சாஸ்திரங்கள் இன்றி ஆன்மீக உணர்வுகளா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

சில மாதங்களுக்கு முன்னர் எமது கோயிலுக்கு வருகை தந்த நபர் ஒருவர், “நீங்கள் ஏன் பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? தன்னுணர்வு, இறையுணர்வு என்பவை தானாக உணர்வதுதானே? இதற்கு புத்தகங்கள் தேவையா? புத்தகங்களால் தன்னுணர்வை எவ்வாறு வழங்க இயலும்?” என்று கேள்வி கேட்டார். மேலும், “நாம் நமக்குள்ளே உணர்வதுதான் தன்னுணர்வு” என்று பிரபல சாமியார் ஒருவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அவருக்கு சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை யாம் பக்குவமாக எடுத்துரைக்க அவரும் உண்மையை உணர்ந்தார். அத்தகவல்கள் பகவத் தரிசன வாசகர்களுக்கும் உதவும் என்பதால், இதோ இங்கே இந்தக் கட்டுரை.

அறிவைப் பெறுவதற்கான மூன்று வழிகள்

நாம் எந்தவொரு விஷயத்தை உணர விரும்பினாலும், முதலில் அவற்றைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும். அறிவைப் பெறுவதற்கு இவ்வுலகில் மூன்று வழிமுறைகள் உள்ளன.

 

(1) பிரத்யக்ஷ பிரமாணம்: நம்முடைய புலன்களைக் கொண்டு நேரடியாக நம்மால் பெறப்படும் அறிவானது இப்பிரிவில் அடங்கும். உதாரணமாக, மழை பொழிகிறது என்பதை நாம் நமது கண்களால் பார்த்து தெரிந்துகொள்கிறோம். இது நமது அன்றாட வாழ்வின் அறிவிற்கு மிகவும் அவசியமானதாகும்.

 

(2) அனுமான பிரமாணம்: நம்முடைய முந்தைய அறிவினை வைத்து யூகத்தின் மூலமாகப் பெறப்படும் அறிவானது இப்பிரிவில் அடங்கும். உதாரணமாக, காலையில் விழித்தவுடன் சாலை நனைந்திருப்பதைப் பார்த்து, இரவில் மழை பொழிந்திருக்கும் என்று யூகிக்கின்றோம்; அல்லது சடசடவென ஒலி கேட்பதை வைத்து வெளியில் மழை பெய்கிறது என்று யூகிக்கின்றோம். இந்த அனுமானங்கள் அனைத்தும் நாம் இதற்கு முன்பு புலன்களின் மூலமாகப் பெற்ற அறிவை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

 

(3) ஷப்த பிரமாணம்: அதிகாரபூர்வமான மூலங் களிடமிருந்து பெறப்படும் அறிவானது இப்பிரிவில் அடங்கும். உதாரணமாக, நாம் நமது அன்றாட வாழ்வில், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றை அதிகாரம் வாய்ந்தவையாக ஏற்கின்றோம். உலகின் ஏதோ ஒரு மூலையில் நிகழும் நிகழ்ச்சிகளை நாம் புலன்களாலும் அறிவதில்லை, யூகம் செய்வதுமில்லை. ஊடகங்கள் என்னும் அதிகாரபூர்வமான மூலத்திடமிருந்து கேட்கிறோம்.

 

இந்த மூன்று வழிகளைத் தவிர வேறு எந்த விதத்திலும் நாம் அறிவைப் பெறுவதில்லை. நாம் பெறக்கூடிய எல்லா அறிவும் இந்த மூன்றில் ஏதேனும் ஒரு பிரிவில்தான் அடங்குகின்றது.

புலனுணர்வின் பிரச்சனைகள்

அறிவைப் பெறுவதற்கு மேற்கூறிய மூன்று வழிமுறைகள் உள்ளபோதிலும், ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு முதல் இரண்டு வழிமுறைகளும் உதவாது. ஏனெனில், கட்டுண்ட நிலையிலுள்ள நம்முடைய அறிவானது பல்வேறு குறைபாடுகளுக்கு உட்பட்டது. கட்டுண்ட ஜீவன்களான நாம் அனைவரும் நான்கு வகையான குறைபாடுகளுக்கு உட்பட்டவர்கள்.

 

முதல் குறைபாடு என்னவெனில், நாம் அனைவரும் தவறிழைக்கக்கூடியவர்கள். உதாரணமாக, இந்திய நாட்டின் மாபெரும் தலைவரான மகாத்மா காந்திகூட பல்வேறு தவறுகளை இழைத்துள்ளார். அவரது வாழ்வின் இறுதி காலக்கட்டத்தில், அவரது உதவியாளர் எச்சரித்தார், “புதுடில்லியில் நடக்கவுள்ள கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம், அங்கு தங்களுக்கு அபாயம் இருப்பதாக சில நண்பர்கள் கூறுகின்றனர்.” ஆனால் அவர் அதனைக் கேட்கவில்லை. அங்குச் செல்ல வேண்டும் என்பதில் அவர் முடிவாக இருந்தார், அங்கே அவர் கொல்லப்பட்டார். மகாத்மா காந்தியைப் போன்ற மிகச்சிறந்த நபர்கள்கூட தவறிழைக்கின்றனர். தவறிழைப்பது மனித இயல்பு என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இது கட்டுண்ட ஆத்மாவின் ஒரு குறைபாடாகும்.

 

மற்றொரு குறைபாடு: மாயையின் வசப்படுதல். மாயை என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக்கொள்ளுதல். ஒவ்வொருவரும் தம்மை இந்த உடலாக நினைத்துக் கொண்டுள்ளனர். நீங்கள் யார் என்று வினவப்பட்டால், ஒவ்வொருவரும் தத்தமது பெயர், விலாசம், தந்தையின் பெயர் என உடல் சார்ந்த அடையாளங்களை வழங்குகின்றனர். இதுவே மாயை.

 

மூன்றாவது குறைபாடு, ஏமாற்றும் சுபாவம். ஒவ்வொருவரிடமும் ஏமாற்றும் சுபாவம் உள்ளது. ஒருவன் முதல்தர முட்டாளாக இருந்தால்கூட, தன்னை புத்திசாலியாக காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறான். அவனுடைய தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால்கூட, தன்னுடைய நிலையை அறியாத அவன் தொடர்ந்து மற்றவர்களை ஏமாற்ற முயற்சி செய்கிறான்.

 

இறுதியாக, நம்முடைய புலன்கள் அனைத்தும் பக்குவமற்றவை. நாம் நமது கண்களின்மீது மிகவும் பெருமை கொள்கிறோம். “கடவுளை எனக்குக் காட்ட முடியுமா?” என்று சிலர் சவால் விடலாம். ஆனால் நீங்கள் வசிக்கும் அறை இருட்டாக இருந்தால், உங்களுடைய அற்புதமான கண்களைக் கொண்டு, உங்களால் உங்களுடைய கைகளைக்கூட காண இயலாது. அதிகாலையில் சூரியனைப் பார்த்தால், அஃது ஏதோ ஓர் அழகான பழம் போன்றோ சிறிய தட்டு போன்றோ காணப்படுகிறது. ஆனால் அஃது உண்மையா? நாம் காணும் சூரியன் பல்வேறு கிரகங்களைக் காட்டிலும் மிகப் பெரியது. நம்முடைய பார்வையின் மதிப்புதான் என்ன? புலன்கள் நம்மை நிச்சயம் ஏமாற்றக்கூடியவை.

 

இந்த நான்கு குறைபாடுகளின் காரணத்தினால், நம்முடைய புலன்களைக் கொண்டு நாம் பெறக்கூடிய அறிவானது சாதாரண அன்றாட செயல்களில்கூட பிழையானதாக உள்ளது. அவ்வாறு இருக்கையில், ஆன்மீக விஷயங்களுக்கு இது நிச்சயம் உதவாது. யூகத்தினால் பெறப்படும் அறிவும் புலன்களை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அதுவும் ஆன்மீக விஷயங்களுக்கு உதவாது. அதிகாரபூர்வமான மூலத்திடமிருந்து அறிவது மட்டுமே (ஷப்த பிரமாணம் மட்டுமே) தன்னுணர்விற்கு அடிப்படையாக அமைய முடியும்.

அதிகாலையில் சூரியனைப் பார்த்தால் சிறிய தட்டுபோன்று தோன்றலாம்; ஆனால் புலன்களால் பெறப்படும் அந்த அறிவு உண்மையானதல்ல.

 

சாஸ்திரங்களே ஆதாரம்

ஆன்மீக விஷயங்களைப் பெறுவதற்கான அதிகாரபூர்வமான மூலம், வேத சாஸ்திரங்கள். வேதம் என்றால் அறிவு என்று பொருள். எல்லா அறிவினையும் வேதம் என்று கூறலாம்; ஏனெனில், வேதங்களே அறிவிற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. ஒரு சிலர் வேதங்களை இந்துக்களுடைய நூல்கள் என்று கூறலாம்; ஆனால் உண்மையில் வேதங்கள் நித்தியமானவை, இந்து என்னும் சொல் சமீபத்தில் வந்ததே. வேதங்கள் சாதாரண மனிதர்களால் தொகுக்கப்பட்டவை அல்ல. வேத அறிவானது ஆன்மீக உலகிலிருந்து பகவான் கிருஷ்ணரிடமிருந்து வருகிறது. வேதங்களுக்கான மற்றொரு பெயர், ஷ்ருதி. ஷ்ருதி என்றால் கேட்டுப் பெறப்படும் அறிவு என்று பொருள். ஷ்ருதி என்பது தாயைப் போன்றது. நாம் நம்முடைய தாயிடமிருந்து பல்வேறு அறிவைப் பெறுகிறோம். உதாரணமாக, உங்களுடைய தந்தை யார் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், யார் உங்களுக்கு பதிலளிக்க முடியும்? உங்களின் தாய் மட்டுமே. தாய் உங்களிடம், “இவர்தான் உன்னுடைய தந்தை” என்று கூறினால், நீங்கள் அதனை ஏற்கத்தான் வேண்டும். அவர்தான் உங்களுடைய தந்தையா என்று நீங்கள் சோதனை செய்ய இயலாது.

 

அதுபோலவே, உங்களுடைய அனுபவ அறிவிற்கு அப்பாற்பட்டதை, புலன்களின் செயல்களுக்கு அப்பாற் பட்டதை நீங்கள் அறிய விரும்பினால், அப்போது வேத சாஸ்திரங்களை ஏற்றேயாக வேண்டும். இங்கே சோதனை செய்து பார்த்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. இவையனைத்தும் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டவை, உறுதி செய்யப்பட்டவை. மேலும், மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்ட பல்வேறு ஆச்சாரியர்களாலும் வேத சாஸ்திரங்கள் நன்கு பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. அன்னையின் வாக்கியம் உண்மையாக ஏற்கப்படுவதைப் போல, வேதங்களின் வாக்கியம் ஏற்கப்பட வேண்டும். இதில் வேறு வழியேதும் இல்லை.

வேத வாக்கினை மீற முடியாது

படைப்பின் தொடக்கத்தில் பிரம்மாவின் இதயத்தில் வேத ஞானம் வழங்கப்பட்டது. பிரம்மதேவர் அதனை நாரதருக்கும் இதர சீடர்களுக்கும் வழங்கினார். இவ்விதமாக, வேத ஞானம் பரம்பரையின் மூலமாக பன்னெடுங் காலமாக பெறப்பட்டு வருகிறது. வேத ஞானம் இவ்வாறுதான் பெறப்பட வேண்டும் என்பது பகவத் கீதையிலும் (4.2) உறுதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏதேனும் ஆராய்ச்சி செய்து, அதில் ஒருவேளை நீங்கள் பக்குவம் பெற்றால், நீங்கள் வேதங்கள் கூறும் முடிவிற்கே வருவீர்கள். எனவே, நேரத்தைச் சேமிக்கும்பொருட்டு, தாயின் வார்த்தைகளை ஏற்பதைப் போல, வேதங்களின் வார்த்தைகளை எந்தவொரு வாதமும் இன்றி ஏற்க வேண்டும்.

 

தொன்றுதொட்டு நிலவிவரும் பாரதப் பண்பாட்டில், யாரேனும் ஏதாவது கூறினால், “இஃது என்ன வேத வாக்கா? நீ சொல்வதை அப்படியே கேட்பதற்கு,” என்று பலரும் பதிலளித்து வந்தனர். அதாவது, வேத வாக்கானது எந்த வாதமும் இன்றி அப்படியே ஏற்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

தந்தை யார் என்பதை அறிய தாயின் வார்த்தைகளை ஏற்பதே சிறந்தது; அதுபோல, இறைவனை உணர வேதங்களின் அதிகாரத்தினை ஏற்பதே சிறந்தது.

வேத சாஸ்திரங்களின் உயர் தன்மை

இந்த ஜடவுலகில் இருக்கும் அறிவு ஜட அறிவாகும். இந்த ஜடவுலகிற்கு அப்பாற்பட்ட அறிவான தெய்வீக அறிவினைப் பெறுவதற்கு வேத சாஸ்திரங்கள் நமக்கு உதவுகின்றன. நம்மால் நம்முடைய ஜட அறிவைக் கொண்டு இந்த உலகினைக்கூட முழுமையாக அறிய இயலாது. அவ்வாறு இருக்கையில், இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மீக உலகினை எவ்வாறு அறிய இயலும்? தோன்றி மறையும் இந்த உலகத்திற்கு அப்பால், நித்தியமான ஆன்மீக உலகம் உள்ளது என்றும், அது தன்னுடைய உலகம் என்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (8.20) பிரகடனப்படுத்துகிறார். இத்தகைய அறிவு அனைத்தும் சாஸ்திரங்களில் உள்ளது. இதனை நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சிகளினால் எவ்வாறு அறிய இயலும்?

 

எங்களுடைய கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நாங்கள் உயர்ந்த அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் ஞானத்தினை ஏற்கிறோம். எங்களுடைய அறிவிற்கு ஆதாரம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்ட பகவத் கீதையே. கிருஷ்ணர் கூறுபவை அனைத்தையும் நாங்கள் அப்படியே ஏற்கிறோம். இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நீங்கள் சரியான அதிகாரியை ஏற்றுக் கொண்டால், உங்களுடைய நேரம் மிச்சமாகும். உதாரணமாக, மனிதன் மரணத்திற்கு உட்பட்டவன் என்று உங்களுடைய தந்தை கூறுகிறார், தாய் கூறுகிறாள், ஒவ்வொருவரும் கூறுகின்றனர்–ஆனால் நீங்கள் அதனை சோதித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்கின்றீர்கள். நீங்கள் இதனை சோதனை செய்து பார்க்க விரும்பினால்–ஒருவேளை யாரேனும் ஒரு குறிப்பிட்ட நபர் மரணத்திற்கு அப்பாற்பட்டவராக இருப்பாரோ என்று சோதிக்க விரும்பினால்–ஒவ்வொரு மனிதனையும் கொலை செய்துதான் பார்க்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியமல்ல.

 

எனவே, தன்னுணர்வு, ஆன்மீகம், இறையுணர்வு, யோகம் போன்றவை அனைத்தும் சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்தே செய்யப்பட வேண்டும். இல்லாவிடில், அது வெறும் மனக் கற்பனையாகவே இருக்கும்.

 

(சாஸ்திரங்களை எவ்வாறு நம்புவது என்பதை அறிய, பகவத் தரிசனத்தின் நவம்பர் 2013 இதழில் வெளிவந்த “மஹாபாரதம், நம்பக்கூடியதா?” என்ற கட்டுரையைப் படிக்கவும்.)

சூரியன் எழும்போது நம்மால் சூரியனையும் காண முடியும், நம்மையும் காண முடியும். அதுபோல, இறையுணர்வை அடையும்போது தன்னுணர்வையும் அடைய முடியும்.

தன்னுணர்வு என்றால் என்ன?

தன்னுணர்வு என்றால் “தன்னை உணர்வது” என்று பொருள். இவ்வுலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களை இந்த உடல்களாக நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் நாம் உண்மையில் இந்த உடல்கள் அல்ல, ஆத்மா என்று அழைக்கப்படும் உடலினுள் உள்ள உயிர்சக்தியே நாம். “நான் ஆன்மீக ஆத்மா” என்பதை உணர்வதே தன்னுணர்வு எனப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் புலன்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதர்கள், அந்நிலையைக் கடந்து, மனதின் தளம், புத்தியின் தளம் ஆகியவற்றையும் கடந்து, ஆத்மாவின் தளத்திற்கு உயர்வு பெறும் நிலை தன்னுணர்வு எனப்படுகிறது. இந்த நிலை ஜட இயற்கை மற்றும் ஜட குணங்களின் எவ்விதத் தொடர்பும் இல்லாத உன்னத நிலையாகும். இந்த நிலையை அடைந்தவர்கள் எதற்காகவும் வருந்துவதில்லை, ஏங்குவதில்லை, எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கின்றனர், மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர் என்று பகவத் கீதை (18.54) கூறுகின்றது.

 

கீதையின் பல்வேறு இடங்களிலும் தன்னுணர்வு பெற்றவனின் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வெல்லாவற்றையும் அலசிப் பார்த்தால், தன்னுணர்வு என்பது இறையுணர்வு அல்லது இறை பக்தி இன்றி சாத்தியமல்ல என்பதை எளிதில் உணரலாம். உண்மையில், நாம் இறைவனை உணரும்போது, தன்னுணர்வு என்பது தானாகக் கிடைக்கிறது. வானில் சூரியன் உதித்தெழும்போது, நம்மால் சூரியனைக் காண முடியும், அதே சமயத்தில் நம்மையும் காண முடியும். அதுபோல, இறையுணர்வில் நாம் முன்னேற்றம் பெறும்போது, தன்னுணர்வு என்பது தானாக அடையப் பெறுகிறது. சூரியன் உதிக்காமல் நம்மை நாம் காண்பது எவ்வாறு சாத்தியமில்லையோ, அதுபோல இறைவனை உணராமல் நம்மை நாம் உணர்வதும் சாத்தியமல்ல.

 

எனவே, தன்னுணர்வை அடைய விரும்புவோர், முதலில் தன்னுணர்வு என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியம். முதலில் அறிந்துகொள்ள வேண்டும், பின்னர் புரிந்துகொள்ள வேண்டும், அதன் பின்னரே உணர முடியும். அறிதல், புரிதல், உணர்தல் ஆகியவை மூன்று படிகளாகும். எதையும் அறியாமல், எடுத்த எடுப்பில், சில யோகப் பயிற்சிகளின் மூலமாக தன்னுணர்வை அடையலாம் என்று நினைப்பது அடிமட்ட முட்டாள்தனமாகும்.

ஆண்டாண்டு காலமாக வந்த நம் முன்னோர்களும் ஆச்சாரியர்களும் சாஸ்திரங்களை ஏற்றவர்களே.

மருத்துவக் கல்வி தனக்குள் சாத்தியமா?

எந்தவோர் அறிவையும் யாரும் தன்னுள் பெற்றதாக தெரிவதில்லை. சில அரிதான சூழ்நிலையில், சிலருக்கு சில அறிவு தானாக கிடைக்கப் பெறலாம். ஆனால் அது பொதுவான வழிமுறை அல்ல. ஒருவர் செய்த நற்காரியங்களைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது பல்கலைக்கழகங்கள் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மரியாதையின் அடிப்படையில் முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கலாம். ஆனால், முனைவர் பட்டம் வாங்க விரும்புவோர், அதுபோன்ற சலுகைக்காக காத்திருக்கக் கூடாது. முறைப்படி, கல்லூரிக்குச் சென்று பட்டப்படிப்பு, மேற்படிப்பு என முடித்து, முனைவர் பட்டம் பெற முயற்சி செய்ய வேண்டும். அதுபோல, சில நேரங்களில், குரு அல்லது கிருஷ்ணரின் கருணையால், ஒருவர் தன்னுணர்வினைப் பெறலாம். ஆனால் அதற்கான பொதுவான வழிமுறை, சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்ட வழிமுறையே. சலுகையாக கிடைக்கும் முனைவர் பட்டத்திற்காக காத்திருத்தல் எவ்வாறு முட்டாள்தனமோ, அதே போன்று தானாக கிடைக்கும் என்று தன்னுணர்விற்காக காத்திருப்பதும் முட்டாள்தனம்.

 

மற்றோர் உதாரணத்தைப் பாருங்கள்: யாரேனும் ஒருவர் உங்களிடம் வந்து, “நான் மருத்துவக் கல்வியை எந்தக் கல்லூரிக்கும் போகாமல் எந்தப் புத்தகத்தையும் படிக்காமல், எனக்குள் நானே உணர்ந்துள்ளேன். என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்கிறேன், இலவசமாக,” என்று அழைத்தால், நீங்கள் செல்வீர்களா? நிச்சயம் இல்லை. பௌதிகக் கல்வியான மருத்துவம்கூட அதுபோன்று சாத்தியமில்லை என்னும்போது, சாஸ்திரங்கள் (புத்தகங்கள்) எதையும் அணுகாமல், முறையான குரு சீடப் பரம்பரை (கல்லூரி) எதையும் அணுகாமல், ஆன்மீக உணர்வு என்பது எவ்வாறு சாத்தியம்? நிச்சயமாக இல்லை. வெறும் ஏமாற்று வேலையே.

நீங்கள் முட்டாளாகவே இருக்க வேண்டும்

இதில் இருக்கும் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், தானே தனக்குள் உணர்வதாக நினைத்துக்கொள்ளும் சில மூடர்கள், தங்களது மனதில் தோன்றும் கற்பனையான கருத்துகளை தத்துவங்கள் என்ற பெயரில் உளறி வருகின்றனர். மூடர்களாக இருக்கும் மக்களும் மடையர்களைப் போன்று இவர்களின் உளறல்களைக் கேட்டு வியந்து பாராட்டி வருகின்றனர். என்னே விந்தை! ஆன்மீக அறிஞர்கள், குருமார்கள் என்ற போர்வையில் திரியக்கூடிய இந்த நபர்கள், தங்களது மனதில் தோன்றும் கற்பனைகளின் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைத் தவறாக வழிநடத்தி வருகின்றனர். இதுபோன்ற தவறான வழிநடத்துதலிலிருந்து மக்களைக் காக்கவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை மற்றும் இதர சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த அயோக்கியர்களோ அந்த சாஸ்திரங்களே தேவையில்லை என்று கூறி மக்களை ஏமாற்றிவிடுகின்றனர்.

 

இப்படி இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் சாஸ்திரங்கள் தேவையில்லை என்று கூறுவதற்கு மற்றொரு காரணம் என்னவெனில், இவர்களைப் பின்பற்றுபவர்கள் சாஸ்திரங்களைப் படித்துவிட்டால் புத்திசாலிகளாகி தங்களுடைய அபத்தங்களுக்கு எதிராக கேள்வி கேட்பார்கள் என்பதே. சாஸ்திரங்களை யார் படித்தாலும், இயற்கையாகவே அவர்கள் இந்த போலி சாமியார்களை அடையாளம் கண்டுவிடுவர். எனவே, போலி சாமியார்கள் சாஸ்திரங்களைப் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

 

உங்களை முட்டாள்களாகவே வைத்திருப்பதில் இந்த போலி சாமியார்களுக்கு அலாதி பிரியம். அப்போதுதானே நீங்கள் ஆயிரத்தையும் இலட்சத்தையும் அவர்களிடம் கொட்டுவீர்கள்!

சாஸ்திரங்களைப் புறக்கணிப்பவர்களின் கதி

சாஸ்திரங்களின் விதிகளைப் புறக்கணித்துவிட்டு தங்களின் மனம்போன போக்கில் செயல்படுபவர்கள் மிகவும் மோசமானவர்கள். இவர்களால் ஒருபோதும் தங்களது முயற்சியில் பக்குவமடைய முடியாது, ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது, ஒருபோதும் இலக்கையும் அடைய முடியாது என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (16.23) தெளிவாகக் கூறுகிறார். மேலும், இத்தகைய நபர்களை அசுரர்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். சாஸ்திர விதிகளைப் புறக்கணிப்பவர்களுக்கே அந்த கதி என்றால், சாஸ்திரங் களையே புறக்கணிக்கும்படி அறிவுறுத்தக்கூடிய போலி சாமியார்களின் நிலையை என்னவென்று சொல்வது?

 

நூல்கள் தேவையில்லை என்பவர்கள் நூல்கள் எழுதுவது ஏன்?

 

ஆன்மீகத்தை எந்தவொரு வெளி நபரின் உதவியும் இன்றி “நீங்களே உங்களுக்குள் உணர வேண்டும் என்றால், அதற்கு ஏன் உபன்யாசங்கள்? மக்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே? அதை ஏன் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்? “நீங்களே உங்களுக்குள் உணர வேண்டும்” என்றால், அதைச் சொல்வதற்கு இன்னொரு நபர் ஏன்? எதற்காக ஆஸ்ரமங்கள், எதற்காக தொலைக்காட்சி உபன்யாசங்கள், எதற்காக பல கோடி ரூபாய்கள்? கோடிகளில் புரளும் இவர்கள், சாமியார்கள், வழிகாட்டிகள் என பல போர்வைகளில் தன்னுணர்வை நோக்கிச் செல்லும் மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஏமாற்று வேலைகளைச் செய்பவர்கள் அனைவரும் சாமியார்கள் அல்ல, பலர் தங்களை “ஆன்மீக வழிகாட்டி,” “ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள்,” என இதர பெயர்களிலும் விளம்பரப்படுத்தி கோடிகளைத் திரட்டுகின்றனர்.

 

இங்கே மேலும் ஒரு கேலிக்கூத்து என்னவெனில், புத்தகங்கள் தேவையில்லை என்று கூறும் இவர்களே தொடர்ந்து புத்தகங்களை எழுதி வருகின்றனர். அதாவது, இவர்களின் மனதில் தோன்றும் கற்பனைகளை மட்டும் நீங்கள் கேட்க வேண்டும். பகவான் கூறியதையோ ஆச்சாரியர்கள் கூறியதையோ கேட்கக் கூடாது.

யாரை நம்புவது?

எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், நாம் அனைவரும் யாராவது ஒருவரின் கூற்றினை ஏற்றே செயல்படுகிறோம். “நாமே நமக்குள் உணர வேண்டும்” என்று நாம் நினைத்தால்கூட, அந்த எண்ணமும் யாரோ ஒருவரிடமிருந்து நாம் கேட்டதே. எனவே, யாரை நம்புவது என்பதைத்தான் நாம் முடிவு செய்ய வேண்டும். ஆண்டாண்டு காலமாக கோடிக்கணக்கான நம் முன்னோர்களாலும் ஆச்சாரியர்களாலும் நம்பப்பட்ட சாஸ்திரங்களையா, அல்லது இருளில் ஒளிபோன்று திகழும் மின்மினி பூச்சிகளைப் போன்று கலி யுகத்தின் இருளில் தங்களை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கூறிக்கொள்ளும் கயவர்களையா–நீங்களே முடிவு செய்யுங்கள். கிருஷ்ணரால் உரைக்கப்பட்டு தொன்று தொட்டு பல்வேறு ஆச்சாரியர்களால் பின்பற்றப்பட்ட பகவத் கீதையா, இன்றைய நபர்களின் மனக் கற்பனையா?

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் இருக்கும் நாங்கள் பகவத் கீதையை ஏற்று, படித்து, பயிற்சி செய்து, பிரச்சாரம் செய்து வருகிறோம். இதில் இணைய உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். (எமது மையங்களின் விலாசங்கள் இறுதிப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.)

 

குறிப்பு: இக்கட்டுரையின் பல பகுதிகள், ஸ்ரீல பிரபுபாதர், 06 அக்டோபர், 1969இல் இலண்டனில் “வேதங்களின் உபதேசங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உபன்யாசத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

“சாஸ்திரங்கள் இருக்கும்போது குரு தேவையா?” என்னும் கேள்வி இக்கட்டுரையின் கேள்வியுடன் தொடர்புடையது. இதனை அடுத்த இதழில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives