வழங்கியவர்:  திரு. ஜீவன கௌர ஹரி தாஸ்

ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்திற்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தில், பகவான் விஷ்ணு கூர்மரின் வடிவில் அருள்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் அழகான குன்றினைப் போல் காட்சியளித்ததால், இவ்விடம் ஸ்வேதாசலம் என்றும் போற்றப்படுகிறது. ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வாசாரியர் முதலிய ஆச்சாரியர்களும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளதால் கூர்ம க்ஷேத்திரம் வைஷ்ணவர்களின் மத்தியில் மிகச்சிறந்த தீர்த்த ஸ்தலமாக விளங்குகிறது.

கூர்ம அவதாரம்

அமிர்தம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும், மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலையின் கனம் காரணமாக அது பாற்கடலுக்குள் மூழ்குவதைக் கண்டு, தேவர்களும் அசுரர்களும் செய்வதறியாது திகைத்தனர். அத்தருணத்தில் ஆமை அவதாரமெடுத்த பகவான் பாற்கடலில் நீந்திய வண்ணம் மந்தார மலையை தம் முதுகின் மேல் தாங்கிக் கொண்டார்.

பகவான் தன்வந்திரி அமிர்த கலசத்துடன் தோன்றியபோது, அசுரர்கள் அவரிடமிருந்து அதனைப் பறித்துக் கொண்டு ஓடினர். பகவான் அப்போது மோகினி அவதாரம் எடுத்து அவர்களை மயக்கி அமிர்தத்தை தேவர்களுக்கு விநியோகித்தார். மந்தார மலையின் உச்சியில் விஷ்ணுவும் இருந்தார். இவ்வாறாக, கூர்மர், தன்வந்திரி, மோஹினி, விஷ்ணு என பகவானின் நான்கு ரூபங்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்ற லீலையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களின் பக்திக்கு கூர்ம தேவர் அடித்தளமாகவும் உறுதுணையாகவும் விளங்குவதால், கூர்ம அவதாரத்தை வழிபடுபவர்களின் பக்தி ஸ்திரமாக அமையப் பெறும் என வைஷ்ணவ ஆச்சாரியர்கள் கூறுகின்றனர்.

கோயில் வரலாறு

கூர்ம க்ஷேத்திரத்தில் பகவான் கூர்ம தேவர் சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்டதன் பின்னணியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இருக்கின்றது. முன்னொரு காலத்தில் ஸ்வேதாசல பர்வதம் என்னும் மலையின் அருகே ஸ்வேத சக்ரவர்த்தி என்னும் மன்னர் வசித்து வந்தார். அவரின் மனைவியான விஷ்ணுபிரியா பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தாள். ஒருமுறை ஏகாதசி நாளன்று அவள் தனது மனதை ஒருநிலைப்படுத்தி விஷ்ணுவை தியானித்துக் கொண்டிருந்தாள். அந்நாளில் சக்ரவர்த்தி ஸ்வேதர் தமது புலனின்ப விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்ள விரும்பி மனைவியை அணுகினார். ஆயினும், விஷ்ணுபிரியா தனது புனிதமான ஏகாதசி விரதத்தினைக் காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவை மனமுருகி வேண்டினாள்.

பகவான் விஷ்ணுவினால் அப்போது அங்கே உருவாக்கப்பட்ட நீரோடை அரசரை அரசியிடமிருந்து பிரித்தது. நீரோடை வெள்ளமாக மாற அரசர் ஸ்வேத மலைப் பகுதிக்குச் சென்றார். தவறை உணர்ந்த மன்னர் நாரத முனிவரின் கருணையினால் கூர்ம நாராயண மந்திரத்தைப் பெற்று கடுந்தவம் புரிந்தார், கூர்மதேவரின் தரிசனத்தைப் பெற்றார். ஸ்வேதரின் பக்தியில் பெரிதும் அகமகிழ்ந்த கூர்மதேவர் தமது சுதர்சன சக்கரத்தின் மூலம் ஓர் அற்புத குண்டத்தை ஏற்படுத்தினார். மன்னரின் விருப்பப்படி பகவான் அங்கே கூர்ம உருவில் சுயம்புவாகத் தோன்றினார். பிறகு பிரம்மதேவரின் தலைமையில் எல்லா தேவர்களும் ஒன்றுகூடி ஸ்ரீ கூர்மரை இத்திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்தனர். ஸ்வேத புஷ்கரணி என்றழைக்கப்படும் இந்த அற்புத குண்டமானது இன்றும் கோயிலின் முன் அழகாகக் காட்சியளிக்கிறது.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும்,  ஆமையை அச்சாகவும் பயன்படுத்துதல்.

கோயில் அமைப்பு

நாங்கள் பகவத் தரிசன குழுவுடன் இக்கோயிலை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றோம். நாம ஸங்கீர்த்தனம் செய்தவாறு கோயிலின் நுழைவாயிலை அணுகியபோது கோயிலின் எழில்மிகு தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. கோயிலின் முன்புறத்திலும் பின்புறத்திலும் கொடிமரம் அமைந்துள்ளது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். கிருஷ்ண கர்ணாம்ருதத்தை இயற்றியவரான பில்வமங்கள தாகூர் கோயிலினுள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, அவர் மேற்கு புற மதில்சுவரின் அருகே பணிவுடனும் பக்தியுடனும் பிரார்த்தனை செய்ய, கிழக்கு நோக்கி இருந்த கூர்ம தேவர், பில்வமங்கள தாகூர் நின்றிருந்த மேற்கு திசை நோக்கி தரிசனம் அளித்தார். இக்காரணத்தினால் இரண்டு கொடிமரங்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன.

கோயிலின் இடதுபுறத்தில் பில்வமங்கள தாகூருக்கு ஒரு சிறிய சந்நிதியும் அமைந்துள்ளது. வைகுண்டவாசியான பில்வமங்கள தாகூர் இங்கே நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். ஐந்து நிலை கொண்ட கோபுரத்துடன் அழகாக காட்சியளிக்கும் கூர்ம தேவரின் கோயிலின் நுழைவாயில் கிழக்கு நோக்கியுள்ளது. இருநூற்றுபத்து தூண்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோயிலின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 1,800 வருடத்திற்கு மேல் பழமையானதாகும். சுயம்பு மூர்த்தியான கூர்ம தேவரை மிக அருகில் சென்று அனைவரும் தரிசிக்கலாம் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

 

இராமானுஜரின் வருகை

இராமானுஜர் கூர்ம க்ஷேத்திரத்திற்கு வருகை புரிந்ததுகுறித்து நவத்வீப தாம மஹாத்மியம், பரிக்ரமா காண்டம், அத்தியாயம் பதினைந்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இராமானுஜர் ஜகந்நாத புரிக்கு வருகை புரிந்தபோது, ஒருநாள் ஜகந்நாதரின் விருப்பத்தால் கூர்ம க்ஷேத்திரத்தை அடைந்தார். கூர்ம விக்ரஹத்தை முதலில் சிவலிங்கம் என்று கருதி இராமானுஜர் உபவாசம் இருந்தார். பின்னர், விக்ரஹத்திற்கு தலை, வால், சிறுகால்கள் இருப்பதைக் கண்டவுடன் அவர் கூர்ம தேவர் என்பதை அறிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, அவர் ஸ்ரீதேவி, பூதேவி விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்து வழிபாட்டினைத் தொடக்கி வைத்தார்.

மத்வாசாரியர் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்தபோது கூர்ம தேவருக்கு அருகில் சீதா இராமரின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார்.

பகவான் இராமரின் புதல்வர்களான லவரும் குசரும் இத்திருத்தலத்திற்கு வந்துள்ளனர். பகவான் பலராமரும் வந்துள்ளார்.

இடது: கோயிலின் பின்புறத்தில் காணப்படும் இரண்டாவது கொடிமரம்.
வலது: 210 தூண்களுடன கம்பீரமாகக் காட்சியளிக்கும் கோயிலின் கட்டமைப்பு

சைதன்ய மஹாபிரபுவின் வருகை

சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய பயணத்தின்போது 1512ஆம் ஆண்டு கூர்ம க்ஷேத்திரத்திற்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சைதன்ய மஹாபிரபுவின் கூர்ம க்ஷேத்திர வருகையை நினைவூட்டும் வகையில் ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் 1930ஆம் ஆண்டு சைதன்ய மஹாபிரபுவின் திருப்பாத சின்னத்தை இவ்விடத்தில் நிறுவினார்.

சைதன்ய மஹாபிரபு இவ்விடத்தில் கிருஷ்ணரின் மீதான பரவசத்தில் ஆடிப் பாடி நாம ஸங்கீர்த்தனத்தில் முழுமையாக ஆழ்ந்திருந்தார். சைதன்ய மஹாபிரபுவைப் பார்த்த மாத்திரத்தில் அனைவரும் பக்தர்களாக மாறினர். மஹாபிரபுவின் திருமேனியைக் கண்டவர்கள் அதிசயித்துப் போயினர். அதுமட்டுமின்றி, கிருஷ்ண பிரேமையில் மூழ்கியிருந்த மக்கள் தங்களது கிராமத்திற்குச் சென்றபோது, அவர்களைக் கண்ட மொத்த கிராமத்தினர்களும் கிருஷ்ண பிரேமையில் மூழ்கினர். அந்த கிராமத்தில் இருக்கும் யாராவது வேறு கிராமத்திற்குச் சென்றால் அங்குள்ளவர்களும் கிருஷ்ண பிரேமையில் திளைத்தனர். அந்தளவிற்கு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது பக்தி சக்தியின் மூலமாக மற்றவர்களுக்கு சக்தியூட்டி எண்ணற்ற லீலைகளை வெளிப்படுத்தினார்.

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை சைதன்ய மஹாபிரபு இவ்விடத்திலும் பிரச்சாரம் செய்தார், பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த மஹா மந்திரத்தை அனைத்து ஜீவராசிகளுக்கும் விநியோகிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

கூர்ம பிராமணரின் வேண்டுகோள்

கூர்ம க்ஷேத்திரத்தின் ஒரு கிராமத்திற்கு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வருகை புரிந்தபோது, கூர்ம பிராமணர் என்பவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைத் தமது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கூர்ம பிராமணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் திருப்பாதத்தை நீரால் கழுவி அந்நீரை குடும்பத்தினருடன் பருகினார். பிறகு, அவர் சைதன்ய மஹாபிரபுவிடம் வேண்டினார், அன்புள்ள பகவானே, எனக்கு கருணை புரிந்து உங்களுடன் வருவதற்கு அனுமதியளியுங்கள். என்னால் பௌதிகத் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.”

ஆயினும், சைதன்ய மஹாபிரபு அவரை இல்லறத்தில் இருந்தபடியே கிருஷ்ண நாமத்தை உச்சரிக்கும்படி அறிவுறுத்தினார். இல்லற வாழ்வைத் துறப்பதில் பெரும் ஆர்வம் காட்டாமல், புனித நாமத்தை உச்சரித்து ஒவ்வொருவரும் தங்களது இருப்பைத் தூய்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்தினார். சைதன்ய மஹாபிரபுவின் இந்த ஆணையானது கலி யுக மக்களுக்கான ஆழமான உபதேசமாகும்.

கூர்ம க்ஷேத்திரத்தில் சுயம்பு மூர்த்தியாகக் காணப்படும் பகவான் கூர்ம தேவர்

குருவாகச் செயல்பட வேண்டும்

கௌடீய வைஷ்ணவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான பின்வரும் ஸ்லோகத்தினை சைதன்ய மஹாபிரபு முதன்முதலாக கூர்ம க்ஷேத்திரத்தில் உரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாரே தேக தாரே கஹ க்ரிஷ்ண-உபதேஷ

ஆமார ஆஜ்ஞாய குரு ஹஞா தார ஏஇ தேஷ

யாரையெல்லாம் சந்திக்கிறீர்களோ அவர்கள் அனைவருக்கும் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய கிருஷ்ண உபதேசங்களை வழங்குங்கள். இவ்வாறாக, எனது ஆணையின் கீழ் ஆன்மீக குருவாகச் செயல்பட்டு இந்த பூமியில் இருக்கும் அனைவரையும் பௌதிக பந்தத்திலிருந்து விடுவியுங்கள்.” (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை-7.128)

மேலும், இந்த உபதேசத்தைப் பின்பற்றினால், இல்லத்தின் பௌதிக வாழ்க்கை ஆன்மீக முன்னேற்றத் திற்குத் தடையாக இருக்காது என்றும், தனது சங்கம் ஒருபோதும் இழக்கப்படாது என்றும் சைதன்ய மஹாபிரபு கூர்ம பிராமணருக்கு அறிவுறுத்தினார்.

வாஸுதேவ பிராமணரின் அடக்கம்

கூர்ம க்ஷேத்திர கிராமத்தில் வசித்த வாஸுதேவர் என்ற வைஷ்ணவ பிராமணர் தொழுநோயினால் அவதிபட்டுக் கொண்டிருந்தார். அவர் சைதன்ய மஹாபிரபுவை தரிசிக்க பெரும் ஆவலோடு கூர்ம பிராமணரின் இல்லத்திற்குச் சென்றார். ஆனால் அவர் வருவதற்குச் சற்று முன்னர்தான் சைதன்ய மஹாபிரபு அவ்விடத்தை விட்டுச் சென்றிருந்தார். இச்செய்தியைக் கேட்ட வாஸுதேவ பிராமணர் மயங்கி விழுந்தார். வாஸுதேவ பிராமணரின் ஏக்கத்தை உணர்ந்த பரமாத்மாவான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மீண்டும் அவ்விடத்திற்கு திரும்பி வந்தார்.

சைதன்ய மஹாபிரபு வாஸுதேவ பிராமணரைத் தழுவியபோது அவரின் தொழுநோயும் எல்லாத் துயரங்களும் உடனடியாக மறைந்து, உடல் அழகாக பிரகாசித்தது. அடக்கத்திற்கும் பணிவிற்கும் நற்பெயர் பெற்ற வாஸுதேவர் சைதன்ய மஹாபிரபுவிடம் வினவினார், நீங்கள் என்னைத் தழுவிக் கொண்டதால் நான் உங்களின் கருணைக்குப் பாத்திரமாகி விட்டேன் என்கிற தேவையில்லாத பெருமை என்னைத் தொற்றிக் கொண்டுள்ளது. இதனைப் போக்குவது எவ்வாறு?” அதற்கு சைதன்ய மஹாபிரபு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை இடைவிடாது உச்சரித்து, கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்யுங்கள்,” என்று பதிலளித்தார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தொழுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த வாஸுதேவரை விடுவித்தல்.

கூர்ம க்ஷேத்திர பூமி

கூர்ம க்ஷேத்திரத்திலிருந்த கூர்ம பிராமணர், வாஸுதேவ பிராமணர் ஆகிய இருவரின் மூலமாக உலக மக்கள் அனைவரும் கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆணையிட்டுள்ளார். இதுவே நாம் மற்ற ஜீவராசிகளிடம் செலுத்தும் உண்மையான கருணையாகும். இராமானுஜர், மத்வாசாரியர், சைதன்ய மஹாபிரபு என பலரும் வருகை புரிந்துள்ள கூர்ம க்ஷேத்திரத்திற்கு செல்பவர்களின் பக்தி ஸ்திரமாக அமையும் என்பது உறுதி.