்தை என தெளிவுபடுத்துகிறார், அஹம் பீஜ ப்ரத: பிதா. கிருஷ்ணர் தன்னை இந்துக்களின் தந்தை என்று கூறவில்லை, எல்லா மனிதர்களுக்கும் தந்தை என்றுகூட கூறவில்லை; எல்லா உயிர்வாழிகளுக்கும் தந்தை என்று கூறுகிறார். அதாவது, மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், நீர்வாழ்வன, தாவரங்கள் என எல்லா உயிரினங்களுக்கும் அவரே தந்தையாவார். உலகிலுள்ள அனைவருக்குமான தந்தையை இந்துக்களுக்கு மட்டும் தந்தை என்று கூறுவது தகுமா?

ஏன் கிருஷ்ணர் மட்டும்தான் கடவுளா?

கடவுள் ஒருவரா? பல்வேறு கடவுள்கள் உள்ளனரா? போன்ற கேள்விகளுக்கு விடைபெறுவதற்கு முன்பு, கடவுள் அல்லது பகவான் என்னும் சொல்லின் பொருளைப் புரிந்துகொள்வது இன்றியமையாததாகும். ஸ்ரீல வியாஸதேவரின் தந்தையான பராஸர மாமுனிவர், பகவான் என்ற சொல்லின் பொருளை பின்வருமாறு விஷ்ணு புராணத்தில் (6.5.47) விளக்கியுள்ளார்:

ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்யவீர்யஸ்ய யஷஷ: ஸ்ரீய:

ஜ்ஞானவைராக்ய்யோஷ் சைவஸன்னம் பக இதிங்கணா

“செல்வம், பலம், புகழ், அழகு, அறிவு, துறவு ஆகிய ஆறு குணங்களையும் முழுமையாக கொண்டவர், பகவான் எனப்படுகிறார்.” இந்த ஆறு குணங்களையும் முற்றிலுமாக  வெளிப்படுத்துபவர், பகவான் அல்லது புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்று சாஸ்திரங்கள், சான்றோர்கள், மற்றும் சாதுக்களால் ஏற்கப்படுகிறார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் தவிர, இந்த ஆறு குணங்களில் ஒன்றைக்கூட முழுமையாக வெளிப்படுத்தும் நபரை நாம் சரித்திரத்தில் கண்டதில்லை, இனி காணப் போவதுமில்லை. பிரம்மதேவர், சிவபெருமான் உட்பட மூவுலகங்களிலுள்ள யாரும் இந்த ஆறு குணங்களை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. எனவே, கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்று சாஸ்திரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

கிருஷ்ணருக்கும் ஜீவாத்மாவிற்கும் இடையிலான தொடர்பு

உடல் நமது உண்மையான நிலை அல்ல; ஆத்மா என்பதே நம்முடைய உண்மையான நிலையாகும். மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையளிக்கும் தந்தையாக இருப்பது கிருஷ்ணரின் உண்மையான நிலையாகும். முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே முதலாளி, மற்றவர்கள் அனைவரும் அவருடைய சேவகர்கள். ஏகல ஈஷ்வர க்ருஷ்ண ஆர ஸப ப்ருத்ய:.

நாம் அனைவரும் கிருஷ்ணரின் சேவகர்கள் என்பதை பகவத் கீதை (15.7) உறுதிப்படுத்துகின்றது. நம்முடைய நிலை கிருஷ்ணருக்கு நித்தியமாக சேவை செய்வதே என்பதை சைதன்ய மஹாபிரபுவும் தெளிவுபடுத்தியுள்ளார், ஜீவேர ஸ்வரூப ஹாய க்ருஷ்ணேர நித்ய தாஸ. அதாவது, ஜீவனின் உண்மையான நிலை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய சேவகனாக இருப்பதாகும். இவ்வாறாக, பகவான் கிருஷ்ணரின் நிலையும் ஜீவன்களின் நிலையும் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போன்று தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணருடனான நமது மறந்த உறவினை மீண்டும் புதுப்பித்து, அவருடைய திருநாடான கோலோக விருந்தாவனத்திற்குச் சென்று, அவருக்கு சேவை புரிவதே நம் அனைவரின் உண்மையான குறிக்கோளாகும். அந்த இலக்கை அடைவதற்கு, நாம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்க வேண்டும்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே.

கடவுளை தத்துவபூர்வமாக அணுகுவோம்

கடவுளை இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று மதத்தின் அடிப்படையில் அணுகாமல், தத்துவத்தின் அடிப்படையில் அணுகுதல் சாலச் சிறந்ததாகும். கிருஷ்ணர் ஒரு இந்துவோ முஸ்லீமோ கிருஸ்தவரோ கிடையாது–அவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அனைத்திற்கும் உரிமையாளர், பரம அனுபவிப்பாளர், அனைவருக்கும் உற்ற நண்பன். இக்கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும்போது, உலகம் முழுவதிலும் அமைதியும் வளமும் நிச்சயம் ஏற்படும்.

மனிதர்களுடைய கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவரான கடவுள், என்றென்றும் அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளாகவே உள்ளார். அந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணருக்கு, மதச் சாயம் பூசி, அவரை இந்துக் கடவுள் என்று கூறி, குறுகிய வட்டத்திற்குள் வைக்க வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

2017-01-25T10:42:35+00:00August, 2014|ஞான வாள்|0 Comments

About the Author:

mm
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.

Leave A Comment