தூய பக்தி

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

பாகம் இரண்டு

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

பக்தி என்றால் அன்பு என்றும் எவராலும் எல்லாரிடமும் அன்பு செலுத்த முடியாது என்றும் உண்மையான அன்பு கிருஷ்ணர் என்னும் நபருக்கு உரியது என்பதையும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சி…

 

இணக்கமான அன்பு

இருப்பவை அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழும் கிருஷ்ணரிடம் நாம் அன்பு செலுத்தினால், அப்போது மற்ற அனைவரையும் நம்மால் நேசிக்க இயலும். அவரிடம் அன்பு செலுத்தும்போது வாழ்வானது ஒழுங்காகவும் இணக்கமானதாகவும் இருக்கும்.

கிருஷ்ணரே நமது அன்பிற்கான முறையான பாத்திரம் என்பதற்கு மரத்தின் வேருக்கு நீர் ஊற்றுவதை ஓர் உதாரணமாக வழங்கலாம். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றுவதன் மூலமாக, அதன் கிளைகள், சிறுகிளைகள், இலைகள், பூக்கள், பழங்கள் என அனைத்தும் ஊட்டமளிக்கப்படுகின்றன. மாறாக, கிளைகள், சிறுகிளைகள், இலைகள், பூக்கள், பழங்கள் என அனைத்திற்கும் தனித்தனியே நீர் ஊற்றினால், எதுவும் ஊட்டம் பெறாது. அதுபோலவே, வயிற்றுக்குத்தான் உணவளிக்க வேண்டும்; மாறாக, எனது கேட்கும் திறன் குறைந்து கொண்டே வருவதால், நான் எனது காதிற்கு உணவளித்து அதற்கு ஊட்டமளிக்கிறேன் என்றால், அது வேலைக்கு ஆகாது. அனைத்தையும் முறையாகச் செய்ய வேண்டும். அனைத்திற்கும் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே. சரியாக அனைத்தையும் பகவான் கிருஷ்ணரிடம் வழங்கும் போதுதான் நம்மால் அனைத்து உயிர்வாழிகளிடமும் முறையாகச் செயல்படவியலும்.

சாஸ்திரங்கள் கிருஷ்ணருக்கான அன்பைப் பற்றியும், அந்த அன்பை வளர்ப்பதற்கான பக்குவமான வழிமுறையைப் பற்றியும் விவரிக்கின்றன. அன்பை வளர்ப்பதற்கான வழிமுறை” என்பது நமக்கு சற்று விநோதமாகத் தோன்றலாம். அன்பு என்பது இயற்கையானது என்று கூறிவிட்டு, அதை வளர்ப்பதற்கு எதற்கு வழிமுறை என்று கேட்கலாம். ஆம், அன்பு இயற்கையானதே, கிருஷ்ணருக்கு அன்பு செலுத்தும் நிலையும் இயற்கையானதே. ஆனால் தற்போதைய கட்டுண்ட நிலையில் நம்முடைய இயற்கையான அன்பு திரிபடைந்துள்ளது. அதனால், நாம் இப்பௌதிக உலகில் ஏதேனும் சுய இலாபத்தை எதிர்நோக்கி மற்றவர்களிடம் செயற்கையான அன்பினை வெளிப்படுத்தி வருகிறோம். எனவே, இப்பௌதிக உலகிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய தூய பக்தியை புதுப்பிப்பதற்கு, நமக்கு வழிகாட்டுதலும் பயிற்சியும் அவசியம்.

தூய பக்தியின் விளக்கம்

தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே அத்தளத்தை அடைய முடியும். சேவை செய்யும் நிலையை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும். தூய பக்தி என்பது வெறும் மனதளவில் உள்ள உணர்ச்சி அல்ல; மாறாக, நமது அன்பிற்கு பாத்திரமான பகவான் கிருஷ்ணருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்வதாகும். தூய பக்தி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

அன்யாபிலாஷித ஷூன்யம்

ஜ்ஞான-கர்மாத்யனாவ்ருதம்

அனுகூல்யேன-க்ருஷ்ணானு-

ஷீலனம் பக்திர் உத்தமா 

தூய பக்தி என்பது கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இன்றி ஆற்றப்படும் செயலாகும். அறிவின் தளத்திலும் சரி, புலனின்பத்தின் தளத்திலும் சரி, ஒருவன் எதையும் விரும்பாமல், கிருஷ்ணரின் திருப்தியை மட்டுமே விரும்ப வேண்டும். அதுவே தூய அன்பு. அதுவே மிகவும் உயர்ந்த நிலை. இதுபோன்ற பல விஷயங்கள் பக்தி இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. கிருஷ்ணர் தம்மிடம் மோசமாக நடந்து கொண்டாலும் அவரே எனது தலைவர் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். அந்த அன்பில் எந்த நிபந்தனையும் இருப்பதில்லை. கிருஷ்ணர் எவரையும் ஒருபோதும் மோசமாக நடத்துவதில்லை, ஆனால் சில சமயங்களில் அவர் தமது திருவிளையாடலை நிகழ்த்தும் பொருட்டு, மோசமாக நடந்துகொள்வார். அதன் மூலமாக, அவர் தமது பக்தன் எந்த நோக்கத்துடன் சேவை செய்கின்றான் என்பதையும், முழுமையாக சரணடைந்துள்ளானா என்பதையும் சோதிக்க முடியும்.

ஆகவே அன்பு, பக்தி என்பது எந்த சொந்த ஆசையுமின்றி கிருஷ்ணரது மகிழ்ச்சிக்காக அவருக்கு சேவை செய்வதாகும். அதற்கு அவர்மீது பூரண நம்பிக்கை இருக்க வேண்டும். ஒருவரை நீங்கள் பூரணமாக நம்பாத பட்சத்தில், உங்களால் உங்களை பூரணமாக அவரிடம் அர்ப்பணிக்க இயலாது. ஆகவே, கிருஷ்ணரே அனைவரது அன்பிற்கு பாத்திரமானவர் என்பதையும் அனைவரின் நலன்விரும்பி என்பதையும் தத்துவ ரீதியாக ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை யாரும் வஞ்சித்துவிடக்கூடாது என்பதால் நாம் மிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நம்மை வஞ்சிக்காத உண்மையான நபர் பகவான் கிருஷ்ணரே என்பதையும் நாம் தத்துவ ரீதியாக அறிய வேண்டும்.

பக்தி என்பது கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்காக சேவை செய்வதாகும்.

பௌதிக அன்பிலிருந்து வேறுபட்டது

ஆகவே, அன்பு அல்லது தூய பக்தி என்பது, இப்பௌதிக உலகின் அன்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இது பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

ஆத்மேந்த்ரிய-ப்ரிதி-வாஞ்சா தரே பலி காம

க்ருஷ்ணேந்த்ரிய-ப்ரீதி-இச்சா தரே ப்ரேம நாம

இவ்வுலகில் காணப்படும் அன்பு என்பது சுய திருப்தியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் கிருஷ்ணரின் மீதான அன்பு என்பது கிருஷ்ணரது திருப்தியை அடிப்படையாகக் கொண்டது. இதுவே இரகசியம். 

நான் கடவுளுக்கு சேவை செய்வேன், பதிலுக்கு கடவுள் எனக்கு ஏதாவது செய்வார். ஏதேனும் ஆபத்து வந்தால் என்னைக் காப்பாற்றுவார்,” என்பன போன்று கைம்மாறு கருதி சேவை செய்வது ஒரு வகையான வியாபாரமாகும். சொந்த மகிழ்ச்சிக்காக ஒருவன் அன்பு செலுத்தினால், அந்த அன்பும்கூட சுயவிருப்பத்தினால் பிறந்ததே. இஃது உண்மையான பக்திக்கு முரண்பாடானது. அன்பு செலுத்தினால் ஆனந்தம் கிட்டும் என்பதற்காக ஒருவன் அன்பு செலுத்தினால், அஃது உண்மையான அன்பாகாது. கிருஷ்ணரிடம் தன்னை முற்றிலுமாக அர்ப்பணிப்பதே உண்மையான அன்பாகும். ஆகவே, கிருஷ்ணரைத் தவிர வேறு யாரிடமும் பக்தி செலுத்துவது ஆச்சாரியர்களால் கண்டிக்கப்படுகிறது, கிருஷ்ணருக்கு சுயவிருப்பத்துடன் செய்யப்படும் பக்தியும் கண்டிக்கப்படுகிறது. நமது மகிழ்ச்சிக்காக பக்தி செய்வது பக்தியாகாது.

ஆன்மீக உலகம் என்பது தூய அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகும். அத்தகு தூய அன்பு இந்த பௌதிக உலகத்தைச் சார்ந்ததல்ல. அங்கிருக்கும் அனைவரும் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தவர்கள், கிருஷ்ணரே அவர்களின் மையம். நான் அமெரிக்காவின் மீது அன்பு செலுத்துவதால், அமெரிக்காவின் எதிரிகள் அனைவரையும் வெறுக்கின்றேன்”ஶீஇதுவே இவ்வுலகின் அன்பாகும், இது வெறுப்பினால் களங்கமடைந்துள்ளது. ஆனால் ஆன்மீக உலகின் அன்பில் இத்தகு களங்கங்கள் இருப்பதில்லை. ஒவ்வோர் உயிர்வாழியும் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட விதத்தில் கிருஷ்ணருடன் உறவுகொள்கிறான். தூய பக்தி ஐந்து முதன்மையான ரஸங்களில் (சுவைகளில்) வெளிப்படுத்தப்படுகிறது.

ஐந்து வகையான சுவைகளில் பக்தி

ஸாந்த ரஸத்தில் ஒருவன் மரம், புல், செடி முதலிய ரூபத்தில் இருக்கின்றான். இந்த ரஸத்தில் இருப்பவர்கள் பகவான் கிருஷ்ணரை உணர்ந்தவர்களாக, அதே நேரத்தில் எந்தச் செயல்களும் இல்லாதவர்களாக உள்ளனர். பக்தியின் அடுத்த நிலை சேவை செய்யும் நிலையாகும். தாஸ்ய ரஸம் எனப்படும் இந்நிலையிலுள்ள பக்தர்கள் பெரும் மதிப்பு மரியாதையுடன் கிருஷ்ணருக்கு பல சேவைகளைப் புரிகின்றனர். அடுத்த நிலை, கிருஷ்ணருக்கு நண்பர்களாச் செயல்படும் ஸக்ய ரஸமாகும். இந்த பக்தர்கள் கிருஷ்ணரின் மீதான ஆழந்த அன்பின் காரணமாக அவர் முழுமுதற் கடவுள் என்பதை மறந்து, அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகுகின்றனர். அடுத்த நிலை, கிருஷ்ணரின் பெற்றோராகச் செயல்படும் வாத்ஸல்ய ரஸமாகும். கிருஷ்ணர் அனைத்திற்கும் ஆதி மூலமாகத் திகழும்போதிலும், இந்த பக்தர்கள் அவருக்கே பெற்றோராக இருந்து சேவை செய்கின்றனர். குழந்தையின் மீதான பெற்றோரின் பாசம் இவ்வுலகிலும் மிக பலமானதாக உள்ளது; இருப்பினும், அஃது ஆன்மீக உலகில் கிருஷ்ணரிடம் காட்டப்படும் பாசத்தைப் போல பூரணமாகவோ பக்குவமாகவோ இருப்பதில்லை. அடுத்த நிலையில், சில பக்தர்கள் கிருஷ்ணரின் காதலர்களாக அவருக்கு மாதுர்ய ரஸத்தில் சேவை செய்கின்றனர். இவ்வுலகில் நாம் காணும் பௌதிகக் காதல் என்பது அதன் திரிபடைந்த தோற்றமே. கிருஷ்ணருடனான உறவில் அனைத்தும் முற்றிலும் தூய்மையானது, அவற்றில் பௌதிகச் சாயல் துளிகூட கிடையாது.

தூய பக்தியை கிருஷ்ணரது மற்ற அவதாரங்களிடமும் செலுத்தலாம். மத்ஸ்யர், கூர்மர், வராஹர், வாமனர், இராமர் உள்ளிட்ட பல ரூபங்கள் கிருஷ்ணருக்கு உள்ளன. சிலர் அவருடைய இராம ரூபத்தின் மீது அன்பு செலுத்தலாம், சிலர் நரசிம்ம ரூபத்தினால் கவரப்படலாம். ஸாந்தம், தாஸ்யம், ஸக்யம், வாத்ஸல்யம், மாதுர்யம் ஆகிய ரஸங்களில் பக்தர்கள் கிருஷ்ணரிடம் கவரப்படலாம்.

கிருஷ்ணரின் நண்பர்களாக விருந்தாவனத்தில் சேவை செய்யும் பக்தர்கள்.

பயிற்சி அவசியம்

சுயநலனில் மூழ்கியுள்ள பௌதிக நிலையிலிருந்து சுயநலனற்ற ஆன்மீக நிலையான தூய பக்தியை அடைவதற்கு பயிற்சி தேவை. அப்பயிற்சியே பக்தி யோகமாகும். யோகம் என்றால் பகவானுடன் இணைதல் என்று பொருள். தற்போதைய உலகில், யோகம் என்பது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான ஒன்று என மக்கள் தவறாக எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் யோகம் என்பது, உலகச் செயல்களில் ஈடுபடும் புலன்களை அதிலிருந்து விலக்கி கிருஷ்ணரின் மீது அன்பு செலுத்துவதற்கான பயிற்சியைக் கொடுப்பதாகும்.

பயிற்சி, புலன்களைக் கட்டுப்படுத்துதல், பகவான் கிருஷ்ணரை அறிந்துகொள்ளுதல், பக்தர்களின் வழிகாட்டுதலை ஏற்றல் முதலியவை இல்லாமல், வெறுமனே ஆன்மீக அன்பை உணரலாம் என்று நினைப்பது பகவான் கிருஷ்ணரின் தூய பக்தர்களான ஆச்சாரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மிகவும் ஆழ்ந்த அறிவுடையதான கிருஷ்ண பிரேமையைப் பற்றி ஏதுமறியாது, பௌதிகவாதி எனும் நிலையிலிருந்து ஒரே நாளில் ஆன்மீகவாதியாகி விடலாம் என எண்ண வேண்டாம். அத்தகு எண்ணங்களைக் கொண்ட மக்கள் பக்தியைப் பற்றி பேசினாலும் பௌதிகப் புலனின்ப கவர்ச்சியிலேயே தொடர்ந்து நீடிக்கின்றனர். அவர்களுக்கு பக்தி சற்றும் இல்லை.

இத்தகு பெயரளவிலான பக்தி உண்மையான பக்தியை உணர்வதில் மக்களுக்கு தொந்திரவையே ஏற்படுத்துகின்றது. அதனால், பக்தி எனும் பெயரில் மக்கள் பக்தி செய்வதில்லை. இருப்பினும், பலரும் அந்த பொய்யான பக்தியினை பக்தி” என்று அழைப்பதினால், அறியாத மக்களுக்கு அது பக்தியைப் போன்று தோன்றுகிறது. இதுபோன்ற தவறான புரிதல்கள் மக்களுக்கு உண்மையான பக்தியைக் கற்பிப்பதில் சிரமங்களை ஏற்படுத்துகின்றன.

புலன்களை ஈடுபடுத்தும் பக்தி

வெளிப்புற ஆசைகள், நுண்ணியமான உட்புற ஆசைகள் என அனைத்து ஆசைகளிலிருந்தும் விடுபட்டிருப்பதே உண்மையான பக்தியாகும். ஆசைகள் அனைத்தும் கிருஷ்ணரது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு பக்குவமடைகின்றன. இந்த பக்தி யோகம் மிகவும் இயற்கையானது, எளிமையானது, சக்திவாய்ந்தது. புலன்களை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தாமல், அவற்றை வெறுமனே கட்டுப்படுத்த முயற்சிப்பது கடினமான ஒன்றாகும். ஆனால் புலன்களை கிருஷ்ணரது சேவையில் ஈடுபடுத்துவது மிகவும் இயற்கையானது, ஆத்மாவிற்கு இதமளிப்பது.

உதாரணமாக, நாம் அழகானவற்றைப் பார்க்க விரும்புகிறோம். பௌதிக வஸ்துக்களைப் பார்ப்பதற்கு பதிலாக, பேரழகு வாய்ந்த பகவான் கிருஷ்ணரைப் பார்த்தால், நாம் பூரண திருப்தியடைவோம். பக்தி என்பது ஒன்பது வழிமுறைகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் பல நுணுக்கள் உள்ளன. கிருஷ்ணரைப் பற்றிக் கேட்டல், கிருஷ்ணரைப் பற்றிப் பாடுதல், கிருஷ்ணரை நினைத்தல், கிருஷ்ணரது திருவடிகளுக்கு சேவை செய்தல், கிருஷ்ண விக்ரஹத்திற்கு தொண்டு புரிதல், கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்தல், கிருஷ்ணரது சேவகனாக தன்னை அடையாளம் கொள்ளல், கிருஷ்ணருக்கு நண்பனாகச் செயல்படுதல், அனைத்தையும் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தல் ஆகியவையே அந்த ஒன்பது வழிமுறைகளாகும்.

கிருஷ்ணரிடம் சரணடைதல் மிகவும் அவசியம். இதுவே கற்பனையான பக்திக்கும் உண்மையான பக்திக்கும் இடையிலான வேறுபாடாகும். சரணடைதல் என்றால் என்ன? அதைப் பற்றியும் பக்தி சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த பக்தி வழிமுறையானது குறிப்பாக பக்தி ரஸாம்ருத சிந்து எனும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. பக்தி என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன, அதனை நமது வாழ்வில் எவ்வாறு இணைத்துக்கொள்வது ஆகியவற்றை இந்நூல் மிக விரிவாக விளக்குகின்றது. இது தூய பக்தியைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய அவசிய நூலாகும்.

பக்தி வழிமுறையில் பக்தர்களின் சங்கம் மிகவும் முக்கியமானது. பக்தியைப் பற்றிய ஏட்டறிவோடு நிற்காமல், தூய பக்தர்களின் சங்கத்தில் இதனை உணர வேண்டும். ஓம் தத் ஸத்.

 

தூய பக்தர்கள் சங்கத்தின் வழியில் கிருஷ்ணரை அறிவதும் அடைவதும் எளிதானது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives