வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஏழாம் ஸ்கந்தம், அத்தியாயம் 7
சென்ற இதழில் பிரகலாத மஹாராஜர் தம் அசுர நண்பர்களுக்கு வழங்கிய அற்புத உபதேசங்களைக் கேட்டோம். அவற்றை அவர் எங்கு, எப்போது கற்றார் என்ற நண்பர்களின் கேள்விக்கான பதிலை இப்போது காணலாம்.
கயாதுவைக் கடத்துதல்
நாரத முனிவரை தியானித்துக் கொண்டு பிரகலாத மஹாராஜர் பின்வருமாறு பேசலானார்: என்னுடைய தந்தையான ஹிரண்யகசிபு கடுந்தவம் புரிவதற்காக மந்திராசல மலைக்குச் சென்றிருந்த சமயத்தில், எல்லா அசுரர்களையும் போரில் வென்றுவிட இந்திரன் முதலான தேவர்கள் கடும் முயற்சியை மேற்கொண்டனர்.
அசுரத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட, எஞ்சியிருந்த அசுரர்கள் எல்லா திசைகளிலும் சிதறியோடத் தொடங்கினர். அவர்கள் தம் வீடு, மனைவி, குழந்தைகள், மிருகங்கள், வீட்டுப் பொருட்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு, “தப்பினால் போதும்” என்று ஓட்டம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற தேவர்கள், அசுர ராஜனான ஹிரண்யகசிபுவின் அரண்மனையைச் சூறையாடி அதிலிருந்த அனைத்தையும் அழித்தனர். அதன் பின்னர், ஸ்வர்கத்தின் மன்னரான இந்திரன், அரசியான என் தாயைச் சிறைபிடித்துச் சென்றார்.
நாரதரின் பாதுகாப்பு
அப்போது அங்கு வந்த மாமுனிவர் நாரதர், இந்திரனைத் தடுத்து கூறினார், “இந்திரனே, இவள் குற்றமற்றவள். இவளை இரக்கமின்றி இவ்வாறு கவர்ந்து செல்வது தகாததாகும். பெருமை படைத்தவரே, பதிவிரதையான இவளை உடனே விட்டுவிட வேண்டும்.”
இந்திரன் கூறினார், “இவளது கர்ப்பத்தில் அசுரனான ஹிரண்யகசிபுவின் வீரியம் உள்ளது. ஆகவே, இவள் பிரசவிக்கும் வரை எனது பாதுகாப்பிலேயே இருக்கட்டும். அதன் பிறகு இவளை விட்டுவிடுகிறோம்.”
அதற்கு நாரதர் பதிலளித்தார், “இப்பெண்ணின் கருவில் வளரும் குழந்தை குற்றமோ பாவமோ இல்லாதது. உண்மையில், இவன் ஒரு பரம பக்தனும் பரம புருஷரின் சக்திமிக்க சேவகனும் ஆவான். ஆகவே, இவனை உங்களால் கொல்ல முடியாது.”
சிறந்த முனிவரான நாரதரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து இந்திரன் உடனே என் தாயை விட்டு விட்டார். நான் பகவானின் பக்தன் என்பதால், தேவர்கள் அனைவரும் என் தாயை வலம் வந்து மரியாதை செய்தபின் ஸ்வர்கத்திற்கு திரும்பச் சென்றனர்.
மாமுனிவரான நாரதர் என் தாயாரைத் தனது ஆஷ்ரமத்திற்கு அழைத்துச் சென்று ஆறுதல் அளித்து, “குழந்தாய், உனது கணவன் வரும்வரை நீ இங்கேயே இருக்கலாம்,” என்று கூறினார். என்னுடைய தாயும் எந்த பயத்தாலும் பாதிக்கப்படாமல் அவரது பாதுகாப்பிலேயே தங்கியிருந்தாள். அத்துடன் தன் கணவன் வந்த பின்பே பிரசவிக்க வேண்டும் என்றும் விரும்பினாள்.
நாரதரின் போதனைகள்
நாரத முனிவர், கர்ப்பத்திலிருந்த எனக்கும் அவருக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்த என் தாய்க்கும் உபதேசம் செய்தார். உன்னத நிலையிலுள்ள அவர், வீழ்ந்த ஆத்மாக்களிடம் இயல்பாகவே மிகவும் கருணையுடையவர் என்பதால், தர்மத்தைப் பற்றியும் உன்னத அறிவைப் பற்றியும் உபதேசித்தார். அந்த உபதேசங்கள் எல்லா பௌதிகக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டவையாகும்.
பெண் என்ற முறையில் குறைந்த ஆன்மீக அறிவு கொண்ட என் தாய் அந்த உபதேசங்களை மறந்துபோனாள். ஆனால் மாமுனிவர் நாரதரின் ஆசீர்வாதத்தினால், என்னால் மறக்க முடியவில்லை. என் வார்த்தைகளில் நம்பிக்கை வைப்பீர்களானால், சிறுவர்களாகிய உங்களாலும் என்னைப் போல் உன்னத அறிவைப் புரிந்து கொண்டு, ஜடம் என்றால் என்ன, ஆன்மீகம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஜடமும் ஆன்மீகமும்
உடலானது தோற்றம், இருப்பு, வளர்ச்சி, உருமாற்றம், நலிவு, அழிவு ஆகிய ஆறு விதமான மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஜீவாத்மாவுக்கு இத்தகைய மாற்றங்கள் இல்லை. ஆத்மாவானது, பிறப்பு இறப்பிலிருந்தும் அழிவிலிருந்தும் பௌதிகக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டதாகும். எனவே, “நான் இந்த உடல், இந்த உடலுடன் சம்பந்தப்பட்டவை அனைத்தும் என்னுடையவை,” என்ற மாயையான தேகாபிமானத்தை ஒருவன் கைவிட வேண்டும்.
ஆன்மீக ஆத்மாவானது உடலுக்குள் இருக்கிறது என்ற உண்மையை மூடனால் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு தனிப்பட்ட ஆத்மாவிற்கும் இரு வகையான உடல்கள் உள்ளன. ஒன்று, பஞ்ச பூதங்களாலான ஸ்தூல உடல். மற்றொன்று சூட்சும மூலப் பொருட்களான மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றாலான சூட்சும உடல். இவ்விரண்டு உடல்களுக்குள் ஆன்மீக ஆத்மா இருக்கிறது. ஆய்வறிவின் மூலமாக ஆத்மாவை ஜடத்திலிருந்து பிரித்தறிய வேண்டும்.
படைத்தல், காத்தல், அழித்தலுக்கு உட்பட்டுள்ள அனைத்திலிருந்தும் ஆத்மா எப்படி வேறுபட்டுள்ளது என்பதை ஆய்ந்தறிந்து உணர வேண்டும்.
பக்தித் தொண்டு
எனவே, அசுர நண்பர்களே, கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்வதே உங்களுடைய கடமையாகும். பரம புருஷரால் ஏற்கப்படும் வழிமுறையே சிறந்ததாகக் கருதப்பட வேண்டும். அதனால் பரம புருஷரிடமான அன்பு விருத்தியடைகிறது.
ஆன்மீக குருவை ஏற்றுக் கொண்டு, மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் அவருக்குத் தொண்டுபுரிய வேண்டும். தன்னிடமுள்ள உடைமைகள் அனைத்தையும் ஆன்மீக குருவிற்கு அர்ப்பணித்து விட வேண்டும். பகவானின் பெருமைகளைக் கேட்டு, அவரது உன்னத குணங்களையும் செயல்களையும் துதித்துப் போற்ற வேண்டும்.
சாஸ்திரம் மற்றும் குருவின் கட்டளைகளுக்கேற்ப, பகவானின் விக்ரஹத்தையும் வழிபட வேண்டும். ஒவ்வொருவரின் இதயத்திலும் குடியிருக்கும் பரமாத்மாவான பரம புருஷரை எப்போதும் நினைவுகூற வேண்டும். எல்லா ஜீவராசிகளையும் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஒருவன் மரியாதை செலுத்த வேண்டும்.
இவ்வாறு, காமம், கோபம், பேராசை, மாயை, வெறி, பொறாமை முதலான எதிரிகளின் ஆதிக்கத்தை வேரறுத்த நிலையில், பகவானுக்கு ஒருவனால் சேவை செய்ய முடியும். தூய பக்தர் ஒருவர், பகவானின் உன்னத லீலைகளைப் பற்றி கேட்கும்பொழுது மெய்சிலிர்த்து, கண்களில் நீர் பெருக, தெய்வீக பேரானந்தத்தில் சிலசமயம் வெளிப்படையாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் அழுகிறார்.
அவர் சமூக மரியாதையைப் பொருட்படுத்தாமல், ஒரு பித்தனைப் போல, “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, எம்பெருமானே, லோகநாதரே,” என்றெல்லாம் உரக்கப் பாடி ஆடுகிறார். ஆழ்ந்த பக்தித் தொண்டின் காரணத்தால், அவரது அறியாமை, பௌதிக உணர்வு மற்றும் எல்லாவித பௌதிக ஆசைகளும் பூரணமாக எரிந்து சாம்பலாகி விடுகின்றன.
பரமாத்மா வழிபாடு
பிறப்பு இறப்பின் தொடர்ச்சியே வாழ்வின் உண்மையான பிரச்சனையாகும். அதனை மேலும் கீழும் தொடர்ந்து சுழளும் ஒரு சக்கரத்துடன் ஒப்பிடலாம். பரம புருஷருடன் தொடர்பு கொள்ளும்பொழுது இச்சக்கரம் முற்றிலுமாக நின்று விடுகிறது.
உண்மையில், பகவான் அனைத்து ஜீவராசிகளின் நண்பரும் நலன்விரும்பியும் ஆவார். அவர் மிக்க அன்புடன் ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலும் வாசம் செய்கிறார். இத்தகைய கருணைமிக்க பகவானை வழிபடுவதில் எந்தவித சிரமமும் இல்லை. மாறாக, பக்தித் தொண்டிற்கு மாறான விஷயங்களான புலன்நுகர்வுச் செயல்களோ எப்போதும் துன்பத்தை விளைவிக்கின்றன.
மனித வாழ்வு நிலையற்றது என்பதையும், தான் நித்தியமானவன் என்பதையும் புரிந்து கொண்டுள்ள புத்தியுள்ள மனிதனுக்கு, இந்த பெளதிக ஐஸ்வர்யங்களால் என்ன நன்மையை அளிக்க முடியும்? உங்கள் சொந்த நன்மைக்காகவும் தன்னுணர்வு அடைவதற்காகவும் மிகுந்த பக்தியுடன் நீங்கள் பகவானை வழிபட வேண்டும்.
இன்பதுன்பம்
பிரகலாதர் தொடர்ந்து கூறினார்: தன்னைச் சிறந்த அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பௌதிகவாதி, தன் விருப்பத்திற்கு எதிரான பலன்களைத்தான் அடைகின்றான். உண்மையில், மகிழ்ச்சியடைய முயலாத வரை ஒருவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். ஆனால் அந்த முயற்சியைத் தொடங்கிய உடனேயே அவனது துன்பச் சூழ்நிலை தொடங்குகிறது.
ஜீவன் தனது முந்தைய கர்மங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான உடல்களைப் பெறுகிறான். சிரமத்தையும் துன்பத்தையும் விளைவிக்கும் பலன்நோக்குச் செயல்களால் ஜீவராசிக்குக் கிடைக்கும் உண்மையான நன்மை என்ன? அறியாமையின் காரணத்தால், தொடர்ந்து பிறவி சக்கரத்தின் மூலமாக அவன் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடல் என மாறிமாறி நுழைந்து கொண்டிருக்கிறான்.
கோவிந்தருக்கு சேவை
நண்பர்களே, பரம புருஷருடைய பக்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். பகவான் நமக்கு மிகவும் பிரியமானவர். அவரே பரம ஆளுநராவார். முக்தியளிப்பவரான முகுந்தனின் தாமரை பாதங்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஒருவர் சிறந்த பிராமணராகவோ தேவராகவோ முனிவராகவோ ஆவதன் மூலமாக, பரம புருஷரை மகிழ்விக்க முடியாது. அவரிடம் உறுதியான பக்தி கொண்டிருந்தால் மட்டுமே, அவர் மகிழ்ச்சியடைகிறார். இதயபூர்வமான பக்தித் தொண்டு இல்லாத அனைத்தும் வெறும் போலி நாடகமே.
என்னருமை தோழர்களே, பிற உயிர்களைத் தன்னுயிர்போலக் கருதி அன்புடன் பரம புருஷருக்கு பக்தித் தொண்டு செய்ய வேண்டும். பக்தி யோகக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு உங்களது நித்தியமான ஆன்மீக அடையாளத்தைப் புதுப்பித்துக் கொண்டு நித்திய வாழ்வு பெற வேண்டும்.
இவ்வுலக வாழ்வின் ஒரே இலட்சியம், எங்கும் எதிலும் கோவிந்தரை நினைவில் கொண்டு, அவருக்கு சேவை செய்வதேயாகும்.