வேதாந்தமும் உண்மையான குருவும்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வேதாந்தமும்

உண்மையான குருவும்

கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த கட்டுரைகளை மும்பையிலிருந்து வெளியிட்டு வரும் பவன்ஸ் ஜேர்னல் என்னும் பதிப்பகத்தாரினால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் விடையளிக்கிறார்.

(சென்ற இதழின் தொடர்ச்சி)

பக்தர்: அடுத்த கேள்வி, சச்சரவுகள் நிறைந்த இந்த கலி யுகத்தில் கடவுளை உணர பக்தியே சிறந்த மார்க்கம் என்று விளக்கப்பட்டுள்ளது. ஆயினும், வல்லுநர்கள் சிலர் ஞானத்தினை போதிக்கும் வேதாந்த கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

ஸ்ரீல பிரபுபாதர்: பெயரளவு வேதாந்திகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள்; அவர்களுக்கு வேதாந்தம் என்றால் என்னவென்று தெரியாது. மக்கள் ஏமாற விரும்புகின்றனர். ஏமாற்றுபவர்கள் அவர்களை சாதகமாக்கிக்கொள்கிறார்கள். வேத என்னும் வார்த்தைக்கு “அறிவு” என்று பொருள், அந்த என்றால் “இறுதி” ஆகும். எனவே, வேதாந்தம் என்றால் “இறுதியான அறிவு” என்று பொருள். அந்த இறுதியான அறிவினையே வேதாந்த சூத்திரம் நமக்குக் கற்பிக்கின்றது. (சூத்திரம் என்பது குறைவான வார்த்தைகளைக் கொண்டு மிகவும் ஆழமான தத்துவங்களை விளக்கும் வாக்கியங்களாகும்.) வேதாந்த சூத்திரத்தின் முதல் வாக்கியம், அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ: “இப்பொழுது இந்த மனித வாழ்வில் பரம்பொருளான பிரம்மனைப் பற்றி விசாரிக்க வேண்டும்.” பரம்பொருளைப் பற்றிய தேடுதலில்தான் வேதாந்த சூத்திரத்தினைப் பற்றிய கல்வி தொடங்குகிறது. அந்தப் பரம்பொருள் என்ன? இது வேதாந்த சூத்திரத்தின் இரண்டாவது வாக்கியத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஜன்மாத்யஸ்ய யத:, “பிரம்மனே அனைத்திற்கும் தோற்றுவாய்.” பிரம்மனே கடவுள், அனைத்தின் தோற்றுவாய். அனைத்து வேதங்களும் அறிவும் அவரில் நிறைவடைகின்றன. இது கிருஷ்ணரால் பகவத் கீதையில் (15.15) உறுதி செய்யப்பட்டுள்ளது, வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய:, “அனைத்து வேதங்களின் நோக்கம் என்னைக் கண்டறிவதே.”

புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளைப் பற்றிய வர்ணனைகளே வேதாந்த சூத்திரமாகும். கலி யுகத்திலுள்ள மக்களிடம் வேதாந்த சூத்திரத்தினைப் படிக்குமளவிற்கு அறிவு இல்லை என்பதால், ஸ்ரீல வியாஸதேவரே வேதாந்த சூத்திரத்திற்கு ஒரு விளக்கவுரையை எழுதியுள்ளார். அந்த விளக்கவுரையே ஸ்ரீமத் பாகவதம் (பாஷ்யம் ப்ரஹ்ம-ஷூத்ராணாம்).

வேதாந்த சூத்திரத்தின் ஆசிரியராலேயே ஸ்ரீமத் பாகவதத்தின் மூலமாக வேதாந்த சூத்திரம் விளக்கப்பட்டுள்ளது. ஆனால், அயோக்கியர்கள் சிலர் வேதாந்த சூத்திரத்தினைப் புரிந்துகொள்ளாமலும், அதற்கான இயற்கையான விளக்கத்தினைப் படிக்காமலும் தங்களை வேதாந்திகள் என்று காட்டிக் கொண்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். மக்களும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால், இந்த அயோக்கியர்களை வேதாந்திகளாக ஏற்றுக்கொள்கின்றனர். உண்மையில், வேதாந்திகள் என்று அறியப்பட்ட இவர்களெல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகளே; இவர்கள் வேதாந்திகள் இல்லை. இவர்களுக்கு வேதாந்தம் பற்றி ஒன்றுமே தெரியாது. வேதாந்த சூத்திரம் ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது, நாம் ஸ்ரீமத் பாகவதத்தினை வேதாந்த சூத்திரத்திற்கான உண்மையான விளக்கவுரையாக ஏற்றால், வேதாந்த சூத்திரத்தினைப் புரிந்துகொள்ள முடியும். அதை விடுத்து, ஏமாற்றுக்காரர்களை சரணடைந்தால் நம்மால் வேதாந்தத்தினைக் கற்க முடியாது. ஒன்றும் தெரியாத மக்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்ற முடியும். ஆகவே, வேதாந்தம் என்றால் என்ன, வேதாந்தத்திற்கான விளக்கம் என்ன என்பதை மக்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திடமிருந்து கற்க வேண்டும். அதனால் அவர்கள் பயனடைவர்.

பக்தர்: வேதாந்த சூத்திரத்திற்கான அருவவாத விளக்கவுரையைப் பின்பற்றுவோர், இந்த ஜடவுலகின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கோளாக வைத்திருப்பர். ஸ்ரீமத் பாகவதமும் முக்தியைப் பற்றி விளக்குகின்றதா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். வேதாந்த சூத்திரத்தின் உண்மையான பாஷ்யம் (விளக்கம்) ஸ்ரீமத் பாகவதமே என்பதால், இந்த யுகத்திலும் முக்தி பெறுவதைப் பற்றி பின்வரும் ஸ்லோகம் விவரிக்கின்றது:

கலேர் தோஷ-நிதே ராஜன்ன்

அஸ்தி ஹ்யேகோ மஹான் குண:

கீர்தநாத் ஏவ க்ருஷ்ணஸ்ய

முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத்

[ஸ்ரீமத் பாகவதம் 12.3.51]

இந்த கலி யுகத்தில் கடலளவு குற்றங்கள் நிறைந்திருந்தாலும் ஒரு மிகப்பெரிய நன்மை உள்ளது. அஃது என்ன? ஒருவர் ஹரே கிருஷ்ண மந்திரத்தினை உச்சரித்தாலே முக்தி அடையலாம். இதுதான் உண்மையான வேதாந்தம், இஃது உண்மையில் நடந்து கொண்டுள்ளது.

பக்தர்: அப்படியெனில், வேதாந்த சூத்திரம், ஸ்ரீமத் பாகவதம் என இரண்டின் முடிவும் பக்தியே என்று கூறுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

பக்தர்: வேத ஞானத்தின் இறுதியுடன் பக்தியை எவ்வாறு இணைக்க முடியும்? பகவானை உணர்ந்திட பக்தியே எளிய மற்றும் உகந்த வழி என்று கூறப்படுகிறது. ஆயினும், வேதாந்தம் ஞானத்தினை வலியுறுத்துவதாகக் கூறுகிறார்களே. அஃது உண்மையா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஞானம் என்றால் என்ன? இது பகவத் கீதையில் [7.19] கிருஷ்ணரால் விளக்கப்பட்டுள்ளது: பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே, “பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன் என்னை சரணடைகிறான்.” எனவே, கிருஷ்ணரை சரணடையாவிடில் அது ஞானமல்ல. இந்த மாயாவாத “ஞானம்” எல்லாம் அபத்தம். மாயாவாதிகள் அனைவரும் தங்களைத் தாங்களே ஞானிகளாக விளித்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஞானமே இல்லை. வேதாந்தம் என்றால் “இறுதி ஞானம்” என்று பொருள். உன்னத ஞானத்தின் உட்பொருள் பகவான் கிருஷ்ணரே என்பதால், கடவுள் யார், கிருஷ்ணர் யார் என்பதை அறியாத நபரிடம் ஞானம் எங்கே உள்ளது? அதே சமயத்தில், அயோக்கியன் ஒருவன் “நான் அறிவுடையவன்” என்று பிதற்றிக் கொண்டால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

இப்போது கூறிய அந்த ஸ்லோகத்தின் இறுதியில் கிருஷ்ணர் கூறுகிறார், வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு-துர்லப:, “வாஸுதேவரே (கிருஷ்ணரே) எல்லாம் என்பதை எப்பொழுது ஒருவர் புரிந்துகொள்கிறாரோ, அப்பொழுதே அவர் ஞானத்துடன் உள்ளார்.” அதற்கு முன்பாக, அவரிடம் ஞானம் கிடையாது. ஞானம் இருப்பதாக நினைத்தல் தவறான புரிதலே. ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி ஷப்த்யதே. ஒருவர் அருவ பிரம்மனை மன அனுமானத்தின் மூலமாகத் தேடத் தொடங்கலாம், அடுத்து பரமாத்மாவினை உணரும் நிலைக்கு முன்னேறலாம். இஃது உணர்தலில் இரண்டாம் நிலை. ஆயினும், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை உணர்வதே இறுதி நிலையாகும். எனவே, நீங்கள் கிருஷ்ணரை உணராவிடில் ஞானம் எங்கே உள்ளது? அரைகுறை ஞானமெல்லாம் ஞானம் அன்று. நமக்கு முழுமையான ஞானம் வேண்டும், அந்த முழு ஞானம் பகவான் கிருஷ்ணரின் கருணையினால், பகவத் கீதையின் மூலமாக சாத்தியமாகும்.

பக்தர்: ஸ்ரீல பிரபுபாதரே? நான் அடுத்த கேள்வியினை எழுப்பலாமா? ஆன்மீகப் பாதையினுள் நுழைவதற்கும் அதன் இலக்கினை அடைவதற்கும் ஆன்மீக குரு அவசியமா? அப்படியெனில், ஒருவர் எவ்வாறு தனது குருவினை அடையாளம் காண்பது?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், குரு அவசியமானவர். இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. அர்ஜுனனும் கிருஷ்ணரும் நண்பர்களைப் போன்று பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆகவே, கிருஷ்ணரை குருவாக ஏற்பதற்கு அர்ஜுனன் முடிவு செய்தார். [பக்தர் ஒருவரிடம்:] கார்பண்ய–தோஷோபஹத-ஸ்வபாவ: என்னும் ஸ்லோகத்தைப் படியுங்கள்.

பக்தர் [படிக்கிறார்]:

கார்பண்ய-தோஷோபஹத-ஸ்வபாவ:

ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட-சேதா:

யச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன் மே

ஷிஷ்யஸ் தே ’ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்

“இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்துவிட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாகக் கூறும்படி உம்மைக் கேட்டுக்கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள்கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.” [பகவத் கீதை 2.7]

ஸ்ரீல பிரபுபாதர்: அர்ஜுனன் மட்டுமல்ல அனைவருமே தங்களது கடமையைப் பற்றிய குழப்பத்தில் உள்ளனர். யாராலும் சுயமாக முடிவெடுக்க முடியாது. மருத்துவர் ஒருவர் கடும் நோயினால் அவதிப்பட்டால், அவரால் தமக்குத் தாமே மருத்துவம் பார்த்துக்கொள்ள இயலாது. தனது மூளை சரியான நிலையில் இல்லை என்று அவருக்குத் தெரியும். எனவே, அவர் மற்றொரு மருத்துவரை அழைக்கிறார். அதுபோன்றே, நாம் குழப்பமான நிலையில் இருக்கும்போதும் எவ்வித முடிவிற்கும் வரவியலாதபோதும், நாம் தேட வேண்டிய சரியான நபர் குருவாவார். இஃது அவசியமானதாகும்; உங்களால் இதனைத் தவிர்க்க இயலாது.

தற்போதைய வாழ்க்கை நிலையில் நாம் அனைவரும் குழம்பியுள்ளோம். நமக்கு உண்மையான வழியினைக் காட்டுவதற்கு குரு தேவைப்படுகின்றார். குருவிடம் சரணடையும் குழப்பமான பௌதிகவாதியினை அர்ஜுனன் பிரதிபலிக்கிறார். அவர் நமக்கு ஓர் உதாரணம் காண்பிக்க, கிருஷ்ணரை குருவாக ஏற்பதற்கு முடிவு செய்தார். அவர் வேறு யாரிடமும் செல்லவில்லை. எனவே, கிருஷ்ணரே உண்மையான குரு. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே குருவாவார். நாம் கிருஷ்ணரிடமிருந்து உபதேசங்களைப் பெற்று, அதனைப் பின்பற்றும்போது, நமது வாழ்வு வெற்றி பெறுகிறது. அனைவரும் கிருஷ்ணரை குருவாக ஏற்க வேண்டும்; அவ்வாறு ஏற்கச் செய்வதே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பணியாகும். இதுதான் நமது பணி. நாம் ஒருபோதும் “நானே கிருஷ்ணர்” என்று கூறுவதில்லை. மக்களிடம், “கிருஷ்ணரின் உத்தரவுகளைப் பின்பற்றுங்கள்” என்றே நாம் கூறுகிறோம்.

பக்தர்: குரு என்று அழைக்கப்படும் சிலர், கிருஷ்ணர் கூறிய சிலவற்றினைக் கூறிவிட்டு, அதனுடன் வேறு பல உபதேசங்களையும் வழங்குகின்றனர். அவர்களின் நிலை என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள், மிகவும் அபாயகரமானவர்கள். அவர்கள் சந்தர்ப்பவாதிகள். இந்த குருமார்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, அவர்களை திருப்திப்படுத்தும்படி சில உபதேசங்களைக் கூறுவர். அப்படிப்பட்ட நபர் குரு அல்ல; அவர் வேலைக்காரர். சீடர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு அவர் வேலை செய்கின்றார். அவரது வேலையினால் திருப்தியடையும் சீடர்கள் அவருக்கு செல்வத்தை வழங்குவர். உண்மையான குரு சீடர்களின் வேலைக்காரர் கிடையாது; அவர் எஜமானராவார். சீடர்களை முகஸ்துதி செய்து, அதன் மூலம் அவர்களது செல்வத்தினைப் பெறுவதற்காக வேலை செய்பவர் குருவாக இருக்க முடியாது. ஒருவிதத்தில் குருவும் வேலைக்காரரே; ஆனால் அவர் புருஷோத்தமரின் வேலைக்காரர். குரு என்னும் சொல்லுக்கு “கனமானவர்” என்று பொருள் (ஞானத்திலும் அதிகாரத்திலும் கனமானவர்); ஏனெனில், அவரது ஞானமும் அதிகாரமும் கிருஷ்ணரிடத்திலிருந்து வருகின்றது. நீங்கள் உங்களது தான்தோன்றித்தனமான எண்ணங்களை திருப்திப்படுத்த குருவினைப் பயன்படுத்த முடியாது.

ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக.” நாமும் அதனையே கூறுகின்றோம்: “கிருஷ்ணரை சரணடையுங்கள். தர்மம் அல்லது மதம் என்று அழைக்கப்படும் மற்றெல்லா யோசனைகளையும் கைவிடுங்கள்.” “நாங்களே அதிகாரம் பொருந்தியவர்கள்” என்று நாம் கூறுவதில்லை. “கிருஷ்ணரே அதிகாரம் பொருந்தியவர், நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயலுங்கள்,” என்றே நாம் கூறுகிறோம். இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives