இந்திரனைக் கொல்வதற்கான திதியின் முயற்சி

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 18

சென்ற இதழில், சித்ரகேது சிவபெருமானைப் பார்த்து விளையாட்டாகக் கூறிய கருத்தினால் கோபமுற்ற பார்வதி தேவி அவருக்கு சாபம் கொடுத்ததையும், சிவபெருமான் பகவத் பக்தர்களின் பெருமைகளை எடுத்துரைத்ததையும் கண்டோம். இந்த இதழில், இந்திரனைக் கொல்வதற்காக திதி தனது கணவரிடம் வரம் பெற்று, விரதம் அனுசரித்ததைப் பற்றிக் காண்போம்.

அதிதியின் வம்சம்

அதிதியின் பன்னிரண்டு மகன்களில் ஐந்தாவது மகனின் பெயர் சவிதா. அவனது மனைவி பிருஷ்ணி. இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒன்பது மகன்களும் இருந்தனர்.

அதிதியின் ஆறாவது மகனான பகனுக்கும் அவரது மனைவி சித்திக்கும் மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். அதிதியின் ஏழாவது மகனான தாதாவிற்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவளது எட்டாவது மகனான விதாதாவிற்கு ஐந்து புரீஷ்யர்கள் மகன்களாகப் பிறந்தனர்.

அதிதியின் ஒன்பதாவது மகனான வருணனுக்கும் அவனது மனைவி சர்ஷணிக்கும் மகனாக, பிரம்மாவின் மானஸ புத்திரரான பிருகு மீண்டும் பிறந்தார். வருணனின் விந்துவிலிருந்து மகாமுனிவரான வால்மீகி பிறந்தார். ஊர்வசியின் அழகைக் கண்டு மித்திரனும் வருணனும் விந்துவை வெளியேற்றினர். அதை அவர்கள் மண்குடத்தில் பத்திரப்படுத்தி வைத்தனர். அதிலிருந்து அகஸ்தியரும் வசிஷ்டரும் தோன்றினர். பத்தாவது மகனான மித்திரனின் மனைவியான ரேவதிக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.

அதிதியின் பதினொன்றாவது மகனான ஸ்வர்க ராஜன் இந்திரன் தனது மனைவி சசீதேவியின் கர்ப்பத்திலிருந்து மூன்று மகன்களைப் பெற்றார்.

அதிதியின் பன்னிரண்டாவது மகனாக பரம புருஷ பகவான் வாமன ரூபத்தில் தோன்றினார். அவர் தம் மனைவி கீர்த்தியின் கர்ப்பத்தில் பிருஹத்-ஸ்லோகர் என்ற மகனைப் பெற்றார். பிருஹத்-ஸ்லோகருக்கு செளபகர் முதலான பல மகன்கள் இருந்தனர்.

பகவான் வாமனதேவர் மூன்றடிகளால் மூவுலகங்களையும் அளந்த அசாதாரணமான லீலையினையும் அவரது குணங்களையும் எட்டாவது ஸ்கந்தத்தில் காணலாம்.

திதியின் வம்சம்

இப்பொழுது கஸ்யபருக்கும் திதிக்கும் பிறந்து அசுரர்களாக மாறிய மகன்களைப் பற்றிக் காணலாம். இந்த அசுர குடும்பத்தில் சிறந்த பக்தரான பிரகலாதரும் அவரது பேரனான பலி மஹாராஜரும் பிறந்தனர். அசுரர்கள் திதியின் மகன்கள் என்பதால் தைத்தியர்கள் எனப்படுவர்.

ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும் திதியின் முதல் மகன்கள். ஹிரண்யகசிபுவுக்கும் அவனது மனைவி கயாதுவுக்கும் சம்ஹலாதன், அனுஹலாதன், ஹலாதன், பிரஹலாதன் என்ற நான்கு மகன்களும் சிம்ஹீகா என்ற ஒரு மகளும் இருந்தனர். சிம்ஹீகா, விப்ரசித் என்ற அசுரனை மணந்து ராகுவைப் பெற்றாள். ராகு ஏமாற்றி அமிர்தம் குடிக்க முயன்றபோது, பரம புருஷ பகவானால் தலை துண்டிக்கப்பட்டான்.

சம்ஹலாதனின் மனைவி கிருதி பஞ்சஜனன் என்ற மகனைப் பெற்றாள். ஹலாதனின் மனைவி தமனி வாதாபி, இல்வலன் என்ற இரு மகன்களைப் பெற்றாள்.

அனுஹலாதன் தன் மனைவி சூர்யாவின் கர்ப்பத்தில் இரு மகன்களைப் பெற்றான். பிரகலாதனின் மகன் விரோசனர் ஆவார். விரோசனரின் மகன் பலி மஹாராஜர் எனப்பட்டார். பலி மஹாராஜருக்கு நூறு மகன்கள்; அவர்களில் பாணன் மூத்தவன். திதியின் வயிற்றிலிருந்து 49 மருத்துக்கள் பிறந்தனர். அவர்கள் தேவர்களின் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர். இஃது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் காண்போம்.

கஸ்யபரின் திருப்திக்கேற்ப திதி செயல்படுதல்

பகவான் விஷ்ணு, இந்திரனுக்கு உதவும்பொருட்டு, இரு சகோதரர்களான ஹிரண்யகசிபுவையும் ஹிரண்யாக்ஷனையும் கொன்றார். அதனால் சோகத்தாலும் கொழுந்துவிட்டெரியும் கோபத்தாலும் திதி கடுமையாக பாதிக்கப்பட்டாள். “இந்திரன் கட்டுப்பாடின்றி வாழ்கிறான். அவனது கர்வத்தைப் போக்கும் ஒரு மகனைப் பெற்று, அந்த பாவியைக் கொல்லும் வழியைக் காண வேண்டும்,” என்று சிந்தித்து, அவள் தனது இனிய நடத்தையால் கஸ்யபரை திருப்திப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டாள். கணவரின் உத்தரவுகளை அவரது விருப்பப்படி மிகுந்த விசுவாசத்துடன் நிறைவேற்றி வந்தாள்.

திதி தன் அன்பு, அடக்கம், சேவை, கட்டுப்பாடு, கணவனைக் கவரும் இனிய வார்த்தைகள், புன்னகை, மற்றும் பார்வையினால் அவரது மனதை வசீகரித்து தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாள். பண்டிதராக இருந்தும், கஸ்யப முனிவர் திதியின் செயற்கையான நடத்தையால் மயக்கப்பட்டு அவளது விருப்பங்களை நிறைவேற்றுவதாக வாக்களித்தார்.

கஸ்யபர் திதியிடம் கூறினார்: “அழகிய பெண்ணே! குற்றம் காண முடியாதவளே, உன் நடத்தையால் மிகவும் மகிழ்ந்தேன், வேண்டிய வரத்தைக் கேட்கலாம். ஒரு பெண்ணுக்குத் தன் கணவனே கண்கண்ட தெய்வம். கணவன் தனது மனைவிக்கு பகவானின் பிரதிநிதியாக இருக்கின்றான். இவ்வாறு நீ என்னை பாவித்து பக்தி சிரத்தையுடன் பூஜித்ததால், உன் விருப்பங்களை நிறைவேற்றி உனக்கு சன்மானம் அளிக்கப் போகிறேன்.”

கஸ்யபரின் சுய நிந்தனை

திதி மகிழ்ச்சியுடன் பதிலுரைத்தாள்: “அன்புள்ள கணவரே, நான் என் மகன்களை இழந்துவிட்டேன். தாங்கள் எனக்கு ஒரு வரமளிக்க விரும்பினால், இந்திரனைக் கொல்லக்கூடிய மரணமற்ற ஒரு மகனை நான் வேண்டுகிறேன்.”

மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற ஆவலாக இருந்த கஸ்யபர், அவளது அந்த விருப்பத்தைக் கேட்டு அதிர்ச்சியில் தன் ஆனந்தமே தரைமட்டமானதை உணர்ந்து எண்ணினார்: “ஐயஹோ, நான் பௌதிக சுகத்தில் அதிக பற்றுக் கொண்டவனாகி விட்டேனே! என் மனம் பெண்ணின் உருவிலுள்ள பரம புருஷரின் மாயா சக்தியால் வசீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, துரதிர்ஷ்டசாலியான நான் நரகத்தை நோக்கிச் சரிவது நிச்சயம்.

“பெண்ணாகிய இவள் குற்றம் சாட்டப்பட வேண்டியவள் அல்ல. ஆணாகிய எனக்கே எல்லா பழியும். என் புலன்களைக் கட்டுப்படுத்த இயலாததால், எது நல்லது என்ற விஷயத்தில் சிறிதும் பரிச்சயம் இல்லாதவனானேன். ஒரு பெண்ணின் முகம் இனிமையாக அழகாக இருந்தாலும், அவளது இதயத்தை ஆராய்வோமேயானால், அது கத்தியின் முனை போன்று மிகவும் கூர்மையானது என்பதைப் புரிந்துகொள்வோம். ஒரு பெண்ணின் செயல்களை யாரால் புரிந்துகொள்ள முடியும்?

“எல்லாரிடமும் மிகவும் பிரியமானவர்கள்போல் நடந்து கொண்டாலும், உண்மையில் பெண்களுக்குப் பிரியமானவர்கள் ஒருவரும் இல்லை. அவர்கள் தங்கள் சுயநலனுக்காக கணவன், மகன், சகோதரர்கள் என யாரையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். நான் இவளுக்கு வரமளிப்பதாக வாக்களித்துள்ளேன், அதை மீற முடியாது. ஆனால் இந்திரன் கொல்லப்பட வேண்டியவர் அல்லர். இச்சூழ்நிலையில் நான் சரியான தீர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

கஸ்யபரின் அறிவுரை

கஸ்யபர் திதியிடம் கூறினார்: “நற்குணப் பெண்ணே, நான் கூறும் விரதத்தைக் குறைந்தது ஓர் ஆண்டிற்கு தவறாது பின்பற்றினால், இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு மகனை நீ நிச்சயமாகப் பெற முடியும். ஆனால் வைஷ்ணவக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதெனும் இந்த விரதத்திலிருந்து நீ விலகினால், இந்திரனுக்குச் சாதகமான ஒரு மகனைப் பெறுவாய்.

“அன்பு மனைவியே, இவ்விரதத்தை அனுஷ்டிக்கும்போது, நீ யாரையும் இம்சிக்கக் கூடாது; யாரையும் சபிக்கக் கூடாது; பொய்கூறக் கூடாது; நகம், முடி வெட்டக் கூடாது; எலும்பு, மண்டையோடு போன்ற அமங்கலப் பொருட்களைத் தொடக் கூடாது. நீரினுள் இறங்கி குளிக்கக் கூடாது; கோபித்தல் கூடாது; துர்நடத்தை உள்ளவர்களோடு பேசவோ பழகவோ கூடாது; சுத்தம் செய்யாத துணிகளை அணியக் கூடாது; ஏற்கனவே அணியப்பட்ட மலர்மாலையை அணியக் கூடாது.

“உண்டு மிஞ்சிய உணவைச் சாப்பிடக் கூடாது; காளிதேவிக்கு படைக்கப்பட்டதைச் சாப்பிடக் கூடாது; மாமிசத்தாலோ மீனாலோ அசுத்தமடைந்த உணவைச் சாப்பிடக் கூடாது; சூத்திரனால் தொடப்பட்ட அல்லது கொண்டு வரப்பட்ட எதையும் சாப்பிடக் கூடாது; மாதவிலக்கிலுள்ள பெண்ணால் பார்க்கப்பட்ட எதையும் சாப்பிடக் கூடாது; கைகளால் ஏந்தி நீரைப் பருகக் கூடாது.

“சாப்பிட்ட பிறகு உன் வாய், கை, கால்களைக் கழுவாமல் வெளியில் செல்லக் கூடாது; பொழுது சாயும் நேரத்திலும், அவிழ்ந்த கேசத்துடனும், ஆபரணங்களால் நன்கு அலங்கரித்துக்கொள்ளாமலும், வாகு எடுக்காமலும், உடலை நன்கு மறைத்துக்கொள்ளாமலும் நீ வெளியில் செல்லக் கூடாது. கால்களைக் கழுவாமலும், அசுத்தமாகவும், ஈரக் கால்களுடனும், வடக்கு அல்லது மேற்கில் தலை வைத்தும், உடைகளின்றியும், மற்ற பெண்களுடனும், சூரிய உதயத்தின்போதும், சூரிய அஸ்தமனத்தின்

போதும் நீ சயனிக்கக் கூடாது

“சுத்தமான ஆடையணிந்து, எப்பொழுதும் பரிசுத்தமாகவும், மஞ்சள், சந்தனம் முதலான மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, காலையில் உண்பதற்கு முன்பாக பசுக்கள், பிராமணர்கள், லக்ஷ்மிதேவி மற்றும் பகவானை பூஜிக்க வேண்டும். சுமங்கலிப் பெண்களை மலர்மாலைகளாலும் சந்தனத்தாலும் ஆபரணங்களாலும் பிற மங்கலப் பொருட்களாலும் பூஜிக்க வேண்டும்; கர்ப்பவதியான மனைவி தன் கணவனைத் துதித்து அவரை வழிபட வேண்டும்; மேலும் தன் கணவனே கர்ப்பத்தில் இருப்பதாக எண்ணி அவரை தியானிக்க வேண்டும்.

“பும்ஸவனம் என்ற இந்த விரதத்தைத் தவறுதலின்றி குறைந்தது ஒரு வருடத்திற்கு நீ அனுஷ்டித்தால், இந்திரனைக் கொல்லும் ஒரு மகன் கிடைப்பான்; ஆனால் விரத அனுஷ்டானத்தில் தவறு செய்தால் உன் மகன் இந்திரனுக்கு நண்பனாகி விடுவான்.”

இந்திரனின் சேவை

திதி இப்புனிதச் சடங்கை அனுஷ்டிப்பதாக ஒப்புக் கொண்டு, பெருமகிழ்ச்சியுடன் கர்ப்பவதியாகி ஒழுங்காக அந்த விரதத்தை அனுஷ்டிக்கலானாள்.

திதியின் நோக்கத்தை அறிந்த இந்திரன் தனது சுய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்டார். தற்காப்பே இயற்கையின் முதல் சட்டம் என்ற நியாயத்தைப் பின்பற்றி, அவர் திதியின் விரதத்தை முறியடிக்க விரும்பினார். இவ்வாறாக, அவர் தனது சிற்றன்னையான திதியின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்திரன் தினமும் பழங்கள், மலர்கள், யாகக் குச்சிகள் ஆகியவற்றைக் காட்டிலிருந்து கொண்டு வந்தும், தர்ப்பைப்புல், இலைகள், முளைகள், மண், நீர் ஆகியவற்றைச் சரியான நேரத்தில் கொண்டு வந்தும் சிற்றன்னைக்குச் சேவை செய்யலானார்.

இந்திரன் வெளித் தோற்றத்தில் நட்புடையவர்போல், நம்பிக்கையூட்டும் வகையில் சேவை செய்து வந்தார். எனினும், திதியின் விரத அனுஷ்டானத்தில் ஏதேனும் குறை நேர்ந்தால், அப்போது உடனடியாகத் தன் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் இருந்தார். இந்த இரகசியம் வெளிப்பட்டுவிடாமல் கவனத்துடன் சேவையில் ஈடுபட்டார்.

மருத்துகள்

திதியின் கர்ப்பத்தினுள் இந்திரனால் வெட்டப்பட்டவர்கள் இந்திரனிடம் வேண்டுதல்

உறுதியான விரதத்தால் திதி மெலிந்து பலவீனமாக இருந்தாள். ஒருமுறை, அவள் சாப்பிட்டபின் வாய், கை, கால்களைக் கழுவாமல் மாலை வேளையில் உறங்கி விட்டாள். அவளிடம் இந்தக் குற்றத்தைக் கண்டதும், அனிமா, லகிமா போன்ற யோக சித்திகளைப் பெற்றிருந்த இந்திரன், அவள் ஆழ்ந்த உறக்கத்தில் நினைவின்றி இருந்தபொழுது, அவளது கர்ப்பத்தினுள் புகுந்து பொன்னிறமாக இருந்த கருவை தன் வஜ்ராயுதத்தால் ஏழு துண்டுகளாக வெட்டினார். அவை மடியாததால், மீண்டும் அவை ஒவ்வொன்றையும் ஏழு துண்டுகளாக வெட்டினார். அப்போது அந்த ஜீவன்கள் கூப்பிய கைகளுடன், “இந்திரனே, நாங்கள் உமது சகோதரர்களான மருத்துகள். எங்களை ஏன் கொல்ல முயற்சிக்கிறீர்கள்?” என்று வினவினர்.

மருத்துகள் தனக்கு விசுவாசமிக்க ஆதரவாளர்களாக இருப்பதைக் கண்ட இந்திரன், “நீங்கள் என் சகோதரர்கள் எனில், இனி அச்சம்கொள்ள அவசியமில்லை,” என்றார்.

இந்திரனின் வஜ்ராயுதத்தால் 49 துண்டுகளாக வெட்டப்பட்ட கரு, பரம புருஷ பகவானின் கருணையால் காப்பாற்றப்பட்டது. மூல முழுமுதற் கடவுளை ஒரேயொரு தடவை வழிபட்டவன்கூட, ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்பட்டு பகவான் விஷ்ணுவின் தேக அம்சங்களைப் பெறும் நன்மையை அடைகிறான். திதி கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு ஒரு சிறந்த விரதத்தை அனுஷ்டித்து பகவான் விஷ்ணுவை வழிபட்டாள். மருத்துகள், திதியின் ஆத்ம பலத்தால் அவளது கர்ப்பத்தில் பிறந்து, பரம புருஷரின் கருணையால் தேவர்களுக்கு சமமானவர்கள் ஆனார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.

திதியை சமாதானம் செய்தல்

அதன் பிறகு, திதி தூக்கத்திலிருந்து எழுந்தபோது, இந்திரனுடன் நாற்பத்தொன்பது மகன்கள் இருப்பதைக் கண்டாள். அவர்கள் பிரகாசமாக, இந்திரனுடன் நட்புடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். பரம புருஷரை வழிபட்டதால் திதி தூய்மை அடைந்திருந்தாள். அவள் இந்திரனிடம் விசாரித்தாள், “பிரிய மகனே, 12 ஆதித்தியர்களான உங்களைக் கொல்லக்கூடிய மகனைப் பெறவே கடினமான இந்த விரதத்தை நான் கடைப்பிடித்தேன். ஆனால் நான் காண்பதோ 49 பேர், அதுவும் உன்னுடன் நட்புடன் உள்ளனர். இஃது எவ்வாறு நிகழ்ந்தது?”

இந்திரனும் பின்வருமாறு பதிலுரைத்தார்: “அன்னையே, உங்கள் விரத அனுஷ்டானத்தில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். நீங்கள் அகால நேரத்தில் உறங்கியதும் உடனடியாக கர்ப்பத்திலிருந்த கருவை ஏழாக வெட்டி, அவை ஒவ்வொன்றையும் ஏழாக வெட்டினேன். ஆனால் பரம புருஷ பகவானின் கருணையால் அவர்களில் எவரும் இறக்கவில்லை. இதைக் கண்ட நான் ஆச்சரியம் அடைந்தாலும், நீங்கள் பகவான் விஷ்ணுவை வழிபட்டு தினமும் பக்தித் தொண்டு செய்து வந்ததன் உப-பலனே இஃது என்ற முடிவுக்கு வர முடிந்தது.

“பகவான் கிருஷ்ணர் தம் பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார். பரம புருஷராகிய அவருக்குத் தொண்டனாவதே எல்லா நோக்கங்களின் முடிவான இலக்காகும். மிகவும் பிரியமானவரும் பக்தர்களுக்குத் தம்மையே கொடுப்பவருமான பகவானுக்கு சேவை செய்யும் புத்திசாலி, நரகத்தில்கூட கிடைக்கக்கூடியதான பௌதிகமான சுகத்தை ஒருபோதும் விரும்புவதில்லை.

“தாயே, நான் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருள வேண்டும். உங்களது சிறந்த பக்தித் தொண்டால் உங்கள் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.”

இந்திரனின் நன்னடத்தையால் திருப்தியுற்ற திதி அமைதியடைந்தாள். இந்திரனும் அவளுக்கு வணக்கம் செலுத்திவிட்டு தன் சகோதரர்களான மருத்துகளுடன் ஸ்வர்கம் சென்றார்.

About the Author

திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் பொது மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives