பகவான் நரசிம்மரை பிரகலாதர் சாந்தப்படுத்துதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஏழாம் ஸ்கந்தம், அத்தியாயம் 9

சென்ற இதழில், அசுரனாகிய ஹிரண்யகசிபுவை பகவான் நரசிம்மர் வதம் செய்ததையும், பிரபஞ்சத்தின் அனைத்து லோகவாசிகளும் பகவானைப் போற்றிப் புகழ்ந்ததையும் கண்டோம். அப்போதும் கோபம் தணியாத பகவானை பிரகலாத மஹாராஜர் சாந்தப்படுத்துவதை இவ்விதழில் காணலாம்.

நரசிம்மரின் ஆசி

ஹிரண்யகசிபுவையும் அவனது சகாக்களையும் வதம் செய்த பின்பும் கோபம் தணியாத பகவான் நரசிம்மதேவரை அணுகுவதற்கு பிரம்மதேவர், சிவபெருமான் உள்ளிட்ட தேவர்கள் எவரும் துணியவில்லை. லக்ஷ்மி தேவியால்கூட பகவானின் இத்தகைய அற்புதமான, அசாதாரணமான ரூபத்தைக் கண்ட அச்சத்தில் அவரை அணுக இயலவில்லை.
அச்சமயத்தில், பிரம்மதேவர் பிரகலாதரிடம், “குழந்தாய்! பகவான் நரசிம்மதேவர் உன் அசுரத் தந்தையிடம் மிகவும் கோபம் கொண்டுள்ளார். ஆகவே, அவரிடம் சென்று தயவுசெய்து அவரை சாந்தப்படுத்துவாயாக,” என்று கேட்டுக் கொண்டார்.
அதனை ஏற்றுக் கொண்ட பிரகலாதர், நரசிம்மதேவரின் அருகில் சென்று கூப்பிய கரங்களுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். பிரகலாதரைக் கண்ட பகவான் அன்பினால் பேரானந்தமடைந்து, அவரை எழுப்பி தம் திருக்கரத்தை தலைமீது வைத்து ஆசி வழங்கினார்.

உடனடியாக, பிரகலாத மஹாராஜரின் உடலில் பரவசத்தின் அறிகுறிகள் தோன்றின. அவரது இதயம் அன்பினால் நிறைந்து, கண்களில் நீர் மல்கியது. பிரகலாதர் தமது மனதையும் பார்வையையும் நரசிம்மதேவரிடம் நிலைக்கச் செய்து தழுதழுத்த குரலில் அன்புடன் பிரார்த்திக்கத் தொடங்கினார்.

பக்தர்களின் புகழ்

பிரகலாதர் பின்வருமாறு துதித்தார்: பகவானே, அசுர குடும்பத்தில் பிறந்த நான் பரம புருஷராகிய தங்களை திருப்திப்படுத்துவதற்கு சிறிதும் தகுதியில்லாதவன். செல்வம், உயர்குடிப் பிறப்பு, அழகு, செல்வாக்கு, தவம், கல்வி, ஆற்றல், காந்தி, உடல் பலம், முயற்சி, யோக சக்தி முதலியவற்றைக் கொண்டு தங்களை திருப்திப்படுத்த இயலாது; ஆயினும், பக்தித் தொண்டால் நிச்சயம் திருப்தி செய்ய இயலும். இதற்கு கஜேந்திரன் உதாரணமாக உள்ளார்.

பக்தர் ஒருவர் பிராமணரைவிடச் சிறந்தவர்; ஏனெனில், அவரால் தன் குடும்பம் முழுவதையும் புனிதப்படுத்திவிட முடியும். ஆயினும், பக்தியில்லாத பெயரளவு பிராமணரால் தன்னைக்கூட புனிதப்படுத்திக்கொள்ள முடியாது. எனவே, அசுர குடும்பத்தில் பிறந்திருப்பினும், நான் எனது புத்திக்கு ஏற்ப, முழு முயற்சியுடன் பிரார்த்தனைகள் செய்வேன். பகவானின் மகிமைகளைக் கேட்பதாலும் பிரார்த்தனை செய்வதாலும் பௌதிக வாழ்விலிருந்து எவரும் புனிதமடைய முடியும்.

பகவானே! பிரம்மதேவர் முதலான எல்லா தேவர்களும் தங்களின் உண்மையான சேவகர்களாவர். இந்த பயங்கரமான ரூபத்தில் தோன்றியிருப்பது தங்களது திருவிளையாடலே. எப்போதும் பிரபஞ்சத்தின் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்குமே தாங்கள் அவதரிக்கிறீர்கள்.

கோபம் தணியாத பகவான் நரசிம்மரை பிரகலாதர் சாந்தப்படுத்துதல்.

பிரகலாதரின் விருப்பம்

பகவான் நரசிம்மதேவரே, எனது தந்தையான இந்த அசுரன் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டு விட்டதால், தயைகூர்ந்து கோபம் தணிந்து சாந்தமடையுங்கள். அசுரன் கொல்லப்பட்டதால் அனைத்து லோகங்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளன. தங்களது மங்கலகரமான இந்த அவதாரத்தை, எல்லாவித அச்சத்திலிருந்தும் விடுபடுவதற்காக, அனைவரும் எப்போதும் நினைத்து போற்றுவார்கள்.

எவராலும் வெல்ல முடியாத பகவானே, உங்களுடைய பயங்கரமான வாய், நாக்கு, கூர்மையான கொடிய பற்கள், குடல் மாலை, இரத்தம் தோய்ந்த பிடரி மயிர் முதலியவற்றைக் கண்டு நான் அஞ்சவில்லை. அசுரனின் வயிற்றைக் கிழித்தெறிந்த தங்களது கூர்மையான நகங்களைக் கண்டும் நான் அஞ்சவில்லை.

இழிவடைந்த ஆத்மாக்களிடம் கருணை கொண்டுள்ள பகவானே, எனது செயல்களின் விளைவாக நான் அசுரர்களிடையே தள்ளப்பட்டிருக்கிறேன். ஆகவே, பொறுக்க முடியாததும் கொடியதுமான இந்த ஜடவுலக வாழ்க்கையைக் கண்டுதான் மிகவும் அஞ்சுகிறேன். பகவானே, பந்தப்பட்ட வாழ்விலிருந்து முக்தி தரும் சரணாலயமாகிய தங்கள் பாத மூலத்திற்கு எப்போது என்னை அழைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?

துன்பகரமான வாழ்விலிருந்து வெளியேறுவதற்கு பல பரிகாரங்கள் இருந்தபோதிலும், இந்த ஜடவுலகிலுள்ள இத்தகைய பரிகாரங்கள் துன்பங்களைப் போக்குவதற்கு பதிலாக அதிக துன்பங்களையே தருகின்றன. ஆகவே, தங்களது சேவையில் ஈடுபடுவதே ஒரே பரிகாரம் என்று நான் கருதுகிறேன். இத்தகைய சேவையைப் பற்றி அன்புடன் எனக்கு உபதேசித்து அருளுங்கள்.

பக்தர்களின் சகவாசத்தால் எல்லாக் களங்கத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டு, சீடப் பரம்பரையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தங்களது மகிமைகளை நான் பாடுவேன். இவ்விதமாக அறியாமைக் கடலை என்னால் கடந்து விட முடியும்.

காலத்தின் விளைவு

பரமனே, உயிர்வாழிகள் தத்தமது தேகாபிமானத்தின் காரணமாக அவரவரின் உண்மையான சொந்த நன்மைக்காகவும் மேன்மைக்காகவும் எதையுமே செய்ய முடியவில்லை. தற்காலிக நன்மை தரும் எந்த பரிகாரமும் நிரந்தரமானவையல்ல. சிறு படகைக் கொண்டு ஆர்ப்பரிக்கும் சமுத்திரத்தைக் கடப்பது இயலாதே!

பிரம்மதேவரிலிருந்து சிறிய எறும்பு வரையுள்ள அனைவருமே இக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் செயல்படுகின்றனர். நித்திய புருஷராகிய பகவானே, காலத்தால் கிளர்ச்சியடையும் தங்களுடைய புறச்சக்தியின் வாயிலாக, உயிர்வாழியின் சூட்சும சரீரங்களைத் தாங்கள் படைத்திருக்கிறீர்கள். மனமானது பலவகைப்பட்ட எண்ணிலடங்காத ஆசைகளில் ஜீவராசியை சிக்க வைக்கிறது. இத்தகைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள எண்ணிலடங்கா சிரமங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தங்கள் தாமரை பாதங்களில் சரணடைந்தாலன்றி யாரால் இந்தச் சிக்கலிலிருந்து விடுபட முடியும்?

உங்களுடைய பிரதிநிதியான கால சக்கரத்தால் நசுக்கப்படுவதால், நான் எப்போதும் உங்களிடம் பூரண சரணாகதி அடைந்துள்ளேன். அன்புடன் தங்கள் தாமரை பாதங்களில் எனக்கு பாதுகாப்பளித்து அருள்வீராக!

பொதுவாக, மக்கள் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் சுகபோகங்களையும் அடையும் பொருட்டு, மேலுலகங்களுக்கு ஏற்றம் பெற விரும்புகின்றனர். என் தந்தையின் செயல்களின் மூலம் இவற்றையெல்லாம் நான் கண்கூடாகக் கண்டேன். மிகவும் பலசாலியான என் தந்தை, ஒரே நொடியில் உங்களால் முற்றிலும் முறியடிக்கப்பட்டார்.

இவ்வுலக ஐஸ்வர்யம், யோக சித்தி, நீண்ட ஆயுள் முதலான பௌதிக சுகபோகங்களை அடைவதில் எனக்கு விருப்பமில்லை. பகவானே, உங்களுடைய தூய பக்தரின் சகவாசத்தில் என்னை வைத்து, அவருடைய உண்மையான சேவகனாக இருப்பதற்கு எனக்கு அருள்புரிவீராக.”

பகவான் நரிசிம்மர் தம் திருக்கரத்தை பிரகலாதரின் தலைமீது வைத்து ஆசி வழங்குதல்.

பாரபட்சமற்ற பகவான்

புலன்களைக் கட்டுப்படுத்த இயலாத ஒவ்வோர் உயிர்வாழியும் பாலைவனத்திலுள்ள கானல் நீரைப் போன்ற வருங்கால மகிழ்ச்சியை விரும்பி அலைகிறான். இந்த ஜடவுலகில் மகிழ்ச்சி ஏது?

நான் அசுர குடும்பத்தில் பிறந்துள்ளபோதிலும், பிரம்மதேவரும் சிவபெருமானும் லக்ஷ்மிதேவியும்கூட அடையாத வரத்தை எனக்கு வழங்கியுள்ளீர்; தங்களின் கருணைமயமான தாமரைத் திருக்கரத்தை என் தலைமீது வைத்து ஆசீர்வதித்துள்ளீர். பகவானே, உங்களுக்கு நண்பர், பகைவர், அல்லது உயர்ந்தது, தாழ்ந்தது என்ற வேறுபாடு இல்லை; ஒருவனுடைய சேவையின் தகுதிக்கேற்ப வரமளிக்கும் தாங்கள் “பாரபட்சமற்றவர்” என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பௌதிக ஆசைகளுடன் நான் கொண்ட சகவாசத்தின் காரணத்தால் பாழுங்கிணற்றில் விழுந்து கொண்டிருந்தேன். உங்களுக்கு பிரியமான ஸ்ரீ நாரத முனிவர் அன்புடன் என்னை சீடனாக ஏற்றுக் கொண்டு, உன்னத நிலையை அடையும் மார்க்கத்தை எனக்கு உபதேசித்தார். எனவே, அவருக்கு சேவை செய்வதே எனது முதல் கடமையாகும்.

படைத்தல், காத்தல், அழித்தல்

பகவானே, சிருஷ்டிக்கு முன்பும் தாங்கள் இருந்தீர்கள், அழிவுக்குப் பின்பும் இருப்பீர்கள். முழு பிரபஞ்சமாக விரிவடைந்திருப்பதும் உள்ளும் புறமும் இருப்பவை அனைத்தும் உங்கள் புறச்சக்தியே அன்றி வேறில்லை. அனைத்தும் உங்களிடமிருந்து தோன்றியுள்ளதால், அவை உங்களிடமிருந்து வேறுபட்டவை அல்ல. அதே சமயம், தாங்கள் அனைத்திலிருந்தும் தனித்தும் பரம புருஷராக விளங்குகிறீர்கள்.

பகவானே, அழிவுக்குப் பின் படைப்பு சக்தியானது யோக நித்திரையிலுள்ள உங்களுக்குள் பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. உங்கள் நாபியிலிருந்து உன்னதமான ஒரு சிறு விதை உருவாகி, அதிலிருந்து பெரிய ஆலமரத்தைப் போன்று, பிரம்மாண்டமான தாமரை மலர் தோன்றுகிறது. அதிலிருந்து பிரம்மா பிறந்தார். ஆயினும், அத்தாமரையைத் தவிர பிரம்மாவினால் வேறு எதையும் காண இயலாமல், அவர் நீருக்குள் நூறு ஆண்டு காலமாக அத்தாமரையின் பிறப்பிடத்தை அறிய முயன்றார், அப்போதும் அதனை அவரால் தெரிந்துகொள்ள இயலவில்லை. பின்னர், அவர் அத்தாமரைப் பூவையே தஞ்சமடைந்து, உங்களது கருணையால் உங்களது உன்னத உருவத்தை தரிசித்தார்.

அனைவருக்கும் கருணை

பகவானே, நீங்கள் குதிரைத் தலையுடன் ஹயக்ரீவராகத் தோன்றியபொழுது மது, கைடபன் என்ற இரு அசுரர்களைக் கொன்று, வேத ஞானத்தை பிரம்மதேவரிடம் ஒப்படைத்தீர்கள். மனிதன், மிருகம், முனிவர், தேவர், மீன், ஆமை என வெவ்வேறு அவதாரங்களில் தோன்றி, நீங்கள் அசுர சக்திகளைக் கொன்று முழு சிருஷ்டியையும் பராமரிக்கிறீர்கள்.
கலி யுகத்தில் நீங்கள் உங்களை பரம புருஷராகக் காட்டிக்கொள்வதில்லை என்பதால், திரியுகர், மூன்று யுகங்களில் தோன்றுபவர் என்று அறியப்படுகிறீர்.

கவலைகளே இல்லாத வைகுண்ட லோகங்களின் நாயகரே, என் மனமானது சில சமயம் பெயரளவேயான இன்ப துன்பங்களில் ஆழ்ந்து, மிகவும் பாவகரமானதாகவும் காமவேட்கை உடையதாகவும் இருக்கிறது. இந்நிலையுடைய என்னால் எவ்வாறு உங்களுடைய செயல்களைப் பற்றி விவாதிக்க இயலும்?

வீழ்ச்சியற்ற பகவானே, என்னுடைய நாக்கு அறுசுவை உணவுகளால் கவரப்படுகிறது, பாலுறுப்பு கவர்ச்சியான பெண்ணுடனான காம சுகத்தை நாடுகிறது, சருமம் மென்மையான பொருட்களால் கவரப்படுகிறது, வயிறு நிரம்பிவிட்ட பிறகும் உண்ண விரும்புகிறது, காது உங்களைப் பற்றி கேட்க முயலாமல் உலகாயதமான பாடல்களைக் கேட்க விரும்புகிறது, முகரும் புலனோ வேறொருபுறம் கவரப்பட்டுள்ளது, அமைதியற்ற கண்கள் புலனுகர்வுக் காட்சிகளால் கவரப்படுகின்றன, செயற்புலன்கள் வேறு எதனாலோ கவரப்படுகின்றன. இவ்விதமாக, நான் மிகவும் தர்மசங்கடமான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளேன்.

பகவானே, நீங்கள் மனிதகுலம் முழுவதற்கும் நண்பர், உங்களின் சேவையில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு தங்களின் கருணை நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். பரம புருஷரே, உங்களுடைய மகிமைகள் மற்றும் செயல்களைப் பற்றிய சிந்தனையிலேயே முழுமையாக ஆழ்ந்திருப்பதால், பௌதிக வாழ்வைப் பற்றி நான் அஞ்சவில்லை. ஆயினும், பௌதிக சுகத்திற்காக பெரியபெரிய திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் முட்டாள்களையும் கயவர்களையும் பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன்.

பகவான் நரசிம்மதேவரே, சிறந்த முனிவர்கள் பலர் உள்ளனர்; ஆனால், அவர்கள் தங்களது சொந்த முக்தியில் மட்டுமே நாட்டம் கொண்டுள்ளனர், மற்றவர்களைக் கடைத்தேற்றுவதில் இவர்களுக்கு நாட்டமில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த முட்டாள்களையும் கயவர்களையும் விட்டுவிட்டு தனியாக முக்தியடைவதை நான் விரும்பவில்லை. உங்களின் தாமரை பாதங்களின் புகலிடமின்றி ஒருவனால் மகிழ்ச்சியடைய முடியாது என்பதை நான் அறிவேன். ஆகவே, இவர்களை உங்கள் தாமரை பாதங்களின் புகலிடத்திற்கு மீண்டும் அழைத்து வர விரும்புகிறேன்.

முக்தி தரும் பக்தி

உடலுறவு என்பது, அரிப்பைப் போக்குவதற்காக கைகளை ஒன்றோடொன்று தேய்ப்பதற்கு ஒப்பானதாகும். இதனை மிகவுயர்ந்த இன்பம் என்று எண்ணக்கூடிய முட்டாள்கள், அந்தப் புலன் சுகத்தினை நீண்ட நாள் அனுபவித்தாலும், திருப்தியடைவதில்லை. ஆயினும், இதனைப் பொறுத்துக்கொள்ளும் தீரர்களோ ஒருபோதும் துன்பங்களுக்கு ஆளாவதில்லை.
முழு பிரபஞ்சமும் அதன் அனைத்து பொருட்களும் பரம புருஷ பகவானுக்குச் சொந்தமானவை என்பதை பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்கள் புரிந்து
கொள்கின்றனர். மூன்று குணங்களை ஆளும் தெய்வங்களாலோ தேவர்களாலோ மனிதர்களாலோ உங்களைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே, ஆன்மீக வாழ்வில் முன்னேறியவர்கள் வேதங்களைக் கற்பதில் கருத்தைச் செலுத்தாமல் நேரடியாக பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர்.

பிரார்த்தித்தல், செயல்களின் பலன்களை அர்ப்பணித்தல், வழிபடுதல், உங்களின் சார்பாக செயல்படுதல், எப்பொழுதும் உங்களின் தாமரை திருவடிகளை நினைத்துக் கொண்டிருத்தல், உங்களது பெருமைகளைக் கேட்டல் ஆகிய ஆறு வகையான பக்தித் தொண்டில் ஈடுபடாமல், பரமஹம்ச நிலையினை யாராலும் அடைய முடியாது.

நரசிம்மதேவரின் சாந்தம்

பகவானை இவ்வாறு போற்றிப் புகழ்ந்த பிரகலாதரின் பக்தியால், பகவான் நரசிம்மதேவர் திருப்தியடைந்து பேரன்புடன் கூறினார்: “அன்புள்ள பிரகலாதனே, நற்குணவானே! உனக்கு மங்கலம் உண்டாகட்டும், உன்னிடம் நான் திருப்தி அடைந்துள்ளேன். நீ நீடூழி வாழ்வாயாக.
“என்னை திருப்திப்படுத்தாமல் யாராலும் என்னைப் புரிந்துகொள்ள முடியாது. என்னை திருப்திப்படுத்தியவனுக்கு தன் சொந்த திருப்தியைப் பற்றி கவலைப்பட காரணம் ஏதுமில்லை. மகாபாக்கியசாலியே, வெவ்வேறு வகையான ரஸானுபாவத்தில் உத்தம பக்தர்கள் என்னை திருப்திப்படுத்த முயல்கின்றனர். என்னால் மட்டுமே எல்லாருடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற இயலும்.”

பகவான் நரசிம்மதேவர் எந்த வரத்தையும் அருளத் தயார் என்று கூறியும், பிரகலாதர் தம் தூய கிருஷ்ண உணர்வின் காரணத்தால், புலனுகர்விற்கான எந்த வரத்தையும் அடைய விரும்பவில்லை.

அவர் பகவானிடம் எந்த வரத்தை வேண்டினார் என்பதை அடுத்த இதழில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives