வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் உள்ள பெயரளவிலான தமிழ் அரசியல்வாதிகள், இனவாதிகள், நாத்திகவாதிகள் முதலானவர்கள் “தமிழன்: கடவுள் கொள்கை அற்றவன்” என்று கூறி வருகின்றனர். ஆனால், வேத இலக்கியங்களைப் போலவே, திருக்குறள் முதலான தமிழ் இலக்கியங்களும் கடவுள் வாழ்த்துடனேயே தொடங்குவதைக் காண்கிறோம். இதுபோன்ற பல்வேறு சாட்சியங்களின் மூலமாக தமிழன் கடவுள் கொள்கை உடையவன் என்பதையும், பெயரளவிலான தமிழ் ஆர்வலர்களின் உள்நோக்கத்தையும் நம்மால் அறிய முடிகிறது. இதுகுறித்த சில சிந்தனைகளை இக்கட்டுரையில் காணலாம்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்களே. ஒரு மொழியின் சிறப்பினை அம்மொழியில் படைக்கப்பட்டுள்ள கருத்துச் செறிவு கொண்ட இலக்கியப் படைப்புகளைக் கொண்டே அறிய முடியும். ஆகவே, “உலகின் மூத்த குடி” என்று மார்தட்டும் தமிழினவாதிகள் அதன் இலக்கியங்களை உள்ளபடி ஏற்றாக வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு ஏற்கும் பட்சத்தில், அதிலுள்ள வேதத்தை ஒத்த கருத்துகளையும் ஏற்றாக வேண்டும். ஆனால், இவர்களோ தமிழனுக்கு கடவுளே இல்லை என்றும் கூற வேண்டியுள்ளதால், இரட்டை நிலையை கடைப்பிடிக்கின்றனர்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
ஆகையால், ஒரு காலத்தில் “நாத்திகனாய் இருப்போம், ஸநாதனம் எதிர்ப்போம்” என்றும், அதன் பிறகு “திராவிடனாய் இருப்போம், ஸநாதனம் எதிர்ப்போம்” என்றும், தற்போது “தமிழனாய் இருப்போம், தமிழ்க் கடவுளை ஏற்போம்” என்றும் கூறி, கறுப்பை வெளுத்து காவியாக்க தொடங்கியுள்ளனர்; ஏனெனில், தமிழனுக்கு கடவுள் இல்லை என்று இன்றைய இளைஞர்களிடம் கூறினால், உடனடியாக அவர்கள் சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி எதிர்வினையாற்றுகின்றனர்.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறதா?
கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் வடக்கேதான் தோன்றியுள்ளது என்றும், ஆகையால் தமிழனை கடவுள் வஞ்சித்துவிட்டார் என்றும் கூறுபவர்கள் சிலர் உள்ளனர். ஆனால், பிரளய காலத்தில் பகவானின் முதல் அவதாரமாகத் தோன்றிய மச்ச அவதாரம் ‘கிருதமாலா’ (வைகை) நதியில் அவதரித்ததாக வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. அவர், திராவிட (தமிழ்) தேசத்தின் அரசனான ஸத்யவிரதர், அரசரின் குடும்பத்தினர் மற்றும் சப்த ரிஷிகளைக் காத்து, மீண்டும் இப்பூவுலகில் உயிரினங்களைச் செழிக்கச் செய்தார் என்றும் அப்புராணங்கள் விவரிக்கின்றன.
வேத இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்படும் இம்மன்னர், பாண்டிய மன்னராக அறியப்படுகிறார். [மச்சாவதாரம் நடைபெற இந்த பாண்டிய மன்னரும் ஒரு காரணம் என்பதாலேயே, பாண்டிய நாட்டின் கொடியில் மீன் சின்னம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.] பகவான், பிரம்மாவின் ஓர் இரவு முழுவதும் வேதங்களை இவருக்கு போதித்தார் எனவும், இவரே வைவஸ்வத மனு எனவும் அறியப்படுகிறார். ஆகவே, மனித குலத்திற்கு தந்தையாகவும் மனு தர்மத்திற்கு ஆதாரமாகவும் திகழ்பவன் தமிழகத்தின் வைகை நதியோடு தொடர்புடையவன் என்பது இதன் மூலம் புலனாகிறது.
ஆச்சாரியர்களின் அவதாரம்
பாரதம் முழுவதும் பயணித்து வைஷ்ணவத்தைத் திளைக்கச் செய்த ஸ்ரீபாத இராமானுஜாசாரியர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தோன்றியவர். ஆதிசங்கரரும் அப்போதைய ஒன்றுபட்ட தமிழ் தேசத்தின் காலடியில் பிறந்தவர். மேலும், மத்வர், நிம்பார்கர் முதலான பெரும் ஆச்சாரியர்களும் திராவிட தேசத்தவர்களே. இவர்கள் தென்னகத்தில் தோன்றி ஸநாதன தர்மத்தை பாரதம் முழுவதும் செழிக்கச் செய்துள்ளனர் என்பது வரலாறு.
தமிழர் நிலத்திணைகள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணைகளை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. மேலும், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை முதலானோர் அந்த நிலங்களின் கடவுளராக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்பவன் “தமிழன் கடவுள் உணர்வற்றவன்” என்று கூறுவானா என்ன?
குட்டையைக் குழப்பி மீன்பிடிக்க நினைக்கும் நாத்திகவாதிகள்
இதுபோன்ற எண்ணிலடங்கா ஆதாரங்கள் இருந்தும்கூட, தமிழ் ஆர்வலர் எனும் போர்வையிலுள்ள நாத்திகவாதிகள் மக்களைக் குழப்பி தங்களது நாத்திகக் கருத்துகளை மிக தீவிரமாக எடுத்துரைத்து “தமிழனுக்கு மதம் இல்லை” என்று கூறி வருவது குழப்பவாதமே. இவற்றின் உச்சகட்டமாக, “கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி” என்றும், “தமிழனின் கடவுள் முருகன், ஆனால் அவரது தந்தை சிவபெருமான் வடவர் கடவுள்” என்றும் சொல்லி, தமிழர்களை மேலும் குழப்புவது அவர்களின் நோக்கத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சி உண்மையை உலகறியச் செய்கிறது.
இதையறியாத தமிழ்க் கூட்டம் அவர்கள் சொல்வதை உண்மை என்றெண்ணி வேதங்களைப் புறக்கணிப்பதோடு, ஆத்ம சிந்தனையுடன் அணுகப்பட வேண்டிய ஆன்மீகத்தை வெறும் பெளதிக நிலையிலிருந்து அல்லது உடல் தளத்திலிருந்து, தன்னைத் தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டு, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் உட்பட அனைத்து தேவர்களுக்கும் எதிராக வாதிடுகின்றனர். ஆகையால், அவர்கள் பல சமயங்களில் சிவனையும் விஷ்ணுவையும் அவமதிக்கும் அசுரர்களாக மாறுவதைக் காண்கிறோம். கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவை “வட நாட்டு கடவுள்” என்றும், தென்னாடுடைய சிவனே “தமிழ்க் கடவுள்” என்றும்கூட இவர்கள் கூறுவதுண்டு.
இவை ஒற்றுமையாக இருந்த காளைக் கூட்டத்தை குள்ளநரி தனது தந்திரத்தால் பிரித்து வேட்டையாடியதை நினைவுபடுத்துகிறது. இத்தகு நாத்திகர்களின் வாதங்களை இடையறாது கேட்கும் தமிழர்கள், ஆன்மீகம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது என்பதை ஏற்கத் தவறுவதால், “நான் யார்? இந்த பிறப்பிற்கு முன் எங்கிருந்தேன்? இறப்பிற்குப் பின் செல்லப் போகும் இடம் எது? இந்த பெளதிக உலகில் நான் துன்பப்படுவதற்கான காரணம் என்ன?” என்பனவற்றை எல்லாம் அறிய மறுக்கிறார்கள்.
இந்தக் கேள்வி ஒருவனுக்குள் எழுப்பப்படாத வரையில், இந்த பிரபஞ்சம் முழுமைக்குமான கடவுள் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பதையும், தமிழனுக்கு ஒரு கடவுள், தெலுங்கனுக்கு ஒரு கடவுள், வட நாட்டவனுக்கு ஒரு கடவுள், மேலை நாட்டவனுக்கு ஒரு கடவுள் என்று பல கடவுள்கள் இருக்க இயலாது என்பதையும் அவனால் அறிய இயலாது. தமிழர்களாகிய நாம் தற்கால நாத்திகவாதிகளின் இந்தக் குழப்ப வலையில் சிக்கித் தவிப்பதாலேயே வேத இலக்கியங்களைத் தமிழனுக்கு சம்பந்தம் இல்லாதவை என்று எண்ணி, அவற்றின் மீது நாட்டமற்று இருக்கிறோம். இஃது அவர்களது வேலைகளை இன்னும் எளிமையாக்கி விடுகிறது.
வேதங்களின் வழியில் தமிழ் இலக்கியங்கள்
சிவபெருமான் உமையவளுடனும் பெரும் முனிவர்களுடனும் இணைந்து வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டும் பகவானின் புகழைப் பாடிக் கொண்டும் இருந்தார் என்பதை ஸ்ரீமத் பாகவதம் உள்ளிட்ட வேத சாஸ்திரங்களில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியங்களிலும் அறியலாம்.
சங்க இலக்கியமான எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் (166) ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார்:
நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈரி ரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
அதாவது, வேதங்கள் நான்கு என்றும், அவை ஆறு அங்கங்கள் கொண்டவை என்றும், அவை முதுபெரும் சடைமுடியுடைய சிவபெருமானின் நாவினை விட்டு நீங்குவதே இல்லை என்றும் அவர் கூறுகிறார். வேதங்கள் அவரது நாவினை விட்டு நீங்கவில்லை என்றால், வேதங்களின் கருப்பொருளாகிய கிருஷ்ணரும் அவரது மனதிலிருந்து நீங்கவில்லை என்றுதானே பொருள்.
கிருஷ்ணரே (திருமாலே) வேதங்களின் கருப்பொருள் என்பதை பகவத் கீதையில் (15.15) காண்கிறோம்.
வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்
“எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தைத் தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.” அவ்வாறிருக்க, சிவபெருமான் வேதத்தை தமது நாவினால் பாடி மனத்தினால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சிந்திக்காமல் இருந்திருப்பாரா என்று பெயரளவிலான தமிழ் ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்.
மற்றொரு சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியில் (470) பழமையான தமிழ் நகரங்களில் அந்தணர்களுக்கு இருந்த பாடசாலைகள் குறித்தும் அதில் அவர்கள் வேதங்களை இசையுடன் பாடியதையும் காண முடிகிறது:
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி
உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய், இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்
இவை மட்டுமின்றி, எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய பரிபாடல், வேதங்களை பேணியதாலேயே அந்தணர்கள் தமிழகத்தில் மதிக்கப்பட்டதாகக் கூறுகிறது.
மேலும், தெய்வப் புலவர் என போற்றப்படும் திருவள்ளுவர்கூட, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் பல உண்மைகளை திருக்குறளில் கூறியிருப்பதை தெளிந்த சிந்தனையுடன் படிப்பவர் எளிதில் அறியலாம். [இதுகுறித்து விரிவாக அறிய பகவத் தரிசனத்தில் “குறளின் குரல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தொடர் கட்டுரைகளைப் படிக்கவும்.]
வைணவம் தமிழுக்கு எதிரா?
தற்போதைய தமிழ் ஆர்வலர்கள் பலரும் முன்கூறிய நாத்திகக் கருத்துகளினால் வைணவத்தை வெறுக்கின்றனர். ஆயினும், வைணவ சமய பெரும் ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். தமிழை வெறுமனே “தமிழ்” என்று கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு, விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ் எனப் பலவாறாகப் போற்றியுள்ளனர். இவை அனைத்தும் திராவிட வேதமான திவ்ய பிரபந்தத்தினால் தமிழுக்குக் கிடைத்த சிறப்புப் பெயர்களாகும்.
எனவே, குரு சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியர்களின் வழி நின்று தமிழால் கண்ணனை அறிந்து, கண்ணன் வழி உலகை அணி செய்வோம். அதற்கு இன்றே பகவத் கீதை உண்மையுருவில் உள்ளிட்ட ஸ்ரீல பிரபுபாதரின் பல்வேறு நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்குவோம்.