சாதுவாய் திகழ்ந்த பிரகலாதர்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஏழாம் ஸ்கந்தம், அத்தியாயம் 5

சென்ற இதழில், ஹிரண்யகசிபு பிரம்மாவிடமிருந்து வரம் பெற்று கொடுங்கோல் ஆட்சி புரிந்ததையும், பிரகலாதரின் தெய்வீக குணங்களையும் அறிந்தோம். மேலும், பிரகலாதர் பல்வேறு நற்குணங்களுடன் திகழ்ந்தபோதிலும், ஹிரண்யகசிபு அவரைத் துன்புறுத்தினான் என்பதை அறிந்த யுதிஷ்டிர மஹாராஜர் அதற்கான காரணத்தை அறிய ஆவல் கொண்டதைக் கண்டோம். அதற்கான நாரத முனிவரின் பதிலை, இந்த இதழில் காணலாம்.

தந்தைக்கு உபதேசம்

அசுர குருவான சுக்ராசாரியரின் இரண்டு மகன்களான சண்டனும் அமர்க்கனும் தங்களது பள்ளியில் மற்ற அசுர குழந்தைகளுடன் பிரகலாதரையும் ஏற்றுக் கொண்டனர். அங்கு பிரகலாதர் தன் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட அரசியல், பொருளாதாரம் பற்றிய விஷயங்களைக் கற்றுக் கொண்டாலும், அரசியல் தத்துவமானது ஒருவரை நண்பராகவும் மற்றொருவரைப் பகைவராகவும் நினைக்கச் செய்கிறது என்பதால், அதை அவர் விரும்பவில்லை.

ஒரு சமயம், அசுர ராஜனான ஹிரண்யகசிபு தன் மகனான பிரகலாதரை மடியில் வைத்துக் கொண்டு மிகுந்த அன்புடன் பின்வருமாறு வினவினான்: “நீ கற்றறிந்த விஷயங்களில் எதைச் சிறந்ததென்று நினைக்கிறாயோ, அதைக் கூறு.” பிரகலாதர் பதிலளித்தார்: “அசுரர்களில் சிறந்தவரான மன்னரே! என்னுடைய ஆன்மீக குருவிடமிருந்து நான் கற்றிருப்பதைப் பொறுத்தவரை, எவன் நிலையற்ற உடலையும் நிலையற்ற குடும்ப வாழ்வையும் ஏற்றுக் கொண்டுள்ளானோ அவன் கவலைகளால் கலவரமடைவது நிச்சயம். அஃது இருண்ட கிணற்றினுள் விழுந்து விட்ட நிலைக்கு ஒப்பாகும். இந்த நிலையைக் கைவிட்டு, எங்கு கிருஷ்ண உணர்வு மட்டுமே காணப்படுகிறதோ, அந்த இடத்திற்குச் (விருந்தாவனத்திற்கு) சென்று பரம புருஷரிடம் தஞ்சமடைய வேண்டும்.”

ஹிரண்யகசிபுவின் மடியில் அமர்ந்தபடி பிரகலாதர் விஷ்ணுவின் பெருமைகளைப் பேசியதால், ஹிரண்யகசிபு சினம்கொள்ளுதல்.

ஆசிரியர்களின் கேள்விக்கு பதில்

பிரகலாதர் பக்தித் தொண்டின் மூலமாக தன்னுணர்வைப் பெறும் மார்க்கத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்ட ஹிரண்யகசிபு, “சிறுவர்களின் புத்தி பகைவர்களின் வார்த்தைகளின் மூலம் கெட்டுப் போகிறது,” என்று கூறி கோபமாகச் சிரித்தான். பின் அவன் தன் சேவகர்களிடம், “அசுரர்களே, இச்சிறுவனுக்கு குருகுலத்தில் முழு பாதுகாப்பு கொடுங்கள். மாறுவேடத்தில் அங்குச் செல்லக்கூடிய வைஷ்ணவர்களால் இவனது புத்தி பேதலிக்காமல் இருக்கட்டும்,” என்று கூறினான்.

பிரகலாதர் மீண்டும் குருகுலத்திற்கு அழைத்து வரப்பட்டதும் அசுர புரோகிதர்களான சண்டனும் அமர்க்கனும் அவரை சமாதானம் செய்து, மென்மையான குரலில் அன்பாகப் பேசினர்: “பிரகலாதா! நீ பேசியவற்றை எவ்வாறு கற்றுக் கொண்டாய்? நாங்கள் இதைப் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளோம், தயவுசெய்து எங்களிடம் உண்மையைக் கூறு.”

பிரகலாத மஹாராஜர் விடையளித்தார்: “முன்பு நான் வேத வல்லுநர்களிடமிருந்து கேட்டறிந்தேன், இப்பொழுது அனுபவபூர்வமாக உணர்கிறேன். ஒரு ஜீவனுடைய பக்தித் தொண்டினால், பரம புருஷர் அவனிடம் திருப்தியடையும்போது, அவன் ஒரு பண்டிதனாகி விடுகிறான். அப்போது அவன் ‘ஒவ்வோர் உயிர்வாழியும் பகவானின் நித்திய தொண்டன்’ என்பதையும், ‘நமக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை’ என்பதையும் உணர்கிறான்.

“எப்பொழுதும் எதிரி, நண்பன் என்று வேறுபாடு பாராட்டிக் கொண்டிருப்பவர்களால் தங்களுக்குள் உள்ள பரமாத்மாவைக் காண முடியாது. பரம புருஷ பகவான்தான் பெயரளவேயான உங்கள் எதிரியின் பக்கம் சேரும்படி எனக்கு புத்தியைத் தந்துள்ளார் என்பதில் ஐயமில்லை. என்னுடைய உணர்வு பகவான் விஷ்ணுவின் விருப்பத்தால் மாற்றப்பட்டு, சக்ரபாணியான அவரால் ஈர்க்கப்பட்டுள்ளது. இவ்விதமாக நான் எவ்வித சுதந்திரமும் அற்றவன்.”

ஆசிரியர் கண்டித்தல்

பெயரளவேயான அந்த பிராமணர்கள் அவரிடம் கோபம் கொண்டனர். அவர்கள் ஹிரண்யகசிபுவின் சேவகர்களாக இருந்ததால், பிரகலாத மஹாராஜரைத் தண்டிக்கும் வகையில் பின்வருமாறு பேசினர்: “இப்பொழுது இவனுக்கு நான்காவது உபாயமான தண்டனை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அசுர குலத்தை வெட்டி வீழ்த்துவதற்கு விஷ்ணு கோடரி என்றால், இந்த பிரகலாதன் அந்த கோடரியின் கைப்பிடியாக உள்ளான்.”

அந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவனான பிரகலாதரை பல வழிகளில் தண்டித்தும் பயமுறுத்தியும், அவருக்கு பௌதிகமான அறம், பொருள், இன்பத்தைப் பற்றி போதித்தனர். மேலும், பிரித்தாளுதல், அடிபணிய மறுக்கும்பொழுது தண்டித்தல் ஆகிய இராஜ தந்திரங்களிலும் போதுமான கல்வியளித்து அவரது தந்தையிடம் அழைத்துச் சென்றனர்.

பிரகலாதரின் ஆசிரியர்களை ஹிரண்யகசிபு கடிந்துகொள்ளுதல்

நவவித பக்தி

பிரகலாதர் தந்தையின் பாதங்களில் விழுந்து வணங்கினார். மகனைக் கண்ட ஹிரண்யகசிபு, பாசமுள்ள தந்தையாக உடனே அவரை இரு கைகளாலும் தழுவிக் கொண்டு ஆசீர்வதித்து விசாரித்தான், “அன்புள்ள மகனே, பிரகலாதா! நீண்ட ஆயுளை உடையவனே, இவ்வளவு காலமாக நீ உன் ஆசிரியர்களிடமிருந்து பல விஷயங்களைக் செவியுற்றிருப்பாய். அந்த அறிவில் எது சிறந்ததென்று நினைக்கிறாயோ அதை இப்பொழுது கூறு.”

பிரகலாத மஹாராஜர் கூறினார்: “பகவான் விஷ்ணுவின் நாமம், ரூபம், குணங்கள், உபகரணங்கள் மற்றும் லீலைகளைப் பற்றிக் கேட்டல், அவற்றைப் பாடுதல், அவற்றை நினைத்துக் கொண்டிருத்தல், பகவானின் தாமரை பாதங்களுக்குத் தொண்டு செய்தல், பகவானுக்கு பதினாறு வகை உபசாரத்தைச் செய்தல், பகவானைத் துதித்தல், அவரது சேவகனாய் இருத்தல், பகவானை உற்ற நண்பராக நினைத்தல், அனைத்தையும் அவருக்கு அர்ப்பணம் செய்தல் ஆகிய இந்த ஒன்பது முறைகள் தூய பக்தித் தொண்டுகளாக ஏற்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக வாழ்வை ஸ்ரீ கிருஷ்ணரின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளவன் பூரண அறிவைப் பெற்றிருப்பதால், அவனே மிகவும் கற்றறிந்தவன்.”

ஹிரண்யகசிபு ஆசிரியரைக் கடிந்துகொள்ளுதல்

இவ்வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபமடைந்த ஹிரண்யகசிபு, உதடுகள் துடிக்க பிரகலாதரின் ஆசிரியரிடம் பேசினான். “அடேய்! பிராமணரின் (சுக்ராசாரியரின்) தகுதியற்ற புத்திரனே, ஒன்றுமறியாத இந்தச் சிறுவனுக்கு பக்தித் தொண்டைப் பற்றி கற்பித்திருக்கிறாய். அபத்தம்! பாவம் செய்தவர்களிடம் காலப்போக்கில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. அதுபோலவே, போலியான நண்பர்களின் பொய்யான நடத்தையின் காரணத்தால் அவர்களின் உண்மையான விரோதம் வெளிப்பட்டு விடுகிறது.”

அதற்கு ஆசிரியர் சண்டன், “மன்னவா, உங்கள் மகன் பிரகலாதன் எவராலும் கற்பிக்கப்படவில்லை. இயற்கையான பக்தித் தொண்டு தன்னிச்சையாக அவனுள் எழுந்துள்ளது. தயவுசெய்து எங்களைக் கோபிக்க வேண்டாம்.”

பிரகலாதரின் விளக்கம்

இதைக் கேட்ட ஹிரண்யகசிபு, “பிரகலாதா! உன் ஆசிரியரிடமிருந்து கற்கவில்லை எனில் வேறு எங்கிருந்து பெற்றாய்?”

பிரகலாத மஹாராஜர் பதிலளித்தார்: “கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தால் பௌதிக வாழ்வில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் நரகச் சூழ்நிலையை நோக்கி முன்னேறிச் சென்று, மென்றதையே திரும்பத்திரும்ப மென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, மற்றவர்களின் உபதேசங்களாலோ சொந்த முயற்சியாலோ அல்லது இவ்விரண்டின் சேர்க்கையாலோ, கிருஷ்ணரிடம் ஒருபோதும் நாட்டம் ஏற்படுவதே இல்லை.

“பௌதிகக் களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ள வைஷ்ணவருடைய தாமரை பாதங்களின் புழுதியைத் தங்கள் உடல்களின் மேல் பூசிக்கொண்டால் அல்லாது, பௌதிக வாழ்வில் அதிக நாட்டம் கொண்டுள்ளவர்களால் பகவானின் தாமரை பாதங்களில் பற்றுக்கொண்டவர்களாக முடியாது. கிருஷ்ண உணர்வுடையவனாகி கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் இவ்வாறு சரணடைவதால் மட்டுமே ஒருவரால் பௌதிகக் களங்கங்களிலிருந்து விடுபட முடியும்.”

ஹிரண்யகசிபுவின் கோபம்

பிரகலாதரின் இந்த உயர்ந்த தகுதிமிக்க வார்த்தைகளைக் கேட்டு கோபத்தால் குருடாகிவிட்ட ஹிரண்யகசிபு அவரைத் தன் மடியிலிருந்து கீழே தள்ளினான்.

உருக்கிய தாமிரம்போன்று கண்கள் சிவக்க தன் சேவகர்களைப் பார்த்து கூறினான்: “சிறுவனான இந்த பிரகலாதன் என் சகோதரனைக் கொன்றவன்; ஏனெனில், என் பகைவனான விஷ்ணுவின் பக்தித் தொண்டில் ஓர் அடிமையைப் போல் சேவை செய்வதற்காக இவனும் தன் குடும்பத்தையே விட்டுவிட்டான். இந்த இளம் வயதிலேயே இவன் தன் தந்தையுடனும் தாயுடனும் உள்ள பாசப் பிணைப்பை விட்டுவிட்டான். எனவே, நிச்சயமாக இவன் நம்பத் தகுந்தவனல்ல.

“நமக்கு அருமருந்து போன்று நன்மை செய்பவன் அயலானாக இருப்பினும், அவனை மகன்போல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதே சமயம் நம் சொந்த மகன் தீமை செய்பவனாக இருந்தால், அவனை விலக்கி விட வேண்டும்.”

கொலை முயற்சிகள்

ஹிரண்யகசிபு கோபத்துடன் தொடர்ந்து பேசினான்: “இந்த பிரகலாதன் எனக்கு அடங்காதவனாக இருப்பதால், இவன் எனது எதிரியாவான். இவன் எவ்வாறாயினும் உடனே கொல்லப்பட வேண்டியவன்.”

இதைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் சேவகர்கள், “அவனை வெட்டுங்கள்! குத்துங்கள்!” என்று முழக்கமிட்டபடி, பரம புருஷரின் தியானத்தில் மௌனமாக அமர்ந்திருந்த பிரகலாத மஹாராஜரைத் தங்கள் சூலங்களால் தாக்கத் தொடங்கினர். ஆனால் அசுரர்கள் பிரயோகித்த ஆயுதங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பிரகலாதர் எதனாலும் பாதிக்கப்படாமல் முழுமையான தியானத்தில் இருந்தார். அசுரர்களின் எல்லா முயற்சிகளும் தோற்றுப் போனதால் அச்சமடைந்த ஹிரண்யகசிபு அவரைக் கொல்ல வேறுவித திட்டங்களைத் தீட்டத் தொடங்கினான்.

பிரகலாதரை பெரிய யானைகளின் பாதங்களுக்கு அடியில் தள்ளியும், பெரிய பயங்கர பாம்புகளிடையே தள்ளியும், ஜாலவித்தைகளை பிரயோகித்தும், விஷம் கொடுத்தும், பட்டினி போட்டும், கடும்குளிர், காற்று, நெருப்பு, நீர் ஆகியவற்றில் உட்படுத்தியும், பெரிய பாறைகளை வீசியும் கொல்ல முயன்றான். ஆயினும், ஹிரண்யகசிபுவால் அவரைக் கொல்ல முடியவில்லை.

ஹிரண்யகசிபு பெரும் கவலையுடன் எண்ணினான்: “இந்த பச்சிளம் பாலகன் சிறிதும் அச்சமற்ற நிலையில் இருக்கிறான். விஷ்ணுவுடன் தனக்கிருக்கும் சம்பந்தத்தை இவன் மறப்பதே இல்லை. இவனுக்கு எல்லையற்ற பலம் இருப்பதாகத் தெரிகிறது. மரணமற்றவனைப் போல காணப்படும் இவனிடம் கொண்ட பகைமையின் காரணத்தால் நான்தான் மடியப் போகிறேனோ?”

இவ்வாறு எண்ணியபடி வாடிய முகத்துடன் உடலின் காந்தியை இழந்து, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மௌனமாக இருந்த ஹிரண்யகசிபுவிற்கு சண்டனும் அமர்க்கனும் ஆறுதல்மொழி கூறினர்: “தலைவரே! தங்கள் புருவங்கள் அசைந்தால், லோக பாலகர்கள் அஞ்சுவர் என்பதை அறிவோம். உங்கள் கவலைக்கு இச்சிறுவன் காரணமாகலாமா? இவன் ஒரு பாலகன்தானே!

“குரு சுக்ராசாரியர் வரும்வரை இவனை வருணபாசத்தால் கட்டி வையுங்கள். சிறிது வளர்ந்தவனாகி, நமது குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தால், இவன் தன் எண்ணங்களை மாற்றிக்கொள்வான், கவலைப்படும் அளவுக்கு ஏதும் காரணம் இல்லை.”

இதற்கு சம்மதித்த ஹிரண்யகசிபு, ராஜ குடும்பத்தினர் பின்பற்ற வேண்டிய தர்ம விதிமுறைகளைப் பற்றி பிரகலாதருக்கு உபதேசிக்கும்படி அவர்களிடம் கூறினான்.

நண்பர்களுக்கு உபதேசம்

மீண்டும் அந்த ஆசிரியர்கள் இருவரும் பணிவும் அடக்கமும் மிக்க பிரகலாத மஹாராஜருக்கு பௌதிகமான அறம், பொருள், இன்பத்தைப் பற்றி உபதேசித்தனர். இருமையை அடிப்படையாகக் கொண்ட இத்தகு உபதேசங்கள் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றைக் கொண்ட பௌதிக வாழ்வு முறைக்கு ஒருவனை அழைத்துச் செல்கின்றன.

பிரகலாத மஹாராஜருக்கு ஒத்த வயதுடைய சிறுவர்கள் அவரை விளையாட அழைத்தனர். மகா புத்திசாலியும் பண்டிதருமான அவரோ தோழர்களைப் பார்த்து புன்னகைத்தபடி இனிய மொழியில் பௌதிக வாழ்வு முறையின் பயனற்ற தன்மையைப் பற்றி அவர்களுக்கு போதிக்கத் துவங்கினார்.

சிறுவர்கள் இளம் வயதுடையவர்கள் என்பதால், அசுர ஆசிரியர்களின் செயல்களாலும் போதனைகளாலும் அவ்வளவாக களங்கம் அடைந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரும் பிரகலாத மஹாராஜரிடம் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்களது மனமும் கண்களும் அவர்மீது லயித்திருக்க மிக்க ஆவலுடன் அவரையே நோக்கியபடி இருந்தனர். ஓர் அசுர குடும்பத்தில் பிறந்திருந்தபோதும் மிகச்சிறந்த பக்தராக விளங்கிய பிரகலாதர், அந்த அசுரர்களின் நலனை நாடி, மிகுந்த இரக்கத்துடன் உபதேசிக்கத் துவங்கினார்.

அவரது உபதேசங்களை அடுத்த இதழில் காணலாம்.

ஹிரண்யகசிபுவின் சேவகர்கள் பிரகலாதரை பல்வேறு வழிகளில் கொல்ல முயலுதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives