பக்தித் தொண்டின் மகிமைகள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், இருபத்துஐந்தாம் அத்தியாயம்

சென்ற இதழில் பகவான் கபிலர் அவதரித்ததையும் கர்தம முனிவர் துறவறம் ஏற்றதையும் பற்றி பார்த்தோம். இனி, கபில தேவரின் உபதேசங்களைத் தொடர்ந்து காணவிருக்கிறோம்.

தேவஹூதியின் பிரார்த்தனைகள்

தந்தை கர்தம முனிவர் துறவறம் ஏற்று புறப்பட்டுச் சென்றதும், பகவான் கபிலதேவர் பிந்து ஸரோவரின் கரையில் தங்கி தன் அன்னையான தேவஹூதிக்கு தொண்டு செய்து வந்தார்.

 

ஒருநாள், பிரம்மதேவர் தன்னிடம் கூறியதை நினைவுகூர்ந்த தேவஹூதி, கபிலதேவரை அணுகி பின்வருமாறு பேசலானாள், “நீங்கள் பரம புருஷ பகவானாவீர். எல்லா உயிர்களின் இறைவனும் மூலமும் ஆவீர். பிரபஞ்சத்தின் அறியாமை இருளை சிதறடித்து, ஞான ஒளியைப் பரப்புவதற்காக இங்கு உதித்திருக்கிறீர்கள்.

 

“எனது பௌதிகப் புலன்களின் தொல்லையால் நான் அறியாமை என்னும் படுகுழியில் விழுந்துவிட்டேன், நீங்களே என் தெய்வீகக் கண்களாவீர். உங்கள் கருணையால் மட்டுமே அறியாமை இருளிலிருந்து விடுபட முடியும். பற்பல பிறவிகளுக்குப் பின்னர் இப்போது நான் உங்களை சரணடைந்துள்ளேன்.

 

“நான் உங்கள் மாயா சக்தியில் மயங்கி பொய் அஹங்காரத்தால் பீடிக்கப்பட்டு உடலுடனும் உடல் தொடர்பான உறவுகளுடனும் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டேன். இப்போது உங்கள் தாமரைத் திருவடிகளில் சரண்புகுந்துள்ள எனக்கு ஜடம், ஆன்மீகம் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் விளக்குவீராக.”

முக்தி

அன்னை தேவஹூதியின் மாசற்ற கேள்விகளைக் கேட்ட கபிலதேவர் புன்னகை தவழும் முகத்துடன் பதிலளிக்கத் தொடங்கினார்: “அனைத்து உயிர்வாழிகளுக்கும் இறுதியான நன்மையளிப்பதும், இன்ப துன்பங்களிலிருந்து பற்றறுக்க உதவுவதும், பகவானுக்கும் ஜீவனுக்கும் உள்ள உறவைப் புதுப்பிப்பதுமான யோக முறையே மிகவும் உயர்ந்ததாகும்.

 

“மிகுந்த பக்தியுள்ள அன்னையே, நான் முற்காலத்தில் சிறந்த முனிவர்களுக்கு விளக்கிய அதே யோக முறையை உங்களுக்கு விளக்குகிறேன். இது பயனுடையதும் நடைமுறைக்கேற்றதுமாகும்.

 

“ஜட இயற்கையின் முக்குணங்களால் ஜீவராசிகளின் உணர்வு கவரப்படும்பொழுது, அந்நிலை கட்டுண்ட வாழ்வு எனப்படுகிறது. அந்த உணர்வை பகவானின் மீது பற்று ஏற்படும் வகையில் மாற்றும்பொழுது அது வீடுபேற்றுக்கு (முக்திக்கு) வழிவகுக்கும். இந்த உடலை தான் என்று நினைக்கச் செய்யும் அஹங்காரம், காமம், பேராசை ஆகிய மாசுகளிலிருந்து தூய்மையடையும்போது மனமும் தூய்மையடைகிறது. இத்தகைய தூய நிலை, லௌகீக இன்பதுன்பங்களை கடக்க உதவுகிறது.

 

“அச்சமயத்தில் ஆத்மா தன்னை ஜடவுலகிற்கு அப்பாற்பட்டதாக, சுயப்பிரகாசம் கொண்டதாக, பகவானின் அம்சமாக உணர முடியும். இவ்வாறு தன்னை உணர்ந்த நிலையில் பக்தித் தொண்டினால் இணைக்கப்பட்ட ஞானம் மற்றும் துறவின் பயிற்சியால் ஒருவர் எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி பார்க்கிறார். அவர் ஜடவுலகின் மீது விருப்பு வெறுப்பு அற்றவராகிறார். பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டாலன்றி எந்தவித யோகியாலும் தன்னை உணர்தலில் முழுமையடைய முடியாது, ஏனென்றால், அது மட்டுமே மிக மங்களகரமான வழியாகும்.”

பக்தர்களின் சங்கம்

கபிலதேவர் பக்தியின் முக்கியத்துவத்தினை தொடர்ந்து உபதேசிக்கிறார்: “ஜடப் பற்றுதலானது ஆத்மாவை ஜடவுலகில் சிறைப்படுத்தும் என்பதை கற்றுணர்ந்தவர்கள் அறிவார்கள். ஆனால், தன்னையுணர்ந்த தூய பக்தர்களிடம் பற்று கொள்ளும்பொழுது, அஃது ஒருவரை முக்தியின் பாதையில் அழைத்துச் செல்லும்.

 

தூய பக்தரின் (சாதுவின்) அடையாளங்கள் என்னவெனில், அவர் சகிப்புத்தன்மை, கருணை, தோழமை, எதிரிகளற்ற நிலை, அமைதி, புனித நூல்களைப் பின்பற்றுதல் ஆகிய தனிப்பண்புகளைக் கொண்டிருப்பார். அவர் பகவானிடம் இடைவிடாத மாறாத பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார். அவர் பகவானின் சேவைக்காக செயல்படுவதால் சமுதாயம், குடும்பம் மற்றும் உலக மனிதத்துவத்திற்கான அவரது கடமைகள் தாமாகவே நிறைவேறுகின்றன.

 

“பரம புருஷ பகவானாகிய என்னைப் பற்றிக் கேட்பதிலும் வழிபடுவதிலும் நிலையாக ஈடுபட்டிருக்கும் பக்தர்கள் உலகத் தொல்லைகளால் துன்பப்படுவதில்லை. இதுவே சிறந்த பக்தரின் குணங்களாகும். இம்மாதிரியான சாதுக்களிடம் தொடர்பு கொள்வதால் உலகப் பற்றுதலின் துன்பங்களிலிருந்து விடுதலையடைய முடியும். தூய பக்தர்களின் சங்கத்தில், பரம புருஷ பகவானின் செயல்கள் மற்றும் லீலைகளைப் பற்றி கலந்துரையாடுவது காதிற்கும் மனதிற்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாகும். மேலும், அது முக்திக்கான வழியையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பகவான் மீது பெரும் கவர்ச்சியையும் உண்மையான பக்தியையும் பக்தித் தொண்டின் சுவையையும் அளிக்கிறது. மேலும், தூய பக்தித் தொண்டு துவங்குகிறது.

 

“அத்தகைய தூய உணர்வுபூர்வமான பக்தித் தொண்டால் ஒருவர் பகவானின் நினைவிலேயே இருப்பதால், இம்மையிலும் மறுமையிலும் புலனுகர்ச்சி சுவையிலிருந்து விடுபடுகிறார். மேலும் அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஜட இயற்கையின் தொண்டில் ஈடுபடாமல் கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதன் மூலம் பரம புருஷ பகவானுக்கு மாறுபடாத பக்தித் தொண்டு செய்வதால் ஞானமும் துறவும் எய்தப் பெறுகிறார். மேலும் தற்போதைய வாழ்விலேயே பகவானின் உறவைப் பெறுகிறார்.”

பக்தித் தொண்டு

அன்னை தேவஹூதி மேலும் வினவினாள்; “அன்புள்ள மகனே, நான் எந்தவித பக்தித் தொண்டைப் பயிற்சி செய்வதால் தங்கள் திருவடித் தாமரையின் சேவையை எளிதாகவும் உடனடியாகவும் அடைய முடியும்? பரம புருஷ பகவானை நோக்கமாகக் கொண்ட மேன்மையான யோகத்தை புரிந்துகொள்ள எத்தனை வழிகள் உள்ளன? நான் ஒரு சாதாரண பெண்ணாக அறிவில் குறைந்தவளாக இருப்பதால், எனக்கு புரியும்படி தயவுசெய்து விளக்கி அருளுங்கள். அதன்மூலம் தெய்வீக இன்பத்தை உணர முடியும்.”

 

இவ்வாறாக, அன்னை பேசியதைக் கேட்ட கபிலதேவர் அவளிடம் மிகுந்த கருணை கொண்டு பின்வருமாறு பேசினார்: “புலன்கள் தேவர்களின் பிரதிநிதிகளாக இருப்பதால் வேதத்தின் நியதிகளைப் பின்பற்றி அவற்றைப் பயன்படுத்த வேண்டும். அதுபோன்றே மனமானது பகவானின் பிரதிநிதியாக உள்ளது. மனதையும் ப›ுலன்களையும் எந்தவித உள்நோக்கமும் இன்றி பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுத்தினால், அது முக்தியை விட மிக மேலானதாகும்.

 

“நாம் உண்ணும் உணவை வயிற்றிலுள்ள நெருப்பு ஜீரணமாக்குவது போலவே, உயிர்வாழியின் சூட்சும சரீரத்தை பக்தித் தொண்டானது தூய்மை செய்து கரைத்து விடுகிறது. பக்தித் தொண்டால் எனக்கு சேவை செய்யும் பக்தர்கள் என் ஜோதியில் இணையும் ஸாயுஜ்ய முக்தியை விரும்புவதில்லை; ஏனெனில், அவர்கள் சதா சர்வகாலமும் எனது புகழ் பாடியவண்ணம் ஆனந்தமாக இருக்கின்றனர்.”

பகவானின் உறவு

கபிலதேவர் தொடர்ந்தார், “அன்னையே, காலையில் உதிக்கும் கதிரவன் போன்ற கண்களுடன் கூடிய என் வடிவத்தின் சிரித்த முகத்தை என் பக்தர்கள் எப்போதும் பார்க்கின்றனர். மேலும் அவர்கள் என்னுடன் நட்புடன் பேசுகின்றனர். என்னுடைய இனிமையான சொற்களைக் கேட்டு தூய பக்தர்கள் ஏறக்குறைய பிற எல்லா ஈடுபாடுகளிலிருந்தும் விடுதலையடைகின்றனர். மேலும், பெருமுயற்சியின்றியே எளிதில் வீடுபேறு (முக்தி) அடைகின்றனர். காரணம், அவர்கள் எனது பக்தித் தொண்டில் ஆழ்ந்துவிடுகின்றனர்.

 

“அவர்கள் என்னுடைய நினைவில் முழுவதும் மூழ்கியிருப்பதால் ஸத்ய லோகம் உட்பட எந்த மேலுலகத்தையோ அஷ்டாங்க யோகத்தின் எட்டு சித்திகளையோ, ஏன் வைகுண்டத்திற்கு உயர்த்தப் படுவதையோ விரும்புவதில்லை; என்றாலும், அந்த பக்தர்கள் இந்த வாழ்விலேயே என்னால் வழங்கப்படும் எல்லா ஆசிகளையும் அனுபவிக்கின்றனர்.

 

“அத்தகைய தெய்வீக செல்வ வளங்கள் ஒருபோதும் இழக்கப்படுவதில்லை. (நீங்காத செல்வம்), பக்தர்கள் என்னை நண்பனாக, உறவினராக, மகனாக, குருவாக, கொடையாளராக, தெய்வமாக ஏற்பதால், எந்த நேரத்திலும் அவர்கள் உடைமைகளை இழக்கும்படி செய்ய இயலாது. ஆனால் அந்த உடைமைகள் மீது பக்தர்கள் பற்றற்று இருக்கின்றனர். நான் அவர்களை, பிறப்பு இறப்பற்ற எனது நித்திய உலகிற்கு அழைத்துக்கொள்கிறேன்.

 

“நானே எல்லாம் வல்ல இறைவனாகவும், பரம புருஷ பகவானாகவும், எல்லாப் படைப்பின் உண்மையான மூலமாகவும், எல்லா ஆத்மாக்களின் பரமாத்மாவாகவும் இருக்கிறேன். என் பக்தர்களைத் தவிர வேறு எவருக்கும் பிறப்பு, இறப்பின் பயங்கரமான அச்சம் ஒருபோதும் தவிர்க்கப்பட முடியாததாகும். இந்திரன், சந்திரன், சூரியன், வருணன், வாயு, அக்னி, மரணதேவன் போன்ற எல்லா தேவர்களும் என் மீதுள்ள பயத்தால் தங்கள் கடமைகளை செவ்வனே செய்கின்றனர்.

 

“தெய்வீக அறிவும், துறவும் நிரம்பிய யோகிகள் தங்கள் நிலையான நன்மைக்காக எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு என்னை சரணடைகின்றனர். இதனால் பயமின்றி எனது வைகுண்ட உலகங்களில் வாழும் தகுதியைப் பெறுகின்றனர். ஆதலால், பக்தித் தொண்டின் தீவிரமான பயிற்சியில் ஈடுபடுவதே மனித வாழ்வின் உயர்ந்த பக்குவமாகும்.”

கபிலதேவரின் போதனைகள் தொடரும்.
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives