வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

தென் தமிழக சேதுபந்த கடற்கரையில் அமைந்திருப்பதே புகழ்பெற்ற இராமேஸ்வரம் என்னும் திருத்தலமாகும். பாம்பன் தீவில் உள்ள சேதுக் கரையில் இராமசந்திர பகவான் பல அற்புத லீலைகளைப் புரிந்து அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளதால், இராமேஸ்வரம் சரணாகதிக்கும் பெயர் பெற்ற தலமாகப் போற்றப்படுகிறது. பல புனித தீர்த்தங்களை உள்ளடக்கிய இராமேஸ்வரத்திற்கு பலராமர், சைதன்ய மஹாபிரபு என பலரும் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

திருத்தல வரலாறு

இராமேஸ்வரத்தின் ஸ்தல புராணத்தின்படி, இராமசந்திர பகவான் இராவணனை வதம் செய்த பிறகு, இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த காரணத்தினால், உலக மக்களுக்கு முன்னுதாரணம் அமைக்கும் பொருட்டு, கைலாயத்திலிருந்து சிவலிங்கத்தை எடுத்து வருமாறு அனுமனிடம் கட்டளையிட்டார். தெய்வீக ஏற்பாட்டினால் அனுமன் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. அதனால், சீதாதேவி உடனடியாக தம் கையினால் மண்ணாலான ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்து அங்கே வழிபாட்டைத் தொடங்கினாள்.கைலாயத்திலிருந்து சிவலிங்கத்துடன் வந்த அனுமன் தமது சிவலிங்கம் வழிபடப்பட வேண்டும் என விரும்பியதால், இராமசந்திர பகவான் அவரிடம் மண்ணாலான சிவலிங்கத்தை நகர்த்துமாறு கூற, அனுமன் எவ்வளவோ முயற்சித்தும் சீதையினால் செய்யப்பட்ட மண் சிவலிங்கத்தை நகர்த்த இயலவில்லை. அதன் பின்னர், அனுமனின் சிவலிங்கமும் சீதையின் லிங்கத்திற்கு அருகில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

இங்கு வரும் பக்தர்கள் முதலில் அனுமனால் கொண்டு வரப்பட்ட சிவலிங்கத்தை வழிபடுவர்,” என்று இராமசந்திர பகவான் பறைசாற்றினார். இந்த சிவலிங்கங்கள் அமையப்பெற்ற திருக்கோயிலே இராமநாத சுவாமி திருக்கோயில் என்று பெயரெடுத்துள்ளது.

கோயிலின் தனிச்சிறப்பு

இக்கோயிலில் 22 புனித தீர்த்தங்கள் அமையப் பெற்றுள்ளதால், எண்ணற்ற யாத்திரிகர்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து புனித ஸ்நானம் செய்கின்றனர். சுவாமியை தரிசிப்பதற்கு முன்பாக இவ்வாறு நீராடுதல் இக்கோயிலின் பாரம்பரிய வழக்கமாகும். இந்த தீர்த்தங்கள் கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சங்கு தீர்த்தம், நள தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சாவித்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் முதலிய பெயர்களினால் அறியப்படுகின்றன.

இராமநாத சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு அதன் கட்டமைப்பும் தூண்களும் ஆகும். மிக நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டுள்ள 1,200 த›ூண்கள் பார்வையாளர்களின் கவனத்தை உடனே ஈர்த்து விடுகின்றன. இதனால் இக்கோயிலை தூண்கோயில் என்றும் அழைப்பதுண்டு.

இக்கோயிலுக்கு வெகு அருகில் இருக்கக்கூடிய சமுத்திரம், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இப்பெயரில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது.

 

இராமநாத சுவாமி கோயிலில் தனித்தன்மையுடன் காணப்படும் தூண்களின் கட்டமைப்பு

சீதையின் அக்னி பரீட்சை

இராவணன் மடிந்த பிறகு, சீதாதேவி தமது கணவரைப் பார்க்க பெரும் ஆவலோடு வந்த சமயத்தில், பகவான் இராமர் அவளை ஏற்பதற்கு மறுத்த சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். சீதையினுடைய கற்பின் புகழை உலக மக்கள் அனைவருக்கும் பறைசாற்ற விரும்பினார் ஸ்ரீ இராமர். அதன்படியே சீதையின் அக்னி பரிட்சை நிகழ்ந்தது.

அக்னி மூட்டப்பட்ட பின்னர், அன்னை சீதை முதலில் இராமசந்திர பகவானை வலம் வந்தாள், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த அக்னி குண்டத்தையும் வலம் வந்தாள். எனது மனம் ஒரு கணமேனும் இராமசந்திர பகவானை மறந்து பிறரை விரும்பியிருந்தால், இந்த அக்னி என்னை எரிக்கட்டும்,” என கூறி சீதை அக்னி பிரவேசம் செய்தாள். அச்சமயத்தில் அக்னி தேவர் தோன்றி, சீதை ஒரு நொடியும் கற்பு நெறி தவறாமல் எப்போதும் இராமசந்திரரின் சிந்தனையிலேயே ஈடுபட்டிருந்தாள்” என சாட்சி கூறினார்.

இதைக் கேட்ட இராமசந்திரரும் பேரானந்தம் அடைந்து உடனடியாக சீதையை ஏற்றுக் கொண்டார். சீதையின் கற்பு நெறி மூவுலகிற்கும் எடுத்துரைக்கப்பட்டது. இக்காட்சியைக் கண்ட தேவர்கள் சீதா-ராமரின் மீது பூமாரி பொழிந்தனர். (படிக்க, சீதை அபகரிக்கப்பட்டதன் இரகசியம்)

கற்பு நெறி தவறாத சீதை தனது தூய நிலையினை நிரூபிக்க அக்னியினுள் பிரவேசித்து, அஃது அக்னி தேவனுக்கு ஒரு பாவமாக அமைந்துவிட்டது. அவர் அப்பாவத்தினை இராமேஸ்வரத்திலுள்ள சிவபெருமானை வேண்டி இந்த சமுத்திரத்தில் நீராடி போக்கினார். எனவே, அக்னி தேவர் நீராடிய அந்த இடம் அக்னி தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

தனுஷ்கோடி தீர்த்தம்

இராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பதே தனுஷ்கோடி தீர்த்தமாகும். சேதுக் கரையில் வானரப் படைகள் அமைத்த பாலம் பல மைல் அகலம் கொண்டதாகும். இராவணனுடனான போர் முடிந்த பிறகு அப்பாலத்தைப் பயன்படுத்தி வேறு சில அசுரர்கள் தாக்கக் கூடாது என விபீஷணர் கேட்டு கொண்டதற்கு இணங்க, இராமசந்திர பகவான் அப்பாலத்தை ஒரே அம்பினால் மூன்றாக உடைத்தெறிந்தார்.

அந்த இடத்தில் இராமசந்திர பகவான் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து புனித தீர்த்தங்களையும் வரவழைத்தார். அவ்விடத்தில் இராமரும் சீதையும் நீராடி இத்தீர்த்தத்திற்கு வருகை புரிபவர்களுக்கு தங்களது விசேஷ கருணை கிடைக்கும் என தெரிவித்தனர். அதே இராமசந்திர பகவான் பிறகு சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தபோது, இவ்விடத்திற்கு வருகை புரிந்து நீராடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 9.199)

 

கோதண்டராம சுவாமி கோயில்

இராமேஸ்வரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே கோதண்டராம சுவாமி கோயில். இவ்விடத்தில் இராமசந்திர பகவான் தம்மிடம் சரணடைந்த விபீஷணரை மன்னராக முடிசூட்டினார். இராவணனின் போக்கைக் கண்டித்த அவரது சகோதரனான விபீஷணன் அரச சபையை விட்டு வெளியேறி இராமசந்திர பகவானிடம் சரணடைய முற்பட்டபோது வானர தலைவர்கள் ஆட்சேபித்தனர். இராமசந்திர பகவான் அங்கிருந்த அனுமனிடம் கருத்தினை வினவியபோது, விபீஷணர் நேர்மையானவர். நமது குடும்ப உறுப்பினராக அவரை உடனடியாக ஏற்க வேண்டும். அவருக்கும் அடைக்கலம் கொடுங்கள்,” என அனுமன் கூறினார்.

அப்போது இராமசந்திர பகவான் அங்கிருந்தவர்களிடம், யாரேனும் ஒருவர் என்னிடம் ஒரேயொரு முறை உண்மையாக சரணடைந்தால், அவருக்கு பாதுகாப்பும் அடைக்கலமும் நானே கொடுப்பேன், இஃது இராவணனுக்கும் பொருந்தும்,” என தெரிவித்தார். அதனால் இத்திருத்தலம் சரணாகதி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.

இக்கோயிலுக்கு அருகில் இலங்கைக்கான பாலம் தொடங்கப்பட்ட சேதுக்கரையில் ஆதிஜகந்நாதர்

மூலவராக உள்ளார். தர்பசயன இராமரின் திவ்ய திருமேனியும் இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. (திருப்புல்லாணி என்று அறியப்படும் இத்திருத்தலம் ஏப்ரல் 2016இல் விரிவான கட்டுரையாக எடுத்துரைக்கப்பட்டது. வாசகர்கள் எமது இணைய தளத்தில் அதனைப் படிக்கலாம்.)

இராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தனுஷ்கோடி தீர்த்தம்

வில்லுண்டி தீர்த்தம்

அன்னை சீதாதேவியின் தாகத்தைப் போக்க இராமசந்திர பகவான் கடலில் வில்லை ஊன்றியபோது, அவ்விடத்தில் சுவையான நீர் பெருக்கு ஏற்பட்டது. அதைப் பருகிய சீதாதேவி மிகவும் திருப்தியடைந்தாள். இப்பகுதி இன்று ஒரு கிணறாக உள்ளது, கடலுக்குள் சிறிது தூரம் சென்றால் பார்க்க முடியும். இதைக் காண்பதற்கு குறுகலான பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத தீர்த்தம் இராமேஸ்வரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சேதுக்கரையில் அமைந்துள்ள கோதண்டராம சுவாமி கோயில்

கந்தமதன பர்வதம்

இராமேஸ்வரத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள கந்தமதன குன்றின் மீது இராமசந்திர பகவானும் வானர படைகளும் நின்றபடி இலங்கை செல்வதற்கான திசையையும் திட்டத்தையும் வகுத்தனர். இராமசந்திர பகவானின் திருப்பாத அடிச்சுவடுகளை இன்றும் இக்கோயிலில் காணலாம்.

 

இதர ஸ்தலங்கள்

இராமர் இளைப்பாறிய இடமான இராமதீர்த்தம் இராமநாத சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது. இத்தீர்த்தத்திற்கு வெகு அருகிலேயே இலக்ஷ்மண தீர்த்தம் அமைந்துள்ளது. இராமர் தமது ஜடாமுடியினை அலம்பிய இடமான ஜடாதீர்த்தம், தனுஷ்கோடிக்குப் போகும் பாதையில் அமைந்துள்ளது. மேலும், பற்பல முக்கியமான இடங்கள் இராமேஸ்வரத்தில் அமையப் பெற்றுள்ளன.

இராமாயண பாடங்கள்

இராமசந்திர பகவான் தமது திவ்யமான லீலையில் பல ஆழமான உபதேசங்களை உலக மக்களின் நன்மைக்காக எடுத்துரைத்துள்ளார். இராமசந்திர பகவானை பக்தர்கள் பக்தித் தொண்டின்

மூலமாக அணுகுகின்றனர், இராமரும் அவர்களது சிறிய முயற்சியைக்கூட வெகுவாகப் பாராட்டுபவராக உள்ளார். இராமசந்திர பகவானின் லீலா ஸ்தலமாக இராமேஸ்வரம் திகழ்வதால், பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருவதில் மிகவும் முனைப்புடன் உள்ளனர்.

 

இராமசந்திரரின் பாதம் அமைந்துள்ள கந்தமதன குன்று