ஜகந்நாத புரி, பாகம் 2

Must read

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

கலி யுகத்திற்கு உகந்த திவ்ய க்ஷேத்திரமான ஜகந்நாத புரிக்கு பெருமை சேர்த்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்றால் அது மிகையாகாது. ஜகந்நாத புரியிலுள்ள பல்வேறு முக்கிய ஸ்தலங்கள் அவருடன் தொடர்புடையவை என்பதும், புரிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் அவரைப் பின்பற்றுவோர் என்பதும் இதற்கு சான்றாக அமைகின்றது. புரியின் பிரதான ஸ்தலமாகிய ஜகந்நாதரின் திருக்கோயிலைப் பற்றி “தீர்த்த ஸ்தலங்கள்” பிரிவின் சென்ற பகுதியில் (பிப்ரவரி மாத பகவத் தரிசனத்தில்) கண்டோம். இந்த இதழில் புரியிலுள்ள இதர முக்கிய ஸ்தலங்களைப் பற்றி காணலாம்.

மஹாபிரபு புரியில் தங்கியதன் ரகசியம்

விருந்தாவனம், மதுரா, துவாரகா ஆகிய இடங்களில் கிருஷ்ணர் செய்யும் அனைத்து திவ்ய லீலைகளையும் ஒன்றாக வெளிப்படுத்தக்கூடிய இடம் புரி க்ஷேத்திரம். சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் பூண்ட பிறகு, புரி க்ஷேத்திரத்தை தனது தலைமையிடமாகக் கொண்டதற்கு சில விசேஷ காரணங்கள் உள்ளன. வெளிப்புறமாகப் பார்த்தால் அவர் தனது அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க வங்காளத்திற்கு அருகிலுள்ள புரி க்ஷேத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டதாகத் தோன்றும். உட்புறமாகப் பார்த்தால், கிருஷ்ணரின் பிரிவில் செய்யக்கூடிய பக்தியினால் கிடைக்கக்கூடிய உயர்ந்த ஆனந்தத்தை சைதன்ய மஹாபிரபு அனுபவிப்பதற்கு புரி க்ஷேத்திரம் மிகவும் உகந்ததாக விளங்கியதைக் காணலாம். ராதாராணியின் மனோபாவத்தைக் கொண்ட சைதன்ய மஹாபிரபு, நீண்ட கால பிரிவிற்குப் பிறகு, கிருஷ்ணரான ஜகந்நாதரை சந்திக்கக்கூடிய திவ்ய ஸ்தலமாக விளங்குவது புரி க்ஷேத்திரம். இங்கு அவர் லீலைகள் நிகழ்த்திய ஸ்தலங்களை ஒவ்வொன்றாகக் காணலாம்.

 

குண்டிசா கோயில்

ஜகந்நாதர் கோயிலை நீலாசலம் என்றும் குண்டிசா கோயிலை சுந்தரசலம் என்றும் அழைப்பதுண்டு. நீலாசலம் என்பது துவாரகையையும், சுந்தரசலம் என்பது விருந்தாவனத்தையும் குறிக்கின்றது. குண்டிசா கோயிலுக்கும் விருந்தாவனத்திற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஒவ்வொரு வருடமும் ஜகந்நாதரின் ரதயாத்திரை இங்குதான் முடிவு பெறுகின்றது. சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரைச் சந்தித்த கோபியர்கள் கிருஷ்ணரை ரதத்தில் அமர வைத்து விருந்தாவனம் அழைத்து வந்தனர். இதன் சிறப்பை பிரதிபலிப்பதுதான் ஜகந்நாதரின் ரதயாத்திரை. அதாவது, ரதயாத்திரையின்போது ஜகந்நாதர் விருந்தாவனத்திற்கு (குண்டிசாவிற்கு) வருகை புரிகிறார். குண்டிசா கோயிலில் ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரை ஆகிய மூவரும் ஒரு வாரம் ஓய்வெடுக்கின்றனர். இச்சமயத்தில் இவர்களை தரிசித்தல் நீலாச்சல மலையில் பத்துமுறை தரிசிப்பதற்கு சமம் என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இக்கோயில் ஜகந்நாதரின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது.

 

குண்டிசா என்பது மன்னர் இந்திரத்யும்னரின் மனைவியின் பெயர். இந்திரத்யும்ன மன்னரிடம் என்ன வரம் வேண்டும் என்று ஜகந்நாதர் கேட்டபோது, “எனக்கு சந்ததியினர் இருந்தால், பின்னாளில் ஜகந்நாதரின் கோயில் தங்களுடைய சொத்து என்று உரிமை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டாம்” என்றார். இதைக் கேட்டு வருத்தமடைந்த குண்டிசா தேவியிடம், “கவலைப்பட வேண்டாம்,  நானே உங்கள் இருவருக்கும் மகனாக இருந்து சிரார்த்த கடமைகளைச் செய்வேன். உங்களின் திருப்திக்காக வருடத்தில் ஒருமுறை இங்கு வந்து தங்குவேன்,” என்று ஜகந்நாதர் கூறினார். அதன்படி, ரதயாத்திரையின் இறுதியில் இங்கே ஜகந்நாதர் ஒரு வாரம் தங்குகிறார்.

 

சைதன்ய மஹாபிரபு தனது தெய்வீக லீலைகளை புரியில் அரங்கேற்றிய காலக்கட்டத்தில், ரதயாத்திரை தொடங்குவதற்கு முன்பாக அவர் தனது சகாக்களுடன் குண்டிசா கோயிலை சுத்தப்படுத்துவார். யார் அதிக குப்பைகளையும் தூசுகளையும் அகற்றுகிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுடைய இதயமும் சுத்தமாகும் என்று சைதன்ய மஹாபிரபு தன் சகாக்களை ஊக்குவிப்பார். குண்டிசா கோயிலை தூய்மைப்படுத்துவதில் பக்தர்களிடையே கடும் போட்டி நிகழும்.

சைதன்ய மஹாபிரபு தன் சகாக்களுடன் குண்டிசா கோயிலை சுத்தம் செய்தல்.

கம்பீரா

சைதன்ய மஹாபிரபு தனது வாழ்வின் இறுதி பதினெட்டு வருடங்களின்போது மன்னர் பிரதாபருத்ரரின் ராஜகுருவாகிய காசி மிஸ்ரரின் வீட்டில் ஓர் அறையில் தங்கியிருந்தார். கம்பீரா என்றழைக்கப்பட்ட அவ்விடம் ஜகந்நாதர் கோயிலுக்கு மிக அருகில், ஐந்து நிமிட நடை தொலைவில்  உள்ளது. இங்குள்ள அறையில் சைதன்ய மஹாபிரபு பயன்படுத்திய கமண்டலம், மர காலணி ஆகியவற்றை புரிக்கு யாத்திரை செல்பவர்கள் இன்றும் காணலாம். மன்னர் பிரதாபருத்ரரின் தந்தையான புருஷோத்தம மன்னர் காஞ்சி மன்னனை யுத்தத்தில் வென்ற பின்னர், காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த ராதா காந்த விக்ரஹம் இன்றும் காசி மிஸ்ரரின் வீட்டில் வழிபடப்படுவதையும் காணலாம்.

சித்த பகுல்

பகவானின் திருநாமத்தை இடைவிடாது ஜபித்து, நாமாசாரியர் என்று பெயர் பெற்றிருந்த ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் அவர்கள் புரியில் வசிப்பதற்கும் பஜனை செய்வதற்கும் ஏற்ப சைதன்ய மஹாபிரபு தனிப்பட்ட முறையில் இந்த இடத்தினை ஏற்பாடு செய்து கொடுத்தார். இங்கே ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் தினமும் மூன்று இலட்சம் முறை ஹரி நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்த காரணத்தினால், ஜகந்நாதர் கோயிலின் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஹரிதாஸ தாகூர், தினந்தோறும் இங்கிருந்தபடியே கோயில் கோபுரத்தின் உச்சியிலுள்ள சுதர்சன சக்கரத்தை வழிபட்டுக் கொண்டிருந்தார். ஜகந்நாதரைக் காண அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றாலும், சாக்ஷாத் ஜகந்நாதரேயான சைதன்ய மஹாபிரபு அவரைக் காண தினமும் இந்த இடத்திற்கு வருவதுண்டு. சைதன்ய மஹாபிரபு ஒருநாள் ஜகந்நாதரின் பல்குச்சியை இங்கு நட்டபோது, அது நிழல் கொடுக்கும் பகுல மரமாக வளர்ந்தது. பிற்காலத்தில் இதனை வெட்ட முனைந்தபோது, இம்மரம் அடர்த்தியின்றி வெறும் குழாய் போன்று மாறியதால், சித்த பகுல் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. அந்த மரத்தினை இன்றும் காணலாம். இவ்விடத்தில் ஹரிதாஸர் மட்டுமின்றி, ரூப கோஸ்வாமியும் ஸநாதன கோஸ்வாமியும்கூட சில காலம் ஹரிதாஸ் தாகூருடன் தங்கியிருந்தார்கள். ஹரிதாஸர் தனது திவ்ய உடலை இவ்விடத்திலேயே விட்டார்.

 

கம்பீரா என்னுமிடத்தில் தங்கியிருந்த மஹாபிரபுவின் கமண்டலம், மர காலணி போன்றவற்றை இன்றும் கண்ணாடிப் பெட்டியினுள் காணலாம்.

ஹரிதாஸ தாகூர் சமாதி

ஹரிதாஸ தாகூர் தன் உடலை சைதன்ய மஹாபிரபுவின் முன்னிலையில் விட்ட பிறகு, அவ்வுடலை ஹரி நாம ஸங்கீர்த்தனத்துடன் தனது சுய கரங்களால் சுமந்து வந்த மஹாபிரபு, சமுத்திரத்தில் நீராட்டி கரையோரத்தில் அடக்கம் செய்தார். பின்னர், அவ்விடத்தில் அவருக்கு ஒரு சமாதியும் எழுப்பப்பட்டது. ஹரிதாஸரின் திருமேனியை நீராட்டியதால், அன்றிலிருந்து இவ்விடம் மஹா தீர்த்த ஸ்தலம் என்று சைதன்ய மஹாபிரபு அறிவித்தார். புரியிலுள்ள சமுத்திரத்தில் நீராடுவது மிகவும் விஷேசம், ஆயினும் இவ்விடத்தில் நீராடுபவர்களுக்கு நிச்சயம் கிருஷ்ண பக்தி கிட்டும் என சைதன்ய மஹாபிரபு உறுதியளித்துள்ளார்.

பக்தி குடில்

கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் ஹரிதாஸ தாகூரின் சமாதிக்கு அருகில் ஸ்ரீல பக்திவினோத தாகூர், பக்தி குடில் என்ற பெயரில் ஒரு சிறிய இல்லத்தை அமைத்து நான்கு வருடங்கள் பஜனை செய்து வந்தார். தற்போது இஸ்கான் இயக்கத்தின் கோயிலாக மாறிவிட்ட இந்த பக்தி குடிலில், ஸ்ரீ ஸ்ரீ ராதா கிரிதாரி மற்றும் சைதன்ய மஹாபிரபுவின் விக்ரஹங்களைக் காணலாம்.

கம்பீரா என்னுமிடத்தில் தங்கியிருந்த மஹாபிரபுவின் கமண்டலம், மர காலணி போன்றவற்றை இன்றும் கண்ணாடிப் பெட்டியினுள் காணலாம்.

ஸார்வபௌம பட்டாசாரியரின் வீடு

சைதன்ய மஹாபிரபு புரிக்கு வந்த சமயத்தில், அங்கே மிகச்சிறந்த வேத பண்டிதராக புகழ் பெற்று விளங்கிய ஸார்வபௌம பட்டாசாரியரின் வீடு தரிசிக்க வேண்டிய இடங்களில் ஒன்று. சைதன்ய மஹாபிரபு முதன்முதலில் ஜகந்நாதரை தரிசிக்க வந்தபோது பரவசத்தில் மூர்ச்சையடைந்தார். இதைக் கண்ட ஸார்வபௌம பட்டாசாரியர் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மஹாபிரபு நினைவு நிலைக்கு திரும்பிய பின்னர், அவருக்கு தொடர்ந்து ஏழு நாள்கள் வேதாந்தத்தின் அத்வைத விளக்கத்தினை எடுத்துரைத்தார். அவரது அனைத்து விளக்கங்களையும் முறியடித்த சைதன்ய மஹாபிரபு, தன் காரணமற்ற கருணையாக ஸத்புஜ ரூபத்தை ஸார்வபௌமருக்கு காண்பித்தார். ஸத்புஜ ரூபம் என்றால், ஆறு கைகளைக் கொண்ட உருவம் என்று பொருள்: முந்தைய யுகங்களில் கிருஷ்ணராகவும் இராமராகவும் தோன்றியவன் நானே என்பதைக் குறிக்கும் வகையில், புல்லாங்குழலை ஏந்திய கிருஷ்ணரின் இரு கரங்கள், வில்லையும் அம்பையும் ஏந்திய இராமரின் இரு கரங்கள், கமண்டலத்தையும் சந்நியாச தண்டத்தையும் ஏந்திய தனது சுய இரு கரங்கள் என்று ஆறு கரங்களுடன் மஹாபிரபு ஸார்வபௌமருக்கு காட்சியளித்ததும் இந்த இடமே.

ஸ்வேத கங்கை

ஜகந்நாதரை தரிசிக்க விரும்பிய கங்காதேவி புரியில் ஸ்வேத கங்கையின் வடிவில் தோன்றியுள்ளாள். ஸ்வேத கங்கை, இந்திரத்யும்ன ஸரோவர், மார்கண்டேய ஸரோவர், சமுத்திரம், ரோஹிணி குண்டம் ஆகிய ஐந்தும் புரி க்ஷேத்திரத்தின் பஞ்ச மஹா தீர்த்தங்கள் என்று போற்றப்படுகின்றன. கங்காதேவி ஸ்வேத கங்கை என்னும் இத்தீர்த்தத்தின் மூலமாக ஜகந்நாதரை புரியில் சேவிக்கின்றாள்.

 

வங்காள தேசத்தின் இளவரசியாக இருந்த சச்சிதேவி (சைதன்யரின் அன்னையல்ல) மிகுந்த ஆன்மீக நாட்டத்தின் காரணமாக அரண்மனையைத் துறந்து புரியில் வசித்து வந்தார். கிருஷ்ண திரயோதசி திதியில் கங்கையில் நீராடுவதற்காக பல்வேறு மக்கள் நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டனர். ஆனால் புரியை விட்டுச் செல்லக் கூடாது என்ற தனது குருவின் நிபந்தனையினால் சச்சிதேவி கவலையுடன் புரியிலேயே இருந்தாள். அவளது கனவில் தோன்றிய ஜகந்நாதர், “கங்கையில் நீராடுவதற்காக நீ நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை,” என்று கூறி, ஸ்வேத கங்கையைக் காட்டினார். அதில் அவள் இறங்கியபோது பலமான நீர் அலை அவளை அடித்துச் சென்று ஜகந்நாதரின் விக்ரஹத்தின் முன்பாக கொண்டு வந்தது.கோயிலுக்குள் பலத்த ஓசையைக் கேட்ட காவலாளிகள், கோயில் கதவைத் திறந்து பார்த்தால், “சச்சிதேவி ஜகந்நாதருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தாள். ஆபரணங்களை திருட வந்திருப்பாளோ என்கிற சந்தேகத்தால் அவளை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மன்னரின் கனவில் தோன்றிய ஜகந்நாதர், சச்சிதேவி எனக்கு பிரியமான பக்தை. கங்கையில் நீராடும்போது நேரடியாக என் திருவடிக்கு வந்து விட்டாள். அவள் மீது எந்த குற்றமும் இல்லை,” என்றார்.

 

ஹரிதாஸ தாகூரை நாம சங்கீர்த்தனத்துடன் மஹாபிரபு தன் கரங்களால் அடக்கம் செய்வதற்கு எடுத்து செல்லுதல்.

இந்திரத்யும்ன ஸரோவர்

குண்டிசா கோயிலுக்கு அருகில், ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் இக்குளத்தில் அனைத்து தீர்த்தங்களும் உள்ளன, ஸத்ய யுகத்தில் மன்னர் இந்திரத்யும்னர் அஸ்வமேத யாகம் நடத்தியபோது பல்லாயிரக்கணக்கான பசுக்களை பிராமணர் களுக்கு தானமளித்தார். அப்பசுக்கள் ஓரிடத்தில் நின்றபோது அவ்விடம் குளம் போல உருவாகி தண்ணீரும் கோமியமும் ஒன்று சேர்ந்தன, இத்தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தம் என ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஸங்கல்ப வேள்விகளுக்கு இந்திரத்யும்ன மன்னர் இக்குளத்தில் இருந்த நீரையே பயன்படுத்தினார். குண்டிசா கோயிலைத் தூய்மைப்படுத்த சைதன்ய மஹாபிரபு இங்கிருந்தே நீரை எடுத்துக் கொண்டார்.

நரசிம்மரின் கோயில்

குண்டிசா கோயிலுக்கு வெகு அருகில் இக்கோயில் உள்ளது. சாந்த நரசிம்மர் முன்புறமும் உக்ர நரசிம்மர் பின்புறமும் சேர்ந்தாற்போல அமையப் பெற்ற விஷேச ரூபம். காலபஹாத் என்னும் முஸ்லீம் மன்னன் புரியில் இருக்கும் கோயில்களை சேதப்படுத்தி, விக்ரஹங்களை உடைத்த வண்ணம் இக்கோயிலுக்கு வந்தபோது, அவனது கோபம் முற்றிலும் போய்விட்டது. சாந்த நரசிம்மர் மனிதரைப் போன்ற கூர்மையான மூக்கு, முறுக்கிய மீசை, மற்றும் பெரிய நாக்குடன் காட்சியளிக்கிறார்.

புரியில் உள்ள பஞ்ச மஹா தீர்த்தங்களில் ஒன்றான ஸ்வேத கங்கை.

நரேந்திர ஸரோவர்

குளத்தைச் சுற்றியிருக்கும் நந்தவனத்தைப் போல கண்ணுக்கு குளிர்ச்சியாகக் காட்சியளிப்பது நரேந்திர ஸரோவர். ஜகந்நாதரின் உற்சவ மூர்த்தியான மதன மோகன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அக்ஷய திருதியை முன்னிட்டு 21 நாட்கள் வெவ்வேறு வேடங்களில் படகில் பயணித்து சந்தன யாத்திரையை இங்கே கொண்டாடுகிறார். இக்குளக்கரையில் சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சகாக்களில் ஒருவரான கதாதர பண்டிதர் பாகவத சொற்பொழிவாற்றுவார். சைதன்ய மஹாபிரபு தனது சகாக்களுடன் இங்கு ஆனந்தமாக நீராடுவது வழக்கம்.

இந்திரத்யும்ன ஸரோவரில் மஹாபிரபு தனது சகாக்களுடன் நீராடுதல்.

ஜகந்நாத வல்லப தோட்டம்

நரேந்திர ஸரோவருக்கு வெகு அருகில் இருப்பது ஜகந்நாத வல்லப தோட்டம். ஜகந்நாதரின் சேவைக்குத் தேவையான பல வகையான பூக்களும் பழங்களும் இத்தோட்டத்திலிருந்து செல்கின்றன. சைதன்ய மஹாபிரபு, தன் நெருங்கிய சகாக்களான இராமானந்த ராயரையும் ஸ்வரூப தாமோதர கோஸ்வாமியையும் இங்கு அடிக்கடி சந்திப்பார். ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரையின் விக்ரஹங்கள் குண்டிசா கோயிலை அடைந்தவுடன் சைதன்ய மஹாபிரபு தொடர்ந்து 9 நாள்கள் இங்கு ஓய்வெடுப்பார். மன்னர் பிரதாபருத்ரர் சைதன்ய மஹாபிரபுவின் பூரண கருணையைப் பெற்றதும் இங்குதான்.

பக்திசித்தாந்தரின் பிறப்பிடம்

ரத யாத்திரை நிகழும் வீதியில் கௌடீய வைஷ்ணவ இயக்கத்தின் அச்சாணி என்று அழைக்கப்படும் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீடு அமைந்துள்ளது. அவரது மகனும் ஸ்ரீல பிரபுபாதரின் குருவுமான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் பிறந்த இடமும் இதுவே. பக்திசித்தாந்தர் கைக் குழந்தையாக இருந்தபோது, ஜகந்நாதரின் ரதம் இவ்வீட்டின் முன்பு நின்றுவிட்டது. சிறு குழந்தையாக இருந்த பிமல பிரசாதரை (பக்திசித்தாந்த சரஸ்வதியை) அவரது தாயார் பகவதி தேவி ஜகந்நாதரின் முன்பு அவரது திருவடியில் வைத்தபோது, ஜகந்நாதரின் மாலை உடனடியாக அக்குழந்தையின் கழுத்தில் விழுந்தது. கிருஷ்ண உணர்வை உலகம் முழுக்க பிரச்சாரம் செய்ய ஒரு மகன் வேண்டும் என்ற பக்திவினோத தாகூரின் விருப்பத்தை நிறைவேற்ற இருப்பவர் இவரே என்பது அதன் மூலம் நிரூபணமாகியது. ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் இந்தியா முழுவதும் 64 கௌடீய மடங்களை நிறுவினார்.

டோடா கோபிநாதரின் கோயில்

அழகான யமேஷ்வர தோட்டத்தில் அமையப் பெற்றது டோடா கோபிநாதர் கோயில். இங்கு தினந்தோறும் கதாதர பண்டிதர் மதிய வேளையில் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பார். சைதன்ய மஹாபிரபு ஸ்ரீமத் பாகவதத்தை, குறிப்பாக பிரகலாதர் மற்றும் துருவரின் கதைகளை நூறு முறைக்கு மேலாக கதாதர பண்டிதரின் திருவாயிலிருந்து கேட்டுள்ளார். இங்குள்ள தோட்டத்தில் கோபிநாதரின் விக்ரஹத்தைக் கண்டெடுத்த சைதன்ய மஹாபிரபு, அவரை கதாதர பண்டிதரிடம் ஒப்படைத்து இவருக்கு மட்டும் சேவை செய்தால் போதும் என்று கேட்டுக் கொண்டார். க்ஷேத்திர சந்நியாசியாக வாழ்ந்த கதாதரர் புரியை விட்டு வெளியே செல்லாமல், நின்ற திருக்கோலத்தில் இருந்த டோடா கோபிநாதருக்கு இடைவிடாமல் சேவை செய்து வந்தார். சைதன்ய மஹாபிரபு தனது 48 வருட பூலோக லீலையை முடிக்க நினைத்தபோது, டோடா கோபிநாதருடன் ஐக்கியமானார். அதன் பின்னர், தனக்கு சேவை செய்வதில் கதாதர பண்டிதருக்கு சிரமம் இருப்பதைக் கண்ட டோடா கோபிநாதர் நின்ற திருக்கோலத்தில் இருந்து அமர்ந்த திருக்கோலத்திற்கு வந்து விட்டார். சைதன்ய மஹாபிரபு இவ்விக்ரஹத்தினுள் ஐக்கியமானார் என்பதற்கு சான்றாக டோடா கோபிநாதரின் தொடையில் ஒரு சிறு அடையாளம் காணப்படுகிறது. விருந்தாவன சூழ்நிலையினை இக்கோயில் முழுமையாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

பரமானந்த புரியின் கிணறு

கிருஷ்ணரின் நெருங்கிய தோழரான உத்தவர்  சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் பரமானந்த புரியாக வருகிறார். மாதவேந்திர புரியின் சீடரான பரமானந்த புரி மிக நீண்ட புனித யாத்திரையை மேற்கொண்டு ஒரு நாள் புரிக்கு வருகை தந்தார். பரமானந்த புரி தங்கியிருந்த மடத்திற்கு சென்ற சைதன்ய மஹாபிரபு அங்கிருந்த கிணற்று நீர் சுகாதாரமற்ற நிலையில் அசுத்தமாக இருப்பதைக் கண்டார். சைதன்ய மஹாபிரபு தனது சக்தியினால் கங்கா தேவியை அக்கிணற்றுக்குள் நுழைய உத்தரவிட்டார். கலங்கிய நிலையில் இருந்த கிணற்று நீர் தெளிவான பரிசுத்த நீராக மாறியதை அங்கிருந்த பக்தர்கள் கண்டனர். “இந்த கிணற்று நீரை யார் பருகினாலும் நீராடினாலும் அவர்கள் விரைவில் கிருஷ்ண பிரேமையை அடைவார்கள்,” என்று சைதன்ய மஹாபிரபு வரமளித்தார். மேலும், “நான் பரமானந்த புரியின் சொத்து. அவர் என்னை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்” என்றும் மஹாபிரபு கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக சிறப்பு மிக்க இந்த கிணறு அமையப்பெற்றுள்ள இடம் தற்போது காவல் நிலையமாக மாறிவிட்டது. இருப்பினும், ஸ்ரீல பிரபுபாதரின் கருணையைப் பெற்ற பக்தர்கள் இன்றும் இக்கிணற்றின் மகிமையை உணர முடியும். ஜகந்நாதரின் தெற்கு வாயிலின் அருகே இத்தீர்த்தம் அமையப் பெற்றுள்ளது.

புரி க்ஷேத்திரத்தின் சிறப்பு

ஒரு க்ஷேத்திரத்தை எந்த நோக்கத்துடன், எந்த உணர்வில் அணுகுகின்றோமோ, அதற்குத் தகுந்தவாறு பலன்கள் மாறுபடும். பக்தியின் பாதையை அடைந்தவர்கள் அனைத்தையும் அடைந்தவர்கள் என்பதால், புத்திசாலி பக்தர்கள் பக்தியைத் தவிர வேறு எதையும் ஒருபோதும் வேண்டுவதில்லை, க்ஷேத்திரத்தில் வேண்டுவார்களா என்ன! பௌதிக ஆசைகளை பூர்த்தி செய்வதற்கான பிரார்த்தனைகளுக்கு எவ்வித அவசியமும் இல்லை. பக்தர்கள் விரும்புவது பக்தியை மட்டுமே. சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுகின்ற பக்தர்கள் புரி க்ஷேத்திரத்திற்குச் செல்லும்போது, அவர்களின் விருந்தாவன ஏக்கம் அதிகரிக்கின்றது. இதுவே புரி க்ஷேத்திரத்தின் தனிச்சிறப்பு.

 

திரு. ஜீவன கௌரஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives