அறிவியலின் பெயரில் அபத்தம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஸ்ரீல பிரபுபாதர், தமது சீடருடனான இந்த உரையாடலில், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வினின் கருத்தை முறியடிக்கின்றார்.

(13 அக்டோபர், 1975—டர்பன், தென்னாப்பிரிக்கா)

ஸ்ரீல பிரபுபாதர்: மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று டார்வின் கூறியுள்ளார். அப்படியெனில், தற்போது ஏன் மனிதன் குரங்கிலிருந்து வருவதில்லை?

சீடர்: அஃது ஒருமுறை மட்டுமே நிகழ்ந்தது. எல்லாவற்றையும் தோற்றுவிக்க அந்த ஒரு நிகழ்வே போதுமானதாக இருந்தது என்கிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: அந்த நிகழ்வு ஏன் ஒரேயொரு முறை மட்டும் ஏற்பட்டது? இஃது அயோக்கியத்தனம்! பூக்களும் பழங்களும் அதற்கான பருவத்தில் மீண்டும்மீண்டும் விளைவதைக் காண்கிறோம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது மட்டும் ஏன் ஒரே ஒருமுறை நிகழ வேண்டும்? இஃது அவரது பிடிவாதக் கருத்தை வெளிப்படுத்துகிறது. நாம் ஏன் இதனை ஏற்க வேண்டும்? இயற்கையினுடைய ஏற்பாட்டின்படி, பூக்கள் மீண்டும் அதே பருவத்தில் பூக்கின்றன என்பது நமது அனுபவம்.

சீடர்: ஏதோவொரு தொடர்பு விடுபட்டுள்ளதென்று  டார்வின் கூறினார்.

ஸ்ரீல பிரபுபாதர்: அந்த விடுபட்ட தொடர்பு என்ன? அவர் அறிவியலின் பெயரில் ஏமாற்றுகின்றார். வேடிக்கையைப் பாருங்கள். அவர் தவறாக வழிநடத்துகின்றார்; இருந்தும், “டார்வினின் கோட்பாடு ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு,” என்று ஏற்குமளவிற்கு, நாகரிக மனிதர்களும்கூட முட்டாள்களாக இருக்கின்றனர்.

இது சிறுபிள்ளைத்தனம். பகுத்தறியும் திறனோ அறிவோ அவர்களிடம் இல்லை. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியெனில், ஏன் தற்போது குரங்கிலிருந்து மனிதன் வருவதில்லை?

சீடர்: இயற்கை சில நேரங்களில் வினோதமாகச் செயல்படுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: “சில நேரங்களில்” என்பது டார்வினுக்கு மட்டுமே. அவருடைய அயோக்கியத்
தனத்தை ஆதரிக்க, இயற்கை அவருக்கு சேவை செய்ய வேண்டும்: “சில நேரங்களில்.” இதையெல்லாம் நாம் ஏன் நம்ப வேண்டும்? “சில நேரங்களில்” என்பது இயற்கையின் விதி அல்ல. இயற்கையின் விதி ஒருபோதும் மாறாதது, அஃது என்றும் சமச்சீரானது. திருவாளர் டார்வின் அவர்களுக்கு சேவை செய்ய இயற்கை கடமைப்பட்டிருக்கவில்லை. “சில நேரங்களில்” என்னும் டார்வினின் கூற்றை அவர் மட்டுமே அறிவார். எஞ்சியிருக்கும் நாம் அவரை நம்ப வேண்டும், என்னே விந்தை! “சில நேரங்களில்” என்று சொல்லப்பட்டுள்ளதை டார்வின் எவ்வாறு அறிவார்? டார்வினைத் தவிர வேறு யாராலும் ஏன் இதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை?

சீடர்: இதே வாதத்தை அவர்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்: வெகு சிலராலேயே கடவுளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை அவர்கள் எதிர்க்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. நாங்கள் அவ்வாறு சொல்வதில்லை. கடவுள் பகவத் விஞ்ஞானத்தை முதலில் சூரியதேவனுக்கு உபதேசித்தார். சூரியதேவன் அதனை தமது மகனாகிய மனுவிற்கு உபதேசித்தார். மனு அவரது மகனாகிய இக்ஷ்வாகுவிற்கு உபதேசித்தார். இவ்வாறாக, சீடப் பரம்பரையின் வாயிலாக வேத அறிவானது கீழிறங்கி வருவதாகவே நாங்கள் சொல்கிறோம். ஏவம் பரம்பராப்ராப்தம், சீடப் பரம்பரையின் மூலமாகப் பெறப்படுகிறது. (பகவத் கீதை 4.2) இது முற்றிலும் அறிவுபூர்வமானது. “கடவுள் என்னிடம் பேசினார்” என்று நாங்கள் கூறுவதில்லை.

பகவான் பிரம்மாவிற்கு உபதேசித்தார். பிரம்மா நாரதருக்கு உபதேசித்தார். நாரதர் வியாஸதேவருக்கு உபதேசித்தார். வியாஸதேவர் மற்றவர்களுக்கு உபதேசித்தார். என் முன்னோர் என் தாத்தாவிடம் கூறினர், என் தாத்தா என் தந்தையிடம் கூறினார், அதே தகவல் என் குடும்பம் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் என்ன தவறு? ஏவம் பரம்பராப்ராப்தம். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். அதனை அர்ஜுனன் எவ்வாறு புரிந்து கொண்டானோ, அதே வழியில் நாம் புரிந்துகொள்கிறோம். அர்ஜுனன் அதனை எவ்வாறு புரிந்து கொண்டான் என்பது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.

“டார்வினுக்கு மட்டுமே தெரியும்” என்பதுபோன்ற அறிவை நாங்கள் ஏற்க மாட்டோம். இதுபோன்ற போலியான விஞ்ஞானிகள் அனைவரும் முதல்தரமான அயோக்கியர்கள். “ஒரு தொடர்பு விடுபட்டுள்ளது.” “ஒருமுறை மட்டும் குரங்கிலிருந்து மனிதன் வந்தான்.” இஃது என்ன முட்டாள்தனம்? இதனை நாம் நம்ப வேண்டுமா? இதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? திருவாளர் டார்வின் அவர்கள் கூறியுள்ளதால் நாம் இதனை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீடர்: சில குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழும். உதாரணமாக, நீங்கள் எல்லா நேரங்களிலும் வெப்பமான சூழ்நிலையில் இருந்தால், உங்களது இரத்தத்தின் அடர்த்தி குறைகிறது. இந்நிலை தொடரும்
போது, இவ்வனைத்து மாற்றங்களும் இணைந்து மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

ஸ்ரீல பிரபுபாதர்: எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. இயற்கை எப்போதும் சீராகச் செயல்படுகிறது. சூரியன் காலையில் உதிக்கின்றது. இது கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது.

சீடர்: படிப்படியாக மாற்றங்கள் நிகழும்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. என்ன மாற்றம் நிகழ்கிறது? காலையில் சூரியன் கிழக்குப் பகுதியில் உதிக்கின்றது. இது நடந்து கொண்டிருக்கிறது. பருவ கால பூக்கள் குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் என காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன. அனைத்தும் சீராக நடப்பதால், அடுத்த பிப்ரவரியில் இங்கு நல்ல காலநிலை நிலவும் என்று சொல்ல முடிகிறதல்லவா? இஃது எவ்வாறு? ஏனெனில், கடந்த பிப்ரவரி மாத அனுபவம் உங்களுக்கு உள்ளது. வரும் பிப்ரவரி மாதமும் இதே காலநிலை நிலவும் என்பதில் உறுதியாக உள்ளோம். எனவே, படிப்படியான மாற்றம் என்பதை ஏற்க முடியாது. ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷ:, அனைத்தும் சீராகச் செயல்படுகின்றன. (பகவத் கீதை 3.27) இயற்கையின் வழிமுறையில் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

சீடர்: டார்வினின் கோட்பாடுகளில் உள்ள ஒரு வலுவான கருத்து …

ஸ்ரீல பிரபுபாதர்: எந்தவொரு வலுவான கருத்தையும் நான் காணவில்லை. வெறுமனே முட்டாள்தனம் மட்டுமே உள்ளது. உன்னைப் போன்ற முட்டாள் அயோக்கியன் வேண்டுமானால் இதனை நம்புவான்.

சீடர்: ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எத்தகைய வரலாறும் இல்லை என்றும், அதற்கு முன்னர் நாகரிகம் இல்லை என்றும் அவர்கள் நினைக்கின்றனர். எனவே, மனிதன் குரங்கைப் போன்று இருந்தான் என்று கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் அனுமானம் செய்வதில்லை. பல கோடி வருடங்களுக்கான வரலாறு எங்களிடம் உள்ளது. வளர்ந்த மனிதன் ஒரு குழந்தையைப் போன்று சிந்திப்பதில்லை. அந்த அயோக்கியர்கள் அவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதற்காக, நாங்களும் அதனை நம்ப வேண்டுமா? அவர்களின் வார்த்தையை நான் ஏன் ஏற்க வேண்டும்?

நாம் கிருஷ்ணரின் வார்த்தையை ஏற்கிறோம், அவரை பரம புருஷராக ஏற்கிறோம். மாபெரும் முனிவர்கள் அனைவரும் அவ்வாறே ஏற்கின்றனர். அப்படியிருக்க எதற்காக நான் இந்த அயோக்கிய டார்வினை ஏற்க வேண்டும்? நாங்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. எங்களால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது.

சீடர்: “கடந்த வருடம் நாங்கள் தவறு செய்துவிட்டோம், தற்போது எல்லாம் சரியாகிவிட்டது,” என்று கூறுவது விஞ்ஞானிகளின் வழக்கம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். “தற்போது நாங்கள் முன்னேறிவிட்டோம்” என்று கூறி ஏமாற்றுகின்றனர். உங்களது தற்போதைய கோட்பாடுகள் சரியானவை என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீங்கள் மீண்டும் முன்னேறுவீர்கள். [சிரிப்பு] அடுத்த வருடம் இன்னொரு கொள்கையை வழங்குவீர். நீங்கள் எப்போதும் தவறிழைப்பவர்களே என்பதை இது நிரூபிக்கிறது.

இயற்கையிலிருந்து மனிதன் தானாகத் தோன்றினான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், இயற்கை தானாகச் செயல்படுவதை நீங்கள் காண்பதில்லை. அதனால்தான் உங்களது கோட்பாடு நிராகரிக்கப்படுகிறது. உங்களது கணிப்புகளில் ஒரு பிழை இருந்தால்கூட, உங்களது கூற்றுகள் முழுவதும் அபத்தமானதாகக் கருதப்படுகிறது.

சீடர்: வாழ்க்கை சிறப்பானதாக மேம்பட்டு வருவதாக மக்கள் நினைக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் அயோக்கியர்கள். இதுவே மாயை என்று அறியப்படுகிறது. அயோக்கியர்களாக இருப்பினும், அவர்கள் தங்களை முன்னேறியவர்களாகக் கருதுகின்றனர்.

(தமிழாக்கம்: கந்தர்விகா மோஹினி தேவி தாஸி)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives