கடவுள் யார்?

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

கடவுளைப் பற்றி நவீன நாகரிக மனிதனிடம் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கலாம். குழந்தைகள் ஒரு வயதான மனிதரை தாடியுடன் இருப்பதாகக் கற்பனை செய்கின்றனர், பல இளைஞர்கள் கடவுளை கண்களுக்குப் புலப்படாத சக்தி என்றோ மனக் கற்பனை என்றோ நினைக்கலாம். இந்த உரையில், ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண உணர்வைப் பற்றிய தத்துவத்தை மிகவும் விளக்கமாக ஆச்சரியப்படத்தக்க வகையில் விளக்குகிறார்.

 

பெரியோர்களே, தாய்மார்களே! நீங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 1966இல் இந்த இயக்கம் நியூயார்க் நகரத்தில் பதிவு செய்யப்பட்டபோது, ஒரு நண்பர், இந்த இயக்கத்தை கடவுள் பக்தி இயக்கம் என்று பதிவு செய்யும்படிக் கூறினார். கிருஷ்ணர் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட சாரருக்கு உரியது என்று அவர் நினைத்தார். அகராதியில்கூட கிருஷ்ணர் என்பது இந்து கடவுளின் பெயர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கடவுளுக்கென்று ஏதேனும் ஒரு பெயர் கொடுக்கப்பட வேண்டுமெனில், அது கிருஷ்ணர் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

கடவுளின் பெயர் “கிருஷ்ணர்”

உண்மையில், கடவுளுக்கென்று குறிப்பிட்ட பெயர் ஏதுமில்லை. அதாவது, அவருக்கு எவ்வளவு நாமங்கள் உள்ளன என்பது யாருக்கும் தெரியாது என்னும் பொருளில் நாம் பேசுகிறோம். கடவுள் அளவற்றவர் என்பதால், அவருடைய நாமங்களும் அளவற்றவையாக இருக்க வேண்டும். எனவே, நாம் ஒரேயொரு பெயருடன் நின்று விட முடியாது. உதாரணமாக, கிருஷ்ணர் சில வேளைகளில் யசோத-நந்தனர் (அன்னை யசோதையின் மைந்தன்), அல்லது தேவகி-நந்தனர் (அன்னை தேவகியின் மைந்தன்), அல்லது வஸுதேவ-நந்தனர் (வஸுதேவரின் மைந்தன்), அல்லது நந்த-நந்தனர் (நந்த மஹாராஜரின் மைந்தன்) என்று அழைக்கப்படுகிறார். சில வேளைகளில், அவர் பிருதாவின் மைந்தனான பார்த்தன் என்று அழைக்கப்படும் அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்ததால், பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார்.

 

கடவுள் தன்னுடைய பல்வேறு பக்தர்களுடன் பல விதமான பரிமாற்றங்களில் ஈடுபடுகின்றார். அத்தகைய பரிமாற்றங்களுக்குத் தகுந்தவாறு அவர் பல்வேறு நாமங் களால் அழைக்கப்படுகின்றார். அவருக்கு எண்ணற்ற பக்தர்கள் இருப்பதாலும் அவர்களுடன் அவர் எண்ணற்ற உறவுமுறைகளை வைத்திருப்பதாலும், அவர் எண்ணற்ற நாமங்களை உடையவராக இருக்கின்றார். ஏதாவது ஒரு பெயரை நாம் குறிப்பிட்டுக் கூறி விட முடியாது. ஆயினும், “கிருஷ்ணர்” என்ற பெயருக்கு “எல்லாவற்றையும் வசீகரிப்பவர்” என்று பொருள். கடவுள் அனைவரையும் வசீகரிக்கின்றார். அதுவே கடவுள் என்பதன் வரையறை. நாம் கிருஷ்ணரின் பல படங்களைப் பார்த்திருக்கிறோம், அவர் பசுக்களை வசீகரிப்பதை நாம் காண்கிறோம்–கன்றுக் குட்டிகள், பறவைகள், மரங்கள், மிருகங்கள், செடிகொடிகள், போன்றவை மட்டுமின்றி விருந்தாவனத்தில் உள்ள நீரினைக்கூட அவர் கவர்கின்றார். அவர் இடையர் குலச் சிறுவர்கள், கோபியர்கள், நந்த மஹாராஜர், பாண்டவர்கள், மற்றும் முழு மனித சமுதாயத்தையும் வசீகரிப்பவராக இருக்கிறார். எனவே, கடவுளுக்கு ஏதாவது ஒரு பெயர் கொடுக்கப்பட வேண்டுமெனில், அதற்குப் பொருத்தமான பெயர் “கிருஷ்ணர்”.

எல்லா செல்வமும் கொண்ட கிருஷ்ணர்

மாமுனிவரும் எல்லா வேத இலக்கியங்களையும் தொகுத்த வியாஸதேவரின் தந்தையுமான பராசர முனிவர், கடவுளுக்கான வரையறையை வழங்குகிறார்:

முழுமுதற் கடவுளே எல்லா செல்வங்களின் உரிமையாளர். இவ்வுலகில் பல செல்வந்தர்கள் உள்ளனர், ஆனால் அவர்களில் யாரும் தன்னிடம் எல்லா செல்வங்களும் உள்ளதாகக் கூறிக்கொள்ள முடியாது. இருப்பினும், ஸ்ரீமத் பாகவதத்தில் நாம் கிருஷ்ணரை எல்லா செல்வங்களுடன் பார்க்கின்றோம். கிருஷ்ணர் இப்பூமியில் வாழ்ந்த போது, அவர் 16,108 மனைவிகளைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மனைவியும் சலவைக் கல்லாலும் நவரத்தினங்களாலும் பதிக்கப்பட்ட தனித்தனி மாளிகையில் வசித்து வந்தனர். அங்கிருந்த அறைகள் அனைத்தும் தந்தம், தங்கம், மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஆசனங்களால் நிரப்பப்பட்டிருந்தன, எல்லாமே செல்வச் செழிப்புகளுடன் இருந்தன. இந்த விவரங்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளளன.

வசீகரமான கிருஷ்ணர்

மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் யாரும் இதுவரை 16,108 மனைவிகளையும் அரண்மனைகளையும் வைத்திருந்ததில்லை. மேலும், கிருஷ்ணர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவியைச் சந்திக்கவில்லை. மாறாக, அவர் ஒரே சமயத்தில் எல்லா மாளிகைகளிலும் இருந்தார். அதாவது, அவர் தன்னை 16,108 உருவங்களாக விரிவாக்கம் செய்து கொண்டார்! ஒரு சாதாரண மனிதனுக்கு இது சாத்தியப்படாத ஒன்று, ஆனால் கடவுளுக்கு இஃது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. கடவுள் அளவற்றவர் என்பதால், அவரால் தன்னை எண்ணற்ற உருவங்களில் விரிவுபடுத்திக்கொள்ள முடியும். இல்லையேல், அவர் அளவற்றவர் என்ற வார்த்தைக்குப் பொருள் இல்லாமல் ஆகிவிடும். அவரால் 16,000 மனைவிகளை அல்ல, 16 கோடி மனைவிகளைக்கூட பராமரிக்க முடியும். அப்போதுகூட அவர் எந்த சிரமத்திற்கும் ஆளாக மாட்டார். இல்லையேல், அவர் ஸர்வ-சக்திமான் என்று கூறுவதற்குப் பொருள் இல்லாமல் போகும்.

 

இவை எல்லாமே வசீகரமான அம்சங்கள். இந்த பௌதிக உலகில் ஒரு மனிதர் மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தால், அவர் வசீகரம் கொண்டவராக கருதப்படுகிறார். உதாரணமாக, அமெரிக்காவில் ராக்ஃபெல்லர், ஃபோர்டு போன்றவர்கள் செல்வச் செழிப்பின் காரணமாக மிகுந்த வசீகரத்துடன் இருந்தனர். அவர்களிடம் உலகத்தின் முழு செல்வமும் இல்லாதபோதிலும், அவர்கள் கவர்ச்சிமிக்கவர்களாக இருந்தனர். எனவே, எல்லா செல்வங்களையும் தன்னிடத்தே கொண்டுள்ள கடவுள் எவ்வளவு வசீகரமானவராக இருப்பார்?

பலசாலி கிருஷ்ணர்

அதுபோலவே, கிருஷ்ணரிடம் அளவிட முடியாத பலம் உள்ளது. அவர் பிறந்ததிலிருந்தே பலசாலியாக இருந்தார். கிருஷ்ணர் மூன்றே மாதக் குழந்தையாக இருந்தபோதே பூதனை என்ற அரக்கி அவரைக் கொல்வதற்கு முயற்சி செய்தாள், ஆனால் அவள் கிருஷ்ணரால் கொல்லப்பட்டாள். அவரே கடவுள். துவக்கத்திலிருந்தே கடவுள் கடவுளாகத் தான் இருப்பார், ஏதோ தியான முறையாலோ சித்திகளாலோ அவர் கடவுளாகி விடுவதில்லை. கிருஷ்ணர் அதுமாதிரியான கடவுள் அல்ல.

புகழ் வாய்ந்த கிருஷ்ணர்

கிருஷ்ணரிடம் அளவற்ற புகழும் இருக்கின்றது, கிருஷ்ண பக்தர்களான நாம் அவரை தொடர்ந்து புகழ்கிறோம். இது தவிர, இவ்வுலகிலுள்ள இலட்சக் கணக்கானோர் பகவத் கீதையின் புகழினைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளிலும் தத்துவவாதிகள், மனோதத்துவ நிபுணர்கள், மற்றும் மதவாதிகளால் பகவத் கீதை படிக்கப்படுகின்றது. நம்முடைய பகவத் கீதை உண்மையுருவில் அதிகளவில் விற்பனையாவதை நாம் காண்கிறோம். ஏனெனில், விற்கப்படும் பொருள் தூய்மையான தங்கம். பகவத் கீதைக்குப் பல பிரசுரங்கள் உள்ளன, ஆனால் அவை தூய்மையானதாக இல்லை, நாங்கள் பகவத் கீதையை அதன் உண்மையான உருவில் வழங்குகிறோம். பகவத் கீதையின் பெருமை கிருஷ்ணரின் பெருமை.

அழகு வாய்ந்த கிருஷ்ணர்

கிருஷ்ணரிடம் இருக்கும் மற்றொரு ஐஷ்வர்யம்–அழகு. கிருஷ்ணரிடம் அழகு அளவற்று காணப்படுகிறது, அவரது அனைத்து சகாக்களும்கூட மிகவும் அழகானவர்கள். முந்தைய பிறவியில் புண்ணியவான் களாக இருந்தவர்கள், இந்தப் பிறவியில், ஒரு நல்ல குடும்பத்திலோ நல்ல நாட்டிலோ பிறவியெடுக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க மக்கள் மிகுந்த செல்வச் செழிப்புடையவர்கள், அழகானவர்கள். இந்த ஐஷ்வர்யங்கள் முந்தைய புண்ணியச் செயல்களின் விளைவாக வந்தவை. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அமெரிக்கர்களின்பால் ஈர்க்கப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் விஞ்ஞான அறிவு, செல்வச் செழிப்பு, அழகு மற்றும் இதர ஐஷ்வர்யங்களில் முன்னணியில் உள்ளனர். இப்பூமியில் இருக்கும் அமெரிக்கா என்ற நாடு பலவித வசீகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது யோசித்துப் பார்க்கலாம்! கடவுள் எவ்வளவு வசீகரமான அம்சங்களைத் தன்னிடத்தே கொண்டிருப்பார்! அவர் தானே இந்த பிரபஞ்சங்கள் அனைத்தையும் படைத்தவர். எல்லா அழகையும் படைத்த அவர் எவ்வளவு அழகாக இருப்பார்?

 

தன்னுடைய அழகினால் மட்டும் ஒருவர் கவர்ச்சிகரமாக இருப்பதில்லை, அவருடைய அறிவுக் கூர்மையும் காரணமாக அமைகிறது. ஆனால் பகவத் கீதையில் கிருஷ்ணரால் கொடுக்கப்பட்ட ஞானத்தைவிட வேறு எந்த ஞானம் மேலானதாக இருக்க முடியும்?

 

அதே சமயத்தில் கிருஷ்ணர் பூரண பற்றின்மையையும் கொண்டுள்ளார். இந்த ஜடவுலகில் எத்தனையோ விஷயங்கள் கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. ஆனால் கிருஷ்ணர் இங்கு இல்லை. முதலாளி இங்கு இல்லாதபட்சத்திலும் இந்தப் பெரிய தொழிற்சாலை தொடர்ந்து வேலை செய்கிறது. அதுபோலவே, தேவர்களின் மூலமாக கிருஷ்ணரின் சக்திகள் செயல்படுகின்றன. அவர் இந்த ஜடவுலகத்திலிருந்து விலகியே இருக்கின்றார்.

 

எனவே, கடவுளுக்கு அவர் ஈடுபடும் செயல்களுக்குத் தகுந்தவாறு பல நாமங்கள் உள்ளன. இருப்பினும், அவர் பல ஐஷ்வர்யங்களைத் தன்னிடத்தே முழுமையாகக் கொண்டிருப்பதாலும் அந்த ஐஷ்வர்யங்களினால் எல்லாரையும் வசீகரிப்பதாலும், அவர் கிருஷ்ணர் என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறாக, கடவுளுக்குப் பல நாமங்கள் உள்ளபோதிலும், அவற்றில் “கிருஷ்ணர்” என்பதே மிக முக்கிய பெயராகும். பகவானின் நாமங்கள், அவரது புகழ், லீலைகள், அழகு, அன்பு ஆகியவற்றைப் பற்றி பிரச்சாரம் செய்வதே இந்த ஹரே கிருஷ்ண இயக்கத்தின் நோக்கமாகும்.

அளவிட இயலாத ஆன்மீக உலகம்

இந்த உலகிலுள்ள அனைத்தும் ஜட வஸ்துக்களால் ஆனவை, உண்மையான பொருட்கள் ஆன்மீக உலகில் உள்ளன. பகவத் கீதையைப் படித்தவர்கள் ஆன்மீக உலகம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்:

 

பரஸ் தஸ்மாத் து பாவோ ‘ன்யோ

‘வ்யக்தோ ’வ்யக்தாத் ஸநாதன;

ய: ஸ ஸர்வேஷு பூதேஷு

நாஷ்யத்ஸு ந வினஷ்யதி

 

“இந்த ஜடவுலகிற்கு அப்பால் வேறொர் இயற்கை உள்ளது. அது நித்தியமானது, தோன்றி மறையும் இந்த ஜட உலகத்திற்கு அப்பாற்பட்டது. அது பரமமானது. எப்போதும் அழிக்கப்படாதது. இந்த உலகம் முழுவதும் அழிக்கப்படும்போதும், அந்தப் பகுதி அப்படியே இருக்கிறது.” (பகவத் கீதை 8.20)

விஞ்ஞானிகள் இந்த பௌதிக உலகத்தின் நீள அகலத்தை அளவிட முயற்சிக்கின்றனர், ஆனால் அவர்களால் அம்முயற்சியில் சிறிதளவுகூட முன்னேற்றம் பெற முடியாது. தங்களுக்கு மிக அருகிலிருக்கும் நட்சத்திரத்திற்குச் செல்வதற்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கலாம். இந்த பௌதிக உலகையே நம்மால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாதபோது, இதற்கு அப்பால் இருப்பதைப் பற்றி நம்மால் எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்? விஷயம் என்னவென்றால், நாம் அதிகாரபூர்வமான மூலத்திடமிருந்து கேட்டு இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். மிகவும் அதிகாரபூர்வமான மூலம் கிருஷ்ணரே! ஏனெனில், அவர்தான் எல்லா ஞானத்தின் இருப்பிடம். கிருஷ்ணரை விட அதிக புத்திசாலியோ அதிக ஞானம் உள்ளவர்களோ வேறு யாரும் இல்லை.

 

இந்த பௌதிக உலகத்தைத் தாண்டி எண்ணிலடங்காத கிரகங்களைக் கொண்ட ஓர் ஆன்மீக வானம் உள்ளது என்று கிருஷ்ணர் நமக்குத் தெரிவிக்கிறார். அந்த வானமானது மொத்தப் படைப்பில் நான்கில் ஒரு பங்கேயான பௌதிக வானத்தைக் காட்டிலும் மிகவும் பரந்தது. அதுபோலவே, இந்த பௌதிகப் படைப்பிலுள்ள உயிர்வாழிகள், மொத்தப் படைப்பில் வாழும் உயிர்வாழிகளின் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியே. இந்த பௌதிக உலகமானது ஒரு சிறைச்சாலைக்கு ஒப்பிடப்படுகின்றது. எவ்வாறு சிறைச்சாலையில் இருக்கும் மக்கள் வெளியில் உள்ள மக்களில் ஒரு சிறு சதவிகிதமோ, அதே போன்று இந்த பௌதிக உலகில் வாழும் உயிர்வாழிகள் மொத்தப் படைப்பில் வாழும் ஒரு சிறு சதவிகிதமே!

 

கடவுளுக்கு எதிராகக் குற்றம் செய்த குற்றவாளிகள் பௌதிக உலகில் வைக்கப்படுகின்றனர். சில வேளைகளில் “நாங்கள் அரசாங்கத்தை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை” என்று குற்றவாளிகள் கூறுவதுண்டு. இருப்பினும், அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப் படுகின்றனர். அதுபோலவே, கடவுளின் அதிகாரத்தை மறுப்பவர்களும் இந்த பௌதிக உலகில் வைக்கப்படுகின்றனர்.

உண்மையான பிரச்சனைகளை அணுகுவோம்

இந்த கிருஷ்ண பக்தி இயக்கமானது இவை குறித்து மனித சமுதாயத்திற்கு பூரண அறிவை வழங்குவதற்காக உள்ளது. இம்மாதிரியான அறிவின் முலமாக, “நான் யார்? கடவுள் யார்? பௌதிக உலகம் என்பது யாது? நாம் ஏன் இங்கு வந்தோம்? நாம் ஏன் இந்த அளவு மனக் கிலேசங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம்? நாம் ஏன் இறக்க வேண்டியுள்ளது?” போன்ற கேள்விகளுக்கான விடையைப் பெறுவோம். உண்மையில் நாம் யாரும் இறக்க விரும்புவதில்லை, ஆனால் இறப்பு வருகிறது. நாம் யாரும் வயோதிகனாக விரும்புவதில்லை, ஆனால் வயோதிகம் வருகிறது. யாரும் வியாதிகளால் துன்பப்பட விரும்புவதில்லை, ஆனால் கண்டிப்பாக நோய் வருகிறது.

 

இவையே மனித வாழ்வின் உண்மையான பிரச்சனைகள். நவீன நாகரிகமானது உண்ணுதல், உறங்குதல், பாலுறவு, தற்காப்பு ஆகியவற்றை விருத்தி செய்துகொள்ள முயல்கிறது. ஆனால் இவை உண்மையான பிரச்சனைகள் அல்ல. ஒரு மனிதன் உறங்குகிறான், நாயும் உறங்குகிறது. அருமையான இடத்தில் தங்குவதால் மட்டும் ஒருவன் அதிக முன்னேற்றம் அடைந்தவனாக ஆகிவிட முடியாது–செய்யப்படும் செயலில் எந்த மாற்றமும் இல்லையே.

 

மனிதன் தன் தற்காப்பிற்காக அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளான், ஆனால் நாய்கூட பற்களையும் கூரிய வளைந்த நகங்களையும் கொண்டுள்ளது. மனிதனிடம் அணுகுண்டு இருப்பதால், அவன் எல்லா உலகத்தையும் அல்லது எல்லா பிரபஞ்சங்களையும் வெற்றிகொள்ள முடியும் என்று கூற முடியாது, அது சாத்தியமில்லை. மனிதன் தற்காப்பிற்காக விரிவான வழிமுறைகளைக் கொண்டிருந்தாலும், உண்பதற்கு, உறங்குவதற்கு, இனச்சேர்க்கைக்கு என ஆடம்பரமான வழிமுறைகளைக் கொண்டிருந்தாலும், அஃது அவனை முன்னேறியவனாக மாற்ற முடியாது. அவனுடைய முன்னேற்றத்தை “பகட்டான மிருக வாழ்க்கை” என்று கூறலாம், அவ்வளவே!

இறை விஞ்ஞானத்தை உணர்வோம்

உண்மையான முன்னேற்றம் கடவுளைத் தெரிந்து கொள்வதே. கடவுளைப் பற்றிய ஞானத்தில் நாம் பின்தங்கியிருந்தால், நாம் முன்னேறியவர்கள் அல்ல. பல மூடர்கள் கடவுள் இருப்பதை மறுக்கின்றனர்; ஏனெனில், கடவுள் இல்லாவிடில், அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கின்றனர். கடவுள் இல்லை என்று எண்ணுவது அவர்களுக்கு மிக அருமையானதாகத் தோன்றலாம். ஆனால் நாம் அவரது இருப்பை மறுப்பதால் மட்டும் கடவுள் இறந்துவிடப் போவதில்லை. கடவுள் இருக்கின்றார், அவரது அரசாங்க நிர்வாகமும் இருக்கின்றது. அவருடைய உத்தரவினால் சூரியன் உதிக்கின்றது, தண்ணீர் பாய்கிறது, சமுத்திரம் அலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றும் அவரது உத்தரவின்படியே செயல்படுகின்றன.

 

எல்லாமே மிக அருமையான முறையில் செயல்படும்போது, கடவுள் இறந்துவிட்டதாக ஒருவர் எவ்வாறு எண்ண முடியும்? மக்கள் கடவுளை அறியாததால், “கடவுள் இறந்துவிட்டார்,” “கடவுள் இல்லை,” “கடவுளுக்கு உருவம் கிடையாது” என்று கூறுகின்றனர். ஆனால் கடவுள் இருப்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், அதிலும் கிருஷ்ணர்தான் கடவுள் என்பதில் நம்பிக்கை கொள்கிறோம். எனவே, நாங்கள் அவரை வழிபடுகின்றோம். இதுவே கிருஷ்ண உணர்வு முறை. இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்! மிக்க நன்றி.

(தமிழாக்கம்: ஜெய கோவிந்தராம தாஸ்)

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment