பல்கலைக்கழக படிப்பை விட்டுவிட்டு கிருஷ்ணரிடம் சரணடைந்த புதிய பக்தர் ஒருவரின் தாயிடமும் அவளுடன் வந்த யூத மத பாதிரியாருடனுமான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்
ஸ்ரீல பிரபுபாதர்: (பக்தரின் தாயிடம்) எங்களின் வேத அறிவின் படி பாவ வாழ்விற்கு நான்கு தூண்கள் உண்டு: தகாத உடலுறவு, தேவையற்ற மிருகவதை, போதைப் பொருளை உபயோகித்தல், மற்றும் சூதாடுதல். எங்களின் மாணவர்கள் இவற்றைக் கைவிடுவதற்கான பயிற்சியைப் பெறுகின்றனர். அவர்கள் காய்கறிகள், மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை உண்டு, இறைவனின் திருநாமமான ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து, மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வாழ்கின்றனர். இதனை நீங்கள் உங்களது மகனைப் பார்த்தே அறியலாமே!
தாய்: ஆம். அவன் மகிழ்வுடன் இருப்பதை நான் காண்கிறேன். இருப்பினும், அவன் மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து வந்தவன், அவன் என்றும் மகிழ்ச்சியாகவே இருப்பவன்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஆனால், அவன் தற்போது மேலும் மகிழ்ச்சியுடன் உள்ளான். முன்பு அவன் மகிழ்ச்சியாக இருந்தான், தற்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளான்.
தாய்: மைக்கேலின் மகிழ்ச்சி குறித்து எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அவன் தனது பல்கலைக்கழக படிப்பைத் தொடராதது மட்டுமே எனக்கு ஏமாற்றமாக உள்ளது.
ஸ்ரீல பிரபுபாதர்: எங்களது கிருஷ்ண பக்தி இயக்கம் யாருடைய கல்வியையும் பறிப்பதில்லை. “உங்களின் பல்கலைக்கழக கல்வியைத் தொடருங்கள். அதனுடன் இணைந்து, கடவுளை அறிவதற்கும் அவர்மீது அன்பு செலுத்துவதற்கும் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்வு பக்குவமடையும்,” என்று நாங்கள் கூறுகிறோம்.
ஆனால், எப்படிப் பார்த்தாலும், கல்வியின் குறிக்கோள் என்ன? கல்வியின் இறுதி நிலை கடவுளை அறிவதே என்று எங்களின் வேத நாகரிகம் கற்றுக் கொடுக்கின்றது. அதுவே கல்வி. அதற்கு மாறாக, எவ்வாறு நன்றாக உண்பது, எவ்வாறு நன்றாக உறங்குவது, எவ்வாறு உடலுறவு கொள்வது, எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்றவற்றிற்கான கல்வி மிருகங்களிடம் கூட உண்டு. கல்வியின் இந்நான்கு பிரிவுகள் மனிதர்களுக்கு போதுமானவை அல்ல. கடவுளை எவ்வாறு நேசிப்பது என்பதை மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும், அதுவே பக்குவநிலை.
தாய்: ஆம். நீங்கள் கூறுவதை நான் முழுமையாக ஏற்கின்றேன். கடவுளிடம் இன்றும் நெருக்கமாக உள்ள பல்வேறு விஞ்ஞானிகளை (கல்வி கற்றவர்களை) என்னால் கூற முடியும். இந்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இல்லையேல் நாம் எங்கே இருப்போம்…
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் மருத்துவ விஞ்ஞானத்தில் மருத்துவராக இருப்பது மட்டும் ஒருவரைக் காப்பாற்றாது. துரதிர்ஷ்டவசமாக, பல மருத்துவர்கள் மறுபிறவியை நம்புவதில்லை.
தாய்: நம்புவோரும் உள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் தேவாலயத்திற்கு வரும் மருத்துவர் ஒருவரை நான் அறிவேன். மைக்கேலுக்கும் அவரைத் தெரியும். அவர் மறுபிறவியை நம்புகிறார், அவர் மிகவும் நல்ல மனிதர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், மறுபிறவியை நம்பும் மேற்கத்தியர்கள் பொதுவாக அதனை தீவிரமாக எடுத்துக்கொள்வது இல்லை. மறுபிறவியைப் பற்றி அவர்கள் உண்மையிலேயே நம்பினால், அடுத்த பிறவி எவ்வாறு இருக்கும் என்பதில் அவர்கள் அதிக கவனம் செலுத்தியிருப்பார்கள். 84,00,000 வகையான உயரினங்கள் உள்ளன. மரங்களும் ஒரு வகையான உயிரினங்களே, பூனைகளும் நாய்களும்கூட ஒரு வகையான உயிரினங்களே, மலத்திலுள்ள புழுவும் ஒரு வகையான உயிரினமே. நமக்கு மறுபிறவி உண்டு என்பதாலும் தற்போதைய உடலை விட்டு வேறு உடலினுள் நாம் புக வேண்டும் என்பதாலும், அடுத்த பிறவியில் எத்தகைய உடலை அடையப் போகிறோம் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். மறுபிறவிக்கு மாணவர்களைத் தயார் செய்வதற் கான கல்வியை வழங்கும் பல்கலைக்கழகம் எங்கே உள்ளது?
பாதிரியார்: உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் இப்பணியைச் செய்கின்றன. அதுவே எங்களின் முக்கிய குறிக்கோளாகும். இளைய மாணவ மாணவிகளுக்கு இவ்வுலகில் வெற்றி பெறுவதற்கு கற்றுத் தருகிறோம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, வெற்றி என்பது மறுவாழ்வில் கடவுளுடன் நிரந்தரமாக இணைவதாகும். அதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், அடுத்த பிறவியில் எத்தகைய உடலைப் பெறுவோம் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
பாதிரியார்: எனக்குத் தெரிந்தவரையில், அழிவு என்பது கிடையாது. நான் கடவுளுடன் இணையப் போகிறேன்.
தாய்: எல்லாம் வல்ல இறைவனுடன் நாம் இணையப் போகிறோம், அவ்வளவுதான். மரணமடையும்போது நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் செல்லப் போகிறோம். நாம் கவலைப்படத் தேவையில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் கடவுளிடம் செல்வதற்குத் தேவையான தகுதி என்ன? அனைவருமே கடவுளிடம் செல்கிறார்களா?
தாயும் பாதிரியாரும் (இணைந்தபடி): ஆம். ஆம்.
பாதிரியார்: கடவுள்மீது நம்பிக்கை வைத்து, நல்வாழ்வை வாழ்ந்து, தம்மால் இயன்றதை இவ்வுலகில் செய்யும் அனைவரும் கடவுளிடம் இணைய முடியும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், அடுத்த கேள்வி, நல்வாழ்வு என்றால் என்ன?
பாதிரியார்: கடவுளின் கட்டளைப்படி நடத்தல்.
ஸ்ரீல பிரபுபாதர்: அக்கட்டளைகளில் ஒன்று “கொல்லாதிருப் பாயாக.” அப்படியெனில், யாரேனும் அப்பாவி மிருகங்களைக் கொன்று அவற்றை உண்டு வந்தால், அவர்கள் நல் வாழ்க்கையை நடத்துபவர்களா?
பாதிரியார்: ஐயா, நீங்கள் சற்று நியாயமின்றி பேசுகிறீர்கள். “கொல்லாதிருப்பாயாக” என்றால், “தேவையின்றி எந்த உயிரையும் பறிக்காதே” என்றே பொருள்படும். மாமிசம் உண்ணாமல் நம்மால் எவ்வாறு வாழ முடியும்?
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் எவ்வாறு வாழ்கிறோம்?
காய்கறிகள், தானியங்கள், பழங்கள், மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட அருமையான உணவுகளை மட்டுமே நாங்கள் உண்கிறோம். நாங்கள் மாமிசம் உண்பதில்லை.
பாதிரியார்: அதை இவ்வாறு நோக்குங்கள். சற்று முன்பு நீங்கள் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் இருப்பதாகக் கூறினீர்கள். உருளைக் கிழங்கு, முட்டைகோஸ் என அனைத்து காய்கறிகளுக்கும் உயிர் உள்ளது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
பாதிரியார்: ஆகவே, இந்த காய்கறிகளை வேக வைக்கும்போது அவற்றின் உயிரை அழிக்கிறீர்களே?
ஸ்ரீல பிரபுபாதர்: இதன் மூலமாக நீங்கள் கூற வரும் தத்துவம் என்ன? உருளைக் கிழங்கைக் கொல்வதும் அப்பாவி மிருகத்தைக் கொல்வதும் சமம் என்கிறீர்களா?
பாதிரியார்: “கொல்லாதிருப்பாயாக” என்று கூறினீர்கள், ஆனால் நீங்கள் உருளைக் கிழங்கைக் கொல்லவில்லையா?
ஸ்ரீல பிரபுபாதர்: நாம் அனைவரும் மற்ற உயிர்களை உண்டுதான் வாழ வேண்டும்: ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம். ஆனால் உருளைக் கிழங்கை உண்பதும் மிருகங்களை உண்பதும் சமமாகாது. அவை இரண்டும் சமம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பாதிரியார்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், நீங்கள் ஏன் ஒரு குழந்தையைக் கொன்று உண்ணக் கூடாது?
பாதிரியார்: குழந்தையைக் கொல்வது பற்றி என்னால் ஒரு நிமிடம்கூட சிந்திக்க முடியாது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் குழந்தைகள், மிருகங்கள் என இருவருமே உதவியற்ற அப்பாவிகள். ஒரு குழந்தை அப்பாவியாக உள்ளது என்பதால், அதைக் கொல்லலாம் என்பதில்லை. அதுபோல, மிருகங்கள் அப்பாவிகளாக அறிவற்றவையாக இருந்தாலும், தேவையின்றி அவற்றை நாம் கொல்லக் கூடாது. அறிவுள்ள மனிதன், அல்லது மதத்தைப் பின்பற்றும் மனிதன் இவற்றை நிச்சயம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். “காய்கறிகள், பழங்கள், மற்றும் பாலினால் எனக்கு உணவு கிடைக்கும்போது, நான் எதற்காக மிருகத்தைக் கொன்று உண்ண வேண்டும்?” அதுமட்டுமன்றி, மரங்களிலிருந்து பழங்களைப் பறிப்பதில் கொலை ஏதும் இல்லை. மேலும், பசுவிடமிருந்து பாலைப் பெறும்போது, பசுவை நாங்கள் கொல்வதில்லை. இவ்வாறு கொலை செய்யாமல் வாழ முடியும் என்கிறபோது, எதற்காக மிருகங்களைக் கொல்ல வேண்டும்?
பாதிரியார்: மாமிசம், பன்றி இறைச்சி போன்றவற்றை உண்பதால், அவை என்னை பாவியாக மாற்றுகின்றன என்று நீங்கள் கூறுகிறீர்களா? அவற்றை நான் உண்ணாவிடில், பாவம் குறைந்தவனாகி விடுவேனா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
பாதிரியார்: மாமிசம் உண்பதை நான் கைவிட்டால், அஃது என்னை வேறுபட்ட மனிதனாக மாற்றுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் தூய்மையடைவீர்கள்.
பாதிரியார்: நீங்கள் கூறுவது மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: மிருகங்களைக் கொல்பவர்கள் கடவுளை அறிய முடியாது. இதை நான் பார்த்திருக்கிறேன்; இஃது உண்மை. கடவுளைப் புரிந்துகொள்வதற்கான அறிவு அவர்களிடம் இருப்பதில்லை.