கொரோனா: இந்தியாவிற்கு ஏன் இவ்வளவு பாதிப்பு?

Must read

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இலட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர், எந்த விதத்திலும் இதற்கு முடிவு ஏற்படவில்லை. மனித இனத்திற்கு பேரழிவை வழங்கும் இந்த கொரோனா வைரஸினால் மேலும் இலட்சக்கணக்கிலான மக்கள் உயிரிழப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்தியா மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்தது. முதலில் சீனா, அதன் பிறகு ஈரான், இத்தாலி, அமெரிக்கா என பல நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்தன. அதன் வரிசையில், இந்தியா சமீபத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

காரணம் என்ன?

ஏன் இப்படி? என்ற கேள்வி நம்மில் எழலாம். நீங்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தலாம், சீனாவின் மீது குற்றம் சுமத்தலாம். உண்மையில், விரல் நீட்டி குற்றம் சாற்றுவது சுலபம்; ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், உயிரியல் காரணங்கள், சமூக காரணங்கள், மரபணு காரணங்கள் (இதை உயிரியலின் கீழ் கொண்டு வரலாம்) என பல காரணங்களை இக்கேள்விக்கு பதிலாகக் காணலாம்.

நன்று, நான் ஓர் உயிரியல் நிபுணர் இல்லை, பௌதிக விஞ்ஞானியும் இல்லை, அரசியல் ஆய்வாளரும் இல்லை. ஆயினும், என் வாழ்வின் பெரும் பகுதியை பகவத் கீதை மற்றும் வேதாந்தத்தின் போதனைகளைக் கற்றறிந்து, அவற்றின் உபதேசங்களைப் பின்பற்றுவதற்காகச் செலவிட்டுள்ளேன். எனவே, இந்தியாவின் பாதிப்பிற்கான காரணத்தினை மேலோட்டமாக அல்லாமல் ஆழமாக வழங்க விரும்புகிறேன்.

இந்தியா ஏன் இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது? இந்த பெருந்தொற்று பெரிய அளவிலான துன்பத்திற்கு காரணமாக உள்ளது, இதனால் எல்லாருடைய குடும்பத்திலும் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார், ஒவ்வோர் இந்தியனும் தனக்கு பரிச்சயமான மற்றொருவரின் இழப்பைக் கண்டுள்ளான், பிரபலங்கள் பலரும்கூட இறந்துள்ளனர். ஏன்? ஏன்? இந்தியாவிற்கு ஏன் இந்த பாதிப்பு? அதிகப்படியான பாதிப்பு, அதிகப்படியான கவலை. ஏன்?

இந்தியாவின் புனிதத் தன்மை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ இராமர், மற்றும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார பூமியே இந்த பாரதம் என்னும் முக்கியமான விஷயத்தைக் கருத்தில் கொண்டு, நாம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த பாரத பூமியில் பல தீர்த்த ஸ்தலங்கள் உள்ளன. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவை இமயமலையின் நான்கு முக்கிய தீர்த்த ஸ்தலங்களாக உள்ளன. மேலும், பத்ரிநாத், இராமேஸ்வரம், புரி, துவாரகை ஆகியவை இந்தியாவின் நான்கு பகுதிகளில் அமைந்துள்ள நான்கு தீர்த்த ஸ்தலங்களாக உள்ளன. இவை மட்டுமின்றி, பல தீர்த்த ஸ்தலங்கள் நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன, அவற்றைப் பட்டியலிடத் தொடங்கினால் அது முடிவில்லாத ஒன்றாகும். அயோத்தியா, மதுரா, விருந்தாவனம், குருக்ஷேத்திரம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி என பல தீர்த்த ஸ்தலங்கள் உள்ளன.

மேலும், இந்த பாரத பூமியில் பல உன்னத ரிஷிகள் வாழ்ந்துள்ளனர், இன்றும்கூட வாழ்கின்றனர்: மார்கண்டேய மஹரிஷி, வியாஸ தேவர் முதலியோர் சிரஞ்சீவிகளாக இன்றும் வாழ்கின்றனர். வசிஷ்டர், விஸ்வாமித்திரர், ஏகர், திவிதர், திரிதர், மைத்ரேயர் என பல உயர்ந்த முனிவர்கள் இப்பூமியில் வாழ்ந்துள்ளனர்.

இந்த பாரத பூமி பாரம்பரியமாகவே ஒரு புண்ணிய பூமி, தர்மத்தை அறிந்தவர்களின் பூமி, புண்ணிய ஆத்மாக்கள் பிறப்பெடுக்கும் பூமி, புகழ்வாய்ந்த ரிஷிகளின் பூமி, பல புண்ணிய ஆத்மாக்களும் சாதுக்களும் வாழ்ந்த பூமி, இன்றும் வாழும் பூமி. இப்படியிருக்க, நாம் ஆச்சரியமடையலாம், பாரதத்திற்கு ஏன் இந்த அவல நிலை?

காரணத்தைத் தேடுவோம்

நாம் ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் பார்த்தால், பாரதம் ஆன்மீக ஞானத்தின் பூமி, ஆன்மீகப் பயிற்சிக்கான பூமி. உலகில் வேறு எங்கும் ஆன்மீகம் இல்லை என்று கூறவில்லை. உலகெங்கிலும் பல்வேறு மதங்கள் உள்ளன. ஆயினும், மதத்தின் உண்மையான புரிந்துணர்வு ஸநாதன தர்மத்தில்தான் உள்ளது. ஸநாதன தர்மம் என்று கூறும்போது, நான் இந்து மதத்தைக் குறிப்பிடவில்லை. “இந்து மதம்” என்பது ஸநாதன தர்மத்தை அடிப்படையாக வைத்து வளர்ந்துள்ள கலாச்சாரத்தின் நவீன பெயராகும்.

உண்மையான ஸநாதன தர்மம் என்பது பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் வழங்கும் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். பகவத் கீதையின் முதல் உபதேசம்: “நாம் எல்லாரும் நித்தியமான ஆன்மீக உயிர்கள், பிறவிதோறும் இந்த பௌதிக உலகில் துன்புற்று வருகின்றோம், இந்த மானிடப் பிறவியைப் பயன்படுத்தி பிறப்பு இறப்பு எனும் கடும் சுழலிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.” இதற்கான தலைசிறந்த வழி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பக்தியுடன் வழிபடுவதே. இந்த அறிவு பாரத தேசத்தில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தாமல் இருப்பதே இந்தியா மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதற்கான காரணமாகும்.

“நாம் எல்லாரும் நித்தியமான ஆன்மீக உயிர்கள், பிறவிதோறும் இந்த பௌதிக உலகில் துன்புற்று வருகின்றோம், இந்த மானிடப் பிறவியைப் பயன்படுத்தி பிறப்பு இறப்பு எனும் கடும் சுழலிலிருந்து நாம் வெளியேற வேண்டும். இதற்கான தலைசிறந்த வழி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பக்தியுடன் வழிபடுவதே. இந்த அறிவு பாரத தேசத்தில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தாமல் இருப்பதே இந்தியா மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதற்கான காரணமாகும்.”

அதிக பொறுப்புகளைக் கொண்ட பாரதம்

இந்த பெருந்தொற்று எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. இதற்கான காரணம் கர்மவினைப் பயன் என்பதை நாம் அறிவோம். “தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.” பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கர்ம வினையைப் பற்றி உரைத்துள்ளார். பைபிளில்கூட கர்ம பயன்களைப் பற்றி இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார். இது மிகவும் நுட்பமானது. நாம் நம் செயல்களுக்கான பலன்களைப் பெறுகிறோம். கலி யுகத்தில் மக்கள் மிகவும் பாவம் செய்பவர்களாக உள்ளனர், அவர்கள் தர்மத்தை விட்டு விலகிச் செல்கின்றனர்; இதனால் பாவ விளைவுகளும் அதிகமாகின்றன. அதே சமயத்தில், புண்ணிய பூமியான பாரத தேசத்தில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஏன்? புண்ணிய பூமியில் பாவத்தின் விளைவுகள் குறைந்து காணப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம், ஆனால் அதிகமாகக் காணப்படுகிறது. ஏன்?

பாரதம் ஆன்மீக ஞானமுடைய பூமி. ஞானத்தினால் நன்மதிப்பு வருகிறது, அதனுடன் இணைந்து பொறுப்பும் வருகிறது. உதாரணமாக, “குடிபோதையில் தகராறு செய்த ஒருவன் கைது செய்யப்பட்டான்,” என்னும் ஒரு செய்தியை யாரும் அதிகமாக கவனிப்பதில்லை. ஆனால், ஒருவேளை அத்தகு செயலில் உயர்ந்த பேராசிரியர் ஒருவரோ உயர்நீதிமன்ற நீதிபதியோ ஈடுபட நேர்ந்தால், நிச்சயம் அச்செய்தி அதிக கவனத்தைப் பெறும். [உதாரணத்திற்காகவே கூறுகிறோம், எந்த உண்மை நிகழ்வையும் வைத்து கூறவில்லை.]

“உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குடிபோதையில் தகராறு செய்தார்” என்னும் செய்தியைக் காணும் போது, நாம் அந்த நீதிபதியை—அவர் தமது அறிவினால் பெற்றுள்ள நன்மதிப்பு மற்றும் மரியாதையின் காரணத்தினால்—ஒரு சாதாரண மனிதனைக் காட்டிலும் மிகவும் தாழ்த்தியே அணுகுவோம். ஏனெனில், ஞானத்துடன் இணைந்து பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். அதுபோலவே, தர்மத்தை உறுதியுடன் கடைப்
பிடிக்க வேண்டிய பாரத பூமியில், தர்மம் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால், அதன் விளைவுகள் நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.

கருக்கலைப்பு என்னும் பெயரில் எண்ணற்ற பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இச்செயல் மிகவும் பாவகரமானது.

பாரதத்தில் நிகழும் பாவச் செயல்கள்

பாரதத்தில் தர்மம் முற்றிலுமாக அழிந்து விட்டது என்று கூறவில்லை. தர்மத்துடன் இணைந்து எத்தனையோ பாவ காரியங்கள் பாரத தேசத்தில் இன்றும் நடைபெற்று வருவதைக் காணலாம். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மிருக வதை நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, பசு வதை என்பது மிகப்பெரிய பாவமாகும். பசு நம் தாயைப் போன்றது, பசு நம் வழிபாட்டிற்கு உரியது, பசு எல்லா தேவர்களின் இருப்பிடம், பசு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானது. ஆகையால், பசு வதை மிகமிக மோசமான பாவச் செயலாகும்.

பசு வதை மட்டுமின்றி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான கோழிகள், ஆடுகள், மீன்கள் என பல உயிர்கள் வதைக்கப்படுகின்றன. இவை பாவகரமானவை என்பதை மக்கள் உணர வேண்டும், அதிலும் இச்செயல்கள் பாரத பூமியில் நிகழ்வது மிகப்பெரிய பாவம் என்பதை அறிய வேண்டும்.

விலங்குகளைக் கொல்வது ஒருபுறமிருக்க, எண்ணற்ற பச்சிளம் குழந்தைகள் கருக்கலைப்பு என்னும் பெயரில் கொல்லப்பட்டு வருகின்றனர். இன்னும் அக்கொலை நடந்து கொண்டுள்ளது. இது மிகவும் பாவகரமானது. பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதும் பாவகரமானதே.

நாம் கங்கையை வணங்குகிறோம், அதே சமயத்தில் கங்கையை மாசுபடுத்துகிறோம். நாம் யமுனையை வணங்குகிறோம், அதே சமயத்தில் யமுனையை மாசுபடுத்துகிறோம்.  நதியின் மீது பல அணைகளை நிர்மாணிக்கின்றோம், இவை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் நிர்மாணிக்கப்பட்டதல்ல. எனவே, இவற்றிற்கான பாவ விளைவுகளை நாம் நிச்சயம் எதிர்கொண்டாக வேண்டும். அதிலும் குறிப்பாக, எது சரி எது தவறு என்பதை ஞானத்தின் வாயிலாக அறிந்துள்ள பாரத பூமியில் இத்தகு பாவச் செயல்கள் நிகழும்போது, நிச்சயம் இதன் விளைவுகளை நாம் எதிர்பார்க்க வேண்டும். நாம் வேற்று தேசத்து மக்களை தூற்றக் கூடாது; ஏனெனில், அவர்கள் இப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வளர்க்கப்படவில்லை.

பாரதம் உலகத்திற்கு முன்னுதாரணம்

இந்தியாவின் உயர்நிலையை இங்குள்ள மக்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இந்தியர்கள் பௌதிகச் சூழ்நிலையைத் தாண்டி புண்ணியமான, புனிதமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லா உயிர்வாழிகளிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், அவற்றைக் கொன்று உண்ணக் கூடாது. ஞானத்தைப் பெற்றவர்கள் உலக நாடுகள் அனைத்திற்கும் ஓர் உதாரணமாகத் திகழ வேண்டும். உலக நாடுகள் அனைத்திற்கும் பாரதம் குருவைப் போல இருக்க வேண்டுமென ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார்.

பாரத-பூமிதே ஹஇல மனுஷ்ய ஜன்ம ஜார

ஜன்ம ஸார்தக கரி’ கர பர-உபகார

“பாரத பூமியில் மனிதப் பிறவியைப் பெற்றுள்ள அனைவரும், ஆன்மீகத்தைக் கடைப்பிடித்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து, தங்கள் வாழ்வை வெற்றிகரமாக மாற்றிக் கொண்டு, மற்றவர்களுக்கு நன்மை புரிய வேண்டும்.” (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 9.41)

“மற்றவர்களுக்கு நன்மை செய்தல்” என்பதற்கு நாம் தவறான அர்த்தத்தைக் கொடுத்துள்ளோம்: பிறருக்கு நன்மை செய்வதென்றால், அஃது அவர்களின் உடலுக்குச் செய்யும் நன்மையென நினைக்கிறோம். ஆனால் அஃது உயர்ந்த நன்மையல்ல. அதுவும் ஒரு வகையான சேவையே, ஆனால் அது ஸநாதன (நிரந்தரமான) தர்மமல்ல. ஏனெனில், இந்த பூதவுடல் நித்தியமானதல்ல.

பிறருக்கு உண்மையிலேயே நன்மை செய்வதென்றால், அவர்களுக்கு ஆன்மீக ஞானத்தை வழங்க வேண்டும். அந்த ஞானமானது பிறப்பு இறப்பு எனும் கொடிய சுழற்சியிலிருந்து அவர்களை விடுவிக்கும். அதாவது, ஒன்றன்பின் ஒன்றாக வரும் பல்வேறு பெருந்தொற்றுகள், துயர்கள் என அனைத்திலிருந்தும் அவர்களை விடுவிக்கும்.

உண்மையான ஞானத்தைப் பரப்புவோம்

ஆகையால், இந்த கொரோனா பாதிப்பினை இந்திய மக்கள் ஓர் எச்சரிக்கை மணியாகக் கருத வேண்டும். நாம் பல்வேறு தேசிய கொள்கைகளை உருவாக்குகின்றோம். பகவத் கீதையை இந்நாட்டின் வழிகாட்டி நூலாக மாற்ற வேண்டும் என்ற தேசிய கொள்கையை நாம் அமலாக்க வேண்டும். இந்நாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கையை சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாக்க வேண்டும். இதன் பொருள், வேற்று மதத்தினரை வெறுப்பதல்ல. சாஸ்திர ஞானம் பாரத தேசத்தின் சிறப்பான புதையல்; இப்புதையலைக் கொண்டு உலக மக்கள் அனைவரையும் பாவம் செய்வதிலிருந்து காப்பாற்றி, எல்லா துயரங்களுக்கும் காரணமான இருள் என்னும் அறியாமையிலிருந்து அவர்களை அகற்றி, பாரத தேசம் இவ்வுலகை வழிநடத்த வேண்டும்.

பகவத் கீதையின் ஞானத்தைப் பரப்புவதன் மூலமாக இந்தியா இதைச் செய்தாக வேண்டும். இது மிகவும் தீய காலம். மக்கள் இந்த ஆன்மீக விஷயங்களை உணர்வதில்லை, நம்புவதில்லை, சற்றும் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், நாம் அவர்களின் ஆர்வத்தை வளர்த்தாக வேண்டும்; தனிப்பட்ட முறையிலும், சமூக ரீதியாகவும், தேசிய அளவிலும் வளர்க்க வேண்டும். இந்த கலி யுகத்தில், தனிப்பட்ட முறையிலும் சரி, சமூக ரீதியிலும் சரி, ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்கான சிறந்த வழி அல்லது ஒரே வழி: பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிப்பதே.

ஹரேர் நாம ஹரேர் நாம

 ஹரேர் நாமைவ கேவலம்

கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ

 நாஸ்த்யேவ கதிர் அன்யதா

“இந்த கலி யுகத்தில் உன்னத நிலையை அடைவதற்கு, ஹரியின் நாமத்தை உச்சரிப்பதைத் தவிர, ஹரியின் நாமத்தை உச்சரிப்பதைத் தவிர, ஹரியின் நாமத்தை உச்சரிப்பதைத் தவிர, வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை.” (பிருஹன் நாரதீய புராணம்)

மக்கள் வினவலாம்: இதற்கும் கொரோனா வைரஸுக்கும் என்ன சம்பந்தம்? எல்லா சம்பந்தமும் உண்டு. ஆன்மீக கலாச்சாரத்தை ஒதுக்கிய காரணத்தினால் மட்டுமே, “உலகின் ஆன்மீக வழிகாட்டி” எனும் மிகவுயர்ந்த மரியாதைக்குரிய நிலையிலிருந்து சரிந்து, பாரதம் தன் மக்களை இழக்கும் இந்த பயங்கர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பல குடும்பங்கள் அழிந்துள்ளன, இன்னும் பல இன்னல்கள் தொடரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். நாம் கிருஷ்ணரின் உபதேசங்களை ஏற்க மறுத்தால், நாம் நம் உண்மையான அறிவு நிலைக்குத் திரும்பாவிட்டால், இந்த சமுதாயத்தை கிருஷ்ணரின் அறிவுரைப்படி மாற்றாவிட்டால், நிச்சயம் நமது இன்னல்கள் தொடரும்.

இந்தியா ஏன் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல துன்பங்களை சந்திக்கின்றது என்னும் கேள்விக்கு இதுவே பகவத் கீதையின் வாயிலான பார்வையாகும். கிருஷ்ண பக்தியே எல்லா துயரங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும்; இப்பிறவியில் மட்டுமின்றி வரும் பிறவிகளிலும் கிருஷ்ண பக்தியே நம்மைக் காக்கும். உண்மையில், [கிருஷ்ண பக்தியில் இருக்கும்போது] நமக்கு மறுபிறவி கிடையாது, நாம் கிருஷ்ணரை அடைவோம்.

கிருஷ்ணர் கூறுகிறார்:

ஜன்ம கர்ம ச மே திவ்யம்

 ஏவம் யோ வேத்தி தத்த்வத:

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம

 நைதி மாம் ஏதி ஸோ ’ர்ஜுன

“அர்ஜுனா, யாரொருவர் என்னுடைய பிறப்பு மற்றும் லீலைகளின் தன்மையை சரியாக அறிகின்றானோ, அவன் மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்புவதில்லை. அவன் என்னை வந்தடைகிறான்.” (பகவத் கீதை 4.9)

இதுவே நம்முடைய குறிக்கோளாக, சீரிய சமுதாயத்தினுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். நாம் கொரோனாவினால் மடியலாம், அல்லது வேறு விதமாக மடியலாம். மரணத்திற்கு முன்பாக கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்ல நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் நம் சமுதாயத்தை சீரிய முறையில், குறைந்தபட்சம் பாரத தேசத்தை ஒரு முன்னுதாரணமாக மாற்றி, இவ்வுலகில் கிருஷ்ணரின் உபதேசங்களைத் தழுவி, அமைதியான சமுதாயத்தை அமைப்போம், அஃது எல்லா மங்கலத்தையும் உலகிற்கு வழங்கும்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

தமிழாக்கம்: கோபிநாதேஷ்வரி தேவி தாஸி

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives