தேவஹூதியின் வருத்தம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், இருபத்துமூன்றாம் அத்தியாயம்

சென்ற இதழில் ஸ்வாயம்புவ மனு தன் மகள் தேவஹூதியை கர்தம முனிவருக்கு மணம் செய்து வைத்ததைக் கண்டோம். அத்தம்பதியினரின் அற்புத இல்வாழ்க்கையைப் பற்றி இவ்விதழில் காணலாம்.

தேவஹூதியின் பணிவிடை

பெற்றோர் விடைபெற்றுச் சென்றபின், தன் கணவரின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடிந்தவளாகிய கற்புடைய பெண்ணாகிய தேவஹூதி மிகவும் நெருக்கமாகவும் மிக்க மரியாதையுடனும், புலன்கட்டுப்பாடு, அன்பு மற்றும் இனிய சொற்களுடன் அவருக்குப் பணிவிடை செய்தாள்.

நல்லுணர்வுடன் அயராது உழைத்து இச்சை, கர்வம், பொறாமை, பேராசை, பாவச் செயல்கள், வீண் தற்பெருமை போன்றவற்றை விடுத்து, ஆற்றல்மிக்க தன் கணவரை அவள் மகிழ்வித்தாள். அவரை பகவானைவிடவும் சிறந்தவராகப் பார்த்த தேவஹூதி அவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள். நீண்ட காலமாக மதச் சடங்குகளைக் கடைப்பிடித்துப் பணிவிடை செய்ததால் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவளைப் பார்த்த கர்தமர் அன்பு மேலிட தடுமாறும் குரலில் பேசலானார்.

கர்தமரின் ஆசி

கர்தமர் கூறினார், “ஸ்வாயம்புவ மனுவின் மகளே, உன் சிறந்த பக்திக்காகவும் மிகவுன்னத அன்புப் பணிவிடைக்காகவும் நான் மகிழ்கிறேன். இருப்பினும், எனக்காக நீ உன் உடலை கவனிக்காது விட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. தவம், தியானம், கிருஷ்ண உணர்வுநிலை போன்றவற்றால் நான் பகவானின் ஆசிகளைப் பெற்றுள்ளேன், இத்தகைய உன்னத சாதனைகளின் பலனை உன் பதிபக்திக்குப் பரிசாக வழங்குகிறேன்.

“பகவானின் அருளைத் தவிர பிற இன்பங்களால் என்ன பயன்? இந்த பௌதிக உலகின் சாதனைகள் நிச்சயமற்ற தன்மை படைத்தவை, உனது பக்தியின் கொள்கைகளால் நீ மகிழ்ச்சியை அனுபவிக்கிறாய்.
உயர்குடிப் பிறப்பினாலும் கர்வத்தாலும் வாழ்வோருக்கு இத்தகைய மகிழ்ச்சி கிடைக்காது.”
இவ்வாறு கணவர் பேசியதும் இவற்றை அறிந்திராத தேவஹூதி மிகவும் திருப்தியடைந்து, சிறிது வெட்கம் கலந்த பார்வையுடன், பணிவாலும் அன்பாலும் திணறிய குரலில் பேசினாள்: “சிறந்த பிராமணரே, நீங்கள் யோகமாயையின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். புகழ்மிக்க கணவனை அடைந்த பெண்ணுக்குக் குழந்தைகளே சிறந்த தகுதியை அளிக்கின்றன. அதனால், புனித நூல்களின்படி செய்ய வேண்டிய ஏற்பாடுகளை தயவுசெய்து செய்யுங்கள். இந்த நோக்கத்திற்காக ஒரு வீட்டின் தேவையை தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.”

கர்தம முனிவர் தன் மனைவியான தேவஹூதிக்கு

உருவாக்கிய ஆகாய மாளிகை.

பறக்கும் அரண்மனை

இவ்வாறு தேவஹூதி வேண்டியதும், கர்தம முனிவர் தன் அன்பு மனைவியை மகிழ்விக்க எண்ணி, தன் யோக சக்தியைக் கொண்டு தன் இச்சைப்படி பயணம் செய்யும் ஓர் ஆகாய மாளிகையை உருவாக்கினார். அம்மாளிகை, ஒருவன் விரும்பும் பொருட்களையெல்லாம் தரத்தக்கதாகவும், காலப்போக்கில் அதிகரிக்கும் செல்வ வளம் மிக்கதாகவும் இருந்தது.

அதில் கலைநயமிக்க வேலைப்பாடுகளும் சிறந்த வைர, வைடூர்யங்கள் பதிக்கப்பட்ட தூண்களும் தங்கத்தால் வேயப்பட்ட கூரைகளும், பச்சைப் பளிங்குக் கற்களால் ஆன தரை கொடிகளாலும் தோரணங்களாலும் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த செயற்கை அன்னங்களும் புறாக்களும் உயிருள்ள பறவைகளைக் கவர்ந்திழுத்ததால், அப்பறவைகளின் இனிய ஒலிகள் அரண்மனையில் ஒலித்த வண்ணம் இருந்தன.

அம்மாளிகையில் மகிழ்ச்சி தரும் இடங்கள், படுக்கை, அறைகள், தங்குமிடங்கள், அழகிய முற்றங்கள் என எல்லா வசதிகளும் நிறைந்திருந்தன. கர்தம முனிவருக்கே அஃது ஆச்சரியம் தந்தது.

தேவஹூதியின் புதுப்பொலிவு

இத்தகைய சிறப்புமிக்க ஆகாய மாளிகையை தேவஹூதி மகிழ்ச்சியில்லாத மனதுடன் பார்த்தபோது அவள் மனதைப் புரிந்து கொண்ட கர்தமர், பகவான் விஷ்ணுவால் படைக்கப்பட்டு அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகின்ற பிந்துசரோவர் ஏரியில் குளித்து வந்து மாளிகையில் ஏறும்படி அவளிடம் கட்டளையிட்டார். தன் உடலும் உடையும் அழுக்கால் மூடப்பட்டும், தலைமுடி சடைவிழுந்தும் கவர்ச்சியற்று காணப்பட்ட தேவ ஹூதி கணவரின் ஆணைப்படி ஏரியின் புனித நீரில் இறங்கினாள்.

அங்கே தாமரை போல மணம் வீசும் இனிமையான ஆயிரம் பெண்களைப் பார்த்தாள். அவர்கள் பணிவுடன், “நாங்கள் உங்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர்கள் மிக்க மரியாதையுடன் விலையுயர்ந்த தைலங்களால் தேவஹூதியை நீராட்டி புத்தம் புதிய ஆடைகளாலும் மதிப்புமிக்க அணிகலன்களாலும் அலங்கரித்தனர். உடல்நலத்தை முன்னேற்றும் நல் உணவுகளையும் பானங்களையும் அளித்தனர்.

மலர்மாலைகள், மங்கள குறியான திலகம், வளையல்கள், அட்டிகை, ஒட்டியாணம், முத்தாபரணங்கள், கால் கொலுசுகள், மற்றும் மங்கள பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்ற தனது உருவத்தைக் கண்ணாடியில் அவள் பார்த்தாள். ஈரத்தாமரை போன்ற கண்களும், அழகிய புருவங்களும் முத்துப் போன்ற பற்களும் கொண்ட அவளது எழில் முகம் கரிய சுருண்ட கூந்தலால் சூழப்பட்டு கவர்ச்சியாக இருந்தது.

அச்சமயத்தில் தனது கணவரை அவள் நினைத்த மாத்திரத்திலேயே ஆயிரம் பணிப்பெண்களுடன் உடனடியாக அவர் முன் தான் நிற்பதைக் கண்டு அதிசயித்தாள். இவையனைத்தும் யோகத்தில் சிறந்த தன் கணவரின் ஆற்றல் என்பதைப் புரிந்து கொண்டாள்.

கர்தம முனிவர் தன் மனைவியான தேவஹூதிக்கு உருவாக்கிய ஆகாய மாளிகை.

கர்தம முனிவர் தன் மனைவியான தேவஹூதிக்கு

உருவாக்கிய ஆகாய மாளிகை.

விண்வெளிப் பயணம்

தூய்மையாகவும் உண்மையான அழகுடனும் வசீகரமாகக் காணப்பட்ட தன் மனைவியை கர்தமர் அன்புடன் அந்த ஆகாய மாளிகையில் அமர்த்தினார். கந்தர்வப் பெண்கள் பணிவிடை செய்ய, அவர் தன் மனைவியோடு இணைந்திருப்பதுபோல தோன்றினாலும் அவர்தன் ஆன்மீகத்தில் சிறிதும் குறையவில்லை.

செல்வத்தின் அதிபதியான குபேரன் இன்பம் துய்க்கும் மேருமலையின் பள்ளத்தாக்குகளிலும் வைஸ்ரம்பக சுரஸன, நந்தன, புஷ்பத்ரக, சைத்ர ரத்ய போன்ற தோட்டங்களிலும் மானஸ ஸரோவர் ஏரியிலும் அத்தம்பதியினர் பற்பல ஆண்டுகள் இன்பம் அனுபவித்தனர்.

தடையின்றி காற்று வீசுவதுபோல, அவர்கள் அந்த வானூர்தியில் எல்லா திசைகளிலும் பல்வேறு கோள்கள் வழியாகப் பயணித்தனர். இச்சாதனை தேவர்களாலும் சாதிக்க முடியாததாகும். பகவானின் சிறந்த பக்தராக அவர் விளங்கியதாலேயே இவை சாத்தியமாயிற்று.

ஒன்பது குழந்தைகளின் பிறப்பு

இவ்வாறு தன் மனைவிக்கு அண்டத்தின் பற்பல கிரக அமைப்புகளையும் அற்புதங்களையும் காட்டிய பிறகு கர்தமர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அதன்பின் தேவஹூதிக்கு இன்பம் தருவதற்காகத் தன்னை ஒன்பது வடிவங்களாக விரிவுபடுத்திக் கொண்டு அந்த வான மாளிகையில் அவளுடன் கூடி இன்பம் துய்த்தார். இவ்வாறு நூறு ஆண்டுகள் ஒரு கணம் போல் கழிந்தது.

பின், தேவஹூதி பல குழந்தைகளை விரும்பியதைப் புரிந்து கொண்ட கர்தமர் முதல் முறையிலேயே, தம் யோக ஆற்றலால் ஒரே சமயத்தில் அவளது கர்ப்பத்தில் ஒன்பது பெண் குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகள் ஒவ்வொன்றும் செந்தாமரை மலரின் மணத்தோடு மிகவும் அழகாக விளங்கின.

தேவஹூதியின் வருத்தம்

கிருஷ்ண உணர்வையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்த கர்தம முனிவர் குழந்தைகள் பெற்று இல்லறக் கடமையை நிறைவு செய்த பின் வீட்டைத் துறந்து செல்வதைக் கண்ட தேவஹூதி கணவரின் திருப்திக்காக வெளிப்படையாகப் புன்னகை செய்தாள். எனினும், அவள் மனம் அலைக்கழிக்கப்பட்டு தலை குனிந்தவாறு கண்ணீரை அடக்கிக் கொண்டு, கால் நகங்களைத் தரையில் கீறியபடி அழகான மொழியில் மெதுவாகப் பேசினாள்:

“என் பிரபுவே, நீங்கள் எனக்களித்த எல்லா உறுதிமொழிகளையும் நிறைவேற்றினீர்கள். எனினும் நான் உங்களிடம் சரணடைந்தவள் என்பதால், எனக்கு பயமின்மையை அருளும்படி வேண்டுகிறேன். நம் பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்று விடுவர். நீங்கள் துறவறம் ஏற்றுச் சென்றுவிட்டால், யார் எனக்கு ஆறுதல் சொல்வார்?

“உங்கள் ஆசியால் பௌதிக இன்பங்கள் அனைத்தையும் பெற்றேன், உங்களுடன் நான் கொண்டுள்ள புனித உறவு, உங்கள் ஆன்மீகத் தன்மையை அறியாமல் இருந்திருந்தாலும் முக்திக்கான பாதைக்கு வழிநடத்தி பயமின்மையை நல்கவல்லது அன்றோ? ஒருவருடைய செயல்கள் அறவாழ்விற்கும், அறவாழ்வு துறவுக்கும், துறவானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தித் தொண்டிற்கும் அழைத்துச் செல்லவில்லை எனில், அவன் சுவாசித்துக் கொண்டிருப்பினும் இறந்தவனாகவே கருதப்படுவான்.

“நானோ பரம புருஷ பகவானின் மாயா சக்தியால் ஏமாற்றப்பட்டு, உங்கள் ஆன்மீக உயர்வைப் பயன்படுத்திக் கொள்ளாமல் புலனுகர்ச்சியில் மூழ்கியிருந்து விட்டேன், இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன்.”

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives