யார் முட்டாள்?

Must read

சிந்திக்கத் தூண்டும் ஒரு சிறுகதை

வழங்கியவர்: திரு. ராதேஷ்யாம தாஸ்

படித்தவன் முட்டாளா? படிக்காதவன் முட்டாளா? உண்மையான முட்டாள் யார் என்பதை அறிய இந்த சிறுகதை உதவும்.

ஒரு முறை, ஒரு நாட்டின் மன்னனைக் காண ஒரு சாது வந்தார். நாட்டின் மன்னனாக இருப்பவர்கள் சாதுக்களின் அறிவுரையின்படி வாழ வேண்டும்–அதன்படி, மன்னனுக்கு அறிவுறுத்துவதற்காக சாதுக்கள் அரசவைக்கு அடிக்கடி வருவது வழக்கம். சாதுவைக் கண்ட மன்னன் பாரம்பரிய பழக்கத்தின்படி எழுந்து நின்று மிக்க மரியாதையுடன் அவரை வரவேற்று உபசரித்தான். மன்னனால் முறையாக வரவேற்கப்பட்ட சாது, மன்னனுக்குச் சில ஆன்மீக விஷயங்களை போதிக்க முயன்றார். ஆனால் மன்னனோ அதில் சற்றும் நாட்டம் காட்டவில்லை.

சாதுவிற்குத் தங்கம், வெள்ளி, மான்தோல், புலித்தோல் என்று ஏதேனும் ஒரு பரிசை வழங்கி, அதன் மூலம் அவரிடமிருந்து ஆசி பெறுவதில் மட்டும் மன்னன் குறியாக இருந்தான். பொன்னும் பொருளும் தனது ராஜ்ஜியத்தில் பொங்கி வளர வேண்டும், மக்கள் யாவரும் மன்னனான தனக்கு தயங்காது வரி செலுத்த வேண்டும் என்று மன்னன் ஆசியை வேண்டினான். “ஆன்மீக அறிவுரைகள் வேண்டாம், ஆசி மட்டும் கிடைத்தால் போதும்,” என்ற மன்னனின் மனப்பான்மையினை இன்றைய மக்களிடமும் நாம் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சாதுவின் விருப்பத்தைக் கேட்டு ஆச்சரியமுற்ற மன்னர்

மன்னனுக்கு ஆசி வழங்கிய சாது, அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். சாதுவின் விருப்பம் மிகவும் விசித்திரமாக இருந்ததால், அதைக் கேட்டு அரசவையில் இருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அப்படி என்ன கேட்டார்? “இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை  கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல். அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும், அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும்.”–இதுவே சாதுவின் விருப்பம். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும், ஒரு வித பயத்தினால் காரணம் ஏதும் கேட்காமல், மன்னன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.

சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்த பின்னர், அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரும்படி கட்டளையிட்டான்.

மன்னன் தொடர்ந்து தனது நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான். செல்வங்களைச் சேகரித்தான், இளவரசிகள் பலரை தனது இராணிகளாக் கினான், பல்வேறு மாளிகைகளைக் கட்டினான், மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வைக் கழித்தான். முட்டாளும் முட்டாள்தனமாக ஊரெங்கும் குச்சியுடன் வலம் வந்தான்.

காலங்கள் உருண்டோடின. மன்னனை வயோதிகம் வாட்டத் தொடங்கியது, படுத்த படுக்கையானான். விரைவில் மரணத்தைத் தழுவப் போவதை அறிந்து, உற்றார், உறவினர் என அனைவரையும் சந்திக்கப் பேராவல் கொண்டான். அண்டை நாட்டு மன்னர்கள், நாட்டின் முக்கியஸ்தர்கள் என அனைவரும் மரணப் படுக்கையில் இருந்த மன்னனை தினமும் சந்தித்து வந்தனர். அச்சமயத்தில் மன்னனைக் காண முட்டாளும் தனது குச்சியுடன் வந்தான்.

மரணப் படுக்கையில் கிடந்த மன்னனிடம் முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கும் முட்டாள்

நீண்ட நாட்கள் கழித்து, மன்னனைக் கண்ட மகிழ்ச்சியில், முட்டாள், “நீடூழி வாழ்க மன்னா,” என்று வாழ்த்து கோஷம் எழுப்பினான். தனது நிலையை உணராமல், வாழ்த்து கோஷம் எழுப்பும் முட்டாளை எண்ணி வருந்திய மன்னர், “நான் வாழ்ந்த காலம் முடிந்துவிட்டது, செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது,” என்று பதிலளித்தார்.

“எங்குச் செல்கிறீர்கள் மன்னா? எப்போது வருவீர்கள்?”

“வெகு தூரம் செல்கிறேன். திரும்பி வருவதாக இல்லை.”

“என்னையும் அழைத்துச் செல்லுங்களேன் மன்னா!”

“அங்கெல்லாம் உன்னைக் கூட்டிச் செல்ல இயலாது.”

“அப்படியெனில் இராணியர்களோடு தனியாகச் செல்லப் போகிறீர்! அதற்குத்தான் என்னை வேண்டாம் என்கிறீர்களோ?”

முட்டாளின் முட்டாள்தனத்தை எண்ணி மன்னனுக்குச் சற்று கோபம் ஏற்பட்டது. இருப்பினும் சற்று பொறுமையுடன் தன்னுடைய இராணியர்களை எல்லாம் அங்கு கூட்டிச் செல்ல இயலாது என்ற தெளிவான உண்மையை முட்டாளுக்கு எடுத்துரைத்தான்.

“இளைய இராணியரை மட்டுமாவது அழைத்துச் செல்லுங்களேன்.”

“இல்லை. நான் மட்டும் தனியாகத் தான் செல்ல வேண்டும்.”

“அப்படியெனில் அமைச்சர் தங்களுக்காக அற்புதமான குதிரை வண்டியை ஏற்பாடு செய்திருப்பார், தங்களிடம்தான் எண்ணிலடங்காத குதிரைகள் உள்ளனவே.”

அதிகரித்த கோபத்துடன், மன்னர், “முட்டாளே, குதிரைகளையும் என்னுடன் கூட்டிச் செல்ல இயலாது.”

“பாதயாத்திரையாகச் செல்ல உள்ளீரோ! வழிச் செலவிற்காகச் சற்று தங்க நாணயங்களையாவது எடுத்துச் செல்லுங்கள்.”

முட்டாளின் முட்டாள்தனமான கேள்விகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள இயலாத மன்னன், அவனுடைய பேச்சுகளை உடனே நிறுத்தும்படி கட்டளையிட்டான். இருப்பினும், சாதுவின் பேச்சைக் கேட்டு இந்த முட்டாளை வேலைக்கு வைத்தோம் என்ற காரணத்தினால், “இத்தனை காலம் நீ முட்டாளாக குச்சியுடன் நகரத்தைச் சுற்றி வந்ததால் உனக்கு இப்போது ஓய்வு தருகிறேன். இனிமேலும் நீ சுற்றி வரத் தேவையில்லை, உனக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். ஆனால் இந்த குச்சியை உன்னைவிடச் சிறந்த ஒரு முட்டாளைக் கண்டுபிடித்து அவனிடம் நீ கொடுக்க வேண்டும். அவனுக்கும் தக்க ஊதியம் வழங்க ஏற்பாடு செய்கிறேன்,” என்று உரைத்தார்.

பெரிய முட்டாளைக் கண்டுபிடித்து குச்சியைக் கொடுக்கும்படி மன்னன் கட்டளையிட, அந்த முட்டாள் உடனடியாக தனது குச்சியினை மன்னரிடம் நீட்டினான். “பிடித்துக் கொள்ளுங்கள் மன்னா.” கோபத்தில் வெகுண்டெழுந்த மன்னன், “என்ன தைரியம் உனக்கு, என்னையே பெரிய முட்டாள் என்கிறாயா?” என்று சவால் விடுத்தான்.

முட்டாள் தனது பேச்சின் தொனியை மாற்றினான்.

“நிச்சயம் மன்னா. நீங்களே பெரிய முட்டாள். ஆசையுடன் அனுபவித்த அரசியரையும், கஷ்டப்பட்டு கட்டிக்காத்த கஜானாவையும், பாசத்துடன் பார்த்து வளர்த்த படைகளையும், குதிரைகளையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல இயலாது என்று சொல்கிறீர்கள். ஆனால் எங்குச் செல்கிறோம் என்பதை நீங்கள் உணரவில்லை. எங்கு செல்கிறோம், ஏன் செல்கிறோம், எப்படிச் செல்கிறோம், யாருடன் செல்கிறோம், எதற்குச் செல்கிறோம் என்று எதையும் அறியாமல் எங்கோ செல்லும் உம்மைவிட பெரிய முட்டாள் யார் இருக்க முடியும்? இராணியரைச் சேர்த்தீர், குழந்தைகளைப் பெற்றீர், சேனைகளை வளர்த்தீர், பல ராஜ்ஜியங்களை வென்றீர், சொத்துக்களைக் குவித்தீர், கஜானாவையும் நிரப்பினீர். ஆனால் என்ன பிரயோஜனம்?

 

முட்டாளின் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டு வருத்தத்தில் நிற்கும் மன்னர். (இப்படம், “பிரபுபாத தியேட்டர்ஸ்” நாடகக் குழுவினரால் இக்கதை நாடகமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட ஒன்று)

நான் யார்? ஏன் பிறந்தேன்? ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்வின் குறிக்கோள் என்ன? கடவுள் யார்? கடவுளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? மரணம் என்றால் என்ன? பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் இருப்பது என்ன? என்று எதையும் தெரிந்து கொள்ளாமல் இந்த பூமியில் வாழ்ந்து என்ன பலன்?”

முட்டாளின் சொற்களில் பொதிந்திருந்த ஆழமான கருத்துகள் மன்னனின் நெஞ்சில் பசுமரத்தாணி போல நன்றாகப் பதிந்தன. குச்சியை வைத்துக் கொண்டு ஊரை வலம் வந்த முட்டாளிடம் இத்தனை ஞானமா! மன்னருக்கு சந்தேகம் எழ, தான் உண்மையில் முட்டாள் அல்ல என்றும், பல வருடங்களுக்கு முன்பு தங்களைக் காண வந்த சாதுவின் சீடன் என்றும், தக்க தருணத்தில் ஆன்மீக உபதேசம் அளிப்பதற்காக முட்டாளாக நடித்தேன் என்றும் விளக்கினான்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல, மரணம் தன்னை நெருங்கி வந்த பின்னர், வாழ்வின் உண்மையான பிரச்சனைகள் மன்னருக்குப் புரியத் தொடங்கின; வாழ்வை வீணடித்துவிட்டதாகப் புலம்பத் தொடங்கினான். இருப்பினும், எஞ்சியுள்ள காலங்களாவது பூரண கிருஷ்ண பக்தியில் பங்கு கொண்டு, பகவத் கீதையைப் படித்து, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்ற மஹா மந்திரத்தை உச்சரிக்கும்படி மன்னனுக்கு அவன் அறிவுறுத்தினான்.

தன்னையே பெரிய முட்டாளாக ஏற்றுக் கொண்ட மன்னன், தன்னைப் போல முட்டாளாக இருந்துவிடாதீர்கள் என்று தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தினான். எஞ்சிய குறுகிய காலத்தில் கிருஷ்ண பக்தியில் முழுமையாக ஈடுபட்டான்.

இருப்பினும், அவனது வாழ்வின் பெரும் பகுதி, ஒரு பெரிய முட்டாளின் வாழ்க்கையாகவே அமைந்தது. உண்மையில் நாம் சற்று யோசித்துப் பார்த்தால், நம்மில் பெரும்பாலானோர் ஆன்மீக வாழ்வில் ஆர்வம் காட்டாமல், உலகச் சொத்துக்களைச் சேகரிப்பதிலும் இன்பமடைவதிலும் முழுமூச்சாக செயல் பட்டுக் கொண்டுள்ளோம். ஆனால் அவை அனைத்தையும், அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைக்கூட மரணத்தின்போது நம்மால் கொண்டு செல்ல இயலாது. இந்த உண்மையை உணர்ந்து, பெரிய முட்டாளாக இருக்காமல், வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் இருந்தபடி கிருஷ்ண பக்தியை தீவிரமாகப் பயிற்சி செய்வதால் புத்திசாலியாக வாழ முடியும்.

பற்பல பிறவிகளைக் கடந்த பின்னர், யாரொருவன் புத்திசாலியோ, அவன் எல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணரிடம் சரணடைவான். அத்தகைய மஹாத்மா மிகவும் அரிதானவன் என்று பகவத் கீதை (7.19) கூறுகின்றது. கலி யுகத்தில் இருக்கும் புத்திசாலி மனிதர்கள், “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே” என்னும் பகவானின் திருநாமங்களை உச்சரித்து சங்கீர்த்தனத்தில் ஈடுபடுவர் என்று ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகின்றது. முட்டாளாக இருக்க வேண்டுமா, புத்திசாலியாக மாற வேண்டுமா என்பது நாம் ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று.

(இக்கட்டுரை, பூனேயில் உள்ள இஸ்கான் கோவிலின் தலைவராகத் தொண்டுபுரியும் திரு. ராதேஷ்யாம தாஸ் M.Tech., அவர்கள் எழுதிய Discover Yourself என்னும் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives