அனைவரும் அர்ச்சகர்: சில சிந்தனைகள்

Must read

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்காக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பூர்வீக அர்ச்சகர்கள் பலரிடம் பெரும் அதிருப்தியையும் புயலையும் கிளப்பியுள்ளது. இதுகுறித்த சில சாஸ்திர சிந்தனைகளை பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

யார் அர்ச்சகராகலாம்?

அர்ச்சகர் என்பவர் பகவான் அல்லது இதர தேவர்களின் விக்ரஹத்திற்கு நேரடியாகத் தொண்டு செய்பவராவார். அர்ச்சகர் எந்தக் கோயிலில் தொண்டு புரிகின்றாரோ அந்தக் குறிப்பிட்ட கோயிலில் பின்பற்றப்படக்கூடிய (பஞ்சராத்ரம், வைகானசம், அல்லது ஆகம வழிமுறையை) முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அது மட்டும் போதாது; அவர் இறைவனின் மீது பூரண நம்பிக்கை உடையவராகவும் சாஸ்திரங்களை அறிந்தவராகவும் புலன் கட்டுப்பாடு உடையவராகவும் ஏழ்மையான வாழ்வினை மனமுவந்து ஏற்பவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் பூஜை செய்வதற்கு பலரும் விரும்பலாம். ஆனால், தினந்தோறும் மாதந்தோறும் வருடந்தோறும் எந்த சலிப்புமின்றி உறுதியுடன் பூஜை செய்வதற்கு உகந்த பொறுமையும் ஸாத்வீக குணமும் அர்ச்சகருக்கு அவசியமானவை. சுருக்கமாகக் கூறினால், பிராமணத் தன்மைகளைப் பெற்றவர் மட்டுமே அர்ச்சகராக முடியும்.

அதே சமயத்தில், உயரிய சாஸ்திர நெறிகளுக்கும் ஸாத்வீக குணத்திற்கும் அவசியமற்ற சில கோயில்களில் தொன்றுதொட்டு பிராமண தன்மையற்ற இதர மனிதர்களும் பூஜாரிகளாக இருந்து வருகின்றனர்.

யார் பிராமணர்?

பகவத் கீதையில் (18.42) கிருஷ்ணர் கூறுகிறார்: “அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத் தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகியவை பிராமணர்களின் தன்மைகளாகும்.” இந்தத் தகுதிகளை (குணங்களை) பெற்றிருப்பவர்களை “பிராமணர்கள்” என்று கூறலாம். அதே சமயத்தில் பிராமணத்துவத்தையும் பிறப்பின் அடிப்படையிலான பிராமண ஜாதியையும் நிகராகக் கருதக் கூடாது. பிராமணக் குலத்தில் பிறந்தவன் பிராமணத் தன்மைகளுடன் இருக்க நேர்ந்தால், அவன் பிராமணனாக ஏற்கப்பட வேண்டும்; இல்லையேல், பிராமணனாக ஏற்க முடியாது.

நான்கு விதமான வர்ணங்கள் அவரவர் செய்யும் தொழிலையும் குணத்தையும் (சுபாவத்தையும்) அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பகவத் கீதையில் (4.13) கிருஷ்ணர் கூறுகிறார். எனவே, பிறப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை பிராமணர் என்று கூறிவிட இயலாது.

ஸ்ரீல பிரபுபாதர், உலகெங்கிலும் கோயில்களை நிறுவி, எல்லா தரப்பட்ட மக்களையும் தகுதியின் அடிப்படையில் அர்ச்சகராக்கி பூஜைகளை செய்வித்தார்.

மற்றவர்கள் பிராமணராக முடியுமா?

மருத்துவரின் மகனுக்கு மருத்துவம் கற்பதற்கான வாய்ப்பும் திறனும் எவ்வாறு இயல்பாகக் கிடைக்கின்றதோ, அதுபோலவே பிராமணத் தன்மைகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பும் திறனும் அக்குலத்தில் பிறப்பவர்களுக்கு இயல்பாகவே அமையப் பெறலாம். ஆயினும், எந்த குலத்தில் பிறந்தவராக இருப்பினும் உண்மையான ஆன்மீக குருவை அணுகி தீக்ஷை பெற்று பயிற்சி பெற்றால், அவரும் பிராமணராகலாம். இதற்கான விதிகளும் சான்றுகளும் புராணங்கள், இதிகாசங்கள், மற்றும் பஞ்சராத்திரங்களிலும் உள்ளன.

உண்மையைச் சொன்னால், பகவானின் திருநாமத்தை தொடர்ந்து உச்சரிப்பவர் சண்டாளக் குலத்தில் பிறந்திருப்பினும் பிராமணர்களில் சிறந்தவராகக் கருதப்படுகிறார். மறுபுறம், ஹரி பக்தியில்லாத பிராமணன் நாயை உண்பவனைக் காட்டிலும் கீழானவனாகக் கருதப்படுகிறான்:

சண்டாலோ ’பி த்விஜ-ஷ்ரேஷ்ட ஹரி-பக்தி-பராயண:

ஹரி-பக்தி-விஹினஷ் ச த்விஜோ ’பி ஷ்வபசாதமா:

மேலும், ஸ்ரீமத் பாகவதத்தில் (7.11.35) நாரத முனிவர் கூறுகிறார்:

யஸ்ய யல் லக்ஷணம் ப்ரோக்தம்

 பும்ஸோ வர்ணாபிவ்யஞ்ஜகம்

யத் அன்யத்ராபி த்ருஷ்யேத

 துத் தேநைவ விநிர்திஷேத்

“பிராமண, சத்திரிய, வைசிய அல்லது சூத்திரனுக்கான குறிப்பிட்ட அறிகுறிகளை ஒருவன் வெளிப்படுத்தும்போது, அவன் வேறு ஜாதியில் பிறந்திருந்தால்கூட, அவனது அறிகுறிகளுக்கு ஏற்ற பிரிவில் அவன் ஏற்கப்பட வேண்டும்.”

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவன் அவனது தன்மைகளுக்கேற்ப இதர வர்ணத்தைச் சார்ந்தவனாக ஏற்கப்பட்டதற்கான பல்வேறு உதாரணங்களை சாஸ்திரங்களில் காண்கிறோம். எனவே, தகுதியுடைய எவரும் பிராமணராகலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அந்த பிராமணர் அர்ச்சகராக முடியுமா?

பிராமணராக முடியும் எனும் பட்சத்தில், அர்ச்சகராக முடியாதா? நிச்சயமாக முடியும். பகவானது நாம உச்சாடனத்தில் ஈடுபடுபவர் இழிந்த குலத்தில் பிறந்திருப்பினும் ஏற்கனவே எல்லாவித பூஜைகளையும் யாகங்களையும் செய்தவராக, எல்லா வேதங்களையும் அறிந்தவராக ஏற்கப்பட வேண்டுமென்று ஸ்ரீமத் பாகவதம் (3.33.6–7) கூறுகிறது. எனவே, முறையான பிராமண தகுதி களைப் பெற்றுள்ளவர் நிச்சயம் அர்ச்சகராக முடியும்.

உலகெங்கிலும் கோயில்களை நிறுவிய ஸ்ரீல பிரபுபாதர் அக்கோயில்களில் எல்லா தரப்பட்ட மக்களையும் தகுதியின் அடிப்படையில் அர்ச்சகராக்கி பூஜைகளை செய்வித்தார். சூத்திரர்களைக் காட்டிலும் கீழானவர்களாகக் கருதப்படும் மேலை நாட்டினரை (மிலேச்சர்கள், யவனர்கள், சண்டாளர்கள் என அனைவரையும்) அவர் அர்ச்சகராக்கினார். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மட்டுமின்றி, கருப்பினத்தைச் சார்ந்த ஆப்பிரிக்கர்களும் தாழ்ந்த குலத்தில் பிறந்த இந்தியர்களும்கூட படிப்படியாக பயிற்சியளிக்கப்பட்டு அர்ச்சகர்களாகத் தொண்டாற்றுகின்றனர். உலகெங்கிலும் இருக்கக்கூடிய இஸ்கான் கோயில்கள் அவற்றின் உயர்தர விக்ரஹ வழிபாட்டிற்காக பிரசித்தி பெற்றவை. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் பிராமண ஜாதியில் பிறக்காத உண்மையான பிராமணர்களால் பூஜிக்கப்படுகின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இப்போது தமிழகத்தின் பிரச்சனைக்கு வருவோம். பாரம்பரிய கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாமா என்று வினவினால், “கூடாது” என்பதே நிச்சயமான பதில். ஏன்?

மரபுகளை மீறக் கூடாது

பெரும்பாலான பாரம்பரிய கோயில்களில் குறிப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கே பூஜைக்கான உரிமை உண்டு, மற்றவர்கள்—பிராமணர்களாக இருந்தால்கூட பூஜைக்கு உரிமை கொண்டாட முடியாது. ஒரே கோயிலுக்குள் பரம்பரை பரம்பரையாக சேவை செய்பவர்களுக்கு மத்தியிலும் பூஜை செய்யும் பிராமணர்கள், சடங்கு செய்யும் பிராமணர்கள், யாகம் செய்யும் பிராமணர்கள், தளிகை செய்யும் பிராமணர்கள் என பலரும் பல வித கைங்கரியங்களைச் செய்து வருகின்றனர். அந்த குறிப்பிட்ட சேவையைச் செய்வதற்கான அந்த உரிமை பூர்வீக ஆச்சாரியர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, சில கோயில்களில் பெருமாளே அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளார். இவற்றை மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால், ஒரு கோயிலில் பெருமாளுக்கு நேரடியாக பூஜை செய்பவர் மற்றொரு கோயிலுக்குச் செல்ல நேர்ந்தால், அங்கே அவரால் கர்பகிரகத்திற்குள் நுழைய முடியாது. அதற்கான உரிமை அவருக்கு இல்லை.

சாதாரண மனிதர்கள் வகுத்துள்ள பல்வேறு மரபுகளை அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றி வருகிறோம், அவற்றை மீறுவதில்லை; ஆனால் ஆச்சாரியர்களும் சாஸ்திரங்களும் பெருமாளும் வகுத்துள்ள மரபுகளை மீறுவோம்—இஃது எந்த விதத்தில் நியாயம்? காரணமற்ற பல்வேறு மரபுகளை அன்றாட வாழ்வில் பின்பற்றுகிறோம், ஆனால் முழுக்கமுழுக்க சூட்சும காரணங்களுடன் கூடிய கோயில் மரபுகளை மீற நினைக்கின்றோம். இது நிச்சயம் பகுத்தறிவல்ல.

பணிவுடன் மரபுகளை மதிப்போம்

ஒருவன் முறையான பயிற்சியைப் பெற்று தகுதியுடைய பிராமணனாக உருவெடுக்க நேர்ந்தால், நிச்சயம் அதனை வரவேற்கின்றோம். பிராமணனின் குணங்களில் பணிவு மிகவும் முக்கியமானது. பூர்வீக ஆச்சாரியர்களால் வகுக்கப்பட்டு பன்நெடுங்காலமாக பின்பற்றி வந்துள்ள நெறிமுறைகளை மீறுவதற்கு பணிவுடைய பிராமணன் ஒருபோதும் முன்வர மாட்டான். சாஸ்திரங்கள் மற்றும் ஆச்சாரியர்களின் நெறிகளைக் காட்டிலும் அரசாங்கத்தின் ஆணையினை ஒருவன் பெரியதாக நினைத்தால், அக்கணமே அவன் பிராமண தகுதியிலிருந்து வீழ்ந்து விடுகிறான். எனவே, அரசாங்கம் பணி ஆணை வழங்கி விட்டது என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு, பாரம்பரிய அர்ச்சகர்களைப் புறந்தள்ளி பூஜை செய்ய நினைத்தால், அது முழுக்கமுழுக்க அறியாமையே. பூஜைக்கான உரிமை அத்தகு நபருக்கு துளியும் இல்லை.

தொன்றுதொட்டு வரும் மரபுகளை உண்மையான பக்தர்களும் உண்மையான ஆன்மீக ஆர்வலர்களும் நிச்சயம் மதிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அந்தரங்க பக்தர்கள் பலர் பக்தியின் மிகவுயர்ந்த ஸ்தானத்தில் இருந்தனர். அவர்களில் எவரும் பாரம்பரியமான புரி ஜகந்நாதர் கோயிலின் மரபுகளை மீறுவதற்கு ஒருபோதும் முயலவில்லை. இன்னும் சொல்லப் போனால், அந்த மரபுகளுக்கு ஒத்துழைப்பதற்காக அவர்கள் பல்வேறு சிரமங்களைக்கூட ஏற்றுக் கொண்டனர். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நினைத்திருந்தால் நிச்சயம் அந்த மரபுகளை அவர்களுக்காகவாவது உடைத்திருக்க முடியும், ஆனால் அவரோ தமது பக்தர்களின் பணிவைப் பாராட்டி ஊக்குவித்தார்.

எனவே, உண்மையான தகுதியுடைய பக்தனாக இருப்பவன் பணிவுடன் மரபுகளை ஏற்க வேண்டும்.

அனைவரும் அர்ச்சகரே

சாஸ்திரங்களின்படி, பகவானை தரிசித்தல், அவரின் முன்பாக விழுந்து வணங்குதல், அவரது திருவிழாக்களைக் கொண்டாடுதல், அவரது கோயிலைத் தூய்மை செய்தல், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களை பிரசாதமாக (கருணையாக) ஏற்றல் என பல வழிகளில் ஒவ்வொருவரும் விக்ரஹ வழிபாட்டில் பங்கேற்க முடிகிறது. நேரடியாக பூஜை செய்ய வேண்டும் என்பதில் அவ்வளவு என்ன அக்கறை?

பூஜையில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் அர்ச்சகரே. நேரடியாக உள்ளே நுழைய வேண்டும் என்று நினைப்பதில், எந்தப் புரிந்துணர்வும் இல்லை. வெளியில் நின்று சாமி கும்பிடுபவன் உள்ளே நின்று பூஜிப்பவனைக் காட்டிலும் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்லன். ஆனால் அவன் தன்னைத் தாழ்ந்தவனாக நினைத்தால், அவனுக்கு புரிந்துணர்வு இல்லை என்று பொருள். உண்மையிலேயே தாழ்ந்தவனாக நினைத்தால், உள்ளே செல்வதற்கு அவன் ஏன் விரும்பப் போகிறான்? எனவே, இதுபோன்ற  முரண்பாடுகளுடன் பூஜை செய்தல் சரியல்ல.

அர்ச்சகர்களை வைத்து அரசியல்

உண்மையாகப் பார்த்தால், அனைவரும் அர்ச்சகர் என்னும் கோஷம் எந்த விதத்திலும் ஜாதி வேற்றுமைகளைக் களைவதற்காகவோ கோயில்களின் வழிபாட்டுத் தரத்தை உயர்த்துவதற்காகவோ அல்ல. கடவுளையே நம்பாதவன் கருவறைக்குள் யார் பூஜை செய்ய வேண்டுமென்று கூறுவது எவ்விதத்தில் நியாயம்? வழிபாட்டு மரபுகளுக்குள் அரசாங்கம் தனது மூக்கை நுழைப்பது நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல.

இந்த புது பூஜாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் பிராமண நிலைக்கு உயர்ந்து விட்டதால், இனிமேல் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று அறிவிக்கலாமே?

அனைவரையும் அர்ச்சகராக்க விரும்புவோர் ஒரு வேளை பூஜைகூட இல்லாதிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் இந்தப் புது அர்ச்சகர்களை நியமிக்கலாமே? அதை விடுத்து நன்முறையில் கைங்கரியம் நடைபெறக்கூடிய கோயில்களில் கை வைப்பது ஏன்? இது முழுக்கமுழுக்க பிராமணர்களின் மீதான வன்மத்தினால் எடுக்கப்பட்டுள்ள அரசியல் முடிவு என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறிகிறோம்.

பாரம்பரிய கோயில்களின் முக்கிய மரபுகள் என்றென்றும் பின்பற்றப்பட வேண்டியவை, அவற்றை நமது வசதிக்காக மாற்றக் கூடாது.

இப்பிரச்சனையைக் கண்டுகொள்ளாத தமிழகம்

இதே போன்ற செயல் மற்ற இடங்களில் நிகழ்ந்திருந்தால், நிச்சயம் அங்குள்ள மக்கள் கொந்தளித்திருப்பர். ஆனால் தமிழகத்திலோ, திட்டமிட்டு விதைக்கப்பட்டு தற்போது வேரூன்றியிருக்கும் பிராமண துவேஷத்தினால், பெரும்பாலான மக்கள் இதைப் பொருட்படுத்தவில்லை. மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய பிராமண சமுதாயம் அவர்களின் ஆதரவை இழந்து நிற்கின்றது என்பதே கசப்பான உண்மை.

இந்துக்களுக்கு ஆதரவாக தங்களைக் கூறிக்கொள்ளும் கட்சியினர்கூட இதனை பெரிதாகப் பேச விரும்புவதில்லை. இவை ஏன், பிராமண குடும்பத்தில் பிறந்து இன்று பிரபல தொழிலதிபர்களாகவும் வணிகர்களாகவும் இருப்பவர்கள்கூட இதுகுறித்து வாய்திறக்கவில்லை. பெயரளவு ஜாதி பிராமணர்களைப் பொறுத்தவரையில், நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல வீடு, உயர்கல்வி, அமெரிக்க மாப்பிள்ளை முதலியவைதான் முக்கியமானவையாக உள்ளன, தர்மத்தைக் காப்பதுகுறித்து அவர்கள் கனவில்கூட நினைத்துப் பார்ப்பதில்லை.

வேறு சிலர் இதனை பிராமணர்களுக்கான பிரச்சனையாகப் பார்க்கின்றனர். மற்ற ஜாதியினருக்கு பிரச்சனைகள் வந்தபோது, பிராமணர்களா போராடினர் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது நம்முடைய மதத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ஆன்மீக உணர்விற்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை, ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கான பிரச்சனை அல்ல என்பதைக்கூட பலர் புரிந்துகொள்ளவில்லை. ஸநாதன தர்மத்தின் கட்டமைப்பை தகர்ப்பதற்கான இம்முயற்சிக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் பல்வேறு ஆச்சாரியர்கள் அவதரித்த தமிழகத்தில் இத்தகு விரோதச் செயலுக்கு யாரை காரணம் சொல்வது?

பூர்வீக அர்ச்சகர்களின் தவறுகள்

பிராமண சமுதாயம் தனது ஆதரவை இழந்தமைக்கு அவர்களும் ஒரு காரணமாவர். கருவறைக்குள் நின்றபடி ஊர்கதையைப் பேசுதல், அங்கேயே காப்பி குடித்தல், கோயிலுக்குள் பின்பற்ற வேண்டிய எல்லா ஆச்சாரங்களையும் காற்றில் பறக்கவிடுதல், சாமி தரிசனத்திற்கு வருபவர்களிடம் பணம் கேட்டு நச்சரித்தல், சக பூஜாரிகளிடம் பொதுமக்கள் மத்தியில் சண்டையிடுதல், கர்பகிரகத்தில்கூட கரப்பான் பூச்சிகள் உலாவும் அளவிற்கு கோயிலைத் தூய்மையின்றி வைத்திருத்தல், உண்மையான பக்தியின்றி வெளியுலக வேலையைப் போன்று (காசுக்காக) பூஜை செய்தல் முதலிய எண்ணற்ற தவறுகளை பூர்வீக அர்ச்சகர்களிடம் பார்த்துப்பார்த்து மக்கள் சலித்துவிட்டனர். அர்ச்சகர்கள் சிலரது கேவலமான போக்கு பல பக்தர்களை தீராத வேதனைக்குள் ஆழ்த்தியிருக்கிறது.

இவை மட்டுமின்றி, பிராமணக் குடியில் பிறந்த பலர் பொருளாதார நோக்கத்திற்காக பலதரப்பட்ட வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டனர். அசைவ உணவு, மதுப்பழக்கம் முதலியவையும் அத்தகு பெயரளவு பிராமணர்களிடம் வழக்கமாகிவிட்டது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் பிராமணர்களின் எண்ணிக்கை உள்நாட்டில் வசிப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும்வகையில், எண்ணிலடங்காத பிராமணர்கள் தங்களது பெருமைக்குரிய இறைப்பணியை கைவிட்டு ஈனர்களுக்காக உழைத்துக் கொண்டுள்ளனர். பிராமணர்கள் தங்களது பல்வேறு தவறுகளால் மக்களின் வாழ்விலிருந்து வெகுதூரம் சென்று விட்டனர்.

கண்ணுக்கு மருந்து கொடுப்போம்

அதே சமயத்தில், எதையும் எதிர்பார்க்காமல் உயிரைக் கொடுத்து பகவத் கைங்கரியத்தில் இன்றும் ஈடுபட்டு வரும் உண்மையான பிராமணர்களும் எண்ணற்றவர்களாவர். வேத மந்திரங்களை முறையாக உச்சரித்து, எல்லா ஆச்சாரங்களையும் அனுஷ்டானங்களையும் பின்பற்றி, எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், தள்ளாத வயதில்கூட நினைத்துப் பார்க்க இயலாத அர்ப்பணிப்புடன் அவர்கள் சேவை செய்கின்றனர். சில தகுதியற்ற பிராமணர்களால் இந்த முறையான பிராமணர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

கண்ணில் புரை ஏற்பட்டால் அதற்கு மருந்துபோட வேண்டுமே தவிர, கண்ணையே பிடுங்கி விடக் கூடாது. அதுபோல, நம்முடைய வழிபாட்டிற்கும் பண்பாட்டிற்கும் முக்கிய அங்கமாகத் திகழும் பிராமண சமுதாயம் தமது குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முயல வேண்டும். தவறு செய்யும் பிராமண பூஜாரிகளை பிராமண சமுதாயம் ஒருபோதும் தட்டிக் கேட்பதோ திருத்துவதோ இல்லை. இந்நிலையினை பிராமண சமுதாயம் மாற்றிக்கொள்ளாவிடில் மக்களின் ஆதரவையும் அரசாங்கத்தின் ஆதரவையும் அவர்கள் முற்றிலுமாக இழந்து விட வாய்ப்புள்ளது. எமது குறிக்கோள் பிராமணர்களைக் குறை கூறுவதோ அரசைக் குறை கூறுவதோ அல்ல மாறாக, இருவரும் ஒருங்கிணைந்து அறத்தைக் காக்க வேண்டும் என்பதே.

புது அர்ச்சகர்களை வரவேற்போம்

முன்னரே கூறியபடி பல்வேறு பிராமணர்கள் வேற்று தொழிலை அணுகிவிட்ட காரணத்தினால், பல்லாயிரக்கணக்கான கோயில்கள் முறையான பூஜையும் பராமரிப்புமின்றி முடங்கிக் கிடக்கின்றன. அரசாங்கம் உண்மையிலேயே ஏதேனும் நல்லது செய்ய நினைத்தால், புதிய அர்ச்சகர்களுக்கு பயிற்சியளித்து முடங்கியிருக்கும் கோயில்களுக்கு புத்துணர்ச்சி வழங்கலாம். புதிய அர்ச்சகர்கள் அத்தகு வருமானமற்ற கோயில்களில் சேவை செய்ய முன்வருவார்களா என்று தெரியவில்லை. இருப்பினும், அவர்களிடம் உண்மையான பிராமணத் தன்மை இருக்குமெனில், அவர்கள் ஏழ்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு பகவத் கைங்கரியத்தில் ஈடுபடுவர். அதன் மூலமாக ஸநாதன தர்மம் மேலும் வலுப்பெறும்.

அதுமட்டுமின்றி, முன்னரே கூறியபடி, நமது இஸ்கான் இயக்கத்தில், முறையான பயிற்சியும் தீக்ஷையும் பெற்று யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம். எனவே, பூஜை செய்வதில் உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் பாரம்பரிய கோயில்களைத் தொந்தரவு செய்வதைவிட்டு இதர வழிகளில் கைங்கரியம் செய்ய முன்வருதல் உசிதமானதாகும்.

பயிற்சி வகுப்புகள் இளம் வயதிலிருந்து கற்கப்படும் முறையான குருகுலக் கல்வியைப் போல அமைக்கப்பட்டு, உண்மையான ஆச்சாரியர்களின் உதவியுடன் மாணவர்களின் குணங்கள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப வருங்காலத்தில் அவர்களுக்கு கோயில் சேவை வழங்கப்பட வேண்டும். வெறும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் பயிற்சி பெற்று செய்வதற்கு, பூஜை என்பது ஒரு சாதாரண வேலையல்ல.

நாம ஸங்கீர்த்தன முறை

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, சாஸ்திரங்கள் கலி யுகத்தில் அர்ச்சனையைக் காட்டிலும் கீர்த்தனத்திற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கியுள்ளன. கலி யுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதே ஆன்மீக உயர்விற்கான உகந்த வழிமுறை. தீக்ஷை பெறுதல், பிராமணத் தன்மைகளுடன் இருத்தல் என பல்வேறு முன்தகுதிகள் பூஜை செய்வதற்கு அவசியம். ஆனால் பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதற்கோ எவ்வித முன்தகுதியும் அவசியமில்லை. அதே சமயத்தில் திருநாமம் மிகவுயர்ந்த பலனையும் வழங்கக்கூடியதாகும்.

இந்த நாம ஸங்கீர்த்தனத்தில் சிறு குழந்தைகூட பங்கேற்க முடியும். படித்தவர், படிக்காதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், செல்வந்தர், ஏழை என அனைவரும் இதில் எளிதில் பங்குகொள்ள முடியும். எல்லா நேரத்திலும் எல்லாச் சூழ்நிலையிலும் எந்தவித தடங்கலுமின்றி ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் எல்லாரும் ஈடுபடலாம். மக்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதில் அரசாங்கம் முனைப்புடன் இருக்குமெனில், ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து தரலாம். நாம ஸங்கீர்த்தனத்திற்கு மிகப்பெரிய கட்டமைப்புகள் ஏதும் தேவையில்லை, அதனால் இதற்கு செலவுகள் ஏதுமில்லை. வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்பதை நினைவிற்கொள்க.

அனைத்தும் தற்காலிகமே

மரபுகள் திட்டமிட்டு உடைக்கப்படுவதால் நம்முடைய மதத்திற்கும் பாரம்பரியத்திற்கும் அழிவு ஏற்படுமோ என்று சிலர் அஞ்சுகின்றனர். இது கலி யுகம் என்பதால், தர்மத்திற்கு சற்று தொய்வு ஏற்படும் என்பது உண்மையே. ஆயினும், இவ்வுலகைச் சார்ந்த எல்லா ஆட்சியாளர்களும் தற்காலிகமானவர்களே என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம். பல நூற்றாண்டுகள் முகலாய ஆட்சியாளர்களையே சமாளித்து வந்த ஸநாதன தர்மம் இதையும் கடந்து செல்லும்.

பெரியபெரிய ஆச்சாரியர்களும்கூட நாட்டை விட்டு ஓடுமளவிற்கு அநீதிகள் நிகழ்ந்துள்ளதை வரலாற்றில் காண்கிறோம். எனவே, நாம் பெறக்கூடிய துயரங்கள் பெரியதல்ல என்பதை நினைத்து, அனைத்தும் தற்காலிகமானவை என்பதை உணர்ந்து, முனைப்புடன் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபடுவோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives